விக்கிலீக்ஸூக்கு எதிராக பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்காக செல்சியா மானிங் 441,000 டாலர் அபராதத்தையும் மற்றும் இன்னுமொரு ஆண்டு சிறைதண்டனையையும் எதிர்கொள்கிறார்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் மற்றும் பதிப்பாசிரியருமான ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்த நியமிக்கப்பட்டதான ஒரு பெரும் நடுவர் மன்ற குழுவின் முன்னால் பொய் சாட்சியமளிக்க இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங் கொள்கை ரீதியாக மறுத்ததற்கு அவர் மீது சுமத்தப்பட்டிருந்த தினசரி அபராதத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி சிறையிலிடப்பட்டுள்ள அவர் சமர்ப்பித்த முறையீட்டை கூட்டாட்சி மாவட்ட நீதிபதி அந்தோனி ட்ரெங்கா நிராகரித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பேரில் செல்சியா மானிங் 149 நாட்களாக அலெக்ஸாண்ட்ரியா நகர சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மொத்தம் 40,000 டாலர் அபராதம் செலுத்த வேண்டியுள்ளதுடன், பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்கு அவரது சிறைவாசத்தின் இரண்டாவது மாதம் முதல் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தினசரி அபராதமான 500 டாலர் தற்போது 1,000 டாலர் என மதிப்பிடப்படுகிறது.

பெரும் நடுவர் மன்றம் அதன் 18 மாத பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வராவிட்டால், சுமார் 400 க்கும் அதிகமான நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை மானிங் எதிர்கொள்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், மொத்தம் 441,000 டாலர் அபராதத்தை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்பதாகும்.

செல்சியா மானிங்

இந்த 31 வயதான இராணுவ உளவுத்துறை முன்னாள் ஆய்வாளர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதில் அவரது பங்கு குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருகிறார். அவர் விக்கிலீக்ஸூக்கு நூறாயிரக்கணக்கான இராணுவ போர் பதிவுகள், இராஜதந்திர சூழ்ச்சிகள் மற்றும் ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இரண்டு பேர் உட்பட, குறைந்தபட்சம் ஒரு டசின் பொதுமக்களைக் கொன்றதான பாக்தாத்தில் நடந்த ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டரின் வான்வழித் தாக்குதலை பதிவு செய்திருந்த இழிவான கூட்டுக் கொலை காணொளி ஆகியவற்றை கசியவிட்டார்.

உளவுச் சட்டத்தின் கீழ் உட்பட, பல குற்றச்சாட்டுக்களின் பேரில் 2013 இல் மானிங் ஏற்கனவே குற்றவாளியாக்கப்பட்டார். ஓராண்டு தனிச் சிறைவாசம் உட்பட, 2017 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியில் இருந்து விலகுவதற்கு சற்று முன்பு அவரது சாதனைக்கு மெருகூட்டும் வகையிலான இழிவான முயற்சியின் ஒரு பகுதியாக அவரால் அவரது தண்டனைக் காலம் 35 ஆண்டுகளாக மாற்றப்படுவதற்கு முன்னரே, இராணுவ தடுப்புக் காவலில் ஏழு ஆண்டுகளை மானிங் கழித்துவிட்டிருந்தார்.

அசான்ஜிற்கு அடைக்கலம் வழங்கப்பட்டிருந்த இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து பொலிஸ் அவரை சட்டவிரோதமாக இழுத்து வந்ததன் பின்னர், தற்போது அவர் இங்கிலாந்தில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு போலி பிணை மீறல் குற்றச்சாட்டின் பேரில் விரைவாக தண்டிக்கப்பட்டார் என்பதுடன், அமெரிக்காவிற்கு அவர் கையளிக்கப்படுவதற்கான பிப்ரவரி 25 தேதிய ஒப்படைப்பு விசாரணைக்கு அவர் காத்திருக்கிறார்.

அசான்ஜ் தற்போது, உளவுத்துறை சட்டத்தின் கீழான 17 குற்றச்சாட்டுக்கள் உட்பட, மொத்தம் 18 குற்றச்சாட்டுக்களையும், அத்துடன் 2010 இல் மானிங்கிடமிருந்து அவர் பெற்ற தகவல்களை வெளியிட்டதற்காக 175 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையையும் எதிர்கொள்கிறார்.

