பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கத்தின் பொலிஸ் அரச நடவடிக்கை தொடர்பாக போலி இடதுகள் மௌனம் காக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஏப்பிரல் 21 அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை சாதகமாக்கிக் கொண்டு, மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க கொடூரமான பொலிஸ்-அரச நடவடிக்கைகளை அமுல்படுத்திக்கொண்டிருக்கும் போது, சகல முதலாளித்துவக் கட்சிகளும் போலி-இடது கட்சிகளும், அரசின் இந்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்குகின்றன.

ஏப்ரல் 25 அன்று சிறிசேனவால் கூட்டப்பட்ட "சர்வ கட்சி" மாநாட்டில், குண்டுத் தாக்குதலின் பின்னனர் உடனடியாக அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, "பயங்கரவாதத்தை தோற்கடித்தல்" என்ற போர்வையில் எதிர்காலத்தில் மேற்றக்கொள்ளப்படும் எந்தவொரு ஜனநாயக விரோத நடவடிக்கைக்கும் தமது ஆதரவினை வழங்க தயாரென கட்சிகள் சபதமெடுத்துக்கொண்டன.

முன்நாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த இராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ (ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி), விஜித ஹேரத் (ஜே.வி.பி.), ஆர். சம்பந்தன் (தமிழ் தேசிய கூட்டமைப்பு), விமல் வீரவன்ச (தேசிய விடுதலை முன்னணி), பாடலி சம்பிக்க ரணவக்க (ஹெல உறுமய), ரவூப் ஹக்கீம் (ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்), விக்கிரமபாகு கருணாரட்ன (நவ சம சமாஜ கட்சி), டியூ குணசேகர (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி), திஸ்ஸ விதாரன (லங்கா சம சமாஜ கட்சி) உட்பட இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். நவ சம சமாஜ கட்சி நேரடியாக மகாநாட்டில் கலந்துகொண்டு பொலிஸ்-அரச வழிமுறைகளுக்கு தனது ஆதரவினை வழங்கியுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.), முன்னிலை சோலிச கட்சி (மு.சோ.க.) ஆகிய இரண்டு போலி-இடது கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டதற்கான சான்றுகள் இல்லாவிட்டாலும், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவ்விரு கட்சிகளாலும் இதுவரையிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை வேலைத்திட்டம் தொடர்பான அவற்றின் மலட்டு பிரதிபலிப்பையே காட்டுகிறது. அதன் மூலம் அவை மறைமுகமாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்றன.

இவ்விரு கட்சிகளும் 2015 இல் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்த வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்தன. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கமானது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தயாரிப்பின் கேந்திரமாக இந்த தீவினை மாற்றுவதன் ஊடாக, மில்லியன் கணக்கான மக்களை உலக யுத்தத்தின் விளிம்பிற்கு இழுத்து சென்றுள்ளதை உலக சோசலிச வலை தளத்தின்ஊடாக சோசலிச சமத்துவக் கட்சி மாத்திரமே விளக்கியுள்ளது. அதற்கு எதிராக போராடக் கூடிய ஒரே வேலைத்திட்டமான, சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் போர் எதிர்ப்பு இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சிகளுமே வலியுறுத்துகின்றன.

கடந்த வருடத்தில் மீளெழுச்சியுற்ற தொழிலாள வர்க்க போராட்டங்கள், இந்த வருடத்திலும் தொடர்ச்சியாக நிகழ்வதும், அதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஏகாதிபத்தியமும் அதற்குச் சார்பான அரசாங்கங்களும் அந்த போராட்டங்களை தவிடுபொடியாக்க பாசிச போக்கை நோக்கி மாறுகின்றமையையும், குரூர பொலிஸ் அரசுக்கான முயற்சிகளையும் உலக சோசலிச வலைத் தளம்தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகின்றது. "போதைப் பொருட்களுக்கு எதிரான போர்" என்ற ஒரு போலி யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்ட சிறிசேன, எழுந்துவரும் தொழிலாளர் போராட்டங்களின் குரல்வளையை நசுக்க செயற்பட்டுக் கொண்டிருக்கும் விதத்தினையும் தொடச்சியாக அம்பலப்படுத்தி வருவதும் சோசலிச சமத்துவக் கட்சி மாத்திரமே ஆகும்.

