முன்னோக்கு

ஜூலியன் அசான்ஜின் உயிர் ஆபத்தில் உள்ளது!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சென்ற வாரம் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உடனான ஒரு நேர்காணலில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் தந்தை ஜோன் ஷிப்டன், இலண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அவரது மகன் சிறை வைக்கப்பட்டுள்ள நிலைமைகளின் விளைவாக அவர் “இறந்து விடக்கூடும்” என்று அஞ்சுவதாக தெரிவித்தார்.

ஷிப்டனின் அறிக்கை ஒரு மிகைப்படுத்தல் இல்லை. ஏனென்றால், பெல்மார்ஷ் சிறைக்கு அசான்ஜ் அனுப்பப்பட்டது முதல் அவரைச் சென்றுபார்க்க முடிந்தவர்களான அசான்ஜின் சகோதரர் கேப்ரியல் ஷிப்டன், ஊடகவியலாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜோன் பில்ஜெர், ஆடை வடிவமைப்பாளர் விவியென் வெஸ்டுவுட், திரைப்பட நடிகை பாமீலா ஆண்டர்சன் மற்றும் சித்திரவதை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர் ஆகியோர் அசான்ஜின் உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் பற்றி தங்களது கடுமையான கவலைகளை எழுப்பியிருந்தனர்.

ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் மற்றும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க போர்க்குற்றங்கள், உலகெங்கிலுமான அரசாங்கங்களின் இராஜதந்திர சூழ்ச்சிகள் மற்றும் ஊழல்கள், மற்றும் சிஐஏ உளவுபார்ப்பு மற்றும் கறுப்புப்படை நடவடிக்கைகள் ஆகியவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவர பொறுப்பாளியாக இருந்த ஒரு ஊடகவியலாளரும் மற்றும் பதிப்பாசியருமான ஜூலியன் அசான்ஜ் அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த சக்திகளின் மெதுவான கொலை முயற்சியின் இலக்காக இருக்கிறார் என்பதுதான் எடுக்கக்கூடிய இறுதி முடிவாக இருக்கும்.

பல ஆண்டுகளாக அசான்ஜின் மரணத்தை விரும்பும், மற்றும் உளவுபார்ப்பு குற்றச்சாட்டுக்கள் குறித்த ஒரு ஜோடிக்கப்பட்ட விசாரணைக்கு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு அவரை நாடுகடத்துவதற்கான முழு அரசியல் ரீதியான நடைமுறைக்கு திட்டமிடும் வாஷிங்டன், இலண்டன் மற்றும் கான்பெர்ரா ஆகியவற்றை குற்றம்சுமத்த போதிய அடிப்படைகள் உள்ளன.

அசான்ஜ் நாளொன்றுக்கு 21 முதல் 23 மணித்தியாலங்கள் அளவிற்கு தனிமைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். வெளிப்புறத் தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள், நூலகம் மேலும் அனைத்திற்கும் மேலாக பாதுகாவலர்களைத் தவிர்த்து பிற மனித தொடர்புகளை அவர் அணுக முடிவதில்லை. அவர் அவரது சிறைக்கூடத்தை விட்டு வெளியே வரும்போது சக கைதிகளுடன் பேசுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தனிமையில் கூட மிகக்குறைந்த நேரத்தை செலவிடுவதற்கே அவர் அனுமதிக்கப்படுகிறார். மாதத்திற்கு ஒரு மணிநேரம் அவகாசம் கொண்ட இரண்டு பார்வையாளர் சந்திப்புக்களுக்கு அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது, அதிலும் அவர்கள் சிறை அதிகாரிகள் மூலமாக ஆத்திரமூட்டும் தலையீட்டிற்கு உட்படுத்தப்பட்டவர்கள். அவருக்கு மிக நெருக்கமானவர்களின் கருத்துப் படி, கணிசமானளவு எடை இழப்பினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அவரது கொள்கைகளிலும் செயல்களிலும் உறுதியாக நிற்க அவர் தீர்மானித்திருந்தாலும், சிந்தனை குழப்பத்திற்கு அவர் ஆளாகியிருக்கும் சில அறிகுறிகளும் தென்படுகின்றன என்கின்றனர்.

