அதிகரித்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் பிரெஞ்சு பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்க்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமை, “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள், தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற பொலிஸ் வன்முறைக்கு மத்தியிலும் 2018 இன் கடைசி போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமானளவில் அதிக எண்ணிக்கையுடன், 2019 இல் அவர்களின் முதல் நாள் நடவடிக்கையில் அணிதிரண்டனர். உள்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி எடுத்துக் கொண்டாலும் கூட, டிசம்பர் 29 இன் 32, 000 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், “மஞ்சள் சீருடையாளர்களின்" எட்டாவது வார போராட்டத்தில் நாடெங்கிலும் 50, 000 பேர் ஒன்றுதிரண்டுள்ளனர்.

விடுமுறைகளின் போது போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததைக் காரணங்காட்டி அந்த இயக்கம் கலைந்து விட்டதாக கூறிய அனைவரையும் இது மறுத்தளித்தது. அதேநேரத்தில், அந்த இயக்கத்தின் போது கொல்லப்பட்ட "மஞ்சள் சீருடையாளர்களின்" தனிப்பட்ட நினைவாஞ்சலிக்காக பாரீஸ் சென்றதற்காக "மஞ்சள் சீருடை" செய்தி தொடர்பாளர் எரிக் துருவேயை முன்னெச்சரிக்கையாக மக்ரோன் இரண்டு நாட்கள் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்; மேலும் "ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களை" கேட்கும்படி அவரை நிர்பந்தித்ததற்காக மக்ரோன் அவரின் புத்தாண்டு வாழ்த்துக்களில் "மஞ்சள் சீருடையாளர்களைக்" கண்டித்திருந்தார். “மஞ்சள் சீருடையாளர்களை" பயங்கரமாக காட்டுவதற்கும் பீதியூட்டுவதற்குமான இத்தகைய வெளிப்படையான முயற்சிகள் முற்றிலுமாக தோல்வியடைந்தன.

அதற்குப் பதிலாக "மஞ்சள் சீருடையாளர்கள்" கூலி உயர்வுகள், வேலைகள், சமூக சமத்துவம் மற்றும் சமாதானத்திற்கான அவர்களின் கோரிக்கைகளுக்குச் சமரசமின்றி விரோதமாக உள்ள பணக்காரர்களின் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த, பாரீசிலும் மாகாணங்களிலும் பொலிஸ் வன்முறை அலையை எதிர்த்து நின்றனர். பாரீசில், 3, 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர், துலூஸ் மற்றும் ருவானில் 2, 000 பேரும், போர்தோவில் 5, 000 க்கு அதிகமானவர்களும் போராட்டத்தில் இறங்கினர். லியோனில், ஆயிரக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர், அந்நகரத்தின் வழியாக செல்லும் A7 வாகனப் பாதையை ஆக்கிரமித்து நின்றிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக தொடங்கின என்றாலும், கோன், நாந்தேர் மற்றும் போர்தோவில் உட்பட பாதுகாப்பு படைகளின் ஆத்திரமூட்டல்கள் காரணமாக பல பிரதான மாகாண நகரங்களில் மோதல்கள் வெடித்தன. ரென்னில், போராட்டக்காரர்களின் ஒரு குழுவினர் நகரசபையின் கதவை உடைத்தனர்.

ருவானில், பொலிஸ் ரப்பர் தோட்டா கொண்டு ஒரு ஆர்ப்பாட்டக்காரரின் தலையில் சுட்டது, அதேவேளையில் மொன்பெலியேவில் மோதல்கள் வெடித்த பின்னர் நான்கு கலக தடுப்பு பொலிஸ் மற்றும் மூன்று போராட்டக்காரர்களுக்கு சிறிதாக காயம் ஏற்பட்டது, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு படைகள் மீது பொருட்களை வீசியதாக குற்றஞ்சாட்டி செயிண்ட் எத்தியானில் பொலிஸ் ஆறு பேரைக் கைது செய்தது.

பாரீசில், பிற்பகலும் மாலையும் ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு படைகளுடன் மோதல்களாக வெடிப்பதற்கு முன்னதாக ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் அமைதியாக அணிவகுத்து சென்றனர். “மஞ்சள் சீருடை" அணிவகுப்பு அம்மாவட்ட நகர சபையைச் சுற்றி வந்து, தேசிய சட்டமன்ற கட்டிடத்தை நோக்கி திரும்ப முயன்ற போதுதான், முதல் வன்முறை வெடித்தது. அத்தருணத்தில், பாதுகாப்பு படைகள் மீது போத்தல்கள் மற்றும் கற்களை வீசிய போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியது.

தேசிய சட்டமன்ற கட்டிடத்தை எட்டுவதிலிருந்து தடுக்கப்பட்ட "மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு குழு "பாரீஸ், எழுக, கிளர்ந்தெழுக!” என்று முழக்கமிட்டவாறு St Germain பெருவீதிக்கு அருகில் சென்றது. பெருவீதியை வந்ததடைந்ததும், அவர்கள் முன்னேற்பாடின்றி இருப்பினும் பல்வேறு தடையரண்களை உண்டாக்கினர். ஸ்கூட்டர்களும், குப்பைகள் போடும் காலிக் கலன்களும் மற்றும் ஒரு காரும் தீக்கிரை ஆக்கப்பட்டன, தலைநகரில் அடர்த்தியான கரும்புகை எழுந்தது.

“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் அரசு செய்தி தொடர்பாளர் பெஞ்சமன் கிறிவோ (Benjamin Griveaux) இன் அமைச்சரக கட்டிடத்திற்குள் நுழைந்தனர் என்பது பாரீஸ் ஆர்ப்பாட்டத்தின் மற்றொரு முக்கிய சம்பவமாக இருந்தது, அவர் அவரது உதவியாளர்களுடன் அக்கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கிறிவோ அளித்த தகவல்படி, பிற்பகல் “மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் "கருப்பு உடையணிந்தவர்களும்" அருகிலிருந்த கட்டுமான இடத்திலிருந்த ஒரு வாகனத்தை பயன்படுத்தி அவரது அமைச்சரக கதவுகளை உடைத்து கூட்டமாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் வெளியேறுவதற்கு முன்னதாக இரண்டு கார்கள் மற்றும் வளாகத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். பாரீஸ் வழக்குதொடுனர் அலுவலகம் ஒரு விசாரணை தொடங்கி உள்ளது.

இந்த சம்பவத்தால் பீதியடைந்து, மக்ரோனும் கிறிவோவும் ஜனநாயகம் மற்றும் பிரெஞ்சு குடியரசுக்கு எதிரான ஒரு தாக்குதல் என அதைக் கண்டித்தனர்.

“கிளர்ச்சியை விரும்புபவர்கள், அரசாங்கத்தைத் தூக்கிவீச விரும்புபவர்கள்" குறித்த சம்பவத்தைக் குறைகூறி, கிறிவோ, “இலக்கு நானில்லை, மாறாக குடியரசு ஆகும், ” என்றார். ஆனால், “குடியரசு இன்னும் நிலைத்திருக்கிறது, ” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “இதை ஏற்றுக் கொள்ளவியலாது, இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறிந்து குற்றஞ்சாட்டுவதற்கு பாதுகாப்பு கேமிரா காணொளிகள் நமக்கு உதவும் என்று நினைக்கிறேன், அவர்கள் கடுமையான தண்டனைகளை முகங்கொடுப்பார்கள், ” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

மக்ரோனைப் பொறுத்த வரையில் அவர் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “மீண்டும், குடியரசு மீது —குடியரசின் பாதுகாவலர்கள், அதன் பிரதிநிதிகள் மற்றும் அதன் அடையாளங்களை— தாக்க அதீத வன்முறை எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் நமது சமூக ஒப்பந்தத்தின் இதயத்தானத்தில் இருப்பது என்னவென்பதை மறந்து வருகிறார்கள். நீதி வழங்கப்படும். ஒவ்வொருவரும் நிதானத்திற்கு வர வேண்டும், அவ்வாறானால் தான் விவாதமும் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள முடியும்.”

"மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் ஜனநாயகம் மற்றும் குடியரசுக்கு "அச்சுறுத்தலை" முன்னிறுத்துவதாக கூறப்படும் இந்த அறிக்கைகள் ஆத்திரமூட்டுவதும் அர்த்தமற்றதாகும். ஜனநாயகத்திற்கான ஆபத்து "பணக்காரர்களின் ஜனாதிபதியான" மக்ரோனுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பிலிருந்து வரவில்லை, மாறாக சமூக செலவினக் குறைப்பு, போர் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்காக பெருந்திரளான தொழிலாளர்களின் நியாயமான எதிர்ப்பை காலடியில் இட்டு நசுக்கி வருகின்ற ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவம் உரிமை கொண்டாடும் ஓர் அரசாங்கத்திடம் இருந்து வருகிறது.

இந்த "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் கடந்த ஆண்டு வெளிப்பட்ட உலகெங்கிலுமான பரந்த வர்க்க போராட்ட மீளெழுச்சியின் பாகமாகும். அமெரிக்க ஆசிரியர்களின் தொழிற் சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வேலைநிறுத்தங்கள் தொடக்கப்பட்டன, ஜேர்மன் மற்றும் துருக்கிய உலோகத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், ஈரான் மற்றும் துனிசியாவில் போராட்டங்களின் அலைகள் அனைத்தும் தொழிலாள வர்க்க கோபம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதைப் பிரதிபலித்தன. அவை, சமூக செலவினக் குறைப்பைத் திணிப்பதற்காக பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு விரோதமாக முன்பினும் அதிக பகிரங்கமாக உள்ளன.

இத்தகைய போராட்டங்கள், பிரதான வங்கிகள் திணித்த சமூக செலவினக் குறைப்பு மற்றும் போர் கொள்கைகளுக்கு எதிராக பெருந்திரளான பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உணர்வை வெளிப்படுத்துகின்ற நிலையில், ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் வக்கிரமான ஒடுக்குமுறையில் இருந்து தான் வருகின்றது.

