ஜேர்மன் இராணுவம் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டவர்களின் ஆட்சேர்ப்புக்கு திட்டமிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை ஜேர்மன் இராணுவத்திற்கு (Bundeswehr) ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடுகிறது. இதற்கான திட்டங்கள் “இதுவரை தெரிய வந்ததை விட மிகவும் உறுதியானதாக உள்ளன,” என்று Der Spiegel கடந்த வாரம் வியாழனன்று தெரிவித்தது. செய்தி பத்திரிகைக்கு வழங்கப்பட்ட அமைச்சகத்தின் இரகசிய ஆய்வின் படி, பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லெயென் (CDU), முக்கியமாக இளம் போலந்தினர்கள், இத்தாலியர்கள் மற்றும் ரோமானியர்களை ஜேர்மன் இராணுவத்தில் சேர்க்க விரும்புகிறார். செய்தித்தாளின்படி, இந்த நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களிடம்தான் ஜேர்மன் இராணுவத்திற்கான “தேவையானளவு ஆற்றல்வளம்” உள்ளது.

Der Spiegel பத்திரிகை தெரிவித்த படி, அமைச்சகம் ஏற்கனவே “இதற்கான சாத்தியத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டுள்ளது.” மேலும் ஆய்வின் படி, 18 முதல் 40 வயதிற்குட்பட்ட, கிட்டத்தட்ட 255,000 போலந்தினர்களும், 185,000 இத்தாலியர்களும் மற்றும் 155,000 ரோமானியர்களும் ஜேர்மனியில் வசிக்கின்றனர். அத்துடன், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டவர்களில் தோராயமாக பாதிப்பேர் ஜேர்மனியில் வசிப்பதை இந்தக் குழு குறித்துக்காட்டுகிறது. இந்த இலக்கு வைக்கப்பட்ட மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்தினர் ஜேர்மன் இராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினால் கூட, ஜேர்மன் இராணுவம் அதன் “படைக்கு 50,000 க்கு அதிகமாக சாத்தியமுள்ள புதிய விண்ணப்பதாரர்களை” பெறக்கூடும்.

ஜேர்மன் இராணுவத்தின் உயர்மட்ட பிரமுகரான, Bundeswehr இன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் Eberhard Zorn கூட இந்த திட்டங்களை உறுதிப்படுத்தினார். அதன்படி, சிறப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு “ஒரு விருப்ப” ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று Funke Media Group இன் செய்தி பத்திரிகைகளுக்கு அவர் தெரிவித்தார். “உதாரணமாக, மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள்,” பற்றி மக்கள் பேசுகின்றனர் என்றாலும், திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், ஜேர்மன் இராணுவம் “சரியான திறமைவாய்ந்த இளைஞர்களை அனைத்து வழிகளிலும் கண்டறிவதற்கு முயல” வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இரண்டு உலகப் போர்களில் காணப்பட்டதான ஜேர்மனியின் வரலாற்று குற்றங்கள் ஒருபுறம் இருப்பினும், பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டங்களும், அத்துடன் அவற்றைப் பற்றிய உத்தியோகபூர்வ விவாதங்களும், ஜேர்மன் ஏகாதிபத்தியமும் இராணுவவாதமும் எந்தளவிற்கு ஆக்கிரோஷமாக மீள்எழுச்சியடைகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பேர்லின், குறிப்பாக அதன் சிக்கன நடவடிக்கைகளினால் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு சமூகப் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜேர்மன் போர் கொள்கைக்கு ஏற்ற பீரங்கித் தீவனமாக இளைஞர்களின் வாய்ப்பின்மையையும் வெளிப்படையான விரக்தியையும் தற்போது அது பயன்படுத்தி வருகிறது.

