இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பீரங்கித் தாக்குதல் காஷ்மீரை அச்சுறுத்துகிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை  இங்கே காணலாம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இரண்டும், தாக்குதலுக்கான தயாரிப்புக்களை செய்வதாகவும், மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஊடாக அவர்களது இராணுவப்படையினர் அபாயகரமான பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஒன்றுக்கொன்று குற்றம்சாட்டுகின்ற நிலையில், சமீபத்திய நாட்களில் இந்த தெற்காசிய அணுவாயுத போட்டி நாடுகளுக்கிடையில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாமலேயே பாகிஸ்தான் தொடங்கிய எல்லை தாண்டிய பீரங்கித் தாக்குதலில் அதன் சிப்பாய்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக புது தில்லி சனியன்று தெரிவித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுடன் சேர்ந்த இரண்டு வேறுபட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்திய பீரங்கித் தாக்குதலால் பாகிஸ்தானின் மூன்று சிப்பாய்களும் மற்றும் இரண்டு குடிமக்களும் கொல்லப்பட்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்தது. அத்துடன், வியாழக்கிழமை எல்லை தாண்டிய தாக்குதலில் ஐந்து இந்திய சிப்பாய்களை அதன் இராணுவத்தினர் கொன்றுவிட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்தது. அங்கு கடுமையாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதை புது தில்லி ஒப்புக் கொண்டது, என்றாலும் இந்திய சிப்பாய்கள் இறந்தனர் என்ற கூற்றுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று நிராகரித்தது.

இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கம், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதி மீதான அதன் தடையற்ற ஆதிக்கத்தை உறுதிப்படுத்த நாட்டின் அரசியலமைப்பை சட்டவிரோதமாக திருத்தியமைத்து, பின்னர் அப்பிராந்தியத்தை முன்னிகழ்ந்திராத வகையில் அதன் முற்றுகையின் கீழ் கொண்டு வந்து இரண்டு வாரங்களில், இரு நாடுகளைச் சேர்ந்த அரசாங்க மற்றும் இராணுவத் தலைவர்களும் போர்வெறிமிக்க அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி ஊடாக இந்திய-எதிர்ப்பு இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை ஊடுருவச் செய்வதற்கு பாகிஸ்தான் முயலுவதாக இந்திய இராணுவம் பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. இந்திய ஊடகங்களில் பரவலாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளியன்று, இந்தியா “முதல் பயன்பாடு இல்லை” என்ற அதன் அணுவாயுத உறுதிமொழியை கைவிடுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட “சூழ்நிலைகள்” காரணமாகக் கூடும் என்று கூறினார். மேலும், அதிகபட்ச ஊடக கவனத்தை ஈர்த்ததான இந்தியாவின் 1998 அணுவாயுத சோதனையின் தளமான பொக்ரானில் விடுத்த இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, சிங் இதனை டவீட்டும் செய்தார்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் ஜம்மு-காஷ்மீர் (AJK) பகுதியின் தலைநகரம் முசாஃபராபாத்தில் புதனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரையில், இந்த பகுதியை ஆக்கிரமிக்க இந்தியா திட்டமிடுவதாக குற்றம்சாட்டியதுடன், ஒரு பெரும் இராணுவ பதிலடிக்கு அச்சுறுத்தினார். “பாகிஸ்தான் இராணுவம்,” “அவர்கள் [இந்தியா] பாகிஸ்தானிய காஷ்மீரில் ஏதோவொன்றை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள் என்ற உறுதியான தகவலை கொண்டுள்ளது. ஆகவே இந்தியா ஏதேனும் விதிமீறல் நடவடிக்கைகளை எடுக்குமானால், நாங்கள் இறுதி வரை போராட முடிவு செய்துள்ளோம்… [இந்தியாவிற்கு] ஒரு பாடம் கற்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கான் தெரிவித்தார்.

