ஹலீல் செலிக் (1961-2018) நினைவாக

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு ஆதரவளிக்கும் சோசலிச சமத்துவம் (Sosyalist Eşitlik) குழுவின் ஸ்தாபகரும் தலைவருமான ஹலீல் செலிக் (Halil Celik), தமது 57ம் வயதில் கடும் நோயின் காரணமாக டிசம்பர் 31, 2018 அன்று காலமானார். பின்வரும் செய்தியானது செவ்வாயன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற, ட்ரொட்கிசத்தின் இடையறா புரட்சியாளரும் போராளியுமான தோழர் ஹலீல் செலிக்கின் இறுதிச் சடங்கிற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் அனுப்பப்பட்டதாகும்.

ஹலீல் செலிக் குடும்பத்திற்கும் சோசலிச சமத்துவம் குழு தோழர்களுக்கும்

தோழர் ஹலீல் செலிக் மறைவுக்கு ஆழ்ந்த மரியாதையுடனும் ஆழ்ந்த வேதனையுடனும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரங்கலைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹலீல் தனிப்பட்ட வகையிலும் அரசியல் ரீதியாகவும் ஒரு அசாதாரண மனிதர். 1977ம் ஆண்டின் பிற்பகுதியில், தமது 16ம் வயதில் சோசலிச நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் தமது வாழ்வின் இறுதிதிக்காலம் வரை ஒரு புரட்சிகரப் போராளியாகவே தொடர்ந்து இருந்தார். அவர் பின்பற்றிய அரசியல் பாதைக்கு, அரசியல் பார்வை, தனிப்பட்ட தைரியம் மற்றும் வற்றாத ஆற்றலும் தேவைப்பட்டது.

தான் அரசியல் நடவடிக்கைகளை தொடங்கிய ஸ்ராலினிச சூழலோடு விரைவாக முறித்துக் கொண்டு, ஹலீல் ட்ரொட்ஸ்கிசத்தின்பால் தீவிர ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1980களின் தொடக்கத்தில், அவர் இருபது வயது இளைஞராய் இருக்கின்றபோதே ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் போராட்டம் என்பதைப் படித்தார். அவர் பின்னர் எழுதினார்: “நான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனினைப் படிக்கத் தொடங்கவும், ஸ்ராலின் மார்க்சிசத்தின் எதிரி என்பதை அடையாளம் கண்டு கொண்டேன்.”

ட்ரொட்ஸ்கிச எழுத்துக்களைக் காண்பதே கடினமாக உள்ள மற்றும் எண்ணற்ற தேசியவாத மற்றும் குட்டி முதலாளித்துவ போக்குகளால் மேலாதிக்கம் செய்யப்பட்ட இடது அரசியல் மேலாதிக்கம் செய்யும் ஒரு நாட்டில், உண்மையான மார்க்சிச சர்வதேசியத்திற்கான பாதை என்பது ஒரு நீண்டதும் கடினமானதுமாக இருந்தது. ஆனால் ஹலீல், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தை நிறுவுவதற்கு தீர்மானகரமாக இருந்த ஒரு உண்மையான போராளியாக இருந்தார். சிறைவாசமோ, ஒடுக்குமுறையோ அல்லது பல அரசியல் ஏமாற்றுக்காரர்களுடனான அவரது அனுபவமோ அவரை ஊக்கமிழக்கச் செய்ய முடியவில்லை.

