முன்னோக்கு

பொய்கள் அடிப்படையிலான போரில் மில்லியன் கணக்கானவர்களை அமெரிக்கா கொன்றதாக ட்ரம்ப் ஒப்புக்கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெறும் அவரது முடிவின் மீது —வலதுசாரி குடியரசுக் கட்சியினரில் இருந்து ஜனநாயகக் கட்சி,நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் போலி-இடது ஜாக்கோபின் பத்திரிகை வரையில் நீண்டு செல்லும்— கண்டனங்களின் புயலுக்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரின் கொள்கையைப் பாதுகாத்து புதனன்று ஓர் அசாதாரண ட்வீட் செய்தியை வெளியிட்டார்:

“மத்திய கிழக்கில் சண்டையிடுவதற்கும் பொலிஸ் வேலை செய்வதற்கும் அமெரிக்கா எட்டு ட்ரில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. நம்முடைய ஆயிரக் கணக்கான தலைச்சிறந்த சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது படுமோசமாக காயமடைந்துள்ளனர். மறுபுறம் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எமது நாட்டின் வரலாற்றிலேயே … மத்திய கிழக்கினுள் செல்வதற்கான முடிவு ஒருபோதும் இல்லாத படுமோசமான முடிவாகும்! நாம் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள், என்ற ஒரு பொய்யான மற்றும் இப்போது தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் போருக்குச் சென்றோம்.”

ட்ரம்பின் ட்வீட்டர் கணக்கு, அவர் பதவியேற்றதிலிருந்து, முன்னொருபோதும் இல்லாதளவில் அமெரிக்க செய்தி சுழற்சியில் ஆதிக்கம் செலுத்தியது. ட்வீட் செய்திகள் புலம்பெயர்ந்தோர் மீதான புதிய பாசிசவாத கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது, வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் அவ்வப்போதைய நீக்கங்களை அறிவித்துள்ளது, அமெரிக்க வெளியுறவு கொள்கை மாற்றங்களைச் சமிக்ஞை செய்துள்ளது.

கடந்த மாதம், பதவிநீக்க குற்றவிசாரணை முன்வந்து கொண்டிருந்ததற்கு மத்தியில், இதை ஜனநாயகக் கட்சி தலைமை முழு மூச்சாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான ட்ரம்பின் ஜூலை 25ஆம் தேதி தொலைபேசி அழைப்பில் வேரூன்றிய "தேசிய பாதுகாப்பு" அக்கறைகள் மீது ஒருங்குவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி 800 முறை ட்வீட் செய்து ஒரு புதிய தனிப்பட்ட சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இருப்பினும் பெருநிறுவன ஊடகங்களோ, மத்திய கிழக்கில் நீடித்த அமெரிக்க இராணுவ தலையீடு சம்பந்தப்பட்ட ட்ரம்பின் ட்வீட் செய்திகளைப் புறக்கணிப்பதென முடிவு செய்துள்ளன.

அமெரிக்க முதலாளித்துவ அரசுக்குள் கட்டவிழ்ந்து வரும் கடுமையான உள்சண்டையினது நிலைப்பாட்டில் இருந்து பார்க்கையில், அந்த ட்வீட் செய்திகள் அமெரிக்காவின் உலகளாவிய மூலோபாயம் மீதான கூர்மையான பிளவுகளை வெளிப்படுத்துகின்றன. ட்ரம்பைச் சுற்றி இருப்பவர்கள் முழுமையாக சீனாவுடனான மோதலுக்குத் தயாரிப்பு செய்வதன் மீது ஒருமுகப்படுகின்ற அதேவேளையில், அரசியல் ஸ்தாபகம் மற்றும் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் அடுக்குகள் மத்திய கிழக்கின் மீது அதன் மேலாதிக்கத்தை பலப்படுத்த அங்கே அமெரிக்க தலையீட்டைத் தொடரவும் மற்றும் யுரேஷியா பெருநிலப் பகுதி மீது அதன் மேலாதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைவு அதிமுக்கியம் என்பதால் ரஷ்யாவை எதிர்க்கவும் வேண்டுமென பார்க்கின்றன.

