முன்னோக்கு

கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீது பாசிசவாத தாக்குதல்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கார்டியன் பத்திரிகையாளர் ஓவென் ஜோன்ஸ் மீதான மூர்க்கமான தாக்குதலை அதிவலதிடமிருந்து தொழிலாள வர்க்கத்திற்கான அபாயங்களின் ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சனிக்கிழமை காலை சுமார் 3 மணிக்கு, ஜோன்ஸ் இலண்டனின் இஸ்லிங்டனின் ஒரு உணவகத்திலிருந்து ஆறு நண்பர்களுடன் வெளியில் சென்ற போது, நான்கு ஆட்கள் "என்னை நோக்கி நேரடியாக தாக்கினார்கள்: அவர்களில் ஒருவர் என் முதுகில் கராத்தே உதை உதைத்து, என்னை தரையில் தள்ளி, தலையிலும் முதுகிலும் மாறி மாறி உதைக்க தொடங்கினார், அதேவேளை என் நண்பர்கள் அவர்களை இழுத்து விலக்க முயன்றார்கள், என்னை காப்பாற்றுவதற்காக குத்து விடவும் முயன்றார்கள்.”

அவர் "அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு தாக்குவதற்காக" அவர் இலக்கு வைக்கப்பட்டதாக ஜோன்ஸ் வலியுறுத்தினார். சரீரரீதியில் முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட அவர் அதிவலது நடவடிக்கையாளர்களால் மீண்டும் மீண்டும் இலக்கில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், “அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதற்கான" ஆதாரம் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

ஜோன்ஸ் க்கு ஒப்பீட்டளவில் சிறிய காயங்களே ஏற்பட்டிருந்தன என்றாலும், அவர் தலையில் உதைக்கப்பட்டார் என்பதால் அந்த தாக்குதல் எளிதில் மரணம் ஏற்படுத்துவதாக கூட ஆகியிருக்கக்கூடும். இவ்வாறிருக்கையில் கேமரா பதிவு காட்சிகளும் கடந்த முறை அவரை மிரட்டியவர்களின் பெயர்களும் தெரிந்திருந்தும் கூட, எந்த கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக மகாநகர பொலிஸ் அந்த "முட்டாள்தனமான தாக்குதல்" உண்மையில் ஒரு வெறுப்பு குற்றமா என்பதை அது ஆராய்ந்து வருவதாக ஓர் அறிக்கை வெளியிட்டது. ஊடகங்கள் ஏற்கனவே அந்த சம்பவத்தை அதன் உள்பக்கங்களுக்குள் பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளன.

பிரிட்டனில் உடல்ரீதியில் ஒரு திட்டமிட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட முக்கிய இடதுசாரி பிரமுகர்களில் ஜோன்ஸ் சமீபத்திய நபர் மட்டுந்தான். ஜூன் 2016 இல், பாசிசவாத தோமஸ் மையர் "பிரிட்டன் முதலில்!” என்று கூச்சலிட்டவாறு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸை அடித்து துப்பாக்கியால் சுட்டு கொன்றார். கோக்ஸ் அப்போது நடந்து வந்த பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் வாக்குகளுக்காக ஒரு முக்கிய பிரச்சாரகராக இருந்தார்.

ஜூலை 2018 இல், இரயில்வே, கடல்வழி போக்குவரத்து தொழிற்சங்க துணை பொது செயலாளர் ஸ்டீவ் ஹெட்லியும் அவரது துணைவியும் இலண்டனில் இனவாதத்திற்கு எதிராக நிற்போம் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் பாசிசவாதிகளால் ஓர் உணவகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டார்கள். அதிலேயும், யாரும் கைது செய்யப்படவில்லை.

