இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் இந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 200,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஊதிய உயர்வுடன் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும், மேலதிக வேலையுடன் ஆசிரியர்களுக்கு சுமைகளை திணிக்க வேண்டாம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும், பெற்றோரிடமிருந்து பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், 2016 இற்கு முந்தைய ஓய்வூதியத்தை மீளமைக்க வேண்டும் மற்றும் உயர் கல்வி பதவிகளுக்கு அரசாங்க கைக்கூலிகளை நியமிக்க வேண்டாம் ஆகியவை ஆசிரியர்களின் முற்றிலும் நியாயமான கோரிக்கைகளில் அடங்கும்.

அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்த தொழிற்சங்கங்கள் முயற்சித்த போதிலும், மார்ச் 13 மற்றும் ஜூலை 26-27 வேலைநிறுத்தங்களில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்ற நிலையில், இந்த வாரம் நடக்க இருப்பது இந்த ஆண்டின் மூன்றாவது வெளிநடப்பு ஆகும். ஆசிரியர்களின் போர்க்குணமானது அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமான அவர்களின் கோபத்தின் அறிகுறியாகும்.

ஆசிரியர்கள் உயரும் வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்வதோடு தற்போது அவர்கள் பெறும் தொகையின் அடிப்படையில் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க போராடி வருகின்றனர். ஒரு ஆசிரியரின் அடிப்படை ஆரம்ப சம்பளம் 28,000 ரூபாய் (138 அமெரிக்க டாலர்) ஆகும். மேலதிக கொடுப்பனவுகளை சேர்த்தும் மாதத்திற்கு 35,000 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை. 20 ஆண்டு அனுபவம் வாய்ந்த தரம் 1 ஆசிரியரின் மொத்த சம்பளம் வெறும் 60,000 ரூபாய் ஆகும்.

இந்த அற்ப சம்பளங்களின் உண்மையான மதிப்பு பல ஆண்டுகளாக அரிக்கப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், ஆசிரியர்கள் உட்பட அரசாங்கத் துறையில் உண்மையான ஊதியங்கள் முறையே 7.2 மற்றும் 2 சதவீதம் குறைந்துள்ளன.

ஆசிரியர்கள் நெரிசலான வகுப்பறைகளை சமாளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு செயல்திறன் அறிக்கைகளைத் தயாரிப்பது உட்பட பல மணிநேர எழுத்து வேலைகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை வழங்க மறுத்ததால் கோபமடைந்துள்ள சங்க உறுப்பினர்களின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க கூட்டணி (TUA) இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்களது சமதரப்பினரைப் போலவே அமெரிக்கா, மெக்சிக்கோ, ஜேர்மனி, பிரான்ஸ், போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரேசில், மொரக்கோ, சிம்பாப்வே, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊதிய வெட்டுக்கள், தனியார்மயமாக்கல் மற்றும் வேலைநீக்கம் போன்ற தாக்குதல்களுக்கு எதிராக கடந்த ஆண்டு வேலைநிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை நடவடிக்கை அலைகளின் ஒரு பகுதியாக இருப்பதோடு, எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளனர் என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

இலங்கை ஆசிரியர்கள் நாளை நடவடிக்கையில் இறங்கும் அதேநேரம், அதிக ஊதியம் கோரி 17,000 கல்விசாரா பல்கலைக்கழக தொழிலாளர்கள் மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தம் மூன்றாவது வாரத்தை எட்டுகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் அதிக ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பாடசாலைகளை கோரி நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் அடிக்கடி நிகழ்கின்ற நிலையில், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் முறையான வசதிகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் பலமுறை போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக, அரச மருத்துவர்கள், இரயில் ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர் அல்லது போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் பொருளாதார வீழ்ச்சியையும் கடுமையான கடன் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ள சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்தும், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானவை ஆகும். நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இந்த தாக்குதல்கள் தொடரும்.

இலங்கையின் அரசியல் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும், 2020 இல், நாட்டின் பாதீட்டுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைக்க உறுதிபூண்டுள்ளன. அதாவது, 2015 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பற்றாக்குறையை பாதிக்கும் குறைவாக வெட்டுவதாகும். இந்த தாக்குதலின் முக்கிய இலக்காக கல்வி மற்றும் சுகாதாரத் துறையும் உள்ள அதேவேளை, அரசாங்கம் இந்த துறைகளை தனியார்மயமாக்குவதை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டீ.ஏ.யூ. ஆனது மக்கள் விடுதலை முன்னணி சார்ந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்களை உள்ளடக்கியதாகும்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, செப்டம்பர் 15 நடத்திய ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில், மார்ச் 13 வேலை நிறுத்தத்தை தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், கடந்த ஐந்து மாத காலத்தில் எதுவும் நடக்கவில்லை, என்றார். ஜெயசிங்கவின் புலம்பல்கள் பல தசாப்தங்களாக ஆசிரியர் சங்கங்களால் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்தவை ஆகும்.