ஆனால் புவிசார் மூலோபாய கொள்கை மீதான இந்த சச்சரவுகள் ஒருபுறம் இருக்க, பதவியிலிருக்கும் ஓர் அமெரிக்க ஜனாதிபதி, "பொய்" மற்றும் "தவறு என்று நிரூபிக்கப்பட்ட" ஆதாரத்தின் அடிப்படையில் வாஷிங்டன் போர் தொடுத்தது என்றும், அது "மில்லியன்" கணக்கானவர்களைக் கொல்வதில் போய் முடிந்தது என்றும் ஒப்புக் கொள்வதானது, ட்ரம்பின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும் சரி, அது நேரடியான அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது.

இது, பெருந்திரளான மக்களைப் படுகொலை செய்த போர் குற்றங்களுக்கு அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் பொறுப்பாவதை அமெரிக்க அரசே உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்வதற்கு நிகராக உள்ளது.

வாஷிங்டன் 2003 ஈராக் படையெடுப்பை "பேரழிவுகரமான ஆயுதங்கள்" என்ற "பொய்யான ஆதாரத்தின்" அடிப்படையில் நடத்தி இருந்ததை ட்ரம்ப் ஒப்புக் கொள்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகம், ஆக்கிரமிப்பு போரை நடத்துவதற்கு அமெரிக்க மக்களுக்கும் புவியின் ஒட்டுமொத்த மக்களுக்கும் பொய் கூறியுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ், இந்த போரானது ஒரு குற்ற நடவடிக்கை என்பதுடன் ஈராக் இறையாண்மை மீது நியாயப்படுத்த முடியாத அப்பட்டமான மீறலாகும். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நூரெம்பேர்க் தீர்ப்பாயம், ஒரு போர் ஆக்கிரமிப்பைத் திட்டமிட்டதும் தொடங்கியதும் நாஜிக்களின் மிகப்பெரும் குற்றங்கள் என்றும், இவற்றில் இருந்து தான் யூத இனப்படுகொலை உட்பட அவர்களின் கொடூரமான அட்டூழியங்கள் பெருக்கெடுத்தன என்றும் அறிவித்தது. இந்த சட்ட கோட்பாட்டின் அடிப்படையில், புஷ், துணை ஜனாதிபதி ஷென்னி மற்றும் ஏனைய உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளும், அத்துடன் மத்திய கிழக்கில் அமெரிக்க தலையீட்டைத் தொடர்ந்த —சிரியா மற்றும் லிபியாவில் அதை விரிவாக்கி, அதேவேளையில் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய போர் கொண்டு அச்சுறுத்திய— அவர்களுக்கு அடுத்து பதவிக்கு வந்த ஒபாமா மற்றும் டரம்ப் நிர்வாகத்தில் இருந்தவர்கள் அனைவருமே போர் குற்றவாளிகளாக வழக்கை முகங்கொடுக்க வேண்டும்.

ஈராக்கை இராணுவரீதியில் கைப்பற்றுவதன் மூலம் மத்திய கிழக்கின் பரந்த எரிசக்தி வளங்களை வாஷிங்டன் கைப்பற்ற முடியும் —இது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அதன் பிரதான போட்டியாளர்களின் எண்ணெய்க்கான அணுகல் மீது அதன் பிடியைக் வைத்திருக்க அனுமதிக்கும்— அவ்விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தின் வீழ்ச்சி ஈடுசெய்யப்படும் என்ற நீண்டகால கொள்ளையடிக்கும் கருத்துருவே போருக்கான நிஜமான அடித்தளமாக இருந்தது.

ஈராக் மற்றும் அதன் மக்கள் மீதான அமெரிக்க தாக்குதலின் விளைவுகளை உலக சோசலிச வலைத் தளம் "சமூகப் படுகொலை" (Sociocide) என்று விவரித்தது, அதாவது கல்வி, மருத்துவ வசதி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அர்த்தத்தில், மத்திய கிழக்கிலேயே மிகவும் முன்னேறிய சமூகங்களில் ஒன்றாக இருந்ததன் திட்டமிட்ட அழிப்பாக அதை குறிப்பிட்டது. (பார்க்கவும்: “The US war and occupation of Iraq—the murder of a society”).