2017 இல் பின்ஸ்பரி பூங்கா மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்தில் ஒரு வாடகை வண்டியைச் செலுத்தி ஒரு முஸ்லீம் வழிபாட்டாளரைக் கொன்று 12 பேரைக் காயப்படுத்திய டாரென் ஓஸ்போர்ன் மீதான 2018 வழக்கின் போது, அவர் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் மற்றும் தொழிற் கட்சியின் இலண்டன் நகரசபை தலைவர் சாதிக் கானைக் கொல்ல திட்டமிட்டிருந்ததை ஒப்புக் கொண்டார்.

மார்ச்சில், கோர்பின் ஒரு வலதுசாரி குண்டரும் பிரெக்ஸிட் ஆதரவாளருமான ஜோன் முர்பியால் பின்ஸ்பரி பூங்கா மசூதியின் முஸ்லீம் சமூகநல மண்டபத்தில் வைத்து தலையில் தாக்கப்பட்டார். கோர்பினைக் காப்பாற்ற அங்கே எந்த பொலிஸ் அதிகாரிகளும் இருக்கவில்லை. பின்னர் முர்பிக்கு "பொது தாக்குதல்" நடத்தியதற்காக 28 நாள் சிறைதண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.

ஏப்ரலில், தேசிய நடவடிக்கை (National Action) அமைப்பின் நவ-நாஜி உறுப்பினர் ஜாக் ரென்ஷா, 2017 இல் பழங்காலத்திய 19 இன்ச் ரோமன் கிளாடியஸ் வாள் கொண்டு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி கூப்பரைப் படுகொலை செய்ய திட்டமிட்டதற்காக தண்டனை பெற்றார்.

அங்கே அரசியல்ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களின் தாக்குதல்களுக்குப் பலிக்கடா ஆன முக்கியஸ்தர்களுக்கு குறைவில்லை. அக்டோபர் 2018 இல், பிரெக்ஸிட் மீதான ஒரு தொழிற் கட்சி கூட்டத்திலிருந்து வெளியே வந்த ஜாட் உனல் தாக்கப்பட்டு, ஐந்து நாட்கள் மூளை அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அப்பெண்மணி எங்கே வசிக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறியதால், உனலும் அவரது மகளும் தலைமறைவாக நிர்பந்திக்கப்பட்டனர். யாரும் கைது செய்யப்படவில்லை.

ஜோன்ஸ் மீதான இந்த கோழைத்தனமான தாக்குதல், பாசிசவாதிகள் முன்நிறுத்தும் அச்சுறுத்தலுக்குப் பாரிய வெகுஜன ஆதரவு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. பத்து நூற்றுக் கணக்கானவர்களே இந்த குழுக்களில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். பாசிசவாதிகள் அவர்களுக்கு அனுகூலமாக என்ன பெற்றிருக்கிறார்கள் என்றால், பின்புலத்தில் அவர்கள் உயர்மட்டத்தால் ஆதரிக்கப்பட்டு ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசு எந்திரத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதுடன், பிரதான கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சித்தாந்த ஆதரவை வழங்குகின்றன.

“அதிகரித்தளவிலான வன்முறையுடன், சிறுபான்மையினரையும் இடது சார்ந்த நபர்களையும் இலக்கு வைத்து வரும், ஒரு துணிவு கொண்ட அதிவலதின் வளர்ச்சியில்" ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் குற்றகரமாக உடந்தையாய் இருப்பதை ஜோன்ஸ் அடையாளங்கண்டார். ஊடகங்கள் தேசியவாத வலதை ஊக்கப்படுத்தும் விதத்திற்கு உதாரணமாக, பிரெக்ஸிட் இன் அரசியல் எதிர்ப்பாளர்களை "தேசத்துரோகிகள்" என்று சித்தரிக்கும் தலைப்புகளை அவர் மேற்கோளிட்டார்.

கோக்ஸ், உனல் மற்றும் கோர்பின் மீதான தாக்குதல்கள் உட்பட பிரிட்டனில் பாசிசவாத வன்முறையை முடுக்கி விடுவதில் பிரெக்ஸிட்-சார்பு வாய்வீச்சு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் முதலாளித்துவம் முன்பினும் கூர்மையாக நெருக்கடிக்குள் வீழ்வது தவிர்க்கவியலாமல் அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளாலும் தேசியவாத பிற்போக்குத்தனம் முடுக்கி விடுவதுடன் சேர்ந்து கொள்கிறது.