சென்ற மாதம், கூட்டாட்சி மாவட்ட நீதிபதி ஜோன் கோயெல்ட் (John Koeltl) ஜனநாயகக் கட்சி தேசிய குழு தாக்கல் செய்த ஒரு சிவில் வழக்கை தள்ளுபடி செய்தார், இது 2016 தேர்தலின் போது கசிந்த DNC மின்னஞ்சல்களை வெளியிட்டதற்காக ரஷ்ய அரசாங்கத்தின் சொத்துக்களாக விக்கிலீக்ஸையும் அசான்ஜையும் தூற்றுவதற்கு முனைந்தது. இந்த தீர்ப்பு, ஒரு வெளியீட்டாளராக விக்கிலீக்ஸின் உரிமைகளை நியாயப்படுத்துவதாக இருந்தது, மேலும் மானிங் வழங்கிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக அசான்ஜ் மீது வழக்கு தொடர்வதற்கான தற்போதைய முயற்சியையும் அம்பலப்படுத்தியது.

அவரை சாட்சியமளிக்க நிர்ப்பந்திக்கும் ஒரு முயற்சியில் தான் மானிங் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற உண்மை, அசான்ஜ் மீதான மேலதிக குற்றச்சாட்டுக்களுக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதையும், அவை – முறையான ஒப்படைப்பு கோரிக்கை வழங்கப்பட்ட பின்னர் தற்போதை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சட்டம் மேலதிக குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்க்க அனுமதிக்காது என்றாலும் கூட - ஒருமுறை கட்டவிழ்க்கப்பட்டால் வாஷிங்டனின் பிடியில் அசான்ஜ் நிரந்தரமாக சிக்கிக் கொள்வார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த குற்றச்சாட்டு, அவரது அடைக்கலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தூதரகத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தவும், கணினி ஊடுருவல் சதி செய்ததற்காகவும் பயன்படுத்தப்பட்டது, மேலும் மானிங்கை ஒரு இணை சதிகாரர் என்று முத்திரைகுத்தி அவரும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் இது உருவாக்குகிறது.

ஆயினும், மானிங் இதுவரை எந்த குற்றத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்படவில்லை, எனவே அவரை சட்டப்படி தண்டிக்க முடியாது. அபராதம் வெறுமனே நிர்பந்திப்பதற்கானதே தவிர, தண்டனைக்குரியது அல்ல என்று தனது தீர்ப்பில் வலியுறுத்த ட்ரெங்கா கஷ்டப்பட்டார்.

2008 இல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆல் நீதிமன்ற அமர்வில் நியமிக்கப்பட்ட ட்ரெங்கா, மானிங் “நீதிமன்ற நிதி அபராதங்களை செலுத்தும் திறனைக் கொண்டவர் அல்லது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவற்றைச் செலுத்தும் திறனை அவர் கொண்டிருப்பார்” என்பதால், அபராதங்களை மறுபரிசீலனை செய்ய “நியாயமான காரணங்கள்” எதுவுமில்லை என்று கூறி தீர்ப்பளித்தார்.

தற்போதைய பெரும் நடுவர் மன்றம் அல்லது எதன் முன்னிலையிலும் சாட்சியமளிக்க செய்ய மானிங்கை சமாதானப்படுத்த எதுவுமில்லை என்ற பின்னரும், அவரை நிதிய திவால்நிலைக்கு அச்சுறுத்தும் முன்சம்பவிக்காத நிதி அபராதங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையிலும், அபராதங்கள் நிர்ப்பந்தத்திற்கானது என்பதைக் காட்டிலும் அவை தண்டனைக்குரியவையே என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

மானிங் ஏற்கனவே தனது குடியிருப்பை இழந்துவிட்டார், மேலும் தனிப்பட்ட சேமிப்பு எதுவும் அவரிடம் இல்லை என்பதுடன் சிறையில் இருப்பதால் வேலை செய்யவும் முடியவில்லை. சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட பேசும் கட்டணம் அவருக்கு கிடைத்தது ஒன்றே அவரது வருமானத்திற்கான ஒரே வழியாக இருந்தது.

பெருகிவரும் அபராதம் மற்றும் தொடர்ச்சியான சிறைவாசம் ஆகியவற்றிற்கு முகம் கொடுக்கும் நிலையில் கூட, மானிங் தனது நம்பிக்கைகளில் உறுதியுடன் இருந்து வருகிறார்.