இந்த போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளோ அதிர்ச்சிகரமானவை. பொது சுகாதாரத்திற்கான ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் புளூம்பேர்க் அமைப்பு நடத்திய மற்றும் மதிப்பார்ந்த மருத்துவ ஆய்விதழ் The Lancet இல் வெளியான ஒரு விரிவான 2006 ஆய்வின்படி, அமெரிக்க படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை அமெரிக்க போரின் முதல் 40 மாதங்களில் மட்டுமே 655,000 ஐ கடந்து அதிகரித்திருந்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்பினால் விளைந்த தொடர்ச்சியான படுகொலைகளும் மற்றும் வாஷிங்டனின் பிரித்தாளும் தந்திரம் ஏற்படுத்திய இரத்தந்தோய்ந்த குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தங்களும் நேரடியாகவே இன்னும் நிறைய உயிர்ப்பலிகளைக் கொண்டது, அதேவேளை அடிப்படை நீராதாரம், மின்சாரம், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் வெளியேறும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் சீரழிவால் இன்னும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள். 2014 இல் தொடங்கப்பட்டு ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து நடந்த பாரிய படுகொலைகள் ISIS க்கு எதிரான அமெரிக்க போர் என்ற கணக்கில் நடத்தப்பட்டன. வியட்நாம் போருக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக குண்டுவீச்சு நடத்தப்பட்டு, மொசூல், ரமாடி, ஃபல்லூஜா மற்றும் இதர ஈராக்கிய நகரங்களும் இடுபாடுகளாக மாற்றப்பட்ட அந்த போரில், நூறாயிரக் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் பத்தாயிரக் கணக்கானவர்கள் கூடுதலாக கொல்லப்பட்டார்கள்.

ஈராக் மீதான 16 ஆண்டுகால அமெரிக்க இராணுவ தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை பற்றிய சமீபத்திய மதிப்பீடுகள் ஏறக்குறைய அதிகபட்சமாக 2.4 மில்லியன் (2,400,000) வரை நீள்கிறது.

ஈராக் போர் அமெரிக்க சமூகத்திற்கும் கூட அதன் சொந்த நாசகரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. 4,500 க்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் மற்றும் அண்மித்து 4,000 அமெரிக்க ஒப்பந்ததாரர்களின் உயிர்களைப் பறித்ததற்குக் கூடுதலாக, அந்த போரில் பத்தாயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகள் காயமடைந்தனர் மற்றும் நூறாயிரக் கணக்கானவர்கள் புற அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்த நோய் மற்றும் புற அதிர்ச்சி சார்ந்த மூளை பாதிப்புகளால் பாதிக்கப்பட்டனர்.

பொய்களின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் இப்போது ஒப்புக்கொண்ட ஒரு போரில் பிள்ளைகள், உறவினர்கள் அல்லது பெற்றோர்களை இழந்த அமெரிக்க குடும்பங்கள் எல்லாம் என்னவாவது? இந்த போரின் காயங்களால் துன்புறும் சிப்பாய்களுடன் சேர்ந்து, இந்த குற்ற நடவடிக்கையின் விளைவுகளுக்காக அமெரிக்க அரசை குற்றவியல் சட்ட நடைமுறைக்கு இழுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.

2001 இல் இருந்து தொடங்கப்பட்ட அமெரிக்க போர்களின் செலவுகள் அண்மித்து 6 ட்ரில்லியன் (6,000,000,000,000) டாலராக உயர்ந்துள்ளது, இதில் பெரும்பான்மை ஈராக்கில் ஏற்பட்டிருந்தது, அதேவேளையில் இந்த போர்களுக்குச் செலவிடுவதற்காக கடன் வாங்கப்பட்ட பணத்தின் வட்டித்தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இறுதியில் 8 ட்ரில்லியனுக்கு நிகராக இருக்கும்.

அமெரிக்க சமூகத்தின் மீதான இத்தகைய பொறுக்கவியலாத செலவுகள், ஒரு சட்டவிரோத போர் தொடுத்ததன் சமூக மற்றும் அரசியல் பாதிப்புகளுடன் சேர்ந்து, ஜனநாயக உரிமைகளின் அழிப்புடன், இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் முன்பினும் அதிக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அமைப்புமுறையின் ஒட்டுமொத்த ஊழலுமாக விளைந்துள்ளது.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய இடங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய போர் குற்றங்களை ட்ரம்ப் ஒப்புக் கொள்வதன் மீது ஊடகங்கள் மவுனமாக இருப்பதென்பது அதில் அவற்றின் சொந்த பங்கை எடுத்துக்காட்டுகிறது. இது இந்த குற்றங்களில் பெருநிறுவன ஊடகங்கள் உடந்தையாய் இருந்ததை பிரதிபலிக்கிறது, ஈராக்கிற்கு எதிரான ஆக்ரோஷத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்ட பொய்களை அவை பரப்பியதுடன், போர் எதிர்ப்புணர்வை அவை ஒடுக்க முயன்றன.