2014 ல் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புவது பற்றி முன்னணி அரசாங்க பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்ததில் இருந்து, அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சகமும், Bundeswehr இன் படை வலிமையை அதிகரிப்பதற்கு செயற்பட்டு வருகின்றன, என்றாலும் மிதமான வெற்றியையே அவை அடைந்துள்ளன. மேலும், மே 10, 2016 அன்று இராணுவ விரிவாக்கம் பற்றி பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லெயென் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-CDU) அறிவித்த பின்னர், தீவிரமாக விளம்பரப்படுத்தும் பிரச்சாரங்கள் ஒருபுறம் நடத்தப்பட்டாலும் கூட, எந்தவித குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் எட்டப்பட்டதாக Bundeswehr ஆல் பதிவு செய்ய முடியவில்லை. நவம்பரில், அதிகாரபூர்வமாக 180,997 செயல்திறன்மிக்க வீரர்களை Bundeswehr உள்ளடக்கியிருந்தது, அதாவது, 2015 ஐ (179,633) விட வெறும் ஆயிரம் பேரை அதிகமாக அது கொண்டதாயிருந்தது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டங்கள் அனைத்தும் வெகு நாட்களாகவே மக்களின் முதுகிற்கு பின்னால் திட்டமிடப்படுகின்றன. ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) எதிர்காலம் குறித்த 2016 வெள்ளை அறிக்கை பின்வருமாறு தெரிவித்தது: “இறுதியானது ஆனால் குறைவானது அல்ல என்ற வகையில், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஜேர்மன் இராணுவத்தில் வேலை வாய்ப்பு என்பது, பரந்தளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் மீள்உருவாக்கத்திற்கான சாத்தியத்தை மட்டும் வழங்காது என்பதுடன், அதன் மூலம் ஜேர்மன் இராணுவத்தின் படைத் தளத்தை பலப்படுத்துகிறது, மேலும், ஒரு ஐரோப்பிய அணுகுமுறைக்கான வலுவான சமிக்ஞையையும் அது அனுப்பும்.” Der Spiegel பத்திரிகையின் படி, ஜேர்மன் இராணுவ பணியாளர்களுக்கான பொறுப்பில் இருக்கும் அரசு செயலர், Gerd Hoofe, ஆகஸ்டில் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜேர்மனியின் இந்த முன்னெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பதட்டங்களை மோசமான வகையில் அதிகரித்து வருகின்றன. போலந்தின் வெளியுறவு அமைச்சரான Jacek Czaputowicz, “முன்கூட்டியே அதிர்ச்சியடைந்து” உள்ளார் என்று Der Spiegel குறிப்பிடுகிறது. அவரது அரசாங்கத்திற்கு, “புரூசெல்ஸ்ஸில் விரைவான தெளிவுபடுத்துதல் வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனைகளைப் பெறாமல் வெளிநாட்டவர்களை Bundeswehr இல் பணியில் சேர்ப்பது என்பது, “சரியான நடத்தையாக இருக்காது” என்று Czaputowicz ஐ Der Spiegel மேற்கோளிட்டுக் காட்டுகிறது. “முன்கூட்டியே போலந்துடன் ஆலோசனை செய்யாமல் அத்தகையதொரு சட்டத்தை ஜேர்மனி அறிமுகம் செய்யவிருந்தது என்றாலும், அது நல்லதாக இருக்காது. நிச்சயமாக, தொழிலாளர்களுக்கும், அநேகமாக சிப்பாய்களுக்கும் கூட அதிகளவு வேலை வாய்ப்புக்களை ஜேர்மன் கொண்டுள்ளது என்பது தான் உண்மை.”

இதே போன்ற கவலைகள், பல்கேரியா, இத்தாலி, ரோமானியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நிலவுகின்றன. ஜேர்மன் இராணுவ இணைகள் உடனான பேச்சுவார்த்தைகளில், உதாரணமாக, பல்கேரிய அரசாங்கம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆயுதப் படைகளில் 20 சதவிகித இடங்களை தற்போது நிலவும் பணியாளர் பற்றாக்குறையினால் நிரப்ப முடியவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், கணிசமான அதிகபட்ச ஊதியங்களுடன் கூடிய வேலை வாய்ப்புக்களை வழங்க தற்போது ஜேர்மன் இராணுவம் முன்வந்துள்ளது என்றால், அது “பேரழிவுகர விளைவுகளையே” ஏற்படுத்தும்.