தோழர் ஹலீல் 2005ல் அனைத்துலகக் குழுவுடன் முதன்முதல் தொடர்பு கொண்டார். இது பேர்லினில் இடம்பெற்றது. இது அவரை துணிவான மற்றும் ஆழ்ந்த கோட்டுபாடுடைய மனிதனாகக் காட்டியது. ஹலீல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றைப் படித்துவிட்டு, ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை அது பாதுகாத்ததுடன் அவரது உடன்பாட்டை அறிவித்தார். 2007ல் துருக்கிக்கு திரும்பியதும், ஹலீல் அரசியல் மறுநோக்குநிலைப்படுத்தல் மற்றும் அரசியற் கல்வி மீதாக முறையான வேலையை செய்யத் தொடங்கினார். சளைக்காத ஆற்றலுடன், அவர் கட்டுரைகள் எழுதினார், வகுப்புக்கள் எடுத்தார் மற்றும் ஆங்கிலத்திலிருந்து துருக்கி துருக்கியிலிருந்து ஆங்கிலம் என இருவகையிலும் மொழியாக்கம் செய்யும் பொறுப்பை எடுத்தார், அதேவேளை சோசலிச சமத்துவம் (Sosyalist Eşitlik) குழுவின் நடைமுறை வேலைகளை வழிநடத்தினார்.

ஹலீல் ட்ரொட்கிசத்தைப் பாதுகாப்பதில் அனைத்துலகக் குழுவின் நீண்ட போராட்டத்தால் ஊக்கம் பெற்றார். அவரே பின்னர் எழுதியவாறு, அனைத்துலகக் குழுவின் பாலான அவரது திருப்பம், பப்லோவாத அமைப்புக்களின் கோட்பாடற்ற மற்றும் தேசிய சந்தர்ப்பவாத அரசியலுடனான அவரது சொந்த கசப்பான அனுபவங்களின் விளைபொருளாய் இருந்தது.

துருக்கியில் ட்ரொட்கிச இயக்கத்தின் வளர்ச்சியானது புரட்சிகர சர்வதேசியத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதற்கு இளம் புரட்சியாளர்களை அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் பயிற்றுவிப்பது தேவை என உணர்ந்தார். இதனால்தான் அவர், அனைத்துலகக் குழுவின் வரலாறான தோழர் டேவிட் நோர்த்தின் நாம் காக்கும் மரபியம் எனும் நூல் துருக்கியில் மொழியாக்கம் செய்வதில் தீர்மானகரமாக இருந்தார். அவர் 1917ல் வெளியிடப்பட்ட புதிய துருக்கியப் பதிப்பிற்கு ஒரு சிறப்பு முன்னுரையை எழுதித்தருமாறு தோழர் டேவிட் நோர்த்தை தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினார்.

அவரது உயிரைக் காவு கொண்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், தோழர் ஹலீல் அனைத்துலகக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கும் அதன் கூட்டங்களுக்கும் அடிக்கடி ஐரோப்பாவிற்குப் பயணம் செய்தார். அவரது வாழ்நாளின் இறுதி ஆண்டுகள் துருக்கியில் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை நிறுவுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. சோசலிச சமத்துவம் Sosyalist Eşitlik) குழுவினை நிறுவுதல் என்பது அந்த நாட்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலையை அபிவிருத்தி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.

57 ஆம் வயதில் நிகழ்ந்த தோழர் ஹலீலின் இறப்பானது, அவர்களது அரசியல் கல்வியில் அந்த, அளவு ஆழமான பாத்திரத்தை அவர் ஆற்றிய துருக்கியில் உள்ள அவரது தோழர்களுக்கும் உலகம் முழுதும் உள்ள அவரது தோழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். ஆனால் ஹலீலின் வாழ்நாட் பணி தொடரும். அவரது முடிக்கப்படாத பணியான துருக்கியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டுவதை முன்னெடுப்பதில் தீர்மானகரமாக இருப்போம். சோசலிச சமத்துவம் (Sosyalist Eşitlik) குழுவினை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கிப் பகுதியாக நிறுவும் அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதைவிட தோழர் ஹலிலின் நினைவுக்கு நாம் செலுத்தும் பெரிய அஞ்சலி வேறு எதுவும் இருக்க முடியாது.

தோழர் ஹலீல் செலிக் நினைவு நீடூழி வாழ்க!

சோசலிச சமத்துவம் குழு நீடூழி வாழ்க!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கிப் பகுதியை நிறுவுதலை நோக்கி முன்னேறுவோம்!

Peter Schwarz, Secretary of the ICFI

Berlin, December 31, 2018

Loading