1997 இல் உருவாக்கப்பட்ட சம்பள முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் கூறியிருந்தாலும், ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று கடந்த 22 ஆண்டுகளாக தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வலியுறுத்தி வந்துள்ளன.

இது, ஆசிரியர் சங்கங்களின் இயலாமை மற்றும் திவால்நிலை ஆகும். ஏனைய ஒவ்வொரு தொழிற்சங்கமும் எதிரொலிக்கும் முன்னோக்கு இதுவாகவே இருப்பதோடு, இதுவே தாக்குதல்கள் இன்னமும் அதிகரிப்பதற்கு வழி வகுத்துள்ளது. இருப்பினும் "ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இருக்கும் சக்தியைக் காண்பிப்போம்" என டீ.யு.ஏ. இன்னும் வஞ்சத்தனமாக அறிவிக்கிறது,

இந்த நிகழ்ச்சி நிரலை ஆசிரியர்கள் தீர்க்கமாக நிராகரிக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தினதும் மற்றும் எந்தவொரு எதிர்கால நிர்வாகத்தினதும் கொள்கை, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை சுமத்தும் அதேவேளை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதும், அடக்குமுறை இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கூட்டுவதும், வலதுசாரி பாசிச அமைப்புகளை வளர்த்து விடுவதுமே ஆகும். ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதற்கான பொலிஸ்-அரச வழிமுறைகளை எவ்வாறு நிறுவுவது என்பதைப் பற்றியே கணக்கிட்டு வருகின்றன.

இலங்கையில் ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுவெடிப்புக்கு முன்னதாகவே, அரசியல் உயரடுக்கினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அது உண்மையில் நடக்கும் வரை அலட்சியத்துடன் இருந்தனர். பின்னர் அவர்கள் அந்த தாக்குதல்களை, கடுமையான அவசரகால சட்டங்களை கட்டவிழ்த்துவிடவும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் பற்றிக்கொண்டனர். ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, மே 9-10 இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தன. ஜனாதிபதி சிறிசேன, அவசரகால சட்டங்களை இடைநிறுத்தியுள்ள நிலையில், அவர் இராணுவ நிலை நிறுத்தலை பேணுவதற்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இலங்கையின் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுடன் நேரடியாக பிணைந்துள்ளதோடு தற்போதுள்ள ஒழுங்கோடு தொழிலாளர்களை கட்டிப்போட்டு வைப்பதற்கு செயல்படுகின்றன. அவை அனைத்தும் 2015 இல் சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்துவதற்கு ஆதரவளித்தனர்.

* போராட்டத்திற்கு வரும் மற்ற தொழிலாளர்களைப் போலவே ஆசிரியர்களும் தொழிற்சங்கங்களை நம்பி இருக்க முடியாது. ஒழுக்கமான ஊதியங்கள், சிறந்த பாடசாலைகள் மற்றும் வேலை நிலைமைகளுக்காகவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் போராடுவதற்கு, அவர்கள் தங்கள் சுயாதீனமான வர்க்க சக்தியைத் திரட்டுவதோடு, தொழிலாள வர்க்கத்தின் ஏனைய ஒவ்வொரு பிரிவினருடனும் தங்கள் நடவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும்.

* ஆசிரியர்கள், தங்கள் பாடசாலைகளில் தொழிற்சங்கங்களிலிருந்து பிரிந்து, சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதோடு பெற்றோர்களையும் மாணவர்களையும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இத்தகைய குழுக்கள், கொழும்பின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் ஏனைய அனைத்து தொழிலாளர்களுடனும் ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்கும், சர்வதேச அளவில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கூட்டணிகளை உருவாக்குவதற்கும் அவசியமான ஒரு அடியெடுப்பாகும்.

கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை சமூகத் தேவைகள் மீது பெருகிவரும் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயம் அவசியமாகும். ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான மூல காரணம், இந்த இலாப நோக்கு அமைப்பு முறையே ஆகும்.

தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் மகத்தான செல்வம் மக்களின் உடல் மற்றும் கலாச்சார மட்டத்தை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் இலவசமான தரமான கல்வியை உறுதி செய்வதற்கும், மனிதகுலத்தை வறுமை, சுரண்டல் மற்றும் போரிலிருந்து விடுவிப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்ய, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டு, பொருளாதாரத்தை தனியார் இலாபத்துக்காக அன்றி சமூக தேவையின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும்.

இதன் அர்த்தம் இந்திய துணைக் கண்டத்தில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காகப் போராடுவதாகும். இந்த போராட்டத்தில் எங்களுடன் சேர ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading