இலங்கை ஜனாதிபதி அவசரகால அதிகாரங்களுக்கு முத்திரை குத்த "அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு" அழைப்பு விடுக்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே  காணலாம்

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "நாட்டில் எழுந்துள்ள நிலைமையை பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும்" கல்துரையாடுவதற்காக இன்று அனைத்து கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு அழைக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டை சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) கண்டனம் செய்கின்றது. இது, ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் சுமத்தப்பட்ட மிகப் பரந்த பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கும் இன்னும் கூடுதலான ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சகல கட்சிகளதும் ஆதரவைப் பெற பயன்படுத்தப்படுகிறது. தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சிக்கு மத்தியில், இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும்.

இத்தகைய "அனைத்து கட்சி" மாநாடுகள், முந்தைய காலங்களிலும் கடுமையான அரசியல் நெருக்கடியின் மத்தியில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்தவும், ஆளும் வர்க்கத்தினதும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களினதும் தொழிலாள வர்க்க விரோத செயற்பட்டியலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக கூட்டப்பட்டன.

இன்று இது விதிவிலக்கல்ல. சிறிசேன, ஆறு மாதங்களுக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்த பதவியில் இருத்தியதில் வெளிப்பாட்டைக் கண்ட, ஆளும் வட்டாரத்தின் மத்தியிலான கடுமையான உட்பூசல் வெடித்தது.

கொழும்பில் கன்னைவாத போராட்டத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடி, பெரும் வல்லரசுகளின் சூழ்ச்சிகள் மற்றும் போர் உந்துதலால் மேலும் உக்கிரமாகியது. 2015 இல், இந்தியாவின் ஆதரவுடன், அமெரிக்கா அது சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக கருதிய இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்வதற்காக ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை முன்னெடுத்தது. சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், சிறிசேன கடந்த ஆண்டு விக்கிரமசிங்கவை மீண்டும் பதிவியில் அமர்ந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்.

ஞாயிறு கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டாலும், கடந்த காலத்தில் இதே போன்ற தாக்குதல்களுக்கு அது பொய்யாக உரிமை கோரியுள்ளது. இத்தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்னரே ஒரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிலிருந்து ஒரு தெளிவான எச்சரிக்கையை பெற்றபின்னரும், குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அரசாங்கம், பொலிஸ் மற்றும் இராணுவம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு இன்னமும் விளக்கமளிக்கப்படவில்லை.

இந்த தாக்குதல்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றிய முழு பகிரங்க விசாரணை தேவைப்படுகிறது. எவ்வாறெனினும், தனது சொந்த உடந்தை மற்றும் / அல்லது சம்பவங்களில் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி அம்பலப்படுத்தும் இத்தகைய விசாரணைகளை, ஸ்தாபக அரசியல் கட்சிகள், பாதுகாப்புப் படைகள் அல்லது பெரும் வல்லரசுகளும் கடைசில் தள்ளிவிட விரும்புகின்றன.

அதற்கு மாறாக, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கிழித்தெறியும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை திணிப்பதற்கு இந்த குண்டுத் தாக்குதலின் அதிர்ச்சியையும் பயங்கரத்தையும் சுரண்டிக்கொள்வதற்கு கூட்டுச் சேருகின்றன.

ஒரு உத்தியோகபூர்வ வாக்களிப்பு இன்றி, அனைத்து பாராளுமன்றக் கட்சியும் நேற்று அவசரகால நிலையை அங்கீகரித்தன. இதில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவை அடங்கும். எந்தவொரு கட்சியும் ஆட்சேபனை எழுப்பவில்லை.

செவ்வாயன்று தனது உரையில், ஜனாதிபதி சிறிசேன, அவசரகால விதிமுறைகள் பயங்கரவாதத்தைத் தடுக்க மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். பத்திரிகைகளை தணிக்கை செய்ய, போராட்டங்களைத் தடுக்க அல்லது கருத்து வெளியிடும் சுதந்திரத்தைத் தடுக்க இது பயன்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்த தான் "பொறுப்பை ஏற்பதாக" அவர் அறிவித்தார்.

இது ஒரு பொய்யாகும். அவசரகால நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பேஸ்புக் மற்றும் யூடியூப் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் அடைத்து விடும் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.

செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிதிகள் ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட “தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு” பாரதூரமான அதிகாரங்களை வழங்குகின்றது.

அதிகாரங்களின் நீண்ட பட்டியலானது, ஊர்வலம் மற்றும் கூட்டங்களை தடை செய்வது; பொது ஒழுங்கு அல்லது அதிருப்திக்கு இடையூறு உருவாக்க கூடிய பிரசுரங்களை தடுக்க அல்லது கட்டுப்படுத்துவது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது; வாகனங்கள் உட்பட சொத்துகளை அபகரிப்பது; மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பது போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.

தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு: தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் தகவலை வழங்குதல்; பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது; மற்றும் பொது பாதுகாப்பு அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல்.

ஆயுதப்படைகளும் பொலிசாரும் உத்தரவு இல்லாமலேயே நபர்களைத் தேடவும் கைது செய்யவும் முடியும். கைது செய்யப்பட்ட எவரும் 30 நாட்களுக்குள் ஒரு நீதிபதிக்கு முன் முற்படுத்தப்பட வேண்டும், ஆனால் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் ஒரு வருடம் விசாரணையின்றி தடுத்து வைக்க முடியும்.

பொலிஸ் உதவி கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சான்றுகளாக பயன்படுத்தப்படலாம். அத்துடன் கடந்த காலங்களில் ஒப்புதல் வாக்குமூலங்கள் சித்திரவதையால் கறந்தெடுக்கப்பட்டன.

கொழும்பின் நீடித்த மற்றும் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது பரவலாக பயன்படுத்தப்பட்ட அவசரகால சட்டங்களுக்கு அப்பால் செல்லக்கூடிய நடவடிக்கைகளை தயாரிக்கவே அனைத்து கட்சி மாநாடு இன்று கூட்டப்படுகின்றது. சிறிசேன நேற்று, "பொலிஸ், முப்படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு" துரிதமாக செயற்படுவதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை அவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்தார்.

ஆயுதப் படைகள் ஏற்கனவே அவசரகால நிலையை செயல்படுத்துகின்றன. கனமாக ஆயுதமேந்திய துருப்புக்கள் வீதித் தடைகளை நிறுவுகின்றன, வாகனங்களை சோதனை செய்கின்றன, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மக்களை கைது செய்கின்றன. துரித நடவடிக்கை படைகள் மோட்டார் சைக்கிள்களில் கொழும்பின் தெருக்களில் உலா வருகின்றன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால இனவாத யுத்தத்தின் போது உருவாக்கப்பட்ட மாவட்ட மட்டத்திலான பாதுகாப்புக் குழுக்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக உள்துறை அமைச்சர் வஜிரா அபேவர்தன நேற்று அறிவித்தார். தமிழர்களையும், அரசியல் எதிர்ப்பாளர்களையும், தொழிலாளர்களின் செயற்பாடுகளையும் உளவு பார்க்க இந்த குழுக்கள் பயன்படுத்தப்பட்டன.

அரசாங்கம் அச்சம் மற்றும் சந்தேகம் நிறைந்த ஒரு சூழலைக் கிளறிக் கொண்டிருக்கிறது. முஸ்லீம் பெண்கள் பர்க்கா அணிவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு பாராளுமன்றத்தில் ஒரு "தனிப்பட்ட தீர்மானத்தை" அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் அஷு மார்சிங்க முன்வைத்தார். இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இனவாத பதட்டங்களை தூண்டிவிடுவதற்கு பலமுறையும் பயன்படுத்தப்பட்டு வரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தில் முழு செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபகமும் மூழ்கியுள்ளன.

இந்த கொடூரமான நடவடிக்கைகள் செயல்படுத்த உந்துவது எதுவெனில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச மறு எழுச்சி பற்றி ஆளும் உயரடுக்கினரின் மத்தியில் நிலவும் பீதியே ஆகும். கடந்த ஆண்டு இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன செயற்பட்டியலுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

டிசம்பரில் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வறுமை மட்ட அடிப்படை ஊதியத்தை இரு மடங்காக அதிகரிக்க கோரி ஒன்பது நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர். கடந்த மாதம், 200,000 இற்க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஒரே நாளில் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் ஆசிரியர்கள் மே 8-9 இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்கின்றனர். தொழிற்சங்கங்களால் இந்த வளர்ந்து வரும் இயக்கத்தை கட்டுப்படுத்தி நசுக்குவதற்கு முடியாமல் போகும் என்ற ஆழமான கவலை ஆளும் வட்டாரங்களில் நிலவுகிறது.

இந்த துரிதமான யுத்த கால நடவடிக்கைகள் திணிக்கப்படுவது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான வர்க்கப் போருக்கான ஆளும் வர்க்கத்தின் தயாரிப்பும் சர்வாதிகாரத்தை நோக்கிய முன் நகர்வுமாகும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. தொழிலாள வர்க்கம் இன, மத வேறுபாடுகளைக் கடந்து அதன் போராட்டங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த முன்னோக்கிற்கான மைய புள்ளி, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்த தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே ஆகும்.

Loading