இந்த போர் பிரச்சாரம் நியூ யோர்க் டைம்ஸை விட வேறெங்கும் மிகவும் உணர்வுபூர்வமாக வேண்டுமென்றே உருவாக்கப்படவில்லை, அது ஜூடித் முல்லரைக் கொண்டு "பேரழிவு ஆயுதங்கள்" குறித்த பொய் செய்திகளையும் மற்றும் "எண்ணெய்க்கான ஒரு போர் குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை,” என்ற வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை கருத்துரை எழுத்தாளர் தோமஸ் ஃபிரெட்மனைக் கொண்டு எழுதிய கேடுகெட்ட கருத்துரைகளையும் அமெரிக்க மக்கள் மீது வெள்ளமென பொழிந்தது.

நேர்மையாக பார்த்தால், அந்த போரைத் தொடங்கிய போர் குற்றவாளிகளுடன் சேர்த்து ஒரு குற்றவியல் தனமான ஆக்கிரமிப்பு போரை ஊக்குவித்ததற்குப் பொறுப்பான ஊடக பதிப்பாசிரியர்கள் மற்றும் பண்டிதர்களையும் நீதிமன்ற கூண்டில் ஏற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

மத்திய கிழக்கில் அமெரிக்கப் போர்கள் குறித்த ட்ரம்பின் குற்றச்சாட்டை முன்னணி ஊடகங்களும் புறக்கணித்துள்ளன, ஏனெனில் போர்களைத் தொடர விரும்பும் அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் அந்த பகுதிகளுக்காக அவர்கள் பேசுகிறார்கள்.

மத்திய கிழக்கில் அமெரிக்க போர்களை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய ட்ரம்பின் எரிச்சலூட்டும் தேசியவாத மற்றும் ஜனரஞ்சக வாய்சவடால், இத்தகைய போர்களுக்கு அதிகரித்தளவில் கோபமாக உள்ள அமெரிக்க மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், அவரது நிர்வாகம் அணுஆயுதமேந்திய சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக உட்பட இன்னும் அதிக பேரழிவுகரமான போர்களுக்குத் தயாரிப்பு செய்வதில் ஜனநாயக கட்சியினரின் ஆதரவுடன் சாதனையளவுக்கு 738 பில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு ஒப்புதல் பெற்றுள்ளது.

வெள்ளை மாளிகையின் இந்த பாசிசவாத பதவியாளர் ஏகாதிபத்திய போரின் ஒரு எதிர்ப்பாளராக மோசடி செய்ய முடிகிறது என்றால், அதற்கு முற்றிலும் ஜனநாயக கட்சியினருக்குத் தான் நன்றி கூறியாக வேண்டும், ட்ரம்ப் மீதான இவர்களின் எதிர்ப்பானது அவரின் வெளியுறவு கொள்கை நடவடிக்கை சம்பந்தமாக அமெரிக்க உளவுத்துறை முகமைகள் மற்றும் பென்டகனின் கவலைகளை அடிப்படையாகக் கொண்டது.

ஈராக் படையெடுப்புக்கு அங்கே பாரிய எதிர்ப்பு இருந்த போதினும், அமெரிக்காவில் போலி-இடதுகள், ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு, அதை, போருக்குத் தங்குதடையின்றி ஆதரவும் நிதியுதவியும் வழங்கிய ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் தங்களின் முழு பலத்தினாலும் திருப்பி விட செயலாற்றின. இன்று, அதுதான் மிகப்பெரிய போர்-ஆதரவு கட்சியாக விளங்குகிறது, ஜோன் போல்டன், லிண்டே கிரஹாம் மற்றும் புஷ் போன்றவர்களினது ட்ரம்ப் எதிர்ப்புடன் அது அணி சேர்ந்துள்ளது.

ஈராக் போரின் குற்றவியல் தன்மை குறித்து ட்ரம்பின் ஒப்புதல், ஆரம்பத்தில் இருந்தே உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டு வந்ததை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்த ஒட்டுமொத்த புவியிலும் தொழிலாளர்களை ஒன்றிணைக்க, சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்காக அது நடத்தி வரும் போராட்டம் மட்டுமே போருக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதையை வழங்குகிறது.

Loading