சிறை தண்டனை முடிவடைகின்ற போதிலும், பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜை காலவரையின்றி சிறையிலிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜிற்கு பிணை “மீறல்” குற்றச்சாட்டின் பேரில் விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனை உண்மையில் செப்டம்பர் 22 அன்று காலாவதியாகிறது என்றாலும், நேற்று காலை நடந்த வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற விசாரணையில், பிரிட்டிஷ் மாவட்ட நீதிபதி வனேசா பாரெய்ட்சர் அசான்ஜை தொடர்ந்து சிறையிலிடுவதற்கு தீர்ப்பளித்தார்.

ஜூலியன் அசான்ஜ்

அசான்ஜின் சட்ட ரீதியான மற்றும் ஜனநாயக ரீதியான உரிமைகள் மீது பிரிட்டிஷ் நீதித்துறை நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இந்த தீர்ப்பு ஒரு சமீபத்திய தாக்குதலாக உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், பதிப்பாசிரியரும் பத்திரிகையாளருமான அசான்ஜ் அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவது குறித்து அடுத்த பெப்ரவரியில் நீதிமன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் வரை அவர் தடுத்து வைக்கப்படுவார் என்பதுடன், அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அங்கு அவர் 175 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு முகம்கொடுப்பார்.

கையளிப்பு நடவடிக்கைகள் ஒரு நீடித்த சட்டப் போராக இருக்கும் என்பதால், பாரெய்ட்சரின் முடிவு வரவிருக்கும் ஆண்டுகளில் அசான்ஜை அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைத்து வைப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த நீதிமன்ற வழக்கு அசான்ஜிற்கான பிணை விசாரணையாக பெருநிறுவன ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது. விக்கிலீக்ஸின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று காலை பதிவிடப்பட்ட ஒரு அறிக்கை இந்த கூற்றுக்களை நிராகரித்து, “இன்று காலை நடத்தப்பட்ட விசாரணை ஒரு பிணை விசாரணை அல்ல, மாறாக இதுவொரு தொழில்நுட்ப விசாரணையாகும். என்றாலும், பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர் பிணை கோருவதற்கு முன்னரே மாஜிஸ்ட்ரேட் தாமாகவே பிணை வழங்க மறுத்துவிட்டார்” என்று விளக்கமளித்தது.

இது குறித்து விக்கிலீக்ஸ் இவ்வாறு தெரிவித்தது: “அசான்ஜ் காலவரையின்றி தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவிக்கிறார். அசான்ஜ் கேபிள்கேட்டை பிரசுரிக்க ஆரம்பித்து ஒரு வாரத்திற்குப் பின்னர், 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அதிகரித்தளவில் சுதந்திரத்தை இழந்துவிட்டிருக்கிறார்.” “கேபிள்கேட்” என்பது நூறாயிரக்கணக்கான அமெரிக்க இராஜதந்திர செய்திகள் பற்றிய விக்கிலீக்ஸின் 2010 வெளியீட்டை குறிக்கிறது, இது, அமெரிக்க அரசாங்கமும் மற்றும் உலகம் முழுவதிலுமான அதன் கூட்டாளிகளும் தீட்டிய கேவலமான சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியது.

அசான்ஜ் பற்றி குறிப்பிடுகையில், பாரெய்ட்சர் இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது: “உங்களது சிறை தண்டனை முடிவுக்கு வரவிருப்பதால், நீங்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். அது நிகழும் போது, ஒரு கைதி என்பதிலிருந்து ஒரு கையளிக்கப்படும் நபராக நீங்கள் மீண்டும் காவலில் வைக்கப்படும் நிலை மாற்றமடையும்.”

அவர் மேலும், “உங்களை பிணையில் எடுக்க விண்ணப்பிக்க உங்களது வழக்கறிஞருக்கு ஒரு வாய்ப்பை நான் வழங்கியுள்ளேன் என்றாலும் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். இந்த நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் தப்பித்து வந்த வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் அநேகமாக வியப்பேதுமில்லை” என்றும் கூறினார். இருப்பினும், அசான்ஜின் வழக்கறிஞர்களின் எந்தவொரு பிணை விண்ணப்பத்தையும் நீதிபதி முன்கூட்டியே நிராகரித்ததாக குற்றம்சாட்டிய விக்கிலீக்ஸின் அறிக்கைக்கு இந்தக் கூற்று முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

இந்நிலையில் பாரெய்ட்சர், “எனது பார்வையில், நான் உங்களை விடுவித்தால், நீங்கள் மீண்டும் மாயமாகி விடுவீர்கள் என்று நம்புவதற்கு எனக்கு கணிசமான அடித்தளம் உள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்த நிர்வாக விசாரணை அக்டோபர் 11 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 21 இல் வழக்கு மேலாண்மை விசாரணை நடைபெறும்.

2012 இல் அசான்ஜ் சட்டவிரோதமாக “தலைமறைவானார்” என்ற மோசடி கூற்றின் அடிப்படையில் பாரெய்ட்சரின் தீர்ப்பு இருந்தது. உண்மையில், சர்வதேச சட்டத்தின் கீழ், ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரும் தனது உரிமையை அசான்ஜ் பாதுகாத்தார். அதாவது, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்கள் குறித்த “கேள்விகளுக்கு பதிலளிக்க” அவர் சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவார் என்று பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பின்னரே அவர் அவ்வாறு செய்தார்.

“பூர்வாங்க விசாரணை”யைத் தொடர நாடுகடத்தப்படுவது அவசியமா, அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு இலண்டனிலிருந்து பதிலளிக்க அசான்ஜ் பலமுறை கோரியதை சுவீடன் வழக்கறிஞர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிக்க பிரிட்டிஷ் மற்றும் சுவீடன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இறுதியாக டிசம்பர் 2016 இல் அசான்ஜை வழக்கறிஞர்கள் விசாரணை செய்தனர், அதன் பின்னர் ஏப்ரல் 2017 இல் அவர்களது மோசடியான “விசாரணையை” அவர்கள் கைவிட்டனர்.

சுவீடன் அதிகாரிகள், அசான்ஜ் அவர்களது காவலில் இருந்திருந்தால் அமெரிக்காவிற்கு அவரை கையளிக்கமாட்டோம் என உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்டது தான் அசான்ஜிற்கு பிரச்சினையாக இருந்தது.

அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட அமெரிக்க போலிநாடக விசாரணையில் இருந்து அசான்ஜை பாதுகாக்க தஞ்சம் கோருவது அவசியமாக இருந்தது என்ற உண்மை, ட்ரம்ப் நிர்வாகம் அவருக்கு எதிராக 17 உளவுபார்ப்பு குற்றச்சாட்டுக்களை இந்த ஆண்டு ஏப்ரலில் கட்டவிழ்த்துவிட்ட போது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டது. உளவுபார்ப்பு குற்றச்சாட்டுக்களுக்கும், மேலும் அதைவிட குறைந்த ஒரு குற்றத்திற்கும் அசான்ஜூக்கு தண்டனை வழங்கப்படுமானால், 175 ஆண்டுகள் வரையிலான ஆயுள் தண்டனைக்கு அவர் முகம்கொடுப்பார்.

ஏப்ரல் 11 அன்று, ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்திலிருந்து பிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் சட்டவிரோதமாக வெளியே இழுத்து வரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில், அரசியல் தஞ்சம் கோரி அவர் விண்ணப்பத்ததன் விளைவாக, பிணை மீறலில் ஈடுபட்டதாக அசான்ஜ் குற்றவாளியாக்கப்பட்டார்.

விசாரணைக்கு தலைமை தாங்கிய பிரிட்டிஷ் நீதிபதி, அசான்ஜ் ஆதரவாளர்கள் செலுத்திய பிணை அபராதங்களை பறிமுதல் செய்தார் என்ற உண்மையை புறக்கணித்தார்; சிறிய தூதரக கட்டிடத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தடுப்புக்காவலில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளை அவர் கழித்துவிட்டிருந்தார்; அரசியல் தஞ்சம் கோருவதற்கான அவரது உரிமை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அசான்ஜூக்கு 50 வாரங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ், பிணை மீறலுக்கான அதிகபட்ச சிறை தண்டனை 52 வாரங்கள் ஆகும். எவ்வாறாயினும், அத்தகைய குற்றத்திற்கு தண்டனை பெற்றவர்கள், தண்டனைக்குரிய காலத்தின் பாதிக்குப் பின்னர் விடுதலையாவதற்கு தகுதியுடையவர்களாவர்.

பாரெய்ட்சர் அசான்ஜை விடுவிக்க மறுத்தமை, அவரது உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் பற்றிய எச்சரிக்கைகளை பிரிட்டிஷ் ஸ்தாபகம் பழிவாங்கும் நோக்கில் புறக்கணித்ததை நிரூபிக்கிறது.

ஜோன் பில்ஜெர் மற்றும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் சகோதரர் கேப்ரியேல் பார்பர்-ஷிப்டன் ஆகியோர் உட்பட அசான்ஜை சென்று பார்த்த சமீபத்திய பார்வையாளர்கள், அவர் கனிசமானளவு உடல் எடை இழப்பிற்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்தனர். கடந்த மாதம் அசான்ஜை சென்று பார்த்த பின்னர், தனது சகோதரனை அவர் மீண்டும் “ஒருபோதும் பார்க்க முடியாதோ” என்று அஞ்சியதாக பார்பர்-ஷிப்டன் பகிரங்கமாக எச்சரித்தார்.

நீடித்த “உளவியல் சித்திரவதை”யினால் அசான்ஜ் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த ஆண்டு முற்பகுதியில் கண்டறிந்த சித்திரவதை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர், அவரை அதிகபட்ச பாதுகாப்புள்ள சிறையில் அடைத்து வைத்ததற்கு பிரிட்டிஷ் அதிகாரிகளை பலமுறை கண்டித்தார்.

மே மாதம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மெல்ஸர் எழுதிய ஒரு கடிதத்தில், அசான்ஜ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலைமைகள், “படிப்படியாக கடுமையான உளவியல் துன்பங்களுக்கு அவர் உள்ளாகியிருப்பது, மற்றும் அவருக்கு முன்பிருந்த அதிர்ச்சி தொடர்ந்து அதிகரிப்பது குறித்த வெளிப்பாடுளை” அவரிடம் ஏற்படுத்தியுள்ளது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஐந்து மாதங்களாக, அசான்ஜ் உண்மையான தனிமைச் சிறையில் அடிக்கடி அடைக்கப்பட்டுள்ளார். பார்வையாளர்களை சந்திப்பதற்கான அவரது உரிமை பெரிதும் தடை செய்யப்பட்டது, அத்துடன் கணினி, சிறை நூலகம் மற்றும் அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவதற்கு எதிராக அவரை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான சட்ட ஆவணங்களையும் அவர் அணுகுவதற்கான அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.

நேற்றைய தீர்ப்பு, அசான்ஜின் ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்குவதற்கான, மேலும் அவர் நாடுகடத்தப்படுவதை எளிதாக்குவதற்கான பிரிட்டிஷ் சட்ட மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் தீர்மானத்தை நிரூபிக்கிறது. விக்கிலீக்ஸின் சட்டபூர்வமான வெளியீட்டு நடவடிக்கைகள் குறித்து அசான்ஜ் மீது தொடரப்பட்ட அமெரிக்க வழக்கு, பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் உட்பட, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பெரும் தாக்குதலுக்கு பரிந்துரை செய்யும்.

இந்த கடுமையான தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அசான்ஜிற்கு இருக்கும் பெரும் அனுதாபத்தை, அவரது உடனடி சுதந்திரத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்க போராட்டமாக மாற்றுவதற்கான அவசர தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆஸ்திரேலியாவில், ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் மற்றும் ஊடகவியலாளராக அசான்ஜின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு வலியுறுத்த கூட்டாட்சி லிபரல்-தேசிய அரசாங்கத்திற்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு அசான்ஜ் நாடுகடத்தப்படமாட்டார் என்ற உத்தரவாதத்துடன், பெல்மார்ஷ் சிறையிலிருந்து அவர் உடனடியாக விடுதலையாவதும், ஆஸ்திரேலியாவிற்கு அவர் திரும்பும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் விரும்பினால், ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் அனைத்து இராஜதந்திர பலத்தையும், சட்ட சாதுர்யத்தையும் கொண்டு தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் எழுப்பப்பட வேண்டும்.

Loading