இந்தியா; மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரம் சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு தொழிற்துறை மையமான ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனத்தை வைத்திருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technologies & Engineering-MATE) நிறுவனத்தின் தொழிலாளர்களால் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமானது ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது.

500க்கும் அதிகமான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் அவர்களது புதிய தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அத்துடன் ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரி ஆகஸ்ட் 26 இலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் மதர்சன் தொழிற்சாலையில் 2000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் ஆனால் 568 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 1000 பேரும் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் 500 பேரும் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். குறைந்த ஊதியங்கள், கொடுமையான வேலைநிலைமைகள் மற்றும் ஆலையின் உணவகத்தில் தரமற்ற உணவுகளுக்கு எதிராக மதர்சன் தொழிலாளர்கள் கடந்த யூலையில் ஒரு புதிய தொழிற்சங்கத்தை கட்டினார்கள்.

நிறுவனத்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் (அஇஅதிமுக) வழிநடத்தப்படும் காவல்துறையினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்கிற மதர்சன் தொழிலாளர்கள் அவர்களின் தொழிற்சங்கம் இணைக்கப்பட்டிருக்கும் அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU) மூலம் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தலை உடைக்கவேண்டும் மேலும் பரந்தளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக போராடவேண்டும். இது நல்ல ஊதிய உயர்வுக்காகவும், 2000 தொழிலாளர்களையும் நிரந்தர தொழிலாளர்களாக்கவும் மேலும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் சேர்வதற்கு தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களிடமும், பயிற்சியாளர்களிடமும் விண்ணப்பிப்பதன் மூலம் தொடங்கப்படவேண்டும். மற்ற வாகன தொழிற்சாலைகளில் இருக்கும் அவர்களது வர்க்க சகோர சகோதரிகளிடமும் மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிற துறைகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் மேலும் சர்வதேச அளவிலும் ஆதரவை அணிதிரட்டுவதன்மூலமும் தங்களுடைய போராட்டத்தை விரிவுபடுத்த போராட வேண்டும்.

வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மதர்சன் 22 பயிற்சியாளர்கள் மற்றும் 33 தொழில் வல்லுநர்களை பணிநீக்கம் செய்திருக்கிது மேலும் 15 நிரந்தரத் தொழிலாளர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. கூடுதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 தொழிலாளர்களுக்கு “குற்றப்பத்திரிகையுடன் காரணம் காட்டும் அறிவிப்பினையும்” (“Charge sheet cum Show cause Notice”) அனுப்பியிருக்கிறது. செப்டம்பர் 24 அன்று காலையில் இருங்காட்டுக்கோட்டை துணை தொழிலாளர் ஆணையாளர் (DLC) அலுவலகத்திற்கு முன்னால் போராட்ட பேரணியை நடத்தியபோது 200 க்கும் அதிகமான மதர்சனின் வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நகரத்தின் ஒரு திருமண மண்டபத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் அதேநாள் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மதர்சன் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்களுடம் ஒரு பொதுவான போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையும் அணிதிரட்ட ஸ்ரீபெரும்புதூர் தொழிற்துறை பகுதியிலும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருக்கும் வாகன மற்றும் பிற தொழிலாளர்களிடம் ஆதரவை கோருவதற்கு AICCTU தலைவர்கள் மறுத்துவிட்டார்கள். அதற்குப்பதிலாக, மாநில அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் அதிகாரிகளிடம் முறையிடுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். அந்த அதிகாரிளிடம் பயனற்ற முறையீடுகளை அளிக்கும்படி தொழிலாளர்களை AICCTU தலைவர்கள் வழிநடத்துகிறார்கள்.

அக்டோபர் 1ம் தேதி மாலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது உதவி தொழில் ஆணையர் முன்னிலையில், MATE நிர்வாகத்தை பிரதிநிதித்துவம் செய்த புதிய மனித வள மேலாளர்; “தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது தப்பு. உங்கள் வேலைநிறுத்தத்தினால் கம்பனியின் பெயர் கெட்டுப் போகிறது.” என்றார்.

மாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்- விடுதலை (CPM-ML-Liberation) இன் தொழிற்சங்க கூட்டமைப்பான AICCTU இனால் நிர்வாகத்தின் ஒடுக்கும் கை மேலும் தைரியம் அடைந்துள்ளது. வேலைநிறுத்தம் செய்யும் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது, இது நிர்வாகம் எவ்வாறு ஒரே ஆலைக்குள் பணி புரியம் தொழிலாளர்களை பிரித்து ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தியை பராமரிக்கிறதோ அதே வழியில் தான் இருக்கிறது.

ஒரு நம்பகமான தொழிலாளர் தகவலின் படி, MATE நிர்வாகம் அனைத்து ஒழுக்க நடவடிக்கைகளையும் கைவிட்டு, அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துமாயின், AICCTU அதன் பிரதான கோரிக்கையான –ஊதிய உயர்வை – கைவிட்டு தொழிலாளர்களை வேலைக்கு திரும்படி உத்தரவிட தயாராக உள்ளது. எவ்வாறாயினும் AICCTU இன் இந்த பரிதாபகரமான சரணாகதி உடன்பாட்டை நிர்வாகம் அடியோடு நிராகரித்து விட்டது, மேலும் அனைத்து ஒழுக்க நடவடிக்கைக்கு ஆளான தொழிலாளர்களும் விசாரணைக்கு உட்படுத்த பின்னரே பணிக்கு திரும்ப முடியும் என்று நிர்வாகம் வலியுறுத்துகிறது. வேலைநிறுத்த தொழிலாளர்கள் AICCTU இன் நிலைப்பாட்டினால் தனிமைப்படுத்தப் பட்டதனால், தனது கையை பலப்படுத்திக் கொண்ட கம்பனி நிர்வாகம், கடுமையான சுரண்டல் நிலைமைகளை எதிர்க்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கும் குறிக்கோளுடன் போராட்ட நாட்டமுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான அதன் வேட்டையாடலை முடுக்கிவிட உறுதி பூண்டுள்ளது,

இந்த துரோக ஒப்பந்தத்தை திணிப்பதற்காகவே, தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு குழு, முன்கூட்டியே திட்டமிட்டபடி செயல்பட்டு, ஏ.ஐ.சி.டி.யுவின் பாத்திரத்தை விமர்சிக்கும் மதர்சன் வேலைநிறுத்தம் குறித்த WSWS கட்டுரைகளின் நகல்களை விநியோகிக்க விடாமல் உலக சோசலிச வலைத்தள ஆதரவாளர்களை தடுக்க முயன்றது.

அக்டோபர் 1 ம் தேதி ஆலைக்கு முன்னால் ஒரு தர்ணா ( அமர்ந்து எதிர்ப்பு) நடத்தும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை WSWS ஆதரவாளர்கள் பார்வையிட்டபோது, WSWS நகல்களை வாங்கிய தொழிலாளர்களிடம் அவற்றை தொழிற்சங்க நிர்வாகிகளிடம் திருப்பிக் கொடுக்கும்படி AICCTU அதிகாரத்துவத்தினர்உத்தரவிட்டனர்.

இதற்கு பதிலளித்த WSWS ஆதரவாளர்கள், ஏ.ஐ.சி.டி.யு நிர்வாகிகள், மதர்சன் வேலைநிறுத்தத்தை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தியதாக குற்றம் சாட்டினர், அவர்கள் அதே ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்தனர் என்று கூறினர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று கூறி ஒரு தொழிற்சங்க நிர்வாகி தங்கள் பங்கை நியாயப்படுத்த முயன்றார். இந்த போலியான கூற்றை எதிர்த்து, WSWS நிருபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட MATE தொழிலாளர்களிடம் விளக்கமாக பேசினர், அதாவது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் குர்கானுக்கு அருகிலுள்ள மானேசரில் உள்ள மாருதி சுசுகி கார் அசெம்பிளி ஆலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவரும் 2011 ல் மலிவு உழைப்பு நிலைக்கு எதிராக ஒன்றுபட்ட நடவடிக்கையில் போராடினர். சென்னையிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்வேலியில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி) நிரந்தர அந்தஸ்துக்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் 10,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பல தடவைகள் ஈடுபட்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவ சட்ட முறைக்கு கீழ்ப்படுத்த முடியாது என்று WSWS ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். MATE நிர்வாகம் தொழிலாளர் ஆணையாளரின் "ஆலோசனையை" புறக்கணித்தது மற்றும் வேலைநிறுத்தம் செய்த நிரந்தர தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணி இடைநீக்கம் செய்தது, ஆனால் இது சட்டரீதியான மீறல்கள் என்றாலும் கூட முதலாளித்துவ அதிகார அமைப்புகளினால் பொறுத்துக் கொள்ளப்படுகிறது.