ஏப்ரல் 21 அன்று நடந்த குண்டு தாக்குதலிகளினால் மக்கள் மத்தியில் ஏற்படுத்தபட்ட பீதியை சாதகமாக்கிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கம் செயற்படுகின்ற விதம் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தின்ஊடாக சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டிருக்கும் பல்வேறு கட்டுரைகளில், தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், போலி-இடதுகளோ ஆளும் வர்க்கத்தின் இந்த ஒடுக்குமுறை தொடர்பாக முக்கிய கவணத்தை செலுத்தவோ அல்லது அது தொடர்பாக பிரதானமாக தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் எடுக்க வேண்டிய சோசலிச வேலைத் திட்டம் தொடர்பாக பேசுவதை திட்டமிட்டு தவிர்த்துள்ளனர்.

விசாரணைகளில் உதவுவதற்கென எஃப்.பி.ஐ. மற்றும் பசிபிக் இராணுவ அணியின் நிபுணர் குழுவினருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பது தொடர்பாக, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட, ஏப்ரல் 25ம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது, "அவ்வாறான மடத்தனமான அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம்" என அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த அரசாங்கம் ஏகாதிபத்திய-சார்பு அரசாங்கம் என்பதையும் அது ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு வேலை செய்கின்றது என்பதையும் மக்களிடமிருந்து மூடி மறைப்பதே இந்த கருத்தின் நோக்கமாகும்.

அது மாத்திரமன்றி "அதுபோன்ற குண்டு தாக்குதல்கள் இந்த நாட்டின் மக்களுக்கு ஏற்படாத வகையிலான தீர்விற்காக, .....மனிதத் தன்மைக்கு உயிர் கொடுப்போம், மக்கள் படுகொலைகளை தவிர்ப்போம், அதிதீவிரவாதத்திற்கு இடமளியோம்" என முன்னிலை சோசலிச கட்சி முன்மொழிகிறது.

பயங்கரவாத குண்டு தாக்குதல்கள் பற்றி அறிந்தும் அது நிகழ்வதற்கு இடமளித்த சிறிசேன-விக்ரமசிங்க உட்பட முழு ஆளும் வர்க்கமும், அவர்களுடைய இலத்திரனியல் ஊடக மற்றும் அச்சுப் பத்திரிகை கடைகளில் இரவு பகலாக ஓதும் "கூட்டு வாழ்க்கை" பற்றிய நடைமுறைக்கு வராத மந்திரத்திற்கும், முன்னிலை சோசலிச கட்சியின் இந்த கோஷங்களுக்கும் இடையில் எந்த விதமான வேறுபாடும் கிடையாது.

முன்நிலை சோசலிச கட்சி, முதலாளித்துவ அரசாங்கத்தின் சூழ்ச்சியை மூடி மறைத்து, சிறுபான்மை மக்களையும் மொத்தமாக தொழிலாள வர்க்கத்தினையும் குருதியினால் அடக்கும் குறிக்கோளின் அடிப்படையிலான, "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த"த்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளதையே அதனுடைய "அதிதீவிரவாதத்திற்கு இடமளியோம்" என்ற கோசம் வெளிப்படுத்துகின்றது.

உண்மையில், சோசலிச தீர்வினை தூக்கியெறிந்துவிட்டு "அதிதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம்" என்பதை தூக்கிப் பிடிப்பதானது முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு நேரடியாக உதவுவதே அன்றி வேறொன்றுமாக இருக்க முடியாது.

சிறிசேனவை அதிகாரத்துக்கு கொண்டுவந்த ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த மற்றுமொரு கட்சியான ஐக்கிய சோசலிச கட்சி, "பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் வேண்டாம், இனவாதத்தையும் பிரிவினை வளர்ச்சியடைவதையும் ஐக்கியப்பட்ட தொழிலாளர் போராட்டமொன்றினால் தவிர்க்கமுடியும்" என்ற வாக்கியத்துடன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையும் வஞ்சகத்தில் குறைந்ததல்ல. "தொழிலாளர் சர்வதேசவாதத்துக்கான குழுவின்” அதிகாரபூர்வமான இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குண்டுத் தாக்குதலை சாதகமாக்கிக்கொண்டு அரசாங்கம் அதி விரைவில் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு மாறியுள்ளமை தொடர்பாக தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

இந்த நாட்டின் "வலதுசாரி அரசுகள்" பல தசாப்தங்களாக "அவர்களின் நிலையற்ற ஆட்சியை கொண்டு செல்வதற்காக இனங்களுக்கிடையிலான கலவரங்களை தூண்டிவிட மத தீவிரவாதத்தை பல்வேறு வடிவங்களில் உருவாக்குவது பிரயோசனமானது என அறிந்துள்ளார்கள்" என எழுதும் ஐக்கிய சோசலிச கட்சி, தொழிலாள வர்கத்தின் வர்க்க ஐக்கியத்தை இல்லாதொழிக்க முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கு அத்தியாவசியமான ஆயுதமாக இருப்பது எவ்வாறு என்பது தொடர்பாக விளக்கவில்லை.

விசேடமாக, முன்நாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சியில், அவரது சகோதரர் கோத்தபாய இராஜபக்ஷ, தனது தலைமையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற "வெளிப்படையான இனவாத பௌத்த பிக்குகளின்" இயக்கத்தினை உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்டதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், இந்த பௌத்த பேரினவாதத்தை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளமை தொடர்பாக ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் மௌனம் சாதிக்கிறார்.

தமிழ் விரோத படுகொலை யுத்தத்தினை ஆரம்பிப்பதற்கு தலைமை தாங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்துக்கு கொண்டுவரும் வேலைத்திட்டதிற்கு உச்ச பங்களிப்பை வழங்கிய நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் மோசடியான "சுதந்திரத்தின் மேடை" என்ற ஒன்றை உருவாக்கிய சிறிதுங்க ஜயசூரிய, தனது கட்சி இனவாதத்துக்கு எதிரான கட்சி எனக் கூறிக்கொள்கின்றார்.

சோசலிச புரட்சியின் ஊடாக முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கி வீசும் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்கு முழு எதிராக இருக்கும் ஐக்கிய சோசலிச கட்சி, "எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரிவினை மற்றும் பிரிவினை தாக்குதல் அதிகரிப்பதிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே மார்க்கம், ஐக்கிய தொழிலாள வர்க்க நடவடிக்கையும் பாரிய தொழிலாள வர்க்க கட்சியை கட்டி எழுப்புவதுமாகும்" என் குறிப்பிடுகிறது. முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்க எல்லாவகையிலும் தோள் கொடுக்கும் அதேவேளை, இவ்வாரான அறிக்கைகளை விடுவதன் குறிக்கோள், தொழிலாள வர்கத்தை ஐக்கியப்படுத்துவதல்ல. மாறாக ஏதாவதொரு முதலாளித்துவ குழுவின் கட்டுப்பாட்டில் அதை அடிபணியச் செய்வதாகும். ஐக்கிய சோசலிச கட்சி இந்த பிற்போக்கு வகிபாகத்திற்கே தோள் கொடுக்கின்றது.

மறுபக்கத்தில், தாராண்மைவாத முகமுடியணிந்த முதலாளித்துவ புத்திஜீவிகளின் வங்குரோத்து, இந்த தாக்குதலுக்கு அவர்களின் பிரதிபலிப்பின் ஊடாக அம்பலத்துக்கு வந்துள்ளது. இதற்கான உதாரணத்தை "இலங்கையில் சில தினங்களுக்கு பின்" என்ற தலைப்பில், திறந்த பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளரான ஹரிணி அமரசூரிய, இந்தியாவின் ஹிந்துபத்திரிகையில் ஏப்பிரல் 25ம் திகதி எழுதியுள்ள ஆலோசனை பந்தியை காணக்கூடியதாக உள்ளது. சிறிசேனவை அதிகாரத்துக்கு கொண்டுவர முன்னெடுத்துச்சென்ற பொய் "நல்லாட்சி" போராட்டத்தில் முன்னணி போராட்டக்காரராக இருந்த அமரசூரிய, இப்போது ஜே.வி.பி.யை அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒருவராவார்.

குண்டுத் தாக்குதலை சாதகமாகிக்கொண்டு அரசாங்கம் துப்பறிதல் உட்பட மோசமான ஒடுக்குமுறை சட்டங்களை நடைமுறைக்கிடுவதை நன்கு அறிந்த அமரசுரியாவுக்கு, அது தொடர்பாக புலம்புவதைத் தவிர வேறு மாற்று வழியில்லை. "இலங்கைக்குள் குறிப்பாக யுத்தம் முடிவுற்றதில் இருந்தும், அதோடு நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே மிக விரைவாக மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கும் அரசியல் நிறுவனத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுடன் சூழ்ந்துள்ள இன மத தேசியவாதத்தையும் தோல்வியுறச்செய்ய நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். குரோதத்தையும் மோசடித்தனத்தையும் விட எதிபார்ப்பினை ஊட்டக்கூடிய தலைவனை தேடிக்கொள்வதற்காக, மற்றும் மக்களுக்கு மாற்று கண்ணோட்டத்தை வழங்கக்கூடிய, மொழியையும் அரசியல் மூலோபாயத்தையும் தேடிக்கொள்ள நாம் போராடிக்கொண்டிருந்தோம். அந்த அணைத்து முயற்சிகளுக்கும் இந்த தாக்குதல் பாரிய தோல்வியாகும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலால் ஏற்றப்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற தன்மையை பயன்படுத்திக்கொண்டு, "பிரபல்யமான" தலைவரொருவர், குறிப்பாக ஐக்கிய சோசலிச கட்சி பீதி கொண்டிருக்கும் கோத்தபாய இராஜபக்ஷ போன்ற பகுதியினருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கக் கூடியமை தொடர்பாக அமரசூரிய அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.

"மக்களுக்கு மாற்று கண்ணோட்டத்தினை வழங்கக்கூடிய மொழியையும் அரசியல் முலோபாயத்தையும்" தேடிக்கொள்ள அமரசூரிய போன்ற மத்தியதர வர்க்க புத்திஜீவிகள் கைகோர்த்துக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்யத்துடனாகும்.

அவர்கள் அவ்வாறு உருவாக்கிய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் மக்கள் முன் அபகீர்த்தியடையும்போது, விரிவுரையாளர் உள்ளடங்கிய நல்லாட்சி போக்காளர்கள், ஜே.வி.பி. இற்காகப் பேச ஆரம்பித்தனர். அமரசூரிய ஆலவட்டம் பிடித்த ஜே.வி.பி., தற்போது அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பொலிஸ்-அரச நடைமுறையை அங்கீகரிக்கின்ற மோசடியான சர்வ கட்சி மகாநாட்டில் முன்நிலையில் அமர்ந்திருந்தது.

அமரசூரிய போன்ற மத்தியதர வர்க்க புத்திஜீவிகள் சோடனை செய்த "நல்லாட்சி" அரசாங்கத்தினதும் மொத்தத்தில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கொலைகார பண்பும் மக்களின் கண் முன்னே நிர்வாணமாகியுள்ளதோடு, அதற்கு எதிராக விரக்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெடிக்கக் கூடிய சூழல் தோன்றியுள்ளமை பற்றி இவர்கள் பீதியடைந்துள்ளனர்.

போலி இடதுகளுக்கும் இந்த மத்தியதர வர்க்க புத்திஜீவிகளுக்கும் இடையிலான ஒருமைப்பாடு யாதெனில், தொழிலாள வர்க்கம் ஒன்று இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மத்தியில் இருக்கும் விருப்பமின்மையாகும். அது மட்டுமன்றி, பயங்கரவாதத்தையும் முதலாளித்துவத்தின் மிலேச்சத்தனத்தை வெளிப்படுத்தும் அனைத்து வகையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கத்துக்கு உள்ள புரட்சிகரப் பாத்திரதையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

Loading