அழிக்கப்பட்ட ட்வீட் சேதியில், அமெரிக்க அணுசக்தி கட்டளையகம் "ஏதாவதொன்றை வீசுவதற்கு" தான் “தயாராக" இருப்பதாக அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புத்தாண்டுக்கு முந்தைய நாள், அமெரிக்காவின் அணுசக்தி தளவாடங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க மூலோபாய கட்டளையகம், நியூ யோர்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள "பெரும்பந்தை" (big ball) விட "மிக மிகப் பெரிய, ஏதாவதொன்றை வீச" அது தயாராக இருப்பதை அறிவித்து ஓர் ட்வீட் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க இராணுவம் அணுஆயுதங்களைக் கொண்டு மக்களைப் படுகொலை செய்ய மூன்றாவது முறையாக தயார் நிலையில் உள்ளது என்பது மட்டுமல்ல, ஆனால் ஆர்வமாகவும் உள்ளது என்பதே அந்த ட்வீட் சேதியின் உள்நோக்கமாகும்.

வெளியிடப்பட்டு ஒருசில மணி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட அந்த ட்வீட், அதைத் தொடர்ந்து பின்வருமாறு ஒரு சேதியால் பிரதியீடு செய்து: “நமது முந்தைய NYE ட்வீட் சேதி மோசமான ரசனை என்பதுடன், நமது மதிப்புகளைப் பிரதிபலிக்கவில்லை. நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்காவினதும் & கூட்டாளிகளினதும் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்துள்ளோம்.” என்றதில் குறிப்பிட்டது.

முதலில் வெளியிட்ட பதிப்பு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது, “#டைம்ஸ் சதுக்க பாரம்பரியம்,# புத்தாண்டில் பெரும்பந்து வீசியதன் மூலமாக ஒலிக்கிறது ... எப்போது அவசியமானாலும், அதை விட மிகப் பெரிய ஒன்றை வீச நாங்கள் #தயாராக உள்ளோம்.”

இந்த ட்வீட் சேதி மில்லியன் கணக்கானவர்களைக் கொல்வது குறித்து "நகைச்சுவையாக" குறிப்பிடுகிறது

மில்லியன் கணக்கானவர்களைப் பாரபட்சமின்றி கொல்வது குறித்து அச்சுறுத்தும் இந்த ட்வீட் சேதியை, “குண்டுகள் வீசுவது குறித்த நகைச்சுவை" என்று வாஷிங்டன் போஸ்ட் உதறிவிட்டது.

நிச்சயமாக, அந்த சேதி ஒரு நகைச்சுவை கிடையாது. உண்மையில் அது அமெரிக்க இராணுவ கொள்கைக்கும் மற்றும் இராணுவம் "இந்த இரவே சண்டையிட" தயாராக இருக்கிறது என்று தளபதிகளின் தொடர்ச்சியான மீள்-வலியுறுத்தலுக்கும் ஒத்திசைந்துள்ளது.

சீனா மற்றும் இந்தியா உட்பட ஏனைய அணுஆயுத சக்திகளைப் போலன்றி, அமெரிக்கா அணுஆயுதங்களை முதலில் பிரயோகிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. இழிபெயரெடுத்த மூர்க்கமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "ஏதாவதொன்றை வீசுவதற்கு" முடிவெடுத்தால், நடைமுறையளவில், அங்கே உள்நாட்டுக்குள் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

வெறுமனே ஜனாதிபதி மட்டுமல்ல. முன்னாள் அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளரும் அணுசக்தி திட்ட வகுப்பாளரும், 1971 இல் நியூ யோர்க் டைம்ஸிற்கு பென்டகன் ஆவணங்களைக் கசியவிட்டவருமான டானியல் எல்ஸ்பேர்க், சமீபத்திய அவரின் நூலில், அணுஆயுத தாக்குதல்களைத் தொடங்குவதற்கான அதிகாரம், தசாப்தங்களுக்கு முன்னரே, அமெரிக்க ஜனாதிபதிக்கு அப்பாற்பட்டு எண்ணற்ற இராணுவ தளபதிகளின் பிரதிநிதிகள் குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெளிவுபடுத்தினார். இந்த பிரதிநிதிகள் குழு இந்நாள் வரையில் தொடர்ந்து வருவதாக எல்ஸ்பேர்க் ஓர் உறுதியான வாதத்தை முன்வைக்கிறார்.

உலகின் பேரழிவுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு குண்டுவீச்சு தாக்குதலை ஒரு சித்தபிரமை பிடித்த விமானப்படை தளபதி உத்தரவிடுவதைப் பற்றிய ஸ்டான்லே குப்ரிக்கின் (Stanley Kubrick) 1964 திரைப்படமான Dr. Strangelove, மனிதயினத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, வேண்டுமென்றே மற்றும் "தற்செயலாக" இரண்டு விதத்திலும், பாரிய அணுஆயுத போர் அபாயங்கள் குறித்த ஓர் "ஆவணப்படம்" ஆகும் என்று எல்ஸ்பேர்க் அவரது நூலில் வாதிடுகிறார்.

நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏனையவற்றிலும் சுருக்கமான சில வரி செய்திகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகங்கள் அந்த சம்பவத்தைப் புறக்கணித்துள்ளன. அந்த ட்வீட் சேதியும், அது திரும்பப் பெறப்பட்டது குறித்த மிகச் சிறிய விபரங்களும், மற்றும் அந்த ட்வீட் சேதியுடன் வெளியான ஒரு காணொளியில் போர் விமானம் ஒன்று அணுஆயுதமல்லாத வெடிகுண்டுகளை வீசுவதைக் காட்டுவதாக பென்டகனின் நல்லெண்ண அறிவிப்புகள் குறித்த செய்திகளுக்கும் அப்பாற்பட்டு அங்கே வேறெந்த செய்திகளும் இல்லை. அங்கே எந்த கருத்துரையும் இல்லை. அந்த பிரச்சினை, வெள்ளை மாளிகையின் அல்லது ஏனையவற்றின், எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அறிவிக்கப்படவில்லை.

பென்டகன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு அக்கறைமிக்க பத்திரிகையாளர் அந்த சம்பவம் குறித்து சில கேள்விகள் கேட்டிருந்தால், அதில் பின்வருவன இருந்திருக்கும்:

• அதை ட்வீட் செய்தவர் உத்தியோகப்பூர்வ கட்டுப்பாட்டில் இருப்பவரா?

• அதை ட்வீட் செய்தவர் நெறிமுறைகள் அல்லது ஒழுங்குமுறைகளை மீறினாரா? ஏதேனும் கீழ்ப்படியாமை சம்பந்தப்பட்டிருந்ததா?

• அவ்வாறென்றால், அணுஆயுத படைக்குப் பொறுப்பான அமெரிக்க இராணுவ கட்டளையகத்தில் பரந்தளவில் கட்டுப்பாடு முறிந்திருப்பதை இது குறிக்கிறதா?

ஆனால் நிச்சயமாக, அதுபோன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதுடன், ஒட்டுமொத்த விடயத்தையும் எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு விரைவாக நசுக்கி அழிப்பதற்கே ஊடகங்களின் முக்கியத்துவமாக உள்ளது.

இதில், ஊடகங்கள் கடந்த ஜனவரியில் எடுத்த அதே அணுகுமுறையை எடுத்து வருகின்றன, அப்போது, சுமார் 1.5 மில்லியன் பேருக்கு, எந்தவித விளக்கமும் இல்லாமல்,ஹவாய் தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தலில் உள்ளது. உடனே பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லவும். இதுவொரு ஒத்திகை அல்ல,” என்று குறிப்பிட்ட ஓர் அவசர தொலைபேசி எச்சரிக்கை செய்தி சென்றது.

அந்த விடயத்திலும், ஊடகங்கள் அந்த சம்பவம் குறித்த எந்தவொரு கருத்துரையோ அல்லது விசாரணைப் பின்தொடர்வோ இல்லாமல், சர்வசாதாரணமாக உதறிச் சென்றன.

அமெரிக்கா அதன் அணுஆயுதங்களைப் புதுப்பிக்கவும் மற்றும் விரிவாக்கவும் பாரியளவில் 1.3 ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கு மத்தியில் இருக்கையில், மற்றும் பெரிதும் அனேகமாக போர்களில் பயன்படுத்தத்தக்க சிறிய ஆயுதங்களைக் கட்டமைப்பதன் மீது ஒருமுகப்பட்டிருக்கையில் தான், அமெரிக்க மூலோபாய கட்டளையகத்திலிருந்து இந்த அச்சுறுத்தல் வருகிறது. அமெரிக்கா அணுஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய மற்றும் அவற்றை "முதலில் பிரயோகிக்கும்" அதன் உரிமையை நிலைநிறுத்தக் கூடிய சூழ்நிலைகளைக் கூடுதலாக விரிவாக்கும் ஓர் அணுசக்தி நிலைப்பாட்டு மீளாய்வை, வெள்ளை மாளிகை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.

இந்த அணுசக்தி நிலைப்பாட்டு மீளாய்வே கூட கடந்த ஆண்டின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் உச்சரிக்கப்பட்ட "வல்லரசு மோதல்" கட்டமைப்பின் பாகமாக உள்ளது, அது அமெரிக்க இராணுவத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பது "பயங்கரவாதம் மீதான போர்" அல்ல, குறிப்பாக அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல் என்று சித்தரிக்கிறது.

Loading