உண்மையைக் கூறிய “குற்றத்திற்காக” தண்டிக்கப்பட்டு வரும் ஒரு மனிதர் இவ்வாறு துன்புறுத்தப்படுகிறார். அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அடக்குமுறை சக்தியை எதிர்த்தார் என்பதால், தனிப்பட்ட அவதூறு மற்றும் அரசு துன்புறுத்தல் ஆகியவற்றின் இடைவிடாத பிரச்சாரத்தை அவர் எதிர்கொள்கிறார்.

பெல்மார்ஷ் சிறையில் அவர் துன்புறுத்தப்படுவது, ஆங்கில பாசிசவாதி டாமி ராபின்சனின் தண்டனைக்கு முற்றிலும் மாறுபட்டது, ராபின்சன் தனது 19 வார கால காவல் தண்டனையில் 10 வாரங்களை மட்டுமே அனுபவித்தார் என்ற நிலையில், அவருக்கு தாராளமாக வழங்கப்பட்ட சுதந்திரம், பார்வையாளர்களை சந்திக்கும் அனுமதி மற்றும் அவரை தனிப்பட்ட முறையில் கவனித்தது ஆகிய அனைத்திற்கும் சிறைச்சாலை ஆளுநருக்கு அவர் வெளிப்படையாக நன்றி தெரிவித்தவராவார்.

ஈக்வடோரிய அரசாங்கம் இலண்டனில் உள்ள அதன் தூதரகத்தில் அசான்ஜிற்கு வழங்கி வந்த அரசியல் அடைக்கலத்தை மீளப் பெற்றுக் கொண்ட பின்னர், ஏப்ரல் 11 அன்று அதிகூடிய பாதுகாப்புள்ள சிறையில் அசான்ஜ் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டார். வெறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மட்டுமல்லாமல் இட்டுக்கட்டப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நீதித்துறை மேற்கொண்ட தொடர்ச்சியான வழக்கு நடைமுறைகள் மூலம் சுவீடனுக்கு அவரை நாடுகடத்துவதற்கான கைது ஆணையை பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் வழங்கி வந்த நிலையில் தான் இந்த சிறிய கட்டிடத்தில் ஜூன் 17, 2012 அன்று அவர் தஞ்சம் புகுந்தார்.

அசான்ஜை அமெரிக்காவிடம் கையளிப்பது மட்டும் தான் சுவீடன் அவரை பின்தொடர்ந்ததன் பின்னணியில் உள்ள ஒரே நோக்கமாக இருந்தது. 2010 இறுதியில் ஒபாமா நிர்வாகம் வேர்ஜினியாவில் நியமித்த ஒரு மாபெரும் இரகசிய நடுவர் மன்றம், அமெரிக்க இராணுவ மற்றும் இராஜதந்திர இரகசியங்களை செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங் கசியவிட்டதை விக்கிலீக்ஸ் பிரசுரித்தது குறித்து அசான்ஜை கடும் குற்றம்சாட்டியது பற்றி அனைவரும் அறிந்ததே.

இங்கிலாந்தின் பிடியில் சிக்கி அவர் “நியாயமற்ற தடுப்புக்காவலில்” வைக்கப்பட்டு “சித்திரவதை” செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் பொதுவாக மதிப்பிட்டதன் படி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அசான்ஜ் அதை சகித்துக் கொண்டிருந்தார். அசான்ஜ், அச்சிறிய தூதரகத்தை விட்டு வெளியேறி சூரிய ஒளியை அனுபவிப்பதற்கான, அல்லது உடனடி கைது நடவடிக்கையை எதிர்கொள்ளாமல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை அசான்ஜிற்கு வழங்க பிரிட்டிஷ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும், ஐ.நா.வின் கண்டனங்களும் நிராகரிக்கப்பட்டன.

அசான்ஜிற்கு எதிரான மோசடி விசாரணை இறுதியில் சுவீடனால் 2017 இல் கைவிடப்பட்ட பின்னர் கூட, பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் கடுமையை தணித்துக் கொள்ளவில்லை. மாறாக, அசான்ஜின் அனைத்து தகவல் தொடர்புகளைத் துண்டிக்க ஈக்வடோருக்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுத்ததற்கும், இறுதியில், அடைக்கலம் வழங்குவதை தடுப்பதற்கும் ஒத்துழைத்தது. இந்த குறிப்பிட்ட காலம் முழுவதும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், அமெரிக்கா உடனான தமது இழிவான மூலோபாய கூட்டணியின் ஒரு பாகமாக, அதன் சொந்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீதான வெளிப்படையான மீறல்களுக்கு முழுமையாக ஆதரவளித்ததுடன், அவரது பாதுகாப்பு தொடர்பாக ஒரு வார்த்தையை எழுப்புவதற்கு கூட மறுத்துவிட்டன.

பிணை மீறல் குற்றச்சாட்டுக்களின் பேரில், அசான்ஜ் மீது விதிக்கப்பட்ட பழிவாங்கும் வகையிலான மற்றும் அரிதான 50 வார கால சிறை தண்டனை செப்டம்பர் 22 அன்று முடிவுக்கு வருகிறது. சாதாரண சூழ்நிலைகளின் கீழ் பிணை தொடர்பான சிறிய குற்றச்சாட்டுக்களில் சிக்கிய ஒரு நபர் விடுவிக்கப்பட்டிருப்பார். ஆனால் ஜூலியன் அசான்ஜின் வழக்கைப் பொறுத்தவரை, எதுவும் “சாதாரண” முறையில் தொடரப்படவில்லை. அதாவது அடிப்படையான, மேலும் சில சந்தர்ப்பங்களில் பல நூறாண்டுகள் பழமையான ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் முன்மாதிரிகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய உதாரணங்களில் பலவற்றை, செப்டம்பர் 13 இல் வெளியான ஒரு கட்டுரையில் பலவற்றை பட்டியலிடலாம். அசான்ஜின் விடுதலைக்கான விண்ணப்பத்தைக் கூட பிரிட்டிஷ் நீதிபதி வனேசா பாரைட்சர் முன்னதாகவே நிராகரித்ததுடன், பிப்ரவரி 25, 2020 இல் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அசான்ஜை நாடுகடத்துவது தொடர்பான விசாரணையிலிருந்து அவர் “மீண்டும் தப்பித்து” விடக்கூடும் என்ற சாக்குப்போக்கை காரணமாக்கி தொடர்ந்து அவரை சிறையில் அடைத்துவைக்க ஆணையிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு அசான்ஜை பல ஆண்டுகள் பெல்மார்ஷ் சிறையில் அடைப்பதற்கு வழிவகுத்தது. அவரது சட்டக் குழு அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்கு உயர் நீதிமன்றங்களில் அனைத்து வகைகளிலும் விண்ணப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும், ஏனென்றால், 17 உளவு குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒரு சதிக் குற்றச்சாட்டு குறித்து 175 ஆண்டுகள் வரையிலான ஆயுட்கால சிறைத் தண்டனையை அங்கு அவர் எதிர்கொள்வார்.

சுத்த மிருகத்தனமான ஒரு நடவடிக்கையாக, அசான்ஜை குற்றம்சாட்டிய ட்ரம்ப் நிர்வாகம் நியமித்த ஒரு மாபெரும் நடுவர் மன்றத்தின் முன்னால் பொய் சாட்சியம் சொல்ல செல்சியா மானிங் மறுத்தமைக்கு அமெரிக்க நீதிமன்றங்களால் அவர் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பெரும் நடுவர் மன்றம் அதன் 18 மாத கால அவகாசத்தை பூர்த்தி செய்துவிடும் பட்சத்தில், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை அவர் தடுத்து வைக்கப்படலாம். கூடுதலாக, பழிவாங்கும் விதமாக அவருக்கு நாளொன்றுக்கு 1,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட 450,000 டாலர் மொத்த அபராதம் செலுத்துவதற்கும் நிதி திவால் நிலைக்கும் அவரை அச்சுறுத்துகிறது. கசிந்த தகவல்களை பெறுவதற்கு அசான்ஜ் எதுவும் செய்யவில்லை என்பது தொடர்பாக அவர் மீண்டும் மீண்டும் முன்வைத்த ஆதாரங்களை திரும்பப் பெறுமாறு அமெரிக்க அரசு அவரை நிர்ப்பந்திக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங் மீதான அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் கூட்டுத் துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டும் தான் உள்ளது. எனவே, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் படி அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கும் அரசியல் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதை நோக்கிய ஒரு இயக்கம் உலகளவில் உருவாக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் தார்மீக உணர்விற்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பயனற்றவை என்பதை விட மோசமானவை. அவர்கள் ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கின் வர்க்க நலன்களை தாங்கிப்பிடிக்கிறார்கள், மேலும் அவர்களின் போர்கள், சூழ்ச்சிகள் மற்றும் பிற குற்றங்களை ஆதரிக்கும் பொய்களை அம்பலப்படுத்தும் அனைத்து சுயாதீன ஊடகங்களையும் அழித்தொழிக்க அவர்கள் உறுதியாக உள்ளனர். விக்கிலீக்ஸ், மற்றும், செய்தி வெளியீட்டாளர்கள், கொள்கை ரீதியான ஊடகவியலாளர்கள் மேலும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான வழக்கறிஞர்களாக இருக்கும் அசான்ஜ் மற்றும் மானிங்கை மிரட்டுவதற்கும் மௌனமாக்குவதற்கும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

