பிரெஞ்சு பொலிஸ் ஜோன்-லூக் மெலோன்சோனின் தலைமையகத்திற்கு வெளியே போராட்டங்கள் தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னொருபோதும் இல்லாத ஒரு முடிவாக, நவ-பாசிசவாத கூட்டணி பொலிஸ் சங்கம் (Alliance Police) இன்று ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (Unsubmissive France - LFI) தலைமையகங்களுக்கு வெளியே போராட்டங்கள் நடத்துகிறது. “தேவைக்கேற்ப ஒதுக்கப்படும் கடமைகளை" கொண்ட ஓர் அரசியல்சாரா அமைப்பு என்ற அதிகாரபூர்வ அரசு மரபை விட்டு, பொலிஸ், 2017 தேர்தல்களில் பிரதான பிரெஞ்சு நகரங்களின் தொழிலாள வர்க்க பகுதிகளில் முன்னணியில் நின்ற அந்த ஜனாதிபதி வேட்பாளரை இலக்கு வைத்து வருகிறது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தின் பக்கபலத்துடன் நடத்தப்படும் இந்த போராட்டங்கள், பிரான்சில் ஒரு பொலிஸ் அரசு உருவாவதில் ஓர் அபாயகரமான புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக செவ்வாயன்று நடந்த போராட்டங்களின் போது பொலிஸை மெலோன்சோன் "காட்டுமிராண்டித்தனம்" என்று விமர்சித்ததே இந்த போராட்டத்திற்கான உடனடி போலிக்காரணமாக உள்ளது. கடந்தாண்டு LFI தலைமையகங்களில் நடந்த பொலிஸ் சோதனைகளை சவால் விடுத்ததற்காக, அரசு அதிகாரிகளைத் தாக்கிய மற்றும் கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றங்களில் முகங்கொடுத்து வரும் மெலோன்சோன், போராட்டக்காரர்களிடம் கவனமாக இருக்குமாறு எச்சரித்தார். அவர் கூறினார், “அவர்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள், அவர்கள் இனிமேல் மாறப் போவதில்லை! சனிக்கிழமை ['மஞ்சள் சீருடை'] ஆர்ப்பாட்டத்தில் நான் இருந்திருந்தால், அவர்கள் என்னை கொன்றிருப்பார்கள், உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் ஒரு சாக்குபோக்கு காரணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.

பொலிஸ் குறித்து மெலோன்சோன் வெளியிட்ட உணர்ச்சிகரமான கருத்து பரவலாக உணரப்படுகிறது. பிரான்சில், பொலிஸ் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களை தாக்கி உள்ளனர், ஆயிரக் கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர், உணர்விழக்க வைக்கும் கையெறி குண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டாக்களைக் கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்தி உள்ளனர், நாந்தேரில் ஒரு நள்ளிரவு இசை நிகழ்ச்சியின் போது ஸ்டீவ் மையா கனிஸோவை லுவார் (Loire) நதிக்குள் தள்ளி கொன்றுள்ளனர். பொலிஸ் நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். ஆனால் ஒரு முக்கிய அரசியல்வாதி இந்த கண்ணோட்டத்தை வெளியிட்டமை, அதிகரித்து வரும் சமூக கோபம் மற்றும் வர்க்க போராட்டத்தால் மிரண்டு போயிருக்கும் அரசிடம் இருந்து உடனடியாக ஒரு விஷமத்தனமான விடையிறுப்பைத் தூண்டியது.

உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்டனேர் ட்வீட்டரில் மெலோன்சோனுக்கு எதிராக பொலிஸ் கூட்டணி சங்கத்தின் போராட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டினார். மெலோன்சோனின் கருத்துக்கள் "பிரெஞ்சு மக்களைப் பாதுகாப்பதற்காக தங்களின் உயிரை ஆபத்திற்குட்படுத்தி, ஒவ்வொரு நாளும், தயாராக இருக்கும் நமது பாதுகாப்பு படைகள் மீதான முன்னொருபோதும் இல்லாத ஓர் அவமதிப்பாகும். ஜோன்-லூக் மெலோன்சோன் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளார், இப்போது அவர் அவர்களிடம் மன்னிப்புக் கோர கடமைப்பட்டுள்ளார்.”

உலக சோசலிச வலைத் தளமும் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste – PES), கிரீஸின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான சிரிசாவின் (“தீவிர இடது கூட்டணி") பிரெஞ்சு இணை அமைப்பாக விளங்கும் LFI இன் பிரெஞ்சு தேசியவாத அரசியலுடனும் மற்றும் மெலோன்சோனுடனும் அவற்றின் கோட்பாட்டுரீதியிலான அரசியல் முரண்பாடுகளை மிகவும் விரிவாக ஆவணப்படுத்தி உள்ளது. ஆனால் மக்ரோன் அரசாங்கமும் பொலிஸ் எந்திரமும் அவர் மீது தொடுத்துள்ள இந்த விஷமத்தனமான தாக்குதலுக்கு எதிராக மெலோன்சோன் பாதுகாக்கப்பட வேண்டும்.

பணயத்தில் இருப்பது மெலோன்சோனின் சுதந்திரம் மட்டுமல்ல, மாறாக பொலிஸ் ஒடுக்குமுறைகளுக்கும், மிகப் பரவலாக சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவ-பொலிஸ் ஆட்சிக்கும் அதன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினது சுதந்திரம் பணயத்தில் உள்ளது.

ட்வீட்டர் வழியாக மெலோன்சோன் மீதான காஸ்ட்டனேரின் தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சின் பொலிஸ் சங்க அதிகாரத்துவத்தின் ஒட்டுமொத்த எந்திரமும் மெலோன்சோனை இலக்கு வைக்க இயக்கமூட்டப்பட்டது. தொழிலாளர் சக்தி (FO) பொலிஸ் சங்கம், அவர் கருத்துக்கள் "ஏற்கத் தக்கவை அல்ல" என்று குறிப்பிட்டதுடன், “இந்த பாத்திரத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டியதற்காக ஒரு சட்டவழக்கு" மெலோன்சோன் மீது கொண்டு வரப்பட வேண்டுமென கோரியது, அதேவேளையில் சுதந்திர குழுக்களின் தேசிய சங்கம் (UNSA) எனும் பொலிஸ் சங்கம், “அதிர்ச்சியூட்டுவதாகவும்" "அவமதித்துவிட்டதாகவும்" மெலோன்சோனைக் கண்டித்தது.

கடந்தாண்டு LFI தலைமையகங்களில் நடந்த பொலிஸ் சோதனையின் போது நீதித்துறை அதிகாரிகளைப் பலவந்தமாக பிடித்துத் தள்ளியதற்காக அவர் மீதான வழக்கின் தீர்ப்புக்குக் காத்திருக்கும் மெலோன்சோனுக்கு எதிரான ஒரு நீண்டகால நடவடிக்கைகளில் இந்த பிரச்சாரம் இறுதி விளைபொருளாக உள்ளது. அந்த சோதனை நடவடிக்கையின் போது அவர்களின் தலைமையகங்களில் இருந்து என்ன தகவல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை கண்காணிப்பதில் இருந்து LFI நிர்வாகிகளைப் பொலிஸ் விலக்கி வைக்க முயன்றிருந்த நிலையில், LFI மீதான சோதனை சட்டவிரோதமானது என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டது. ஆனால், மெலோன்சோன் கோபமடைந்து அதிகாரிகளைத் தள்ளியதும், அவர் 10 ஆண்டுகால சிறை தண்டனை கொண்ட கலகம் செய்த குற்றச்சாட்டுக்களை அவர் முகங்கொடுப்பதைக் காண்கிறார்.

இது ஐரோப்பா எங்கிலும் ஒரு சர்வதேச போக்கின் பாகமாக உள்ளது, இதில் பாசிசவாத பொலிஸ் படைகள் மக்கள் செல்வாக்கிழந்த ஐரோப்பிய அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்து, வன்முறையாகவும் ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்கின்றன. பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மீதான ஒடுக்குமுறையும் மெலோன்சோன் இலக்கில் வைக்கப்பட்டிருப்பதும் பொலிஸ் கரங்களில் அசாதாரணமானரீதியில் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பதை நிரூபிக்கிறது. அவர்கள் மக்களை வேவுபார்த்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்ற போதினும், பொலிஸிற்கு எதிராக எந்தவொரு தற்காப்பு முயற்சியும் பாரியளவில் சட்ட அபராத ஆபத்தைக் கொண்டிருக்கும், ஒரு சட்டபூர்வ கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் 1, 2017 இல் கட்டலான் சுதந்திரம் மீதான வெகுஜன கருத்து வாக்கெடுப்பின் போது ஊர்க்காவல் படை (Guardia Civil) அமைதியான போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குமுறை நடத்தியதுடன், அங்கே கட்டலான் போராட்டங்கள் மீது ஒரு புதுப்பிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற ஸ்பெயின் உள்ளடங்கலாக, மற்றும் ஜேர்மனியிலும், ஐரோப்பா எங்கிலும் இதேபோன்ற கொள்கைகள் மேலெழுந்து வருகின்றன. ஜேர்மனியில், பல நூறு அரசியல்வாதிகள் மீது ஒரு கொலைப் பட்டியலை தயாரித்திருப்பது உட்பட பாதுகாப்பு படைகளில் அதிவலது செயல்பாட்டாளர்களின் பல்வேறு வலையமைப்புகளை ஒட்டுமொத்த அரசு எந்திரமும் பாதுகாத்து வருகிறது.

