இலங்கையில் பயங்கரவாத குண்டுவீச்சிற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பரந்த வேட்டையாடல்

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக 250 பேரைக் கொன்றும் 500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தி, மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்கள் மீது ஏப்பிரல் 21 அன்று நடத்தப்பட்ட கொடூரமான குண்டு தாக்குதல்களின் பின்னர், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை நசுக்குவதன் பெயரில் பிரதானமாக முஸ்லிம் மக்களை இலக்காகக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

நச்சுச்தனமான அவசரகால விதிகளைத் திணிப்பதற்காக உடனடியாக இந்த தாக்குதலை பற்றிக்கொண்ட அரசாங்கம், பாய்ச்சலுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிசை கட்டவிழ்த்து விட்டது. எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாத முஸ்லீம் அதி தீவிரவாத குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, தேசிய தவஹீத் ஜமாத் முஸ்லிம் அடிப்படைவாத குழுவைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதல், முஸ்லீம் விரோத பிரச்சாரத்தை கிளறிவிடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு சமமான அவசரகால சட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர, 73 நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிசாரால் விசாரிக்கப்படுவதாக நேற்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், கொழும்புக்கு அருகாமையில் உள்ள தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட 16 தொழிலாளர்களில் 9 சந்தேக நபர்களை நீதவான் பிணையில் விடுதலை செய்தார். இந்த தொழிற்சாலை, தாக்குதலுக்கான குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்தனர். ஒன்பது தொழிலாளர்கள் மீது பொலிசார் நிச்சயமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் தோல்வியடைந்ததால் அவர்களை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.

நடவடிக்கைகளின் பரவலாக விரிவடைந்துள்ள பண்பை காட்டும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் வெடிமருந்துகள், வாள், குற்றவியல் தன்மையுடையது என சந்தேகத்திற்குரிய இலக்கியங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன.

பாரம்பரியமாக முஸ்லீம் பெண்களால் முகத்தை மூடிமறைக்கப் பயன்படுத்தப்படும் பர்காவையும் நிகாபாவையும் தடை செய்வதையும் உள்ளடக்கும் வகையில் கடந்த வாரம் ஜனாதிபதி சிறிசேன அவசரகால ஒழுங்குவிதிகளை திருத்தினார். முஸ்லீம்-விரோத உணர்வைத் தூண்டி விடுவதற்காக, பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் பர்க்காவை தடை செய்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கைக்கு இணங்க, நீர்கொழும்பில் தஞ்சமடைந்திருந்த 1000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் அகதிகள், ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் உடனடியாக, சிங்கள வன்முறையாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களில் சிலர் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டனர். அவர்கள் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து அகதிகளாக வந்தவர்களாவர். இந்த அகதிகள் இப்போது தற்காலிகமாக பல மசூதிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தானின் அஹமதியா சமூகத்தைச் சேர்ந்த, 58 வயதான தாரிக் அஹமட், எசோசியேடட் பிரஸ்சுக்குபின்வருமாறு கூறினார்: "பாக்கிஸ்தானில் உள்ள மக்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல எனக் கூறியே எங்களை தாக்கினர். இப்போது இலங்கையில், எங்கள் மீது முஸ்லிம்கள் என்று கூறி தாக்குதல் நடத்துகிறார்கள்."

ஒரு முஸ்லிம் நபருக்கு சொந்தமான நிலத்தில், ஆயுதங்களை ஒழித்து வைத்துக்கொண்டிருந்த ஆறு நபர்களை வெல்லவாய மகாவெலமவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக ஏப்ரல் 28 அத தெரன தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இனவாத குண்டர்களால் முஸ்லீம்-விரோத பிரச்சாரம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

முஸ்லீம்-விரோத பிரச்சாரம் நடைபெறும் பல இடங்களுக்கு சென்ற உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் பலரை பேட்டி கண்டனர்.

WSWS உடன் பேசியவர்கள், பயங்கரவாத தாக்குதல் பற்றி ஆத்திரத்தையும் அப்பாவி மக்களை இலக்கு வைக்கும் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை பற்றி அச்சத்தையும் வெளிப்படுத்தினர். ஆளும் உயரடுக்கின் பிரச்சாரமானது அடக்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், உழைக்கும் மக்களை இனவாத வழியில் பிரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக அவர்களில் பலரும் அறிந்திருந்தனர்.