MATE இல் நடந்து வரும் வேலைநிறுத்த நடவடிக்கை உலகளவில் தொழிலாளர்கள் போராட்டங்கள் மீண்டும் வளர்ந்து வருவதன் ஒரு பகுதியாகும். உலகளவில் தொழிலாளர்கள் பெருகிய முறையில் நிரந்தர வேலைகள், நல்ல ஊதியங்கள் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களை மிகவும் அதிகமாக பயன்படுத்துவது மற்றும் தொழிலாளர்களை பழிவாங்குவது மற்றும் மலிவு கூலி சுரண்டல் ஆகியவை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இந்திய பொருளாதார உற்பத்தியாளர்கள் மிகபெருமளவில் வேலை அழிப்புகள் மற்றும் ஊதிய வெட்டுக்கள் மற்றும் நிலைமைகளின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் முதலாளிகள் இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை மற்றும் வாகனத் துறையில் விற்பனை வீழ்ச்சியின் தாக்கத்தை தொழிலாளர்களின் தோளில் சுமத்த முயற்சிக்கின்றனர். 365,000 க்கும் மேற்பட்ட வாகனத் தொழில் வேலைகள் - அவற்றில் 350,000 வாகன உதிரிபாகங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மேலும் வாகன துறையில் 15,000 வரையில் - ஏப்ரல் முதல் இந்தியாவில் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளன. சில வர்ணனையாளர்கள் வரும் மாதங்களில் சுமார் அரை மில்லியன் வேலைகள் குறைக்கப்படும் என்று கணித்துள்ளனர். இந்த தாக்குதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். சர்வதேச அளவில் அவர்களின் சகாக்களைப் போலவே, இந்திய தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் தேசிய அரசுடன் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரட்டலுக்கும் விரோதமாக இருக்கின்றன. அதனால்தான், நல்ல ஊதியங்கள், சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, இந்தியா முழுவதும் உள்ள MATE தொழிலாளர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்களது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் வேலைநிறுத்தக்காரர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் மற்றும் பூகோள வாகன நிறுவனங்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய மற்றும் பூகாள வாகனத் தொழில் துறைகளின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள வேலை பாதுகாப்பற்ற நிலையை, கம்பனி மட்டுமின்றி துரோகத்தனமான தொழிற் சங்கங்களும் கூட, வேலைநிறுத்த தொழிலாளர்கள் அவர்களது பிரதான கோரிக்கையை வென்றெடுக்காமல் வேலைக்கு திரும்பும் படி நிர்ப்பந்திக்க, சாதகமாக பயன்படுத்துகின்றன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மதர்சன் தொழிலாளர்கள் கம்பனியின் தாக்குதல்களை எதிர்த்து போராட மற்றும் அவர்களது வேலைகளை பாதுகாக்க மற்றும் அவரகளது நிலைமைகளை மேம்படுத்த வேண்டுமாயின் ஸ்ராலினிச கட்டுப்பாட்டிலுள்ள, முதலாளித்துவ சார்பு சங்கங்களிடம் இருந்து முறித்துக் கொண்டு அவர்களது சொந்த சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்க வேண்டும், மேலும் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் பூராவும் இருக்கும் தொழிலாளர்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்துக்காக அணிதிரட்ட போராட வேண்டும்.

Loading