சிக்கன நடவடிக்கை காரணமாக இங்கிலாந்து உள்ளூராட்சி சபைகள் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அரசு சொத்துகளை விற்பனை செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டன் முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 9 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளுக்கு அதிகமான சொத்துக்களையும் நிலங்களையும் தனியார் துறையினருக்கு விற்பனை செய்துள்ளன.

செய்தி வலைத் தளமான Huffington Post UK உடன் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்களின் பணியகத்தால் (TBIJ) நடாத்தப்பட்ட மிகப் பெரும் விசாரணைகளில் இருந்து இது வெளிப்படுத்தப்பட்டது. இது இங்கிலாந்தின் 353 உள்ளூராட்சி சபைகளுக்கு சுதந்திர தகவல் தொடர்பான கோரிக்கைகளை அனுப்பியது, ஆனால் அதில் பல முழுமையாக ஒத்துழைக்க மறுத்துவிட்டன.

அவர்கள் சொந்தமாக பயன்படுத்திய பில்லியன் கணக்கான பவுண்டுகள் சொத்துக்களை உள்ளூராட்சி சபைகள் விற்பனை செய்தமையால் நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் மீது சிக்கன நடவடிக்கைகளின் மறைமுகமான தாக்கத்தை இக் கண்டுபிடிப்புகள் அம்பலப்படுத்தியது. இது அண்மைய தசாப்தங்களில் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளால் சமூக செல்வத்தை தொழிலாள வர்க்கத்திலிருந்து நிதியப் பிரபுத்துவத்திற்கு ஒட்டுமொத்தமாக பரிமாற்றப்பட்டதன் ஒரு பகுதியாகும்.

TBIJ என்பது 2010 இல் நிறுவப்பட்ட ஒரு லண்டனில் உள்ள, இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது நன்கொடைகளால் நிதியளிக்கப்படும், பொதுமக்கள் நலன் சார்ந்த பத்திரிகைத்துறையை மேற்கொள்வதற்காக, 900 பத்திரிகையாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர்க்குற்றங்கள், அரசாங்க ஊழல்கள் மற்றும் நிதி மோசடி போன்ற பரந்த தலைப்புகள் பற்றிய செய்திகளுக்காக அவர்கள் விருதுகளைப் பெற்றிருக்கின்றனர்.

2008 நிதி நெருக்கடியை அடுத்து மத்திய அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் அரச சொத்துக்களின் மிகப்பெரும் விற்பனை அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து, நூலகங்கள், சுகாதார மையங்கள், இளைஞர் மையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளடங்கலாக 9.1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மொத்த மதிப்புள்ள 12,000 க்கும் அதிகமான பொது சொத்துக்களை விற்பனை செய்துள்ளன. இந்த விற்பனையின் மூலம் பெறப்பட்ட 381 மில்லியன் பவுண்டுகள், வரவு-செலவு திட்டக் குறைப்புகளுக்கு உதவுவதற்காக உள்ளூராட்சிசபைகள் மூலம் பயன்படுத்தப்பட்டதுடன் இந்த தொகைகளின் மூன்றில் ஒரு பகுதியான (115 மில்லியன் பவுண்டுகள்) பணிநீக்கக் கொடுப்பனவுகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டது. 2010 இலிருந்து 1மில்லியன் வேலைகள் பொதுச்சேவை துறையில் இல்லாதுபோயுள்ளன.

TBIJ ஒவ்வொரு உள்ளூர் பிராந்தியங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தனியார்மயமாக்கலின் விபரங்களை ஒரு interactive map விளக்க வரைபடத்தில் உருவாக்கியுள்ளது. சில உள்ளூராட்சி சபைகள் அவர்களின் தகவல்களை கொடுக்காதபோதிலும் நாட்டின் வேறுபட்ட பகுதிகளின் தகவல்கள் இந்த நிகழ்ச்சிப்போக்கின் அளவினை எடுத்துக்காட்டுகின்றது.

