பிரிட்டிஷ் பொலிஸ் ஈக்வடோரியன் தூதரகத்தில் ஜூலியன் அசான்ஜைக் கைது செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை காலை, ஈக்வடோரிய ஜனாதிபதி லெனின் மொரேனோ ஆட்சி ஜூலியன் அசான்ஜிற்கு வழங்கப்பட்டிருந்த அரசியல் அடைக்கலத்தைச் சட்டவிரோதமாக நீக்கியதால், பிரிட்டிஷ் பொலிஸ் அவரைக் கைது செய்ய அந்நாட்டின் இலண்டன் தூதரகத்திற்குள் நுழைந்தது.

பிரிட்டிஷ் பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழுவால் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து அசான்ஜ் இழுத்து வரப்பட்டார். அவர் ஒரு பொலிஸ் வாகனத்தில் மூர்க்கமாக கையாளப்பட்ட போதும் கூட, அசான்ஜ் அவரை தொல்லைப்படுத்துபவர்களுக்குச் சவால்விடுத்தார், “ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முயற்சியைப் பிரிட்டன் எதிர்க்க வேண்டும்... பிரிட்டன் எதிர்க்க வேண்டும்!”
வியாழக்கிழமை காலை ஜூலியன் அசான்ஜ் இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்

“தூதரகத்திலிருந்து அசான்ஜ் வெளியேற்றப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருப்பது முன்நிகழ்ந்திராத குற்றங்கள்,” என்று ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜேம்ஸ் கோகன் தெரிவித்தார். “எந்த குற்றமும் செய்திராத ஒரு பத்திரிகையாளர் மற்றும் பதிப்பாசிரியருக்கு வழங்கப்பட்டிருந்த அடைக்கலம் நீக்கப்பட்டுள்ளது, ஓர் அரசியல் அகதியாக அவர் அந்தஸ்தை நிலைநிறுத்த வேண்டுமென்ற ஐ.நா. சபையின் பல தீர்ப்புகளை மீறி அவர் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.”

“அசான்ஜ் மீதான தாக்குதல் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது. போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான பெருந்திரளான மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது,” என்று கோகன் தொடர்ந்து கூறினார்.

“மகாநகர பொலிஸ் பறிமுதல் படையால் ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டிருப்பது ஓர் அரசியல் குற்றமாகும், இதற்கு தெரேசா மேயின் பழமைவாத அரசாங்கமும் லெனின் மொரேனோவின் ஈக்வடோரிய அரசாங்கமும் அரசியல்ரீதியில் பொறுப்பாகின்றன,” என்று பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் தெரிவித்தார்.

“முன்னதாக ஈக்வடோர் தூதரகத்திற்குத் அதன் தூதர் பொலிஸை அழைத்திருந்தார், மேலும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சர் அலன் டன்கன் 'நம் இரு நாடுகளுக்கு இடையிலும் விரிவான பேச்சுவார்த்தை' இருந்ததாக தெரிவித்த பின்னர் தான் இந்த கைது நடவடிக்கை நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் திரைக்குப் பின்னால் இருந்து சம்பவங்களை முடுக்கி விட்டு வருகிறது.

“சோசலிச சமத்துவக் கட்சி இந்த சூழ்ச்சியைக் கண்டிக்கிறது. தெளிவாக சர்வதேச சட்டத்தை மீறி விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான என்ன தயாரிப்பு வேலைகள் நடக்கின்றனவோ அதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த போராட்ட இயக்கத்தை அணித்திரட்ட நாங்கள் எங்கள் சக்திக்கு உட்பட்டு அனைத்தும் செய்வோம்.”

அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி காலை சுமார் 5.37 மணிக்கு, அசான்ஜ் கைது செய்யப்பட்டதை விக்கிலீக்ஸ் உறுதிப்படுத்தி, ட்வீட் செய்தது: “அவசரம்: சர்வதேச சட்டத்தை மீறி ஈக்வடோர் அசான்ஜிற்கு வழங்கப்பட்டிருந்த அரசியல் அடைக்கலத்தைச் சட்டவிரோதமாக நீக்கியது. அவர் சில நிமிடங்களுக்கு முன்னர் ஈக்வடோரிய தூதரகத்திற்குள் பிரிட்டிஷ் பொலிஸால் கைது செய்யப்பட்டார்.”

சில நிமிடங்களுக்குப் பின்னர், விக்கிலீக்ஸ் ட்வீட் செய்தது: “அவசரம்: ஜூலியன் அசான்ஜ் 'தூதரகத்திலிருந்து நடந்து' வரவில்லை. ஈக்வடோரிய தூதர், தூதரகத்திற்குள் பொலிஸை அழைத்தார், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.”

பிரிட்டிஷ் உள்துறை செயலர் சஜித் ஜாவித் உடனடியாக பின்வருமாறு அறிவித்து ட்வீட் செய்தார்: “ஈக்வடோரிய தூதரகத்திற்குள் நுழைந்து அண்மித்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது ஜூலியன் அசான்ஜ் பொலிஸ் காவலில் இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் மற்றும் இங்கிலாந்தில் நேர்மையான நீதியை முகங்கொடுக்கிறார். ஈக்வடோரின் ஒத்துழைப்புக்கும் & @metpoliceuk இன் தொழில்ரீதியான அணுகுமுறைக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.”

அசான்ஜிற்கு எதிரான பிணை குற்றச்சாட்டுக்கள் அரசியல்ரீதியில் மேற்கொள்ளப்பட்டவை என்பதுடன் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டன.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைச் சுலபமாக்குவதுதான், பிரிட்டிஷ் அதிகாரிகள் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரைக் கைது செய்திருப்பதன் வெளிப்படையான உள்நோக்கமாக உள்ளது. இது அசான்ஜின் வழக்கறிஞர்களால் உறுதிசெய்யப்பட்டது, அவர் போலியான பிணையெடுப்பு மீறல்களுக்காக மட்டும் கைது செய்யப்படவில்லை, மாறாக ஜோடிக்கப்பட்ட சதி குற்றச்சாட்டுக்களின் மீது அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கைக்குப் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் ட்ரம்ப் நிர்வாகம், போர் குற்றங்கள், மக்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் சட்டவிரோத இராஜாங்க சூழ்ச்சிகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துவதில் அசான்ஜ் வகித்த பாத்திரத்திற்காக அவரை வழக்கில் இழுக்க முயன்று வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் கொண்டு வரப்பட்ட ஒரு எதேச்சதிகார "சட்டநெறிமுறையை" அவர் மீறி இருப்பதால் அசான்ஜிற்கு வழங்கப்பட்டு வந்த அடைக்கலத்தை அது நீக்கிவிடுவதாக மொரேனோ ஆட்சி அறிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தை மீறி, அந்த சட்டநெறிமுறையானது அசான்ஜ் எந்தவொரு அரசியல் அறிக்கையும், அவரின் சொந்த கதியைக் குறித்து கூட அறிக்கை வெளியிடுவதில் இருந்து அவரை தடுத்தது.

விக்கிலீக்ஸ் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டதைப் போல, இந்த சட்டநெறிமுறை அசான்ஜிற்குத் தஞ்சம் வழங்கப்பட்டதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வெளிப்படையான சாக்குபோக்காக இருந்தது. மொரேனோ அரசாங்கம் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் ஏவலாளியாக செயல்பட்டுள்ளது, இது, ஈக்வடோரிய தூதரக அதிகாரிகளை அமெரிக்க நீதித்துறை குறுக்கு விசாரணை செய்யவும் மற்றும் சிஐஏ இன் சார்பாக அசான்ஜை உளவுபார்க்கவும் உட்படுத்தியது.

“அசான்ஜ் மீதான இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஜனநாயகக் கட்சி முழுவதுமாக ஒத்துழைத்து வருகிறது,” என்று அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜோ கிஷோர் தெரிவித்தார். “இது ஜனநாயகக் கட்சியினரின் பிற்போக்குத்தனமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் மத்திய நோக்கமாகவும் விளைவாகவும் இருந்துள்ளது. அசான்ஜ் மற்றும் செல்சியா மேனிங் கைது செய்யப்பட்டிருப்பது அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதல், இது எதிர்க்கப்பட வேண்டும்.”

அசான்ஜ் கைது செய்யப்பட்டிருப்பது பரந்த மக்களிடையே மனக்குமுறலையும், முன்னணி பத்திரிகையாளர்களிடம் இருந்து கண்டனங்களையும் தூண்டியுள்ளது. “ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து நேரடியான அர்த்தத்தில் ஜூலியன் அசான்ஜை இழுத்து வருகின்ற பிரிட்டிஷ் போலிஸின் நடவடிக்கையும் மற்றும் இந்த காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிப்பதில் ஈக்வடோரிய ஆட்சி சர்வதேச சட்டத்தை நசுக்கி இருப்பதும் இயல்பான மிக அடிப்படை நீதிக்கு எதிரான குற்றங்களாகும்,” என்று ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஜோன் பில்ஜெர் ட்வீட் செய்தார். “இது அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகும்.”

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜேம்ஸ் கோகன் பின்வருமாறு கூறி நிறைவு செய்தார்: “மொரேனோ ஆட்சி, பிரதம மந்திரி தெரேசா மேயின் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் தூதரகத்திலிருந்து அசான்ஜை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான சூழ்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற அனைவரும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர், இது அவர்களை எப்போதைக்கும் குற்றவாளிகளாக மற்றும் குண்டர்களாக முத்திரை குத்தும்.

“அசான்ஜிற்கு இருக்கும் அளப்பரிய ஆதரவை அணித்திரட்ட சோசலிச சமத்துவக் கட்சி அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்யும். ஓர் ஆஸ்திரேலிய பிரஜையான அசான்ஜைக் கைவிட்டதற்காக மற்றும் அவரின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலில் ஒத்துழைப்பதற்காக நாங்கள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தையும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் கண்டிக்கிறோம்.

“முன்னெப்போதையும் விட இப்போது, சோசலிச சமத்துவக் கட்சி, ஆஸ்திரேலிய அரசாங்கம் அசான்ஜிற்கான அதன் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய அதை நிர்பந்திப்பதற்கு ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடும். அது, அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதில்லை என்ற உத்தரவாதத்துடன், அசான்ஜ் அந்நாட்டை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பி வர பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும்.”

அசான்ஜைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதற்காக, ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி (SEP) நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 12 மதியம் ஒரு மணிக்கு சிட்னியின் மார்டின் மாளிகை அம்பிதியேட்டரிலும் மற்றும் மெல்போர்னில் விக்டோரிய அரசு நூலகத்திற்கு வெளியே மாலை 4 மணிக்கும் பேரணிகள் நடத்தும்.

அசான்ஜின் விடுதலைக்காக மிகவும் தீர்மானகரமாக பிரச்சாரம் செய்து வருகின்ற ஜூலியனின் அன்னை கிறிஸ்டின் அசான்ஜ் இந்த பேரணிகளை ஆமோதித்து பின்வரும் அறிக்கை வெளியிட்டார்: “ஜூலியனைப் பாதுகாப்பாக தாய்நாட்டிற்குக் கொண்டு வர ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருவதற்காக, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொருவரும், குடிமக்கள் அல்லது பயணிகள் ஒவ்வொருவரும் நாளைய பேரணிகளில் கலந்து கொள்ள வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். நாம் தேர்தல் மனோநிலையில் உள்ளோம், உங்கள் மக்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த இதுவே சரியான நேரம்.”

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

Loading