அமெரிக்கா, பிரேசில், பிலிப்பைன்ஸ், ஹங்கேரி மற்றும் இத்தாலியில் அதிவலது அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு வருவது எப்போதும் பாசிச பயங்கரத்திற்கு திரும்புவதுடன் சேர்ந்து வருகிறது. நியூசிலாந்தின் கிறிஸ்துவ தேவாலய மசூதி கொலைகாரர் பிரென்டன் டார்ரென்ட் 51 முஸ்லீம்களை அவர் கொன்றதற்கு பின்ஸ்பரி பூங்கா மசூதி தாக்குதல்தாரி டாரென் ஓஸ்போர்னை ஒரு முன்னுதாரணமாக மேற்கோளிட்டார், அத்துடன் அப்பாவி மக்களைக் கொன்ற நோர்வேஜிய அதிவலது கொலைகாரர் ஆண்டர்ஸ் பிரீவிக், சமூக ஜனநாயக தொழிலாளர்கள் இளைஞர்கள் கழக கோடை முகாமில் பங்கெடுத்த 69 பேரைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னதாக, 2011 இல் ஓஸ்லோவில் ஒரு குண்டுவீசி எட்டு பேரைக் கொன்றார்.

ஜேர்மனியில் கிறிஸ்துவ ஜனநாயக அரசியல்வாதி வால்டர் லூப்க்க அகதிகளின் பாதுகாப்புக்காக பேசியதற்குப் பின்னர் ஓர் நன்கறியப்பட்ட நவ-நாஜியால் ஜூன் 2 இல் கொல்லப்பட்டார். கொலோனின் இப்போதைய நகரசபை தலைவர் Henriette Reker அக்டோபர் 2015 இல் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் கீறப்பட்டார். 1990 இக்குப் பின்னர் இருந்து குறைந்தபட்சம் 169 பேர் வலதுசாரி நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 179 பேரை காயப்படுத்திய 363 வன்முறை நடவடிக்கைகள் உட்பட, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் 8, 600 வலதுசாரி குற்றவியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பொலிஸ் 2, 625 நபர்களைச் சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் கண்டுள்ளது, என்றாலும் 23 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில், ABC News மற்றும் Mother Jones இரண்டு பத்திரிகைகளும், அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மற்றும் பிற வன்முறை நடவடிக்கைகளுக்கும் டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத வாய்வீச்சுக்கும் இடையே நெருக்கமான தொடர்பிருப்பதை அடையாளம் கண்டுள்ளன. ABC News குறைந்தபட்சம் 36 குற்றவியல் வழக்குகளைப் பட்டியலிடுகிறது, அவற்றில் ட்ரம்பின் பெயர் வன்முறை நடவடிக்கைகள், வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது தாக்கிய குற்றச்சாட்டுக்களுடன் நேரடியாக தொடர்பில் சம்பந்தப்பட்டிருந்தது. Mother Jones செய்திகளின்படி, கடந்த அக்டோபரில் இருந்து அங்கே அதிவலது சித்தாந்தத்தால் ஊக்குவிக்கப்பட்ட குறைந்தபட்சம் ஆறு பரந்த மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது, அதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் 52 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரம்ப் ஆதரவாளர்கள், தலையில் "தோட்டா பாய்ச்சுவோம்" என்று அச்சுறுத்தி, மிச்சிகன் பிரதிநிதி ரஷிடா தலிப் மற்றும் மின்னிசொடா பிரதிநிதி இல்ஹன் ஒமரை வன்முறையோடு அச்சுறுத்தி உள்ளனர்.

அதிவலதை வளர்த்தெடுப்பதற்கான ஆளும் உயரடுக்கின் முயற்சிகள் புறநிலை வேர்களைக் கொண்டுள்ளன. செல்வம் கொழித்த செல்வந்த உயரடுக்குக்கும் வாழ்வதற்கே போராடி வருகின்ற பாரிய பெருந்திரளான மக்களுக்கும் இடையிலான இடைவெளி ஒருபோதும் இந்தளவுக்கு இருந்ததில்லை. சர்வதேச அளவில் வர்க்க பதட்டங்கள் ஓர் உடையும் புள்ளியை எட்டியுள்ளன. சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் எழுச்சியைக் குறித்து அஞ்சி, ஆளும் வர்க்கம் ஒவ்வொரு இடத்திலும் முன்பினும் அதிக கூர்மையாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதன் மூலமாகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் ஆயுதமாக அதிவலது சக்திகளை விதைத்தும் விடையிறுக்கிறது.

பிரிட்டனின் மிகவும் பிரபல "இடது" பத்திரிகையாளர்களில் ஒருவர் மீதான இந்த பாசிசவாத தாக்குதல், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெல்மார்ஷ் அதிகபட்ச காவல் சிறைச்சாலையிலிருந்து வெறும் ஒரு மணி நேர பயணத்தில் அடையக் கூடிய இடத்தில் நடந்தது என்பது தற்செயலானதில்லை. அசான்ஜ் கையாளப்பட்ட மிதமிஞ்சிய விதம் ஜோன்ஸ் அனுபவித்த அடி-உதைகளை விட மிகவும் கொடூரமானது. நீண்டகாலம் தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பயங்கர உடல்ரீதியான பாதிப்பு மற்றும் மனரீதியிலான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, அசான்ஜின் வாழ்க்கை ஏற்கனவே அபாயத்தில் உள்ளது. அவர் உயிர்பிழைத்திருந்தாலும், அவர் ஏகாதிபத்திய போர் குற்றங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையியலை பின்பற்றிய ஒரே "குற்றத்திற்காக" ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ முகங்கொடுக்க அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார்.

அதிவலது மீதான மக்கள் வெறுப்பு பெரிதும் அதிகரித்து கொண்டிருக்கிறது, என்றாலும் தற்போது அது நடைமுறையளவில் எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. இதற்கு போராட்டத்தின் ஒரு புதிய அச்சு அவசியப்படுகிறது.

1930 களில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தமை, முதலாளித்துவத்தின் "ஜனநாயக" பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு முறையீடுகள் செய்வதன் மூலமாக பாசிசத்தை எதிர்க்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இராணுவம், பெரு வணிகங்கள் மற்றும் பிரதான முதலாளித்துவக் கட்சிகளது தலைவர்களின் பின்புல ஆதரவுடன் ஹிட்லரிடம் அரசு கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டது. கொந்தளித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், அவர் தொழிலாள வர்க்கத்தைக் கொடூரமாக அடிபணிய வைக்க பணிக்கப்பட்டார்.

இன்றும், அதே காரணத்திற்காக, அதிவலது, அரசின் பாதுகாப்பை அனுபவிக்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தை அதன் சுயாதீனமான நலன்களின் பாதுகாப்புக்காக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக இந்த சூழ்ச்சியை தோற்கடிக்க முடியும், தோற்கடிக்கப்படும். இதன் அர்த்தம், பாசிசவாத வன்முறைக்கான எதிர்ப்பையும் மற்றும் ஏகாதிபத்தியத்தின் காலனித்துவப் போர் சூறையாடல்களில் இருந்து வந்த புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு எதிரான வக்கிரமான எதிர்ப்பையும், வேலைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் பாதுகாப்பு மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைப்பது என்பதாகும். இதுபோன்றவொரு இயக்கத்தின் புறநிலை அடித்தளம் ஏற்கனவே ஒரு சர்வதேச வேலைநிறுத்தங்களின் அலையிலும் மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கான சமூக போராட்டங்களிலும் எழுச்சி கண்டு வருகிறது.

Loading