லண்டனில், தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் ஆதரவாளர்களால் தற்போது நிர்வகிக்கப்படும் Haringey Borough Council, 2014 க்கும் 2018 க்கும் இடையில் 35.7 மில்லியன் பவுண்டுகளை திரட்டிக்கொள்ள ஒரு சொத்து மேம்பாட்டாளருக்கு இரண்டு சனசமூக நிலையங்கள் உட்பட 30 சொத்துக்களை விற்பனை செய்துள்ளது. மற்றொரு தொழிற் கட்சி உள்ளூராட்சி சபையான Tower Hamlets, 22 சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் 72.7 மில்லியன் பவுண்டுகளை திரட்டிக்கொண்டது. Bexley council, 2014 மற்றும் 2016 க்கு இடையில் 11 பொது இடங்களை மொத்தம் 10.8 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்தது. 6.4 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்த Hill View இடுகாடு ஆகப்பெரியதாகும்.

பட்டியலிடப்பட்ட மற்ற உள்ளூராட்சி சபைகள் பின்வருமாறு:

பேர்மிங்காம் நகர சபை, ஏப்ரல் 2016 முதல் ஜூலை 2018 வரை, 167 கட்டிடங்கள் அல்லது நிலங்களை விற்பனை செய்தது. தொழிற் கட்சியால் நிர்வகிக்கப்படும் இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய ஒற்றை உள்ளூராட்சி சபையான இது, அதன் கணக்குகளை சமநிலைப்படுத்த சொத்து விற்பனையில் இருந்து பெற்ற 49 மில்லியன் பவுண்டுகளைப் பயன்படுத்தியது.

சபை 2010 ஆம் ஆண்டு முதல், 12,000 பணிநீக்கங்களை சுமத்தியது. பேர்மிங்காம் மெயில் பத்திரிகையின் கருத்துப்படி, குறைந்தபட்சம் 35 மில்லியன் பவுண்டுகள் சபையின் பணிநீக்கத்திற்கு நிதியளித்துள்ளன. இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சபையால் புதிய வெட்டுக்களை சுமத்துவதோடு, ஆறு சனசமூக நிலையங்களும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டன அல்லது விற்பனைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன". மேலும் முன்னணி சேவைகளில் பெரும்பகுதியை அகற்றுவதற்கு, அடுத்த ஆண்டு 1,095 பேரை பணிநீக்கம் செய்ய சபை திட்டமிட்டுள்ளது” என்று பேர்மிங்காம் மெயில் கடந்த மாதம் தெரிவித்தது. தமக்கு தேவையான நிதிகளை உயர்த்துவதற்காக பொது சொத்துக்களை விற்க திட்டமிடப்பட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது என்பதையும் இது உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு, பணிநீக்கங்களுக்கு பணம் செலுத்துவதற்கு மற்றொரு 12.1 மில்லியன் பவுண்டுகளை சொத்து விற்பனைகளில் இருந்து சேமித்து வைத்துள்ளது.

நகரத்தின் ஒரேயொரு முதல் தரம் என பட்டியலிடப்பட்ட கட்டிடமான Acklam Hall உட்பட தொழிற் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் Middlesbrough council 222 சொத்துக்களை விற்பதன் மூலம் 155 மில்லியன் பவுண்டுகளை திரட்டியுள்ளது.

தொழிற் கட்சியின் மான்செஸ்டர் நகர சபையானது பெறுமதியான நகரத்துக்கு உள்ளேயுள்ள நிலம் உட்பட, 42.9 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 707 பொதுச் சொத்துக்களை விற்றது.

முன்னாள் பாடசாலைகளின் பல இடங்கள் உட்பட 313 பொது இடங்களை மொத்தம் 36.4 மில்லியன் பவுண்டுகளுக்கு தொழிற் கட்சியின் Sheffield’s council விற்றுள்ளது.

Shirley Manor ஆரம்ப பாடசாலைக்கு சொந்தமான முன்னாள் நிலத்திற்கு கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பவுண்டுகள் மற்றும் ஊனமுற்றவர்களின் வீட்டுவசதிக்கு உதவக்கூடிய Whetley Hill Resource Centre ஐ 0.7 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்தமை உட்பட 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 318 வெவ்வேறு விற்பனைகளில் 22.7 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களை Bradford தொழிற் கட்சி சபை விற்றுத்தள்ளியுள்ளது.

கல்வித் திட்டத்தின் ஊடுருவும் தனியார்மயமாக்கலின் ஒரு பகுதியாக தனியாரால் கட்டுப்படுத்தப்படும் கல்விச்சாலை நன்கொடைகளுக்கு மாற்றப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் வீடுகள் மற்றும் பாடசாலைகளில் பலவும் விற்பனைக்குள்ளாகி இருந்தன. விற்பனையின் பல விபரங்கள் மற்றும் அவற்றின் உண்மையான சந்தை பெறுமதிக்கு கீழே உள்ள தொகையைப் பற்றியும் வெளியிடப்படவில்லை. இந்த சொத்துக்களை சுதந்திர சந்தைகளின் "உத்வேகத்திற்காக" மறு உயிர் கொடுப்பதற்கு மாறாக, தனியார் கட்டிடங்களின் வாடகை வீதமானது பொதுவாக அரச சொத்துக்களினதை விட குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

"தற்போதைய சேமிப்புக்கு" பங்களிப்பு செய்வதாக இருந்தால், ஏப்ரல் 2016 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை மாற்றமானது, உள்ளூராட்சி சபைகள் தங்கள் சொத்துக்களை பற்றிய விபரத்தை தெரிவிப்பதற்கு அதிக சுதந்திரத்தை கொடுத்தது. தங்கள் சொத்துக்களை விற்பதன் மூலம் பெறப்பட்ட பணத்தை பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு நிதியளிக்க உள்ளூராட்சிசபைகள் பயன்படுத்துவதற்கு இது அதிகாரமளித்தது. TBIJ இன் கருத்துப்படி, பிரிஸ்டல் உள்ளூராட்சி சபை, பணிநீக்க விகிதத்தை 39 இலிருந்து 401 வரை பத்து மடங்கால் அதிகரித்துள்ளது. ஒழுங்குமுறை மாற்றத்தின் பின்னர் 70 சதவிகிதம் அதிகரித்து Haringey council 8 மில்லியன் பவுண்டுகளை வேலை இழப்புக்கள் மீது செலவிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் சில நிதி நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியுள்ளதுடன் மற்றையவை ஒரு மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. பழமைவாத தாராளவாத ஜனநாயகக் கூட்டணி 2010/2015 மற்றும் அதைத் தொடர்ந்து தெரசா மே அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2010 ல் இருந்து 60 சதவிகிதத்தால் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை உள்ளூராட்சி சபைகள் குறைத்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் பழமைவாதக் கட்சியின் மாநாட்டில் மே ஆல் "சிக்கன நடவடிக்கைகள் முடிந்துவிட்டன" என்று அறிவிக்கப்பட்டிருந்த போதினும், உள்ளூர் அரசாங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை இன்னும் குறைக்கப்பட்டு அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்டக் குறைப்பு மேலும் 36 சதவீதமாக உள்ளது.

மற்ற உள்ளூராட்சி சபைகள் தங்கள் நடவடிக்கைகளை மறுஒழுங்கமைக்க அதிக்கட்டணம் விதிக்கும் நிர்வாக ஆலோசகர்களை பணியமர்த்துவதற்கும், மற்றும் வேலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லும் குறைந்த ஊதியம் வழங்கும் நிறுவனங்களுக்கு தரகுப்பணம் செலுத்துவதற்கும் பணத்தைப் பயன்படுத்தப்படுகின்றன.

இது சமூக சேவைகளின் தனியார்மயமாக்குதலுக்கு உதவும் நோக்கத்திற்கான இலக்கை அடைய உள்ளூர் அதிகாரிகள் மீது மத்திய அரசாங்க "அதிகாரத்துவத்தின்" மேற்பார்வையின் பரந்த குறைப்பின் ஒரு பகுதியாகும். உள்ளூராட்சி சபைகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்களை வழங்கி, தங்கள் செயற்பாடுகளுக்கான நிதி மூலத்தை அதிகரிக்கும் உள்ளூர் சட்டம் 2011 ஆனது இந்த செயல்முறையின் சமீபத்திய மைல்கல் ஆகும்.

இந்த சொத்துக்களின் இழப்பு, அத்தியாவசிய சமூக சேவைகள் தங்கியுள்ள வசதிகளை அகற்றுவதோடு பல ஆண்டுகளுக்கு தொழிலாள வர்க்க சமூகங்களை பாதிக்கும். இந்த சொத்துக்களின் இழப்பு இளைஞர் கழகங்கள், சமூக நல மையங்கள், நூலகங்கள் போன்றவற்றுக்கான இந்த வெட்டுகளின் விளைவு குறித்து அறிக்கை குறிப்பிடுகிறது. சொத்துக்களின் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி தடைகளை இந்த விற்பனைகள் அதிகரிக்கின்றன. முன்னர் பொதுச் சொத்துக்களாக இருந்த வீடுகளுக்காக தனியார் நில உரிமையாளர்களுக்கு சபைகள் பெரும் தொகையை செலுத்தி வருவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.

நகர மையங்கள் போன்ற மக்கள் சந்திக்கின்ற, போராட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்துகின்ற பொது இடங்களை குறைப்பதன் மூலம், விற்பனையானது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு குழி பறிக்கிறது.

பிரிட்டனில், நிதிய தன்னலக்குழுவிற்கும் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள சமூக பிளவுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூக யதார்த்தத்தை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிகாரபூர்வமான புள்ளி விபரங்களின் படி, உயர் மட்டத்திலுள்ள 10 சதவீத செல்வந்தர்கள் மொத்த மக்கள் தொகையில் கீழ் மட்டத்தில் உள்ள அரைவாசிக்கும் அதிகமானோரை விட ஐந்து மடங்கு அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளனர்.

மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பழமைவாத, தொழிற் கட்சி மற்றும் தாராளவாத உள்ளூராட்சி சபைகளால் சுமத்தப்படும் இந்த வெட்டுக்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு எதுவும் இல்லை. தொழிற் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மத்திய அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க "சட்டரீதியான வரவு-செலவுத் திட்டங்களை" செயல்படுத்துவதற்கு தொழிற் கட்சி உள்ளூராட்சி சபைகளை கோர்பின் வலியுறுத்தியுள்ளார். தொழிற்சங்கங்கள் தங்கள் தொழிற் கட்சி பங்காளிகளுடன் கை கோர்த்து, வெட்டுக்கள், பணி நீக்கங்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் தனிமைப்படுத்தி, இல்லாதொழிக்கின்றன.

பல தொழிற் கட்சி உறுப்பினர்கள் சிக்கன நடவடிக்கைகளில் கட்சி உடந்தையாக இருப்பது குறித்து ஏமாற்றமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுச் சேவைகள் மீதான வெட்டுக்களை எதிர்ப்பதற்கும் மற்றும் பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பொது சொத்துக்களின் பாரியளவிலான விற்பனையை தடுப்பதற்கும் ஒரு புதிய போராட்ட பாதையைத் தேடவேண்டும்.

சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியின் ஒரு பாகமாக, தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியில் பொதுத்துறை தொழிலாளர்கள் பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் உள்ள தனியார் துறை தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். பணியிடங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களில் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் அடிப்படையில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட இயக்கத்தின் வளர்ச்சியே இதற்கு முக்கியமானதாகும்.

Loading