இலங்கையில் சோ.ச.க. மற்றும் IYSSE அசான்ஜ் மற்றும் மானிங்கை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடத்தின!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கை விடுதலை செய்யக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் ஒரு பலம்வாய்ந்த ஆர்ப்பாட்டத்தையும் கூட்டத்தையும் நடத்தின.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்களுமாக சுமார் 100 பேர் வரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். வடகில் யாழ்ப்பாணத்தில் இருந்து சோ.ச.க. உறுப்பினர்கள் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். மத்திய மலையகப் பகுதியில் இருந்து பல தோட்டத் தொழிலாளர்கள் வந்திருந்தனர்.

கடந்த வியாழனன்று பிரிட்டிஷ் பொலிஸால் அசான்ஜ் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) அழைப்பு விடுத்திருந்த பல ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்றாகும். விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றார்.

"ஜூலியன் அசான்ஜை விடுதலை செய், செல்சீ மானிங்கை விடுதலை செய்", "பேச்சு சுதந்திர உரிமையை பாதுகாத்திடு, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திடு", மற்றும் "இணைய தணிக்கையை நிறுத்து, உலக போர் வேண்டாம், உலக சோசலிசத்திற்காகப் போராடு," ஆகியவை உட்பட பல சுலோகங்களை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்வத்துடன் கோஷமிட்டனர். "ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் ஏப்ரல் 12 வெளியான முன்நோக்கின் நூற்றுக்கணக்கான பிரதிகள், போராட்டத்தை அவதானித்தவர்கள் மத்தியிலும் அந்த வழியாக சென்றவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

இலங்கையின் பிரதான தமிழ் நாளிதழான வீரகேசரி, .பி.சி வானொலி, டான் டிவி, கேபிடல் எஃப்.எம் மற்றும் மத்யவேதியா.எல்கே உட்பட நிறுவனங்களில் இருந்து ஊடகவியலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்தனர்.


கே. ரத்னாயக்க

உலக சோசலிச வலைத் தளத்தின் இலங்கை தேசிய ஆசிரியரான கே. ரத்னாயக்க ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் 45 நிமிட கூட்டத்தில் உரையாற்றினார். பிரிட்டிஷ் பொலிஸால் அசான்ஜ் கைது செய்யப்பட்ட, மற்றும் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து சட்ட விரோதமாக அவர் அகற்றப்பட்ட சூழ்நிலைகளையும், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் பற்றி அவர் விளக்கினார். உளவு பார்த்தமை மற்றும் தேசிய பாதுகாப்பை மீறியமை போன்ற குற்றச்சாட்டுக்களை அவர் அமெரிக்காவில் எதிர்கொள்ளக் கூடும்.

"ஏகாதிபத்திய சார்பு ஈக்வடோரிய ஜனாதிபதி லெனின் மோரோனோவின் உடந்தையுடன், வாஷிங்டன் மற்றும் பிரிட்டனால் அசாஞ்ச் அடக்கப்படுவதற்கு அவர் செய்த குற்றம் என்ன?

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா ஊடகங்களுடன் பேசுகிறார்

"ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த பாரிய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்த முன்னாள் அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சீ மானிங் மூலம் கசியவிடப்பட்ட தகவல்களை வெளியிட்டமை அவர் மீதான குற்றம் எனக் கூறப்படுகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் கொள்ளையடிப்பு நவ-காலனித்துவ போர்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த குற்றங்களை அம்பலப்படுத்தியது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு செய்த பெரும் சேவையாகும்.

"புதிய மேலாதிக்க போர் தயாரிப்புகளில், ட்ரம்ப் நிர்வாகம் வாஷிங்டனின் முந்தைய குற்ற நடவடிக்கைகளை மூடிமறைக்க முயல்கிறது, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நசுக்குவதோடு ஜனநாயக உரிமைகளையும் ஒடுக்க முயல்கிறது."