சிலாபத்தில் ஒரு ஆசிரியர் கூறியதாவது: "யாரும் இந்த குற்றத்தை (பயங்கரவாத தாக்குதல்) செய்திருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்களே. எங்களால் வீதியில் இறங்கி செல்ல முடியாதுள்ளது. எங்களால் ஆஸ்பத்திரிக்கு போக முடியாது. எல்லோரும் எங்களை சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். ஆனால் எங்கள் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சமுதாயத்தினருடன் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் சமாதானமாக வாழ்கிறோம்."

தாக்குதல்கள் பற்றிய விசாரணைக்கு “ஒத்துழப்பு" கொடுக்க எஃப்.பி.ஐ. குழு ஒன்று வருகை தந்திருப்பது பற்றி பேசிய அவர், அமெரிக்கா இந்த நிலைமையை தனது நன்மைக்காகப் பயன்படுத்தி வருகிறது என்று கூறினார். "அமெரிக்கா மத்திய கிழக்கில் படையெடுத்து சமுதாயங்களை நாசம் செய்துள்ளது," என அவர் மேலும் கூறினார்.

தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு அவசர காலச் சட்டம் மற்றும் அடக்குமுறை அரசாங்கத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும். மார்ச் மாதத்தில் நடந்த ஆசிரியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை சுட்டிக்காட்டி, அவர் கூறியதாவது: "எங்கள் ஊதியக் கோரிக்கைகளை வெல்ல அனைத்து சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்தோம். தொழிற்சங்கங்கள் சம்பள போராட்டம் மற்றும ஆசிரியர்களின் மற்ற விடயங்களைப் பற்றி இப்பொழுது முற்றிலும் மெளனமாக உள்ளன."

அந்த பகுதியில் உள்ள ஒரு இளம் பொறியாளர், பட்டம் பெற்ற பின்னர் தான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்ததாகவும் போதுமான ஊதியம் கிடைக்காததால் இராஜினாமா செய்ததாகவும் கூறினார். "தற்போதைய சூழ்நிலையில், எனக்கு வேலை கிடைப்பது கடினம், ஏனென்றால் நான் முஸ்லிம். அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று காட்டும் செய்திகள் சமூக ஊடகத்தில் உள்ளன."

களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம அருகே உள்ள தர்கா நகரத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்கா நகர், அளுத்கம மற்றும் பேருவளையில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாவர். 2014 ஜூனில் இரண்டு பேரை கொன்று அதிதீவிரவாத பொது பல சேனா நடத்திய தாக்குதலை அவர் எதிர்கொண்டிருந்தார்.

தான் முன்னர் பௌத்த கோவில்களில் காவி உடைகளையும் பாத்திரங்களையும் கொள்வனவு செய்து அவற்றை மொத்த விற்பனை கடைகளுக்கு விற்று வந்த தாகவும், அவரது அப்பாவும் அதே வியாராபாரத்தில் ஈடுபட்டதாகவும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். அந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சில வணிகர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அது முஸ்லீம்கள் காவி உடைகளை வைத்திருப்பது, அவற்றை உடுத்திக்கொண்டு வந்து பௌத்த கோவில்களுக்கு தாக்குதல் நடத்துவதற்கே என பிரச்சாரம் செய்வது, பௌத்தர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் நடவடிக்கை என்று அவர் கூறினார்.

"அதிதீவிரவாதிகள் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கே பயங்கரவாத தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனாலும் நாம் ஒற்றுமையாக வாழ்கிறோம். 2014 இல் எங்களைத் தாக்கிய போது சிங்கள பௌத்த மக்கள் அதை எதிர்த்தனர். இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது."

ஒரு ஜவுளி வர்த்தகர்: "அதிதீவிரவாதம் என்பது ஒரு அரசியல் இயக்கமாகும். சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி காரணமாக, என் வியாபாரம் கீழே போய்விட்டது. நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தேன். இப்போது நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் இந்த நிலைமைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும். இப்போது மக்களுக்கு ஒரு மாற்றீடு வேண்டும்."