வெளிநாட்டு கூலிப்படைகளைக் கொண்டு தனது சொந்த ஆயுதப் படைகளை அதிகரிப்பதற்கான பேர்லினின் முயற்சிகள், ஒரு “உண்மையான ஐரோப்பிய இராணுவத்தை” உருவாக்குவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் (சான்சலர் அங்கேலா மேர்க்கெலின்) திட்டங்களுடன் கைகோர்த்து செல்கின்றன. இரண்டு திட்டங்களுடனும் இணைந்து, ஜேர்மன் ஏகாதிபத்தியம், ஐரோப்பாவில் அதன் மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தை பின்பற்றி வருவதுடன், உலகளாவிய ஏனைய வல்லரசுகளுடன் போட்டியிடுவதில் அதன் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களையும் உறுதிப்படுத்தி வருகிறது. இந்த வழிவகையில், ஆளும் வர்க்கம், ஜேர்மன் கைசர் மற்றும் ஹிட்லரின் ஜேர்மனிய-ஐரோப்பிய அதிகாரத்துவ அரசியலுக்கு அதிகரித்தளவில் வெளிப்படையாக திரும்பி வருகிறது.

“ஜேர்மனியின் விதி: உலகத்தை வழிநடத்தும் பொருட்டு ஐரோப்பாவை வழிநடத்துதல்” என்பது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளம் பிரசுரித்த ஒரு கட்டுரையின் தலைப்பாக இருந்தது. “உலகின் காவலாளியாக அமெரிக்காவால் தொடர்ந்து இருக்க முடியாது,” என்று தெரிவித்து, சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை அவர் திரும்பப் பெறவிருப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், முன்னணி ஜேர்மனிய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலான இன்னும் மேலதிக ஜேர்மனிய தலைமைக்கான தங்களது அழைப்புக்களை துரிதப்படுத்தியுள்ளனர்.

“நமது சொந்த காரணங்கள் மற்றும் நலன்களுக்காக, நாம் தற்போது நமது சொந்த வீட்டை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், நம்மை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் வெளிவிவகாரக் குழு தலைவரான நோர்பெர்ட் ரோட்கென் (CDU) ஒரு பேட்டியில் தெரிவித்தார். மேலும், “இந்த பகுதியில், அதாவது ஒவ்வொரு வருடமும் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்கு, நாம் ஏற்படுத்திய முன்னேற்றத்தை ஒன்றுபடுத்துவது தற்போது அவசியமாக உள்ளது, அப்போது தான் Bundeswehr முழுமையாக செயல்படத் தொடங்கி அதன் பங்களிப்பை வழங்க முடியும்” என்றும் தெரிவித்தார். ஆகவே, “குறைந்தபட்சம் ஐரோப்பாவிலாவது, ஜேர்மனி இல்லாமல் எதுவும் வேலை செய்யாது அதுவும் நமது பொறுப்புக்களின் ஒரு பகுதியாக உள்ளது” என்பதால் ஜேர்மன் “தேவைப்படுகிறது.”

சமூக ஜனநாயக வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூட, செய்தி நிறுவனம் dpa விற்கு அளித்த ஒரு பேட்டியில், இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டார். “நமது பொறுப்புக்கள் வளர்ந்து வருகின்றன. நமது எதிர்பார்ப்புக்கள் முன்பை விட அதிகமாக உள்ளன,” என்று அவர் விவரித்தார். மேலும், ஜேர்மனி ஏற்கனவே “பாரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது…. ஆனால் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பில் இருந்து அதிகமான பழைய பங்காளிகள் பின்வாங்குகிறார்கள் என்ற நிலையில், பெரும்பாலானவர்களின் பார்வை நம்மீது படிந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆளும் வர்க்கம் அதன் போர் குறித்த ஒரு பெரும் விரிவாக்கத்திற்கு தயாரிப்பு செய்து வந்ததையும், வரவிருக்கும் ஆண்டில் நிகழவிருக்கும் பெரும் வல்லரசு தாக்குதலையும் மாஸ் சுட்டிக்காட்டினார். ஜனவரி 1 ம் தேதி தொடங்கும் பாதுகாப்பு குழுவின் அதன் அங்கத்துவத்துடன், ஜேர்மனி “நெருக்கடி மற்றும் மோதல்களுக்கு அரசியல் ரீதியாக இன்னமும் நெருங்குகிறது. பாதுகாப்புக் குழுவில் நமது வாக்கு மேலும் கூடுதலான தகுதியைப் பெறும். கடினமான முடிவுகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது,” என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

