இலங்கையில் பயங்கரவாத குண்டுவீச்சில் குறைந்தபட்சம் 290 பேர் கொல்லப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் நேற்று இடம்பெற்ற சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தபட்சம் 290 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். காலை 8.45 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள், மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து போகும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களை தாக்கினர். இறந்தவர்களுள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 35 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

கொழும்பில் உள்ள புனித அந்தோனியார், தலைநகருக்கு வடக்கில் நீர்கொழும்பில் புனித செபஸ்டியன் மற்றும் தீவின் கிழக்கு கரையிலுள்ள மட்டக்களப்பில் ஸியோன் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்கள் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பூஜைக்காக வந்தவர்களால் நிரம்பி வழிந்தன. குண்டுவெடிப்புகளில் கூரைகள் பொறிந்துகொட்டியதுடன் உடைந்த கூழங்கள் மேல் உடல் பாகங்கள் வீசுபட்டுக் கிடந்தன. மருத்துவமனைகள், குறிப்பாக உயிரிழப்புக்கள் அதிகம் நேர்ந்த நீர்கொழும்பில் உள்ள மருத்துவமனைகள், பெருந்தொகையான காயமடைந்தவர்களால் நிரம்பிப் போயின.

மூன்று ஆடம்பர ஹோட்டல்களான ஷங்ரி-லா, சின்னமன் கிரன்ட் மற்றும் கிங்ஸ்பரியும் கொழும்பில் உள்ளன. பல மணிநேரங்களுக்கு பின்னர் தலைநகரில் நடந்த மேலும் இரண்டு குண்டுவெடிப்புகள் பல உயிர்களைக் காவுகொண்டன. புறநகர் பகுதியான தெஹிவளையில் நடந்த வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு இரண்டாவதாக தெமட்டகொடையில் நடந்த வெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அதில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி மக்களை படுகொலை செய்த இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளை சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) வன்மையாக கண்டனம் செய்கிறது. இந்த கொடூரமான குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் யார் என்றாலும், அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அது அரச இயந்திரத்தை பலப்படுத்தவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது மேலும் தாக்குதல் நடத்தவும் அரசியல் ஸ்தாபகத்தால் சுரண்டிக்கொள்ளப்படும்.

அரசாங்கம், "தவறான செய்தி அறிக்கைகளைப்" பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி, பேஸ்புக், இன்ஸ்டகிரம், யூடியூப், ஸ்னப்சட், வட்ஸ்அப் மற்றும் வைபர் உட்பட சமூக வலைத் தளங்களை உடனடியாக ஒரு நாடு தழுவிய ரீதியில் தடை செய்தது. இந்த இடை நிறுத்தம் தற்காலிகமானது எனக் கூறும் அதேவேளை, இணையத்தை தணிக்கை செய்வதற்கு உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் மேற்கொள்ளும் நகர்வுகளின் ஒரு பாகமே இதுவாகும். அப்போது, அரசாங்கம் அனுமதித்த செய்திகள் மட்டுமே தயாராக கிடைக்கும்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு இது வரை குழுக்களோ அல்லது தனிநபர்களோ பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு விவகார மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, அரசாங்கம் "குற்றவாளிகளை அடையாளம்" கண்டிருப்பதாக கூறிய போதிலும் அதை விரிவுபடுத்தவில்லை. பொலிஸார் 13 பேரை கைது செய்துள்ளனர், ஆனால் அவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. குண்டுவீச்சின் தன்மை கூட தெளிவாக இல்லை, ஆனால் தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன.

தற்கொலை குண்டுதாரிகள் பிரதான தேவாலயங்களை தாக்க திட்டமிட்டிருப்பதாக 10 நாட்களுக்கு முன்னரே இலங்கை அரசாங்கத்துக்கும் பொலிசுக்கும் எச்சரிக்கை கிடைத்துள்ளதாக ஆஜன்ஸ் பிரான்ஸ் பிரஸ்அறிவித்துள்ளது. உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள புலனாய்வு தகவல்கள் அறிவித்துள்ளதாவது: "ஒரு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம், தேசிய தௌஹீத் ஜம்மா அத் அமைப்பு (National Thowheeth Jamma’ath - NTJ) முக்கிய தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் இல்லத்தையும் இலக்காகக் கொண்ட தற்கொலைத் தாக்குதல்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என அறிவித்துள்ளது.”

வரவிருக்கும் தாக்குதலைப் பற்றி பொதுமக்களை எச்சரிப்பதற்கு பொலிஸ் அல்லது அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அல்லது, இந்த குண்டுத் தாக்குதல்களை தடுக்க பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுத்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும், எச்சரிக்கை முற்றிலும் துல்லியமாக இருந்துள்ளதுடன் ஈஸ்டர் என்பது தேவாலயங்கள் நிரம்பிவழியும் நாள் என்பதும் வெளிப்படையானதாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெயரிடப்படாத வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் எச்சரிக்கை கிடைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் இந்த எச்சரிக்கை பற்றி தெரியாது என்று கூறினார். "இந்த தகவல் சம்பந்தமான போதுமான கவனம் செலுத்தப்படாமை" பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அளவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் NTJ அமைப்பு இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அமைப்பாகும். எவ்வாறெனினும் இந்த கட்டத்தில், ஏனைய சாத்தியங்களைப் பற்றியும் நிராகரித்து விட முடியாது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக மூன்று தசாப்தகால கொடூர யுத்தத்தை முன்னெடுத்த கொழும்பு அரசியல் ஸ்தாபகமும், சிங்கள பெளத்த மேலாதிக்கவாத குழுக்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இந்த குழுக்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீதான தாக்குதல்களுக்கும் தீவின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கும் பேர் போனவை ஆகும். பல சந்தர்ப்பங்களில், அத்தகைய தாக்குதல்களை பொலிசார் கண்டும் காணாதது போல் இருந்துள்ளனர்.

குண்டுத் தாக்குதலால் வளர்ச்சியடையும் கோபத்தை திசைதிருப்ப அரசாங்கம் தீவிரமாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என விக்கிரமசிங்க தனது கருத்துக்களில் சமிக்ஞை செய்தார். சிறிசேன, கடந்த டிசம்பரில் தனக்கும் பிரதமருக்கும் இடையேயான கசப்பான மோதலின் பாகமாக, பொலிசையும் உள்ளடக்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை தானே வைத்துக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில், ஜனாதிபதி நாட்டின் மூன்று ஆயுதப் படைகளையும் ஏற்கனவே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க் கட்சி, நேற்று தாக்குதலை கண்டனம் செய்த போதிலும், அரசாங்கத்தின் மீதே குற்றம் சாட்டியது. இராஜபக்ஷ அரசாங்கம், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கொடூரமான முடிவுக்கு பொறுப்பாளியாகும். இந்த போரின் இறுதி இராணுவ நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இராணுவத்துடன் இணைந்த கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் ஆக்கப்பட்டனர்".

இராஜபக்ஷ எந்தவொரு யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் "யுத்த வீரர்களை" பாதுகாத்ததோடு, அதிகாரத்திற்குத் திரும்புவதற்கான தனது முயற்சியில் இராணுவத்தின் ஆதரவை அவர் எதிர்பார்க்கின்றார். “அரசாங்கம் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மூன்று ஆயுதப்படைகளின் அதிகாரிகளை முடக்கியதன் பயங்கரமான விளைவாகவே அப்பாவி மக்கள்” இந்த தாக்குதலை முகங்கொடுக்க நேர்ந்தது என்று அவர் நேற்று கூறினார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி இரண்டும் தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத போரை முன்னெடுத்தமைக்கும், இராணுவ மற்றும் அரசு எந்திரம் மற்றும் அதன் பொலிஸ் அரச அதிகாரங்களை பரந்த அளவில் விரிவுபடுத்தியதற்கும் பொறுப்பாளிகளாகும். அரசாங்கம் தன்னுடைய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு சந்தேகத்திற்கிடமின்றி நேற்றைய குண்டுத் தாக்குதல்களை சுரண்டிக்கொள்ளும். இந்த சட்டம், இழிபுகழ் பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதோடு அதன் ஒரு தொகை மோசமான ஜனநாயக விரோத அதிகாரங்களையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

தனித்தனியான அறிக்கையில், சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் –குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர்- பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களை "அமைதியாக" இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சமூக ஊடகங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது போலவே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரயில் நிலையம் மற்றும் ஏனைய இடங்களையும் பாதுகாக்க பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் நிலைகொண்டுள்ளனர். கொழும்பில் தெருக்களில் பல நூறு சிப்பாய்கள் நிலைகொண்டுள்ளதோடு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் நேற்று பயங்கரவாத தாக்குதலை கண்டனம் செய்ய விரைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை” கண்டனம் செய்ததுடன் "இதயபூர்வமான இரங்கலை" தெரிவித்ததோடு அமெரிக்கா "உதவ தயாராக" உள்ளதாக அறிவித்தார். பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, "வன்முறை உண்மையிலேயே பயங்கரமானது" என்று விமர்சித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "நமது பிராந்தியத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை" என்று அறிவித்தார்.

பாசாங்குத்தனத்திற்கு வரையறை கிடையாது! அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவிலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை தூண்டிவிட்ட குற்றம் சார்ந்த போர்களுக்கு பொறுப்பானவர்கள். உண்மையில் நேற்று நடந்த குண்டு வெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருந்தால், அதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பொறுப்பாளிகளாகும். இனவாத பதட்டங்களையும் வெறுப்புகளையும் ஏற்படுத்திய, தீவில் கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தது வந்த, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு, வாஷிங்டன் தொடர்ந்தும் ஆதரவளித்து வந்துள்ளது. இலங்கையின் ஆளும் உயரடுக்குகள் தொடர்ச்சியாக இனவாதத்தை கிளறிவிடுவதிலும் கையாளுவதிலும் ஈடுபட்டு வருகின்றன.

தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சியின் மத்தியில், ஆளும் வர்க்கங்கள் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறியை கிளறிவிடுவதோடு, வேண்டுமென்றே பாசிசக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை வளர்த்துவிடுகின்றன. கடந்த மாதம், ஆஸ்திரேலிய பாசிசவாதி ப்ரெண்டன் டாரன்ட் நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் இருந்த மசூதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 50 பேரை சுட்டுக் கொன்றான். சர்வதேச ரீதியில் தீவிர வலதுசாரி வட்டாரங்களுடன் டாரன்ட் தொடர்புகளைக் கொண்டிருந்த போதிலும் கூட, பொலிஸ் மற்றும் உளவுத்துறையினர் தங்களுக்கு முன்னறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறுகின்றது. வெலிங்டனில் உள்ள அரசாங்கம் இணையத்தின் மீது குற்றம் சாட்டுவதன் மூலமும் வலைத் தளங்களை தணிக்கை செய்வதன் மூலமுமே இதற்கு பிரதிபலித்தது.

இலங்கை அரசாங்கமும் அதே நோக்கத்திற்காகவே நேற்றைய குண்டுத் தாக்குதல்களை பயன்படுத்தும். கடந்த ஆண்டுகளில், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்த அலைகளும், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதன் சாக்குப் போக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் தவிர்க்க முடியாத வகையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்.

Loading