குடியரசைப் பாதுகாப்பதற்கு இப்போது பாசாங்குத்தனமாக வாதிடுகின்ற மக்ரோன், 1940 இல் குடியரசை வழக்கொழித்து தேசிய நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவரும், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நாஜிக்களுடன் அணிசேர்ந்த பாசிசவாத விச்சி ஆட்சி சர்வாதிகாரியுமான பிலிப் பெத்தனை நினைவுகூர்வதை நவம்பரில் ஆதரித்தார். அதே நேரத்தில், மக்ரோன், விச்சி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அரசியலமைப்பில் உட்பொதியப்பட்ட வேலைநிறுத்தம் செய்வதற்கான மற்றும் போராடுவதற்கான உரிமைகளை நசுக்கி வருகிறார்.

அதிகரித்தளவில் மக்களிடையே அவரது செல்வாக்கு சரிந்து வருவதற்கு இடையே, இப்போதும் மக்ரோன், அவரது ஆட்சிக்கும் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறைக்கும் நிஜமான எதிர்ப்பின் அனைத்து வெளிப்பாடுகளையும் குற்றகரமாக்கும் ஓர் எதேச்சதிகார ஆட்சியை அமைக்க முயன்று வருகிறார். எரிக் துருவே மீது பொலிஸ் புதிதாக இரண்டு நாள் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையைத் திணித்த பின்னர், பாரீசில் பொலிஸிற்கும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களுக்கும் இடையே நின்றிருந்த 37 வயதான ஒரு குத்துச்சண்டை வீரரை தேடிப்பிடிக்கும் நடவடிக்கையை அது தொடங்கியுள்ளது. அவர் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் பொலிஸ் தடியடி பிரயோகம் செய்த போது அவர் பொலிஸைத் தாக்க முயன்றார் என்பதே அவர் செய்த "குற்றமாக" உள்ளது.

பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இன்னமும் பெருந்திரளான மக்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. Mantes-la-Jolie இல் பொலிஸ் படைகள் டஜன் கணக்கான உயர்நிலை பள்ளி மாணவ போராட்டக்காரர்களைத் தடுப்புக் காவலில் வைத்ததாலும், விச்சி ஆட்சியின் கீழ் சுடுவதற்காக நிறுத்தப்பட்ட எதிர்ப்பு போராளிகளைப் போல அவர்களது கைகளை கட்டி மண்டியிட செய்ததாலும், அதேவேளையில் அவர்களை வக்கிரமாக அவமானப்படுத்தியதாலும் கடந்தாண்டு அது மக்களிடையே ஆவேசமான எதிர்ப்பைத் தூண்டியது.

இப்போது தூலோனில் நடந்த சம்பவங்களின் ஒரு காணொளி பரவி வருகிறது, அதில் கௌரவ மதிப்புகளுக்கான அடையாளம் தாங்கிய ஒரு பொலிஸ் உயரதிகாரி, Didier Andrieux, கைது செய்யப்பட்டு ஒரு சுவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட ஒரு நிராயுதபாணியான போராட்டக்காரரின் தலையில் வன்முறையாக தாக்குகிறார். அந்த போராட்டக்காரரிடம் அப்போது ஒரு போத்தில் இருந்ததா என்பது "எனக்கு தெரியாது" என்று அந்த காணொளி குறித்து கூறி, Andrieux நேற்று இந்த நடவடிக்கையை Nice-Matin இல் நியாயப்படுத்தினார். ஆனால் அவர் தலையில் மீண்டும் மீண்டும் தாக்குவதற்குப் பதிலாக பொலிஸ் அந்த போராட்டக்காரரை சோதனை செய்திருக்கலாம்.

அரசு Andrieux ஐ பாதுகாக்கிறது. அந்நகரில் ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சி நடக்கவிருந்ததாக வெளிப்படையாகவே மோசடியான சாக்குபோக்கைக் கூறி, அரசு வழக்கறிஞர் பெர்னார்ட் மார்ஷல் Andrieux மீதான ஒரு விசாரணையை மறுத்தார்: “இந்த காணொளிக்கு முன்பும், பின்னரும், அங்கே ஓர் கிளர்ச்சிக்கான சூழல் இருந்தது, அத்தகைய சூழலில் வன்முறையின்றி யாரையும் கைது செய்வது சாத்தியமில்லை, அவர் அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.”

துலோனில் 400 பொலிஸ்காரர்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள Andrieux, இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு பொலிஸ் மேஜரை அடித்ததன் மூலமாக பொலிஸ் துறைக்கு உள்ளேயே ஒரு குழப்பத்தைத் தூண்டினார். அவருடன் பணியாற்றுபவரின் மூக்கு மற்றும் நெற்றி எலும்பை அவர் உடைத்திருந்த போதும், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து அவர் பெற்று வரும் ஆதரவின் காரணமாக அவருக்கு வெறுமனே ஒரு சிறிய கண்டிப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

Loading