முன்னோக்கு

ஜூலை 4 இல் அமெரிக்கா: தோமஸ் ஜெபர்சனில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் வரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 4 ஆம் தேதி, 242 ஆண்டுகளுக்கு முன்பாக, வட அமெரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையில் இருந்த பதின்மூன்று காலனிகளைப் பிரதிநிதித்துவம் செய்த நாடாளுமன்றம், பெரிய பிரித்தானியாவிடம் இருந்தும் பிரிட்டிஷ் முடியாட்சியில் இருந்தும் சுதந்திரத்தை அறிவிப்பதற்கு ஒருமனதாக வாக்களித்த நாளைக் குறிக்கின்ற தினமாகும். தோமஸ் ஜெபர்சனால் எழுதப்பட்ட சுதந்திரப் பிரகடனமானது மாபெரும் புரட்சிகர ஆவணங்களில் ஒன்றாக இப்போதும் திகழ்கிறது.

ஸ்தாபகத் தந்தைகள் எந்த வரலாற்று வரம்புகளுக்குள் இயங்கினர் என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிவர். பல நூற்றாண்டுகளது நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை மற்றும் மதரீதியான அறிவுப்பரவலுக்குள் இருந்து அப்போதுதான் விடுபட்டு வந்த புதிய முதலாளித்துவ உலகின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தனர். ஆயினும், “மனிதர்கள் அனைவரும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கின்றனர், அவர்கள் தங்களைப் படைத்தவரிடம் இருந்து குறிப்பிட்ட பிரிக்கவியலாத உரிமைகளை உடனளிக்கப் பெற்றுள்ளனர், இவற்றில் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சிக்கான தேடல் ஆகியவையும் உண்டு” என்ற பிரகடனத்தில் சுருங்கக் கூறப்பட்டிருந்த அறிவொளிக் கருத்தாக்கங்களை மறுதலிப்பின் மீதே தனது அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருக்கும் சமகால நடுத்தர-வர்க்க அடையாள அரசியலால் வரலாறு பின்நவீனத்துவ உருக்குலைப்பு செய்யப்படுவதைக் காட்டிலும் வெறுப்புக்குரியது வேறெதுவுமில்லை.

அந்த ஆவணம், எந்த வகையிலும் அமெரிக்க சமூகத்திற்கு தலைமையில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் மீதான ஒரு கண்டனமாக இன்று இருக்கிறது. அதில் பட்டியலிடப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையும் இன்று வெளிப்படையாக உதாசீனம் செய்யப்படுகின்றது. முறையான செயல்முறை என்ற மூலக் கோட்பாடு முகவரியற்ற கடிதமாக இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் மீதான பாரிய சுற்றிவளைப்பு, ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் இருந்தான வெளிப்படையான பாசிச அறிவிப்புகள், மற்றும் நவீன-கால சித்திரவதை முகாங்களது கட்டுமானம் ஆகிய நிலைமைகளின் கீழ் ஜூலை 4 தினம் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்ப்பின் துன்புறுத்தலுக்கு எதிராக ஜூன் 30 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருப்பதற்குப் பிந்தைய இச்சமயத்தில், சுதந்திரப் பிரகடனத்தில் ஜோர்ஜ் மன்னருக்கு எதிராக கூறப்பட்ட குற்றங்களில் ஒன்றாக, ”வெளிநாட்டினரின் குடியுரிமை சட்டங்களை தடுப்பது” மூலமாகவும் “இங்கே அவர்களது குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கு மற்றவர்களை செல்லவிட மறுப்பது” மூலமாகவும் 13 காலனிகளுக்கும் குடியேற்றத்தைத் தடுக்கின்ற அவரது முயற்சி குறிப்பிடப்பட்டிருந்தது என்பதைக் கூறுவது பொருத்தமானதாகும்.

அந்தப் பிரகடனத்தில் இருக்கின்ற இன்னும் பல பத்திகளும் 2018 ஆம் ஆண்டுக்கு அதே அளவுக்குப் பொருத்தமானவையே:

"இராணுவத்தை மக்கள் சக்தியில் இருந்து சுயாதீனப்பட்டதாகவும் அதற்கு மேலேயானதுமாக ஆக்குவதற்கு அவர் தலையிட்டிருக்கிறார்.”

ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இராணுவ அதிகாரிகளை அமர்த்தியிருக்கிறார், சமூக சேவைகளைப் பலிகொடுத்து முன்னெப்போதினும் பெரிய இராணுவ நிதிஒதுக்கீட்டை நிறைவேற்றியிருக்கிறார் (ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன்), அத்துடன் வாஷிங்டன் டிசி வழியாக முன்கண்டிராத விதத்தில் இராணுவ அணிவகுப்புக்கான திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். ட்ரம்ப் தனது பாசிச அரசியலை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் இராணுவ-உளவு எந்திரத்தில் இருக்கின்ற குற்றவாளிகளை ஜனநாயகத்தின் மாபெரும் பிரதிநிதிகளாக தூக்கிப்பிடிக்கின்றனர்.

“இந்த மாநிலங்களில் வாழ்வோர் மீது அவர்கள் [பிரிட்டிஷ் துருப்புகள்] நடத்தக் கூடிய எந்தக் கொலைகளுக்கான தண்டனையில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு போலியான விசாரணை மூலமாக அவர்களைப் பாதுகாப்பதற்காக”.

அப்பாவி மக்கள் மீது சுட்ட பிரிட்டிஷ் துருப்புகளுக்கு ஜோர்ஜ் மன்னர் தண்டனையிலிருந்து விலக்கு வழங்கினார் என்றால், இப்போது அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 1,000 க்கும் அதிகமான சாதாரண மக்களை கொன்று வருகின்ற சீருடையணிந்த போலிசுக்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. போலிஸ் கொலைகளுக்கு இப்போதிருக்கும் பல்லற்ற கண்காணிப்பையும் கூட ட்ரம்ப் நிர்வாகம் மூடிவிட்டிருப்பதோடு, இத்தகைய குற்றங்களுக்கு போலிசை பொறுப்பு கூறுவதற்கான எந்த முயற்சிகளையும் கண்டனம் செய்து வருகிறது.

“பல வழக்குகளில் நமக்கு நீதிபதிகள் குழு மூலமான விசாரணையின் அனுகூலத்தை இல்லாது செய்வதற்காக.”

ICE (குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம்) அல்லது எல்லை ரோந்து படையினரால் கைது செய்யப்படுகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு நீதிமுறைக்கான எந்த அணுகலையும் அகற்றுவதற்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார், அவர்கள் நீதிபதிகள் குழு கூட வேண்டாம், எந்த நீதிபதியின் முன்பும் கூட நிறுத்தப்படாமலேயே நாட்டை விட்டு வெளியே தூக்கியெறியப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார். ட்ரம்புக்கு முன் பதவியில் இருந்த பராக் ஒபாமாவின் கீழ், சர்வதேச சட்டம் அல்லது உரிய நிகழ்முறை எதைப்பற்றிய குறிப்பும் இன்றி, இந்த பூகோளத்தில் இருக்கும் எந்த ஒரு தனிமனிதனையும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவப்படுகின்ற ஏவுகணைகளைக் கொண்டு கொல்வதற்கு, தான் உரிமை கொண்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.

“இந்த ஒடுக்குமுறைகளது ஒவ்வொரு கட்டத்திலும் நிவர்த்திக்காக நாங்கள் மிகவும் பணிவான விதங்களில் மனுக் கொடுத்திருக்கிறோம்: நமது தொடர்ச்சியான மனுக்கள் தொடர்ச்சியான காயங்களின் மூலமே பதிலளிக்கப்பட்டு வந்திருக்கின்றன.”

முந்தைய 30 ஆண்டுகளில் வீதிகளில் இறங்கியிருந்தவர்களை விடவும் அதிகமான எண்ணிக்கையில் கடந்த 18 மாதங்களில் மக்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். வெள்ளை மாளிகை இந்த ஆர்ப்பாட்டங்களை அலட்சியம் செய்து விட்டு அதன் வலது-சாரி அட்டூழியத்தை முன்தள்ளுகிறது, ஜனநாயகக் கட்சியினர் இதுவிடயத்தில் எதையும் செய்யப் போவதில்லை என்பதை அது நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவம், அதன் புரட்சிகர செழுமை நாட்களில், தோமஸ் ஜெபர்சன் தொடங்கி ஆபிரகாம் லிங்கன் வரையிலும் மிகப்பெரும் திறன், தீரம் மற்றும் அரசியல் தொலைநோக்கு கொண்ட அரசியல் தலைவர்களை முன்நிறுத்தும் இயலுமையை கொண்டிருந்தது. ஆளும் உயரடுக்கு அதன் தலைமை மனிதராக தேர்வு செய்கின்ற ஆளுமைகளது கீழ்நோக்கிய வளைவு, —பில்லியனர் ஏமாற்றுக்காரர், ரியல் எஸ்டேட் சுருட்டல் மனிதர் மற்றும் “ரியாலிட்டி டெலிவிஷனின்” நட்சத்திரமான டொனால்ட் ட்ரம்ப் என்ற அவலட்சணமான ஆளுமையில் இது உச்சமடைந்தது— அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுச் சிதைவின் ஒரு முத்திரையாகும்.

நாஜிசம், அரசியல் சிந்தனையை “நாயின் குலைப்பு மற்றும் பன்றியின் உறுமல்” மட்டத்திற்கு தரக்குறைவாக்கி விட்டிருந்ததாக லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டார். சமூக ஊடகங்களது சகாப்தத்தில் ட்ரம்ப்பின் ட்விட்டர் பெருமையடிப்புகளும் அவமதிப்புகளும் கூட அதையே தான் செய்கின்றன.

ஆயினும் ட்ரம்ப் நிர்வாகம், ஒரு சமூக நோயின் கீழமைந்த வெளிப்பாடாகும், ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் அவரது எதிரிகள் அதே வியாதியின் வேறொரு வெளிப்பாடாகும். அவரது ஜனநாயகக் கட்சி எதிரிகள் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பெருகிச் செல்கின்ற சமூக எதிர்ப்பை “பிளவுகளை விதைப்பதற்கான” ரஷ்ய முயற்சிகளது விளைபொருளாக சித்தரிப்பதுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். மாஸ்கோவின் தலையீடாக சொல்லப்படுவது இல்லாதிருந்தால் அமெரிக்க சமூகம் ஈடன் பூங்காவாக (Garden of Eden) இருக்கும் என்பதைப் போல!

அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகரான ஜேம்ஸ் பி.கனன், ஒருமுறை எழுதுகையில் சோசலிஸ்டுகள் ஜூலை 4 ஐ கொண்டாட வேண்டும் ஏனென்றால் அமெரிக்க புரட்சியாளர்கள் “மனிதகுலம் அனைத்துக்குமான வாக்குறுதிகளது ஒரு புதிய சகாப்தத்தினைத் திறந்து வைத்த ஒன்றை தொடக்கினர்... ஆனால் தொடக்கத்தை நிறைவு செய்யும் என்றும் வாக்குறுதியை நிறைவேற்றுவதை பிரதிநிதித்துவம் செய்யும் என்றும் ஜூலை நான்கின் உரைகளை யாரும் எனக்கு விற்க முடியாது” என்று எழுதினார்.

1776 இன் மாபெரும் நிகழ்வுகள் பல விடயங்களின் தொடக்கமாய் இருந்தன. 1789 பிரெஞ்சு புரட்சிக்கும் 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் எழுச்சிகளுக்கும் -அடிமைத்தனத்தை ஒழித்து மில்லியன் கணக்கானோரை விடுதலை செய்த உள்நாட்டு போரிலான அமெரிக்காவின் “இரண்டாவது புரட்சி” இதில் சளைத்ததல்ல- அவை ஆதர்சமளித்தன. ஆயினும் சட்டரீதியாக உத்தியோகபூர்வ ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் ஸ்தாபித்து விட்டதானது, கனனின் வார்த்தைகளில், “நிறைவேற்றத்தை”, அதாவது உண்மையான சமூக சமத்துவத்தையும் உண்மையான ஜனநாயகத்தையும் கொண்டுவந்து விட்டிருக்கவில்லை. முதலாளித்துவ சொத்துறவுகளின் அடிப்படையிலான ஒரு சமூகத்தில் அது சாத்தியமற்றதாக இருந்தது.

அமெரிக்க புரட்சி அளித்த ஜனநாயக வாக்குறுதிக்கும் ஒரு முன்கண்டிராத மட்டத்திற்கு சமூக சமத்துவமின்மையால் பின்னப்பட்டிருக்கின்ற அமெரிக்க முதலாளித்துவத்தின் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாடு இன்று முறிவுப் புள்ளியை எட்டியிருக்கிறது. உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அசுரத்தனமான ஒடுக்குமுறை எந்திரமாக, ஒரு இராணுவ-உளவு எந்திரமாக அரசாங்கமே இருக்கிறது.

அமெரிக்க சமூகத்தில், அமெரிக்க புரட்சியின் ஜனநாயக இலட்சியங்களில் எதனையும் பாதுகாக்கும் திறம்பெற்றிருக்கக் கூடிய ஒரேயொரு வர்க்கம் தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான —அத்துடன் சமூக சமத்துவமின்மையை எதிர்ப்பதற்கு, புலம்பெயர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அத்துடன் உலகப் போருக்கான முனைப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆகியவற்றுக்குமான— போராட்டமானது தொழிலாள வர்க்கத்தை நிதிய ஒருசிலவராட்சியின் சர்வாதிகாரத்துடனும் மற்றும் அதன் தலைமையின் கீழிருக்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறையுடனும் தவிர்க்கவியலாமல் மோதலுக்குள் கொண்டுவருகிறது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களது ஒவ்வொரு ஜூலை நான்கு அனுசரிப்பின் போதும், அரசாங்கத்தின் ஏதேனும் வடிவம் மக்களது உரிமைகளை அழிக்கின்றவையாக ஆகும்போது, “அதனை மாற்றுவது அல்லது ஒழிப்பதும், தமக்கு பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியதாக கருதுகின்ற விதத்திலான கோட்பாடுகளின் மீது ஒரு புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது மற்றும் அவ்விதத்திலான வடிவத்தில் அதன் அதிகாரங்களை ஒழுங்குபடுத்துவதும் அம்மக்களது உரிமையாகும்” என்ற சுதந்திரப் பிரகடனத்தில் இடம்பெற்றிருக்கிற அடிப்படையான கோட்பாடு தவிர்க்கவியலாமல் உதாசீனப்படுத்தப்படுகிறது.

அமெரிக்கத் தொழிலாளர்களின் இந்தத் தலைமுறையும், அத்துடன் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கமும், அந்த உரிமையை பிரயோகிக்க நிர்ப்பந்தம் பெறும்

Loading