“சிரியாவிலும் யேமனிலும் காணப்படும் மோதல்கள் மற்றும் மத்திய கிழக்கிற்கான சமாதான தீர்வு குறித்த போராட்டம் என மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை” பற்றி அவர் குறிப்பாக கவலைப்பட்டார். ஜேர்மனி “அதற்கு முன்பை விட அதிகளவு கடமைப்பட்டதாக,” இருக்க வேண்டும் என்பதுடன், “இராணுவ பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும்” தயாராக இருக்க வேண்டும்.

ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புவதை இடது கட்சியும் பசுமை வாதிகளும் கூட ஆதரித்தனர். Bundeswehr இன் ஆட்சேர்ப்புத் திட்டங்கள் குறித்த அவர்களது மௌனம் ஒரு மறைமுக ஒப்புதலை வழங்குவதாக மட்டுமே விளக்கப்பட முடியும். மிகச் சமீபத்தில், பாராளுமன்றத்தில் இடது பாராளுமன்றக் குழுவின் தலைவரான Dietmar Bartsch, ஜேர்மன் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்ததானது ஒரு ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டமைப்பது தொடர்பாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முன்மொழிவுகள் பற்றி “பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமல்ல,” அதற்கு “மாறாக உண்மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்பதற்காகத் தான். மேலும், பசுமைக் கட்சி தலைவர் அன்னலெனா பேர்போக் (Annalena Baerbock) ஒரு பேட்டியில் பின்வருமாறு கோரினார்: “ஒரு வியத்தகு மாற்றம் நிகழ்ந்துள்ள சூழ்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் உலக அரசியலை உருவாக்கியாக வேண்டும்.”

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னேற்றத்தைப் பற்றி விமர்சனம் எழுகின்றது என்றால், அது வலதில் இருந்தே உருவாகும். ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டவர்களின் ஆட்சேர்ப்பு என்பது “நமது பணியாளர் பிரச்சினைக்கான தீர்வாகாது,” என்று Westfälische Rundschau ஊடகத்திற்கு CDU பாதுகாப்பு அதிகாரி ஹென்னிங் ஒட்டே (Henning Otte) தெரிவித்தார். “நமது சொந்த துருப்புக்களில் சேவையாற்ற ஜேர்மனியர்களை தேர்ந்தெடுப்பதில் நமக்கு சிரமங்கள் இருக்குமானால், Bundeswehr மீதான ஈர்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.”

பாராளுமன்றத்தில் AfD பாராளுமன்றக் குழுவின் பாதுகாப்புக் கொள்கைக்கான செய்தித் தொடர்பாளர், Rüdiger Lucassen, “நமது ஜேர்மன் கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் விதிமுறைகள் உடனான அடையாளங்களை” கொண்ட “ஜேர்மன் குடியுரிமை” தான் “ஒரு சிப்பாயாக சேவையாற்றுவதற்கான அடிப்படை முன்நிபந்தனையாக” இருந்தது என்று தெரிவித்தார். பல்வேறு விளம்பர திட்டங்கள் இருந்தும் கூட, வொன் டெர் லெயென் மூலம் “ஆயுதப்படைகளை தேவையான பணியாளர்களைக் கொண்டு நிரப்ப முடியவில்லையே” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

Loading