முன்னோக்கு

மக்ரோனுக்கு எதிராக ஓய்வூதியங்களை பாதுகாக்க ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் அவசியமாகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இம்மாதம் பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஓய்வூதியங்கள் மீதான கடுமையான வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பொலிஸ்-அரசு கொள்கைகளுக்கு எதிராகவும் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் பரந்த கோபத்திற்கு மத்தியில், பொது போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், மருத்துவமனை தொழிலாளர்கள், பொதுச்சேவை, மின்சாரத்துறை தொழிலாளர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் என அனைவரும் வேலைநிறுத்தங்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய வெட்டுக்களைத் தடுப்பதற்கு போராட, தொழிலாள வர்க்கத்தில், அங்கே பரந்தளவில் தீர்க்கமான மனஉறுதி உள்ளது. பிரெஞ்சு மக்களில் 62 சதவீதத்தினர், "செல்வந்தர்களின் ஜனாதிபதி" மக்ரோனுக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தை விரும்புவதாக சமீபத்திய ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.

இந்த மாத ஆர்ப்பாட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் பாரிய பலத்தை அணித்திரட்டுவதற்காக தொழிற்சங்கங்களால் அழைப்புவிடுக்கப்படவில்லை, மாறாக அவர்களின் கோபத்தை தணித்து எந்தவொரு போராட்டத்தையும் நாசப்படுத்தவே அழைப்பு விடுத்துள்ளன. மீண்டுமொருமுறை, அவை தொழிலாளர்களை தொழில்துறை சார்ந்தும், அவர்கள் பங்கு பற்றியிருக்கும் தொழிற்சங்கம் சார்ந்தும் கூட பிரித்து வைத்துள்ளன. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக ஓர் ஒருங்கிணைந்த எதிர் தாக்குதலை அபிவிருத்தி செய்து விடுமோ என தொழிற்சங்க எந்திரம் அதிகளவில் அஞ்சுகிறது.

தொழிற்சங்கங்களுக்கு வெளியே வெடித்து, மக்ரோன் அரசாங்கத்தின் அஸ்திவாரங்களையே நடுநடுங்க வைத்த, முதல் "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் ஏறத்தாழ ஓராண்டின் வேளையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னால் முக்கிய கேள்விகள் முன்நிற்கின்றன. தொழிற்சங்கங்கள் மீதும், அவற்றுக்கு முதலாளிமார்களும் மற்றும் அரசும் நிதி வழங்குவதன் மீதும், அவற்றின் திவால்நிலைமை மற்றும் திராணியின்மை மீதும் மக்களின் கோபம் முன்னொருபோதும் இல்லாதளவில் அலைமோதியதை "மஞ்சள் சீருடை" இயக்கம் கண்டது. ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பின்மை காப்பீடு மற்றும் ஏனைய முக்கிய சமூகநலத் திட்டங்களை மக்ரோனுடன் பேரம்பேசி வரும் தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் நேரெதிரான பாதையில் தொழிலாளர்கள் நிற்கின்றனர்.

நாஜி ஆக்கிரமிப்புக்குப் பின்னர் பிரான்சின் மாநகரங்களில் மிகப் பெரியளவில் நடத்தப்பட்ட கைது நடவடிக்கைகளின் அலையுடன் சேர்ந்து, மக்ரோன், "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது மாதக் கணக்கில் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை காட்டியுள்ளார், அதிலிருந்து அவர் பின்வாங்கப் போவதில்லை. அவருக்குப் பின்னால், தொழிலாளர்களுக்கு எதிராக, சர்வதேச நிதி சந்தைகளும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் நிற்கிறது.

ஓய்வூதியங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் பாசிசவாத பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கி நன்கு முன்னேறியுள்ள முனைவை எதிர்ப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதே முன்னோக்கி செல்லும் வழியாகும். 1991 இல் ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், உலகெங்கிலும் தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்பட்டது அல்லது குரல்வளை நெரிக்கப்பட்டது என்ற நிலையில், வர்க்கப் போராட்டம் இப்போது வெடிப்பார்ந்த சக்தியோடு மீண்டும் மேலெழுந்து வருகிறது.

சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்புடன் சேர்ந்து, ஒரு பரந்த உலகளாவிய வர்க்கப் போராட்ட மறுமலர்ச்சி நடந்து வருகிறது. 1980 களுக்குப் பின்னர் அமெரிக்காவில் நடந்த முதல் பாரிய வேலைநிறுத்தங்களாக அந்நாடு கடந்தாண்டு ஆசிரியர் வேலைநிறுத்த அலையைக் கண்டது, போலாந்தில் முதலாளித்துவ மீட்டமைப்புக்குப் பின்னர் முதல்முறையாக தேசியளவிலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நடந்துள்ளது. "மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டங்களுக்கு பக்கவாட்டில், அல்ஜீரியா மற்றும் சூடானிய இராணுவ ஆட்சிகளைக் கலைக்க கோரியும், அல்லது ஹாங்காங்கில் சீன ஸ்ராலினிச ஆட்சிக்கு கீழ்ப்படிய மறுத்து சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் வெகுஜன போராட்டங்கள் வெடித்துள்ளன.

உலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த தொழில்துறை சக்தியும், சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ்-அரசு இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சிறிய சொத்துடைமை உயரடுக்குக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும். ஆனால் இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் சிக்கன நடவடிக்கை வரையறைகளை பேரம்பேசும் தேசியவாத அடிப்படையிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் தீர்க்கமாக முறித்துக் கொள்வது அவசியமாகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட, அவர்களால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகின்றன. தேசிய நிலைப்பாடுகளில் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி பின்னர் அவர்களைத் துறை சார்ந்து கூடுதலாக பிளவுபடுத்தும் தொழிற்சங்கங்களால் அவர்கள் வீணடிக்கப்படுவதைக் கடந்து வரவும் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், தொழிலிடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க சமூகங்களில் கட்டமைக்கப்படும் இத்தகைய புதிய, சாமானிய அமைப்புகள் மட்டுமே ஒரே வழியாகும்.

அத்தகைய போராட்ட அமைப்புகளைக் கட்டமைத்து பேணிப் பாதுகாப்பதற்கு ஒரு மார்க்சிச அரசியல் முன்னோக்கை நோக்கி திரும்ப வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதே, நடவடிக்கை குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரே நம்பகமான முன்னோக்காகும்.

இது, தொழிற்சங்கங்களை நோக்கி நோக்குநிலை கொண்ட, மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற, ட்ரொட்ஸ்கிசத்தை விட்டோடிய பல்வேறு ஓடுகாலிகள் வழிவந்த மற்றும் ஸ்ராலினிசம் வழிவந்த அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற குட்டி-முதலாளித்துவக் கட்சிகளுடன் தீர்க்கமாக முறித்துக் கொள்வதை உள்ளடக்கி உள்ளது. ஆரம்பத்தில் "மஞ்சள் சீருடை" இயக்கத்தைப் பாசிசவாதமாக கண்டித்த இவை, பழைய, தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களை ஓர் உண்மையான போராட்டத்திற்கு நிர்பந்திக்க முடியும் என்ற பிரமைகளை ஊக்குவித்து வருகின்றன.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) நிர்வாகி ஒலிவியே பெசன்ஸெநோ 2003 க்குப் பிந்தைய அவரது கட்சியின் கோடைகால பள்ளியில் குறிப்பிட்டவாறு, ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான நான்கு போராட்டங்கள் பிரான்சில் தோல்வியடைந்துள்ளன. தொழிற்சங்க போராட்டங்களைக் குறித்து பேசுகையில், "அவை வேலைக்கு ஆகாதென எங்களுக்குத் தெரியும்" என அவர் கூறினார். ஆனால் "கடந்தாண்டு நாம் பார்த்த வர்க்க போராட்டத்தின் வரையறைகளில், கூடவோ குறையவோ அதேயளவுக்கு இறுக்கமான வாரங்களைக் கொண்ட" ஓர் இயக்கத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களை ஐக்கியப்படுத்த "எல்லா அரசியல் வர்க்க போராட்ட தொழிற்சங்க அணிகளுக்கும்" அழைப்பு விடுப்பதைத்தான் அவரால் ஆகச்சிறந்த வகையில் செய்ய முடிந்தது.

ஆனால் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த கடந்தாண்டு போராட்டங்கள் போதுமானவை அல்ல. தொழிலாளர்களும் இளைஞர்களும் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் நுழைந்து வருகையில், அவர்கள் முகங்கொடுக்கும் அரசியல் சவால்களை முழுமையாக மதிப்பிடுவது இன்றியமையாததாகும்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவானது, அண்ணளவாக உலக நிதியியல் அமைப்புமுறையையே சரிவுக்குக் கொண்டு வந்த ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறையோ மீண்டும் பாசிசவாதம் மற்றும் போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களை ட்ரம்ப் இரத்து செய்யக்கூடும் என்று வாஷிங்டன் ஊகித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், பிரிட்டனில் ஆளும் வர்க்கம் பிரெக்ஸிட் விவகாரத்தில் கடுமையாக விவாதித்து வருகின்ற நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. ஜேர்மனியில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்படும் வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்கள் ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் மீள்இராணுவமயப்படுத்தலை நியாயப்படுத்த ஹிட்லரை "வக்கிரமானவர் இல்லை" என்று சட்டபூர்வமாக்குகின்றனர், அதேவேளையில் பிரான்சில் மக்ரோன் கடந்தாண்டு பாசிச சர்வாதிகாரி பிலிப் பெத்தனை "மாவீரர்" என்று புகழ்ந்தார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், "அரசியலற்ற" (“apolitical”) போராட்டங்களுக்கான அழைப்புகள் மேலோட்டமானவை என்பதோடு திவாலானவையாக உள்ளன. தொழிலாளர்கள் ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கிறார்கள்.

"மஞ்சள் சீருடையாளர்கள்" தைரியத்தையும் மனஉறுதியையும் காட்டினார்கள் என்றாலும், முன்னோக்கு இல்லாத ஒரு தன்னியல்பான "அரசியலற்ற" போராட்டம் என்ன சாதிக்கும் என்பதன் வரம்புகளையும் காட்டினார்கள். பிரான்சிலும் உலகெங்கிலும் அவர்களுக்கு மிகப் பெரியளவில் அனுதாபம் இருந்தது என்றாலும் அதேவேளையில் அவர்களால் ஒரு பரந்த, சர்வதேச இயக்கத்திற்குத் தலைமை கொடுக்க முடியவில்லை. அவர்களின் போராட்டம் வெடித்து அண்மித்து ஓராண்டுகளின் வேளையிலும், வெறுக்கப்படும் மக்கள் விரோத மக்ரோன் இன்னமும் அதிகாரத்தில் தங்கியுள்ளார் என்பதுடன் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்து வருகிறார்.

பாசிசவாதம், போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளும் முதலாளித்துவ வர்க்கத்தின் முனைவுக்கு வரலாற்று மாற்றீடாக இருப்பது ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும் (ICFI). இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் பாசிசவாத ஆட்சியின் பொறிவின் மத்தியில், அப்போது ஸ்ராலினிச கட்சிகள் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இருந்து தடுத்திருந்தபோது, கொண்டு வரப்பட்ட சமூகநல திட்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கான மக்ரோனின் உந்துதல், உலக சோசலிசப் புரட்சிக்கான ICFI போராட்டத்தின் சரியான தன்மையை ஊர்ஜிதப்படுத்துகிறது.

தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட "விவாதத்தின்" ஒட்டுமொத்த வடிவமைப்பும் —அதாவது, நல்லதொரு வசதியான ஓய்வூதியங்களுக்கும், மருத்துவக் காப்பீடு, கல்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய சமூக உரிமைகளுக்கும் அங்கே பணமில்லை என்பது— ஒரு பொய்யாகும். பணம் இருக்கிறது — ஆனால் அது ஒரு சிறிய பெருநிறுவன உயரடுக்கின் கரங்களில் ஏகபோகமாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்பே இதற்கான பதிலாகும்: சுரண்டி கொழுத்த பெருநிறுவன மற்றும் நிதியியில் உயரடுக்கின் செல்வவளங்களைப் பறிமுதல் செய்வதும், பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்குரியவையாக மாற்றுவதும், அவற்றை தனியார் இலாபங்களுக்காக அல்லாமல் சமூக தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ரீதியிலான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு (Parti de l’égalité socialiste - PES) முன்பிருந்த அமைப்பான பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) 1971 இல் முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS) உடன் "இடதுகளின் ஐக்கியம்" ("Union of the Left”) என்ற பேரில் கூட்டை பேணுவதற்காக ICFI மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டதற்கு அரை நூற்றாண்டுக்குப் பின்னர், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) 2016 இல் நிறுவப்பட்டது. தேசிய-அடிப்படையிலான முதலாளித்துவ அரசாங்கத்துக்கான பரந்த கட்சிகளைக் கட்டமைக்கும் ட்ரொட்ஸ்கிச விரோத முன்னோக்கிற்கு எதிராக, சர்வதேச சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காக பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு மார்க்சிச முன்னணிப் படையைக் கட்டமைக்க போராடும் போராட்டத்தை PES முன்நிறுத்துகிறது.

முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உண்மையான சோசலிச-சிந்தனை கொண்ட புத்திஜீவிகளை சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைக்க போராடுமாறும் நாங்கள் வலியறுத்துகிறோம்.

Loading