அசான்ஜ் கைது செய்யப்பட்டதைப் பற்றியும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களையும் பற்றி இலங்கையின் பிரதான ஊடகங்கள் முழுமையாக மெளனம் காப்பதைப் பற்றி ரட்னாயக்க கண்டனம் செய்தார். சில இலங்கை ஊடகங்களின் சுருக்கமான அறிக்கைகள் அசான்ஜ் மற்றும் மானிங்கிற்கு விரோதமாக இருந்தன, என அவர் சுட்டிக்காட்டினார்.

"அதே போல், முன்நிலை சோசலிச கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் நவ சம சமாஜக் கட்சி போன்ற இலங்கை போலி இடது குழுக்கள், ஜனநாயக உரிமைகள் மீதான இந்த ஆபத்தான தாக்குதலைப் பற்றி எதுவும் கூறவில்லை. அசான்ஜ் அல்லது மானிங்கை கைது செய்தமை பற்றி அவர்களின் பத்திரிகைகளில் ஒரு வார்த்தை கூட இல்லை", என ரட்னாயக்க தெரிவித்தார்.

"ஏனைய அரைக் காலனித்துவ நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதல் எதிர் கட்சித் தலைவர் மஹிந்த இராஜபக்ஷ வரை, இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு கன்னையும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீது தமது தாக்குதல்களை உக்கிரமாக்குவதற்கான ஒரு அனுமதிப் பத்திரமாக, தமது ஏகாதிபத்திய எஜமானர்களின் இந்த தாக்குதல்களை பயன்படுத்திக்கொள்ளும்."


கபில பெர்னாண்டோ

ஐ.வை.எஸ்.எஸ்.ஈ. அழைப்பாளர் கபில பெர்னாண்டோ, அசான்ஜ் மற்றும் மானிங்கினால் ஏகாதிபத்திய குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டமை, ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைவர்களிடமிருந்து பெரும் மரியாதையை பெற்றிருப்பதாக, கூட்டத்தில் தெரிவித்தார்.

"கடந்த ஏழு ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் அசான்ஜ் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பரந்த மாற்றங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் உயர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தமது உரிமைகளை பாதுகாக்க போராட முன்வந்துள்ளது" என்று பெர்னாண்டோ தெரிவித்தார்.

"அசான்ஜ் கைது செய்யப்பட்ட சூழல் இதுவே ஆகும். அவருடைய சிறைவாசம் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தாக்குதலாகும், அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு உலக யுத்தத்தை நோக்கிய நடவடிக்கைகளோடு பிணைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிக்கும் போராட்டம், சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அணிதிரட்டுவதன் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டத்தின் பின்னர், சுயாதீன ஒளிப்படக் கலைஞரான சுனில் ஹரிஸ்சந்திர, உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசும் போது அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிக்கும் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

சுனில் ஹரிஸ்சந்திர

"உலக ஏகாதிபத்தியம் ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கில் இருந்து ஒரு உதாரணத்தை உருவாக்க முயல்வதுடன், அவர்கள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியதால் அவர்களது உயிர்களை பெரும் ஆபத்தில் தள்ளி உள்ளது.

"அவர்கள் வர்க்கப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்தியவாதிகள் இதைத் தீர்மானிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது," என்று அவர் கூறினார். "அவர்களுடைய தலைவிதி உலக பாட்டாளி வர்க்கத்திற்கு தீர்க்கமானதாகும், நாங்கள் அவர்களின் விடுதலையை கோரவேண்டும்."

ஒரு கலைஞரான லொகான் குணவீர கூறியதாவது: "ஏகாதிபத்திய நாடுகள் போருக்கு பாரிய அளவில் தயாராகின்றன. இது அசான்ஜ் கைது செய்யப்பட்டதில் இருந்தும், மானிங் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தும் வெளிக்காட்டப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் போருக்கான ஏகாதிபத்திய தயாரிப்புக்களுக்கு எதிரான போராட்டத்திலும் அசான்ஜ் மற்றும் மானிங் சிறைவைக்கப்பட்டிருப்பதை எதிர்ப்பதிலும் முன்னணி வகித்திருக்கிறது.

"அசான்ஜ் மற்றும் மானிங்கின் மீதான சோடிக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அனைத்து பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஏனையவர்களும் அவ்வாறே பாதிக்கப்படுவார்கள். இந்த தாக்குதல்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்

Loading