ஸ்டீவ் கனிஸோவை பொலிசார் ஆற்றில் மூழ்கடித்ததற்கு எதிரான நான்ந் நகர ஆர்ப்பாட்டத்தின் மீதான பிரெஞ்சு பொலிசாரின் தாக்குதல்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொலிஸ் வன்முறைக்கு எதிராகவும், மேலும் ஒரு இசை விழாவில் நிகழ்த்தப்பட்ட வன்முறையான பொலிஸ் தாக்குதலுக்கு மத்தியில் நான்ந் நகரில் லுவார் நதியில் மூழ்கி இறந்துபோன ஸ்டீவ் மையா கனிஸோவை நினைவுகூரும் விதமாகவும் பிரான்ஸ் எங்கிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்தனர். பொலிஸின் கொடிய, காரணமற்ற வன்முறையை வெட்கமில்லாமல் பாதுகாக்கும் அரசாங்கத்திற்கு எதிராக கோபம் வெடித்து வருகிறது.

ஜூலை மாத இறுதியில் லீல் மற்றும் டிஜோன் நகரங்களில் நடந்த ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஓர்லியன், அமியான், மார்சைய், நீஸ், பூர்ஜ், புவத்தியே மற்றும் பாரிஸ் என பிரான்ஸ் எங்கிலுமாக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைப்பட்டன. லியோனில், ஆளும் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LRM) கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவுள்ள தோமஸ் ருடிகோஸின் தலைமையகம் மீது முட்டைகளையும் தக்காளிகளையும் வீசி “மஞ்சள் சீருடையாளர்கள்” ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நான்ந் நகரில் கூட, “Black Bloc type” சார்ந்த நபர்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும் என்ற தெளிவற்ற சாக்குபோக்கை காரணமாக்கி, ஜனநாயக உரிமைகளை காலிலிட்டு மிதிக்கும் வகையில், நகரின் மையத்தில் பல சுற்றளவுகளுக்குள்ளாக அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் பிராந்திய காவல்துறை தலைமையகம் தடை விதித்தது. அத்துடன், நான்ந் நகர ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு தேவையான படைபலத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றிருப்பதாகவும் காவல்துறை தலைமை பகிரங்கமாக அறிவித்தது.

நான்ந் ஆர்ப்பாட்டங்களை தடை செய்வதற்கான முடிவிற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக, உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனெர், “நினைவு தினத்தை ஏற்பாடு செய்வதற்கான விருப்பத்தை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன், என்றாலும் நினைவுகூரல் நிகழ்வை வன்முறையாக நடத்துவதை என்னால் அங்கீகரிக்க முடியாது” என்று அறிவித்தார்.

பிரான்ஸ்-ப்ளூ லுவார் வானொலி அறிவிப்பின் படி, சனியன்று நான்ந் நகரில், பொலிஸ் அச்சுறுத்தல்களை மீறியும், பொலிஸ் வன்முறையை எதிர்த்தும், மேலும் ஸ்டீவை நினைவுகூரும் வகையிலும் மூவாயிரம் பேர் அணிதிரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்புவோரை மிரட்டுவதற்கு முயல பெரும் பொலிஸ் படையை அங்கு நிலைநிறுத்த காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது. போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏனைய 34 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

நகரின் சுவர்கள் மற்றும் பதாகைகளில் உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனெர் ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்காக இருந்தார்: “l’IGPN படி, கொலை பொருத்தமானது", "பொலிஸ் கொலைகாரர்", “கலகப் பிரிவு பொலிசாரே, எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தயவுசெய்து எமது பாதுகாப்பு பகுதியை விட்டு வெளியேறு” போன்ற சுலோகங்களை எழுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையை கடுமையாக கண்டித்தனர்.

காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் அணிவகுப்பாளர்கள் வந்தபோது, கலகப் பிரிவு பொலிசார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளால் அவர்களை இடைவிடாது தாக்கினர். பின்னர், எதிர்ப்பாளர்களுக்கும் பெரும் ஆயுதமேந்திய கலகப் பிரிவு பொலிஸ்காரர்களுக்கும் இடையே பிற்பகல் முழுவதும் வன்முறை மோதல்கள் தொடர்ந்தன.

ஜூன் 22 அன்று இரவில் நடந்த வருடாந்திர தேசிய இசை விழாவின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அரை மணிநேரம் கூடுதலாக நடந்துக் கொண்டிருந்த ஒரு மின்னணு இசை கொண்டாட்டத்தின் மீது வன்முறையான திடீர் தாக்குதலை பொலிசார் நடத்தத் தொடங்கிய நிலையில், அதிலிருந்து தப்பிக்க முயன்ற ஸ்டீவ் மையா கனிஸோவும் அதிகாலை 4.30 மணியளவில் நதியில் குதித்து மூழ்கினார்.

தங்களது கொண்டாட்டங்களுக்காக மட்டுமே அங்கு வந்திருந்த அமைதியான இளைஞர்களுக்கு எதிராக கலகப் பிரிவு பொலிசார், தாக்குதல் நாய்கள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் கையெறி குண்டுகளை சரமாரியாக வீசுதல் என அவர்கள் மீது கடும் தாக்குதலை அதிகாரிகள் கட்டவிழ்த்துவிட்டனர். தனிப்பட்ட இசைவிழா பங்கேற்பாளர்கள் மீது கூட பொலிசார் டேஸர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், இளைஞர்களை கொடூரமாக அடித்தனர். பொலிசாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றபோது பதினான்கு பேர் ஏழு மீட்டர் உயரத்தில் இருந்து லுவார் நதிக்குள் விழுந்தனர். அப்போது, நீந்தத் தெரியாத ஸ்டீவும் லுவாரில் மூழ்கிவிட்டார்; அவரது உடல் ஒரு மாதத்திற்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் மரியான் ரோஸ்டன் இவ்வாறு தெரிவித்தார்: “இந்த நேரத்தில், அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படக்கூடிய மீட்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், கொண்டாட்டங்களில் கலந்துகொள்பவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகள் பொழியத் தொடங்கியது. பொலிஸ் நடவடிக்கைக்கான தளபதி எதிர்கொள்ளும் ஒரே உண்மையான தெரிவாக அனைத்தையும் முடிந்தவரை விரைவாக நிறுத்துவதும், தண்ணீரில் விழுந்தவர்களுக்கு உதவ கிடைக்கக்கூடிய ஒவ்வொரு மீட்பு பிரிவையும் அங்கு அனுப்புவதும் மட்டும் தான் இருந்தது. ஆனால், அதிகாலை 4.50 மணி வரை கண்ணீர்புகைக் குண்டுகளை வீசுவதை பொலிசார் தொடர்ந்தனர்.

தேசிய இசை விழா நாளில் பொலிஸால் தாக்கப்பட்ட 89 இளைஞர்கள், வாழ்வை அச்சுறுத்தும் வகையிலான பொலிசாரின் நடத்தை மற்றும் ஆபத்தில் இருந்த ஒருவரை அவர்கள் மீட்கத் தவறியமை குறித்து பொலிசாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஸ்டீவின் மரணம், பிரான்சின் தற்போதைய மக்ரோன் அரசாங்கத்திற்கு இருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும் கொடூரமாக தாக்கி வரும் பொலிஸ் அரசின் முகமூடியை அப்பட்டமாக கிழிப்பதாக உள்ளது. கடந்த 10 மாதங்களில், கவச வாகனங்கள், தண்ணீர் பீரங்கி, கையெறி குண்டுகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான பொலிசார் 2,000 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தியுள்ளனர், அவர்களில் டசின் கணக்கானவர்கள் கை அல்லது கண்களை இழந்துள்ளனர். டிசம்பர் 8 அன்று மட்டும் கைதுசெய்யப்பட்ட 1,900 பேர் உட்பட, மொத்தம் 7,000 க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது, நாஜி ஆக்கிரமிப்பின் வேளையில், விச்சியில் ஆட்சியின் தலைவராக இருந்த பிலிப் பெத்தானை ஒரு “சிறந்த சிப்பாய்” என பாராட்டிய பின்னர் பிரான்சின் பெருநகரங்களில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய அலை இதுவாகும்.

“மஞ்சள் சீருடை” எதிர்ப்பாளர்களை கடுமையாக காயப்படுத்தியதாகவும் ஸ்டீவ் கனிஸோவை கொன்றதாகவும் சந்தேகிக்கப்பட்ட பொலிசார்களை அவர்கள் மேற்கொண்ட “சமீபத்திய குறிப்பிடத்தக்க நடவடிக்கைக்காக” ஜூன் 16 அன்று காஸ்டனெர் பகிரங்கமாக பாராட்டினார்.

இதில், மார்ச் 23 அன்று நீஸில் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய ஆணையர் Rabah Souchi அடங்குவார், அப்போது ஜெனுவியேவ் லுகே என்ற 73 வயதான பெண்மணி தரையில் தூக்கி வீசப்பட்டார் என்பதுடன், தலையில் மோசமாக காயமடைந்து நினைவிழந்த நிலையில் உள்ளார்; மார்சையில் கலகப் பிரிவு பொலிஸை வழிநடத்திய கேப்டன் புருனோ ஃபெலிக்ஸூம் அடங்குவார், அவர் வீசிய கண்ணீர்புகைக் குண்டுகள் Zinab Redouane என்ற 80 வயது பெண்மணி அவரது குடியிருப்பில் ஜன்னல்களை மூடுகையில் அவரைத் தாக்கியது அவரை மரணமடையச் செய்தது; மேலும் ஸ்டீவ் மையா கனிஸோ இறந்த நான்ந் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின் மீதான தாக்குதலுக்கு தலைமை வகித்த நான்ந் நகர ஆணையர் Gregoire Chassaing உம் அடங்குவார்.

ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன், அப்பாவி மக்களை தண்டனையின்றி காவல்துறையினர் அடக்கலாம் அல்லது கொல்லலாம் என்பதற்கான ஒவ்வொரு சாத்தியமுள்ள சமிக்ஞையையும் மக்ரோன் அனுப்புகிறார். அரசாங்கமும் தேசிய காவல்துறை பொது ஆய்வகமும் (General Inspectorate of the National Police-IGPN) பொலிஸ் வன்முறையை அயராது மறைக்கின்றன. “பாதுகாப்புப் படையினரின் தலையீட்டிற்கும் ஸ்டீவ் மையா கனிஸோவின் மரணத்திற்கும் இடையே ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்த எங்களை எந்த ஆதாரமும் அனுமதிக்கவில்லை” என்று வெட்கமற்ற வகையில் கூறுகின்ற, மேலும் எந்தவித “பொலிஸ் தாக்குதலோ” அல்லது “தாக்குதல் நடவடிக்கையோ” அங்கு நடத்தப்படவில்லை என்று மறுப்பதுமான IGPN இன் அறிக்கையை பிரதமர் எட்வார்ட் ஃபிலிப் ஆத்திரமூட்டும் வகையில் மேற்கோள் காட்டினார்.

IGPN உம் மற்றும் அரசாங்கமும் பொய் சொல்கின்றன என்பதை கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. காணொளிகளும் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகளும், IGPN அறிக்கைக்கு நேரடியாக முரண்படுகின்றன, இது, இசை விழா பங்கேற்பாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று முழுமையாக அறிந்திருந்தும், ஆற்றங்கரை இசை நிகழ்ச்சிக்கு எதிராக இராணுவ பாணியிலான நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸை குற்றவாளியாக்கும் பேரழிவு தரும் ஆதாரங்கள் பற்றி எதையும் குறிப்பிடாதது குறிப்பிடத்தக்கது.

அன்றிரவு இறுதியாக வந்த நான்கு மீட்புப் பணியாளர்கள் IGPN அறிக்கைக்கு முரணானாகவும் அதேவேளை இளைஞர்களின் அறிக்கைக்கு ஆதரவாகவும் Le Monde நாளிதழுக்கு அறிக்கை அளித்தனர். மீட்புப் பணியாளர்களின் கூற்றுப்படி, இசை விழா “மிக அமைதியாக” நடந்துள்ளது. அதில் ஒருவர், “கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்டதாகக் கூற IGPN என்ன வரையறையை பயன்படுத்தியது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அங்கு ஏற்படுத்தப்பட்ட கண்ணீர்புகையினால் அந்த இடத்தைவிட்டு தப்பிப்பதற்கு ஏராளமானோர் விரைந்ததால் அங்கு ஒரு திடீர் நெருக்கடி உருவாகியிருக்கலாம் என்பதைக் கூட அவர்கள் கூறலாம்,” என்று தெரிவித்தார்.

மற்றொரு மீட்புப் பணியாளர், “பொலிசாரை தடுப்பதற்கு அனுப்பப்பட்ட கடைசி நபராக நான் இருந்தேன், அவர்களுக்கு எளிதான வேலை எதுவுமில்லை. என்றாலும், நான் கண்ட வரை, இந்த நடவடிக்கை பொருத்தமானது அல்ல. இந்த தலையீடு முற்றிலும் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. வெறும் இசை விழாவில், குடியிருப்பு அல்லாத பகுதியில், இதுபோன்ற கையெறி குண்டுகளை பயன்படுத்துவது முற்றிலும் நம்பமுடியாததாகத் தெரிகிறது –அனைத்திற்கும் மேலாக, முந்தைய ஆண்டுகளில் அதிகாலை 5 மணி வரை இசை விழா தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

“மஞ்சள் சீருடையாளர்களுக்கு” எதிரான பொலிஸ் வன்முறை மற்றும் ஸ்டீவின் மரணத்திற்கு வழிவகுத்த தாக்குதல் போன்றவையானது, சமூக சமத்துவமின்மைக்கும், மற்றும் பிரான்சில் ஒரு சர்வாதிகார ஆட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலம் அப்பாவி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொலிஸ் கொல்வதை சந்தேகத்திற்கு இடமின்றி பாதுகாப்பதான பொலிஸ்-இராணுவ வன்முறைக்கும் எதிராக எதிர்ப்பு அதிகரித்து வருவது குறித்து சர்வதேச ரீதியிலான ஆளும் வர்க்க பதிலிறுப்பாக உள்ளன. இந்த வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு, சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் பொலிஸ் அரசுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சர்வதேச ரீதியிலான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading