இலங்கை சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: இந்திய அரசாங்கத்தின் கொடூரமான காஷ்மீர் அடைப்பில் பணையத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காஷ்மீரில் இந்திய மோடி அரசாங்கத்தின் கொடூரமான ஒடுக்குமுறையின் பாரதூரமான அரசியல் தாக்கங்கள் குறித்து கலந்துரையாட சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் அக்டோபர் 11 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீர், ஆகஸ்ட் 5 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட பாதுகாப்பு அடைப்பு மற்றும் தகவல் தொடர்பு இருட்டடிப்புக்கு உட்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. புது டில்லியால் மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் அரை மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் இன்றி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் அரை தன்னாட்சி அந்தஸ்தை ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான முறையில் இரத்து செய்தமைக்கும், மேலும் அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து தரமிறக்கப்பட்டதற்கும் எதிரான எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதற்கு மோடி அரசாங்கத்தால் இந்த கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு அவற்றை தனது சொந்த நேரடி ஆட்சியின் கீழ் வைத்துள்ளது.

காஷ்மீரில் மோடியின் அரசாங்கத்தின் நகர்வுகள் அதன் போட்டியாளர்களான பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக பிராந்தியத்தில் இந்தியாவின் புவி-அரசியல் நிலையை உயர்த்துவதையும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இந்து பேரினவாதத்தைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. காஷ்மீரில் இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் முன்னெப்போதும் இடம்பெற்றிராதவை. இருப்பினும் அவற்றை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுமாக பிரதான கட்சிகள், பிரதான ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்களுமாக முழு இந்திய அரசியல் ஸ்தாபனமும் ஆதரிக்கின்றன.

மிக முக்கியமாக, அனைத்து மேற்கத்திய சக்திகளும், எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்கா, காஷ்மீரில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை ஆதரித்தன. அவை அனைத்தும் இந்தியாவை சீனாவுக்கு எதிரான ஒரு முக்கிய இராணுவ-மூலோபாய பங்காளியாக கருதுவதோடு, தங்கள் சொந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு எதிராக இதேபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை தயார் செய்கின்றன. காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

கொழும்பு கூட்டத்தில், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் வரலாற்று வேர்களைப் பற்றி, குறிப்பாக, 1947 இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவை ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகவும், இந்து மேலாதிக்க இந்தியாவாகவும் இனவாத முறையில் பிரித்தமை பற்றி கலந்துரையாடப்படும். பிரிவினையை தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பிரிக்கப்பட்டதை அடுத்து, இரு அரசுகளும் அன்றிலிருந்து காஷ்மீர் முழுவதிலும் அதிகாரத்துக்கு உரிமை கோரி வருகின்றன. காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புவி-அரசியல் பதட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன் இரண்டு தெற்காசிய அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான போரின் அபாயத்தை முன்கொணர்ந்துள்ளது.

இந்த அபிவிருத்திகள், 1947 இனவாத பிரிவினையின் முற்றிலும் பிற்போக்குத் தன்மையையும், தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கும், வரலாற்று ரீதியாக பொருத்தமற்ற அரச அமைப்பு முறையை தூக்கியெறிவதற்கும் பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்திற்காக போராட வேண்டிய அவசரமான அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

காஷ்மீரில் மோடியின் கொடூரமான பாய்ச்சலால் வெளிக்கொணரப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான அரசியல் முன்னோக்கு குறித்த கொழும்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவும், இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்கவும், தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS இன் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Loading