இந்த தீர்ப்பால், “நான் ஏமாற்றமடைந்தேன், என்றாலும் எதுவும் ஆச்சர்யப்படுத்தவில்லை” என்று அவர் கூறினார். “இது எனது நிலைப்பாட்டை சிறிதளவும் மாற்றாது என்பதை அரசாங்கமும் நீதிபதியும் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறினார். மே மாதம் நடந்த அவர் மீதான அவமதிப்பு விசாரணையின் போது, மானிங் ட்ரெங்காவிடம், “இந்த விடயம் குறித்து எனது கருத்தை மாற்றுவதை விட பட்டினி கிடந்து இறப்பேன்” என்று கூறினார்.

அந்த மாத இறுதியில், அவர் பெரும் நடுவர் மன்றத்திற்கு அவரது அரசியல் ரீதியான கொள்கை ரீதியான ஆட்சேபனைகளை பொதுவாகவும், மேலும் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸூக்கு எதிரான அதன் குறிப்பிட்ட பயன்பாட்டையும் சுருக்கமாக விவரிக்கும் ஒரு கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.

“சரியான செயல்முறை, ஊடக சுதந்திரம் மற்றும் வெளிப்படையான நீதிமன்ற அமைப்பு ஆகியவற்றை நான் நம்புகிறேன்,” என்றும், “பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை துண்டிக்கும் கருவிகளாக பெரும் நடுவர் மன்றங்கள் பயன்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். அதிலும், ஒரு முக்கியமான பொது நன்மைக்குரிய சேவை செய்யும் ஊடகவியலாளர்களையும், வெளியீட்டாளர்களையும் அச்சுறுத்தும் முயற்சியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள இந்த பெரும் நடுவர் மன்றத்தை குறிப்பாக நான் எதிர்க்கிறேன். நான் சிறுவயதில் இருந்தே இந்த மதிப்புக்களைக் கொண்டிருந்தேன், அவற்றை பிரதிபலிக்க எனக்கு பல ஆண்டு கால சிறைதண்டனை உதவியது. அந்த நேரத்தின் பெரும்பகுதியில், எனது மதிப்புகள், எனது முடிவுகள், மற்றும் எனது மனச்சாட்சி ஆகியவற்றின் உயிர்ப்பில் நான் தங்கியிருந்தேன், நான் அவற்றை இப்போது கைவிட மாட்டேன்” என்றும் மானிங் எழுதினார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) இணைந்த உலக சோசலிச வலைத் தளமும்(WSWS), சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) அசான்ஜ் மற்றும் மானிங்கின் சுதந்திரத்தை பாதுகாக்க உலகளாவிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு ஜூன் மாதம் அழைப்பு விடுத்திருந்தது. அவர்களின் கூட்டு துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ICFI யும் மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா என ஏனைய உலகெங்கிலுமான விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களையும் தலையீடுகளையும் ஒழுங்கமைத்தனர்.

மானிங் மற்றும் அசான்ஜிற்கு நேரம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதுடன், ஒரு கொலைகாரராக சந்தேகிக்கப்படும் நபரை நடத்துவதைக் காட்டிலும் படுமோசமாக அவர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர் என ஊடகவியலாளர் ஜோன் பில்ஜர் தெரிவிக்கிறார். மானிங் மற்றும் அசான்ஜ் மீதான தாக்குதல், ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாக உள்ளது, இது, ஊடகவியலாளர்களை மவுனமாக்குவதையும், மேலும் ஏகாதிபத்திய சக்திகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் அனைவரையும் அச்சுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

மானிங் மற்றும் அசான்ஜின் சுதந்திரத்தை அவர்களுக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு அரசாங்கங்களிடம், அதாவது இலண்டன், கான்பெர்ரா அல்லது குயிட்டோ மற்றும் வாஷிங்டன் டிசி என எதனிடமும் தார்மீக முறையீடுகளை முன்வைப்பதன் மூலம் வெல்லமுடியாது. மாறாக, இந்த இரண்டு துணிச்சல்மிக்க தனிநபர்களின் உயிர்களை காப்பாற்ற சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கம், மாணவர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை அணிதிரட்டுவதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பதிலிருந்து இந்த இயக்கம் வெளிப்பட வேண்டும்.

Loading