பேர்னி சாண்டர்ஸ் மற்றும் “இடது” ஜனநாயகவாதிகள் என்றழைக்கப்படுபவர்கள் உடன் ஒத்துழைக்கும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி, அசான்ஜ் கையளிக்கப்படுவதை ஆர்வத்துடன் நாடுவதில் முன்னணி வகிக்கிறது.

பிரிட்டனில், தொழிற் கட்சிக்கு அல்லது அசான்ஜ் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நாடுகடத்தப்படுவதை நியாயப்படுத்த செயலாற்றும் நீதித்துறை மோசடிக்கு தனது மௌனத்தால் முழு ஆதரவளித்து வரும் அதன் தலைவர் ஜெர்மி கோர்பினுக்கு எந்தவித நம்பிக்கையும் வழங்க முடியாது.

ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவால் தனது குடிமகன்களில் ஒருவர் துன்புறுத்தப்படுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பதை தடுத்து நிறுத்தும் படி எந்தவொரு கட்சியும் கோரவில்லை. ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியைப் பொறுத்தவரை, அதன் சொந்த அடிமட்ட உறுப்பினர்களின் உணர்வை மீறுகின்ற உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் எந்தவொரு விமர்சனத்தையும் தவிர்க்க அது உறுதியாக உள்ளது.

முற்றிலும் பெருநிறுவன சார்பு மற்றும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதலை எதிர்க்க அவர்களிடம் விடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் நிராகரித்தன.

சர்வதேச அளவில் போலி-இடது அமைப்புகளின் மௌனம் இன்னும் வெளிப்படையானது. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் முதல், இங்கிலாந்தில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி, ஆஸ்திரேலியாவில் சோசலிசக் கூட்டணி மற்றும் சோசலிச மாற்றுக் கட்சிகள் வரை அனைத்தும், ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உடனான அவர்களது அடிபணிந்த உறவுகள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காக அசான்ஜை பாதுகாப்பது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் புறக்கணிக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துடன் பிணைத்து வைக்க முற்படும் அரசியல் மற்றும் தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிரானதொரு கிளர்ச்சிக்கான போராட்டத்திலிருந்து அசான்ஜையும் மானிங்கையும் விடுவிப்பதற்கான பிரச்சாரம் பிரிக்க முடியாததாக உள்ளது. அவர்களின் பாதுகாப்பிற்கான பிரச்சாரம், பணியிடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள், மற்றும் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இதுவே உலக சோசலிச வலைத் தளம்மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளின் நோக்குநிலை ஆகும். தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த மதிப்பிழந்த ஏகாதிபத்திய சார்பு அமைப்புகளின் அதிகாரத்துவ இரும்புப்பிடியை எதிர்த்துப் போராடத் தயாராகவுள்ள அனைவருடனும் மிக நெருக்கமான ஒத்துழைப்புக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம், அப்போதுதான் அரசு துன்புறுத்துவதையும் மற்றும் ஜூலியன் அசான்ஜ் கொலைக்கு அச்சுறுத்தப்படுவதையும் தடுப்பதற்கு அதன் வலிமையின் முழு பலத்தையும் கட்டவிழ்த்துவிட முடியும்.

Loading