நேற்று மெலோன்சோன், பாசிசவாத-சார்பு பொலிஸ் பிரிவுகள் நடத்தும் எந்தவொரு முடிவான தாக்குதலுக்கு எதிராக LFI பணியாளர்களையும் தலைமையகங்களையும் பாதுகாக்க வருமாறு LFI ஆதரவாளர்களுக்கு ட்வீட்டரில் முறையிட்டார்: “நாளை காலை 11 மணியளவில் LFI தலைமையங்களுக்கு எதிராக ஒரு பொலிஸ் சங்கம் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோத போராட்டம். நான் பிரெஞ்சு பொலிஸ் அதிகாரிகளிடம் (gendarmerie) பாதுகாப்பு கோரியுள்ளேன். மக்களில் இருந்து வரும் நேரடியான பாதுகாப்பே தீர்க்கமானதென நான் நம்புகிறேன்,” என்றார்.

ஆனால் பொலிஸ் கூட்டணி சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் அணிவகுத்த நிலையில், அவருக்கு எதிரான பிரச்சாரத்தை முகங்கொடுத்து, இன்று LFI தலைமையங்களை வெறுச்சோட விடுவதென நேற்று மதியம் முடிவெடுத்தார். மெலோன்சோன், நேற்று மாலை அவரின் பேஸ்புக் பக்கத்தில், எந்தவொரு எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு எதிராக அவர் ஆதரவாளர்களை எச்சரித்து, அவரது நிலைப்பாட்டை மாற்றி இருந்தார்.

மெலோன்சோன் எழுதினார், பொலிஸ் "வன்முறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த உடனடியாக அதை சாதகமாக்கிக் கொள்ளும். ஆகவே நமது தலைமையகங்களில் ஆட்கள் இல்லாதவாறு அங்கிருந்து வெளியேறுவதே தோழர்களின் முடிவாக உள்ளது. அதாவது 'நாங்கள் அங்கே இல்லை,' என்று கூறுவதாகும், நான் முறையாக உங்களிடம் கோருவது இதுதான்: தயவுசெய்து இந்த பகுதி வழியாக செல்வதைத் தவிர்த்திடுங்கள். அவர்கள் உங்களை ஆத்திரமூட்டி, சாத்தியமில்லாத நிலைமைகளை உருவாக்க முயல்வார்கள்.”

பாசிசவாத பொலிஸ் வன்முறை அச்சுறுத்தல்களை முகங்கொடுத்து பின்வாங்குவதற்கான அவசியம் மக்ரோனால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். நிதியியல் பிரபுத்துவத்தால் அரசு பாதுகாப்பு படைகளில் பலம் வாய்ந்த பாசிசவாத-எதேச்சதிகார சக்திகள் அணித்திரட்டப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் சமூக கோபமே அவர்களின் இறுதி இலக்காகும். தொழிலாள வர்க்கத்தின் பரந்த பலத்தை அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே இந்த சக்திகளை எதிர்த்து போராட முடியும் — இந்த பணிக்கு, LFI இல் இருந்து வித்தியாசமான ஒரு அமைப்பாக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச அரசியல் முன்னணிப்படையைக் கட்டமைக்க வேண்டியுள்ளது.

இவரின் கட்சி ஸ்ராலினிச அமைப்பான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்புடன் (CGT) தொடர்பில் உள்ள பொலிஸ் சங்க எந்திரத்தின் பெரும்பான்மையினரை உள்ளடக்கி உள்ள நிலையில், மெலோன்சோன் அவரின் ஜனரஞ்சகவாத தேசியவாதத்தையும் மற்றும் சோசலிசமும் தொழிலாள வர்க்கமும் மரணித்து விட்டது என்ற வலியுறுத்தலையும் கொண்டு, பொலிஸ்-அரசு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து குறுக்காக வெட்டுகிறார். இந்த கேடு விளைவிக்கும் நடவடிக்கை, ஒவ்வொரு கட்டத்திலும் பொலிஸ் அரசு முன்னிறுத்தும் அபாயத்திற்கு எதிரான போராட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கான ஓர் அரசியல் போராட்டத்திற்கு எதிராக விதைக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இந்த கட்டத்தில் மெலோன்சோனுக்குக் கணிசமான வாக்காளர் ஆதரவு உள்ளது, மேலும் அவர் மீதான மக்ரோன் அரசாங்கத்தின் தாக்குதல் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளையும் இலக்கு வைத்த ஒரு தாக்குதலாகும். அவரைத் தாக்கி அரசாங்க அமைச்சர்களிடம் இருந்தும், தொலைக்காட்சி திரைகளிலும் மற்றும் பத்திரிகை தலையங்கங்களிலும் கட்டவிழ்த்துவிடப்படும் இந்த விஷமத்தனமான பொலிஸ் பிரச்சாரத்திற்கு எதிராக மெலோன்சோனை பாதுகாப்பதே வர்க்க நனவுள்ள தொழிலாளர்களின் விடையிறுப்பாக இருக்க வேண்டும்.

Loading