கானின் மற்றொருபக்கத்தில் கூட நின்றAJK பிரதமர் ஃபரூக் ஹெய்டர் பேசுகையில், தற்போதைய தீர்க்கப்படாத காஷ்மீர் சச்சரவின் தன்மையை வலியுறுத்தும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை “போர்நிறுத்தக் கோடு” என்று மறுபெயரிட வேண்டும் என்று கூறினார்.

பிப்ரவரியில் வாஷிங்டனின் ஆதரவுடன் புது தில்லி, பாகிஸ்தான் உள்ளே சட்டவிரோதமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானை அது “தண்டித்ததன்” பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு முழுமையான போரின் விளிம்பிற்கு வந்தன. இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் குறித்த நாய் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் குறைந்தபட்சம் ஒரு இந்திய போர்விமானத்தையாவது சுட்டுவீழ்த்தும் ஒரு பதிலடி தாக்குதலுக்கு உத்தரவிட்டு இஸ்லாமாபாத் அதற்கு பதிலிறுத்தது.

நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர் மீதான புது தில்லியின் தடையற்ற ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், மேலும் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் உடனான “விளையாட்டின் விதிகளை மாற்றவும்” முனைகின்ற நிலையில், ஆறு மாதங்களாக, அங்கு சூழ்நிலை இன்னமும் கொழுந்துவிட்டு எரிவதாக உள்ளது.

ஒரு நான்காவது இந்திய-பாகிஸ்தானியப் போர் என்பது தெற்காசியா மக்களுக்கும் ஏன் உலகிற்கே கூட பேரழிவுகர விளைவுகளை ஏற்படுத்தும். ஆறு மடங்கிற்கு அதிகமான மக்கள்தொகை, எட்டு மடங்கு பெரிய பொருளாதாரம், மற்றும் ஐந்து மடங்கு பெரிய இராணுவ வரவு செலவுத் திட்டம் கொண்ட ஒரு எதிரியின் பலத்தை ஈடுகட்ட முனைவதாக, எல்லை தாண்டிய எந்தவொரு பெரியளவிலான இந்திய உந்துதலையும் தந்திரோபாய ஆயுதங்களைக் கொண்டு எதிர்கொள்ள பாகிஸ்தான் அச்சுறுத்தியுள்ளது. இந்திய இராணுவம், பாகிஸ்தானுக்கு எதிரான அதன் 2001-2002 “போர் நெருக்கடி” அணிதிரட்டலின் தோல்வியை படிப்பினைகளாக எடுத்துக் கொள்ள முனைவதாக, அதன் மேற்கு அண்டை நாடுகளின் மீது ஒரு திடீர், பெரும் தாக்குதலை நடத்த முடியும் என்ற நோக்கத்துடன் ஒரு “குளிர்கால யுத்த” மூலோபாயத்தை அபிவிருத்தி செய்துள்ளது.

இந்த போர் பெரும் வல்லரசுகளையும் விரைவாக உள்ளிழுக்கும். சீனாவை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் வாஷிங்டனின் திட்டங்களில் இந்தியா மிகப் பெரிய பங்காற்றுகின்ற நிலையிலும், மேலும், இந்திய-அமெரிக்க “பூகோள அளவிலான மூலோபாய கூட்டணி”க்கு பெய்ஜிங்கும் இஸ்லாமாபாத்தும் அவர்களது சொந்த இராணுவ பாதுகாப்பு கூட்டாண்மையை பலப்படுத்துவதன் மூலம் பதிலளிக்கின்ற நிலையிலும், தெற்காசியாவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமும் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக பெரும் சக்தி மோதலின் சூறாவளியில் சிக்கியுள்ளன.

ஒரு சர்ச்சைக்குரிய பிராந்தியமான ஜம்மு-காஷ்மீரின் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்த புது தில்லியின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இருப்பதுடன், அப்பிராந்திய அமைதியையும் அச்சுறுத்துகின்றது என்ற இஸ்லாமாபாத்தின் குற்றச்சாட்டுக்கள் பற்றி விவாதிக்க வெள்ளியன்று ஐ.நா. பாதுகாப்பு குழுவுடன் ஒரு “இரகசிய ஆலோசனை” கூட்டத்திற்கு வலியுறுத்தி பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஏற்ப சீனா செயலாற்றியது.

கூட்டம் 75 நிமிடங்களுக்குப் பின்னர் முடிவடைந்தது. இரகசிய அமர்வுகள் தீர்மானங்களை ஏற்கவில்லை என்றாலும், “பத்திரிகை கூறுகள்” குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டதைப் பற்றி கூட ஒருமித்த கருத்தை அக் கூட்டம் எட்டவில்லை.

ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் காஷ்மீர் மீதான இந்தியாவின் தாக்குதல் ஒரு “உள் விவகாரம்” என்பதை ஏற்றுக் கொள்கின்ற நிலையில், பாதுகாப்பு சபையில் பெய்ஜிங் தனிமைபடுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மகிழ்ச்சியடைகின்றன. சில அறிக்கைகள், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக “14-1” என்று தம்பட்டம் அடிக்கும் அளவிற்குச் சென்றன.

இது வெறுமனே இந்திய பிரச்சாரம் அல்ல. அமெரிக்காவின் தலைமையில் மேற்கத்திய சக்திகள் சீனாவுக்கு எதிரான ஒரு இராணுவ மூலோபாய எதிரிடை என்று இந்தியாவை தீவிரமாக ஊக்குவித்து வருவதுடன், அந்த முடிவை எட்டும் வரை ஜம்மு-காஷ்மீரில் இந்தியா சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும் தயாராகவுள்ளது. இந்திய ஆளும் உயரடுக்கின் மேலாதிக்கப் பிரிவின் ஆதரவுடன் மோடியும் அவரது அரசாங்கமும், அவர்களது பங்கிற்கு சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய தாக்குதலில் இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்திற்கு அடுத்த நாளில், அமெரிக்காவின் இரண்டாவது மிக மூத்த இராஜதந்திரியான துணை வெளியுறவுத்துறை செயலர் ஜோன் சல்லிவன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை புது தில்லியில் சந்தித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, “சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய-பசிபிக்” திட்டம் குறித்து பகிரப்பட்ட இந்திய-அமெரிக்க “பார்வை” பற்றி, அதாவது ஆசியா மீதான தொடர்ச்சியான அமெரிக்க ஆதிக்கம் பற்றி அவர்கள் விவாதித்தனர். காஷ்மீரின் எல்லையாக சீனா இருப்பது போல, அதுவும் ஒரு எல்லையாக இருக்கும் சிறிய பூட்டான் நாட்டிற்கு மேற்கொண்ட தனது சமீபத்திய விஜயம் பற்றியும் சல்லிவன் ஜெய்சங்கருக்கு சிறிய விளக்கமளித்தார்.

ரஷ்யாவும், மிகவும் வேறுபட்ட காரணங்களுக்காக, காஷ்மீர் குறித்து இந்தியாவிற்கு அதன் ஆதரவை வழங்கியுள்ளது. பல தசாப்தங்களாக, ஆரம்பகட்ட பனிப் போர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்ததை தொடர்ந்து, புது தில்லி அதன் முக்கிய பொருளாதார மற்றும் இராணுவ பாதுகாப்பு பங்காளியாக இருந்து வருகிறது, மேலும் அதிகரித்து வரும் அமெரிக்க-நேட்டோ இராணுவ அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடைகளை மாஸ்கோ எதிர்கொள்வதால், அந்த கூட்டாண்மையை பராமரிக்கவும் விரிவுபடுத்தவும் அது உறுதியாகவுள்ளது.

பாகிஸ்தானின் சர்வதேச தனிமைப்படுத்தலால் ஈர்க்கப்பட்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிக்கு பாகிஸ்தான் வழங்கும் அனைத்து தளவாட உதவிகளையும் தடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பகிரங்கமாக அடிபணியும் வரை இஸ்லாமாபாத்துடன் எந்தவித உண்மையான பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்ற புது தில்லியின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை மீண்டும் ஞாயிறன்று வலியுறுத்தினார். காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமாபாத்துடன் புது தில்லி நடத்தும் பேச்சுவார்த்தை “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி இருக்கும்” அதாவது அப்பகுதியும் தனக்குச் சொந்தமானது என்ற இந்தியாவின் கோரிக்கையைப் பற்றி மட்டும் இருக்குமே தவிர, “வேறெந்த பிரச்சினையை பற்றியும் இருக்காது” என சிங் அறிவிக்கவிருந்தார்.

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷமீர் பகுதியில் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஒரு பாதி தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது, இதுவரை இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக இருந்த அதன் மீது நிரந்தர மத்திய அரசாங்கப் பொறுப்பை திறம்பட திணிப்பது தொடர்பாக எழும் மக்கள் எதிர்ப்பை ஒடுக்க, ஆகஸ்ட் 5 முதல் இப்பகுதியில் முன்னிகழ்ந்திராத வகையிலான பாதுகாப்பு அடைப்பு மற்றும் தகவல் தொடர்பு இருட்டடிப்பு நடவடிக்கைகளை புது தில்லி திணித்துள்ளது.

இந்த முற்றுகை தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இன்றுவரை செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வார இறுதியில், மக்கள் நடமாட்டத்திற்கு விதித்திருந்த சில கடுமையான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தளர்த்தினர், என்றாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்த பின்னர், மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகர் உட்பட அவற்றை மீண்டும் திணிக்க உத்தரவிட்டனர்.

ஆகஸ்ட் 5 முதல் 500 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான அகில இந்திய வானொலி சென்ற வாரம் தெரிவித்தது. ஆனால் நேற்று பல்வேறு இந்திய அரசாங்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஏ.எஃப்.பி (Agence France-Presse), உண்மையில் குறைந்தது 4,000 பேரை புது தில்லி காவலில் வைத்துள்ளது என்று கூறியது.

கைது செய்யப்பட்டவர்களில் பிஜேபி அரசாங்க எதிரிகளின் ஒரு பரந்த வரிசையினர் அடங்குவர். அவர்களில் மாணவர்கள், மற்றும் “கல் வீசுபவர்கள்” என புது தில்லி பட்டியலில் வைத்திருக்கும் நபர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் – ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி - மற்றும் நூற்றுக்கணக்கான ஏனைய தலைவர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிஜேபி அல்லாத இந்திய சார்பு கட்சியின் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

மோசமான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இது, “பொது பாதுகாப்புக்கு” அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்க அனுமதிக்கிறது.

இருட்டடிப்பு செய்யப்பட்ட புது தில்லி பற்றிய செய்திகளை கண்டறிய முடிந்த மற்றும் அவரது மூத்த அரசாங்க பதவி காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட செல்போனை பயன்படுத்தி சக ஊழியர்களை தொடர் கொள்ள முடிந்த ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாஜிஸ்ட்ரேட் 4,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கணக்கிட்டதாக ஏ.எஃப்.பி. தெரிவித்தது.

4,000 பேரில் பெரும்பாலானோர் “காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டனர், ஏனென்றால் அங்குள்ள சிறைகளின் அளவை அது மீறிவிட்டது,” என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்தார். பெயர் தெரியாத நிலையில், மாஜிஸ்ட்ரேட்டைப் போல, ஆயிரக்கணக்கான கைதுகள் பற்றிய கூற்றுக்களை ஏனைய இந்திய அதிகாரிகளும் ஆதரித்துள்ளனர். ஒரு பொலிஸ் அதிகாரி ஏ.எஃப்.பி. இடம் “அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஸ்ரீநகரில் இரண்டு இடங்களில் சுமார் 6,000 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்” என்று கூறினர்.

“அவர்கள் முதலில் ஸ்ரீநகரின் பிரதான சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள், பின்னர் இராணுவ விமானத்தில் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறார்கள்” என்று அவர் விளக்கினார்.

அதன் கடுமையான இருட்டடிப்பை தொடரும் வகையில், தங்களது அன்புக்குரியவர்கள் எங்கு தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்பது பற்றி எந்த தகவலையும் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு வழங்க இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Loading