பாதுகாப்பு படைகள் மற்றும் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை எப்படி தூண்டிவிட்டன என்பதை ஒரு குழுவினர் விவரித்தனர். ஸ்னாபுல வீதியில் உள்ள ஒரு இளைஞர், மத்திய கிழக்கில் வேலை செய்யும் போது பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்ட 18 அடையாள அட்டைகளை வைத்திருந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். "கைதுக்கான காரணம், அடையாள அட்டையின் விவரங்கள் அரபு மொழியில் இருந்தமையாகும் அவரை அருகே உள்ள வெலிபிட்டிய மசூதிக்கு எடுத்துச் சென்று வீடியோ செய்தனர். 18 அடையாள அட்டைகளுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. முஸ்லிம் மசூதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர்கள் பொய் கூறினர்." கைது செய்யப்பட்ட நபர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பாரம்பரிய ஆடை அணிந்து இருந்தமையால், ஸ்னாபுல விதியில் ஒரு முஸ்லீம் பெண் கைது செய்யப்பட்டார். பல ஆண்கள் நடவடிக்கை மேற்கொண்ட பிறகே அவர் விடுதலை செய்யப்பட்டார். கறுப்பு ஆடை அல்லது ஹிஜாப் அணிந்திருக்கும் காரணத்தால் அவர்களால் ஆஸ்பத்திரிக்குள் நுழைய அனுமதி கொடுக்கப்படுவதில்லை.

"இஸ்லாமிய சகோதரத்துவமும் முஸ்லீம் சமூகமும்" என்ற நூலின் எழுத்தாளர் கூறியதாவது: "இன்று முஸ்லீம் சமூகம் விரக்தியிலும் பதட்டத்திலுமே வாழ்கின்றது. பொது பல சேனா என்பதும் தவ்ஹீத் ஜமாத் போன்ற அடிப்படைவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்புக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமாதானமாக வாழ்ந்த சமுதாயத்தை பிளவுபடுத்துவதற்கே வேலை செய்கின்றன."

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள “குறைந்த ஊதியம் பெறுவோரின் மாடி வீடுகளான” கிரான்ட் பாசில் சிறிமுதுமஹால் மற்றும் சாலமுல்ல லக்சந்த ஆகிய மாவீட்டு வாசிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அவர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக WSWS நிருபர்களிடம் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள் "பாதுகாப்பு காரணங்களை" மேற்கோளிட்டனர். லக்சந்த மாடிக் குடியிருப்புக்கான நீர் விநியோகம் அதிகாரிகளால் துண்டிக்கப்பட்ட போதிலும், குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து தண்ணீர் மீண்டும் வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஆவர்.

பாதுகாப்புப் படைகள் பல்கலைக்கழகங்களையும் இலக்காக கொண்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் சிறந்த வசதிகளைக் கோரியும் கடந்த மாதங்களில் தொடர்ந்தது போராட்டம் நடத்தி வந்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணம், பேராதனை, வடமேல் மற்றும் ரூஹுன பல்கலைக்கழகங்களும் அடங்கும்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்திற்குள் பாய்ந்த இராணுவம், சோதனை நடவடிக்கைகளின் பின்னர், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என். திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். கபில்ராஜ் ஆகியோரை மே 4 அன்று கைது செய்தது. கைது செய்ய முன்வைக்கப்பட்ட பொய்யான காரணம், விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்று மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தமை ஆகும். 2009 இல் பிரிவினைவாத அமைப்பை தோற்கடித்த போது, பிரபாகரன் துருப்புக்களால் கொல்லப்பட்டார்.

இப்போது உண்மையான சித்திரம் வெளிப்பட்டு வருகிறது. துயரத்தின் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) விடுத்த எச்சரிக்கை இந்த அபிவிருத்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் பாகமாக, போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக, போலீஸ்-அரசை நோக்கி நகர்வதே ஜனாதிபதி சிறிசேன மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போரினதும் உள்ளர்த்தம் என சோ.ச.க. எச்சரித்தது. முஸ்லீம்-விரோத பிரச்சாரமும், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமும் இது மூடி மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான வேட்டையாடலை கடுமையாக கண்டித்து அதை எதிர்க்கின்ற தொழிலாள வர்க்கம், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கியப்பட்டு போராட வேண்டும்.

Loading