முன்னோக்கு

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் கொடூரமாக கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்திலிருந்து பிரிட்டிஷ் பொலிசாரால் வெளியே இழுத்துவரப்பட்டு கைதுசெய்யப்பட்டு ஆறுமாதங்கள் ஆகிவிட்டதை நேற்றைய தினம் குறிக்கிறது. ஜனநாயக நாடு என்று கூறப்படும் ஒரு நாட்டின் தலைநகரில் ஐந்து பலமான பொலிசார்களால் துன்புறுத்தப்பட்ட ஒரு ஊடகவியலாளர் கையாளப்பட்ட காட்சி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வன்முறையான கைது நடவடிக்கை, அமெரிக்கா, பிரிட்டிஷ், சுவீடன் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ள அசான்ஜிற்கு எதிரான முன்னுதாரணமற்ற அரசியல் சதித்திட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் அவர்களது போர்க்குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை அசான்ஜ் அம்பலப்படுத்தியதற்காக அவரை இடைவிடாது பின்தொடரும் நிலையில், ஜூன் 2012 இல் ஈக்வடோரிய தூதரகத்தில் தஞ்சம் கோரும் நிலைக்கு அசான்ஜ் தள்ளப்பட்டார்.

அந்த சிறிய தூதரகத்திற்குள் ஏழு ஆண்டுகளாக சிக்கிக் கொண்ட அசான்ஜ் சூரிய ஒளியைக் கூட காண முடியாமல் இருந்ததுடன், போதுமானளவு மருத்துவ சிகிச்சையை அணுக முடியாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது புகலிட கோரிக்கையை இது இரத்து செய்வதற்கு 18 மாதங்களுக்கு முன்பு, ஈக்வடோர் அதிகாரிகள் அவரைக் காட்டிக்கொடுத்து அசான்ஜ் இருந்த அந்த சிறிய பகுதிகளை ஒரு உண்மையான சிஐஏ சிறைச்சாலையாக மாற்றினர், மேலும் வக்கீல்கள் மூலம் அவரது சந்திப்புக்களை உளவு பார்ப்பதுடன், அவரது அமெரிக்க துன்புறுத்துபவர்களுக்கு நேரடியாக அனுப்பும் வகையில் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரின் நேரடி காணொளி பதிவிற்கும் ஏற்பாடு செய்தனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் அசான்ஜை மனிதாபிமானத்துடன் நடத்துவார்கள் எனும் மாயைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. தண்டனை பெற்ற கொலைகாரர்களையும், பயங்கரவாதிகளையும் தனிமைச் சிறையில் அடைப்பதற்காக உண்மையில் வடிவமைக்கப்பட்டதான அதிகூடிய பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அசான்ஜ் மாதத்திற்கு இரு பார்வையாளர்களை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார் என்பதுடன், அவருக்கு எதிரான வழக்கிற்கு தயாரிப்பு செய்ய தேவையான கணினிகளையும், தேவைப்படும் ஆவணங்களையும் அணுக முடியாத வகையிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அசான்ஜ் ஒன்றையடுத்து மற்றொன்று என நீதித்துறை மோசடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

போலி பிணை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான அவரது காவல் தண்டனை செப்டம்பர் 22 அன்றே முடிந்துவிட்ட போதிலும், நேற்று நடந்த ஒரு நிர்வாக விசாரணையில், ஒரு பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜ் “தப்பித்துவிடும் அபாயம்” இருப்பதாகக் கருதி தொடர்ந்து அவரை காலவரையற்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் வெளிப்படையாக ஒரு அரசியல் கைதியைப் போல சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான அனைத்து போலி-சட்ட காரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பிரிட்டனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவர் கையளிக்கப்படுவதற்கு அமெரிக்க அரசாங்கம் முனைந்து கொண்டிருக்கிறது, இதனால் அவரை ஒரு போலிநாடக விசாரணைக்கு உட்படுத்தவும், உண்மையை அம்பலப்படுத்திய “குற்றத்திற்காக” 175 ஆண்டுகள் வரை அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தண்டிக்கவும் முடியும்.

ஒரு AFP நிருபர், நேற்று நடந்த நிர்வாக விசாரணையில் அசான்ஜ் காணொளி இணைப்பு ஊடாக தோன்றினார் என்றும், “தோள்பட்டை சரிந்த நிலையில் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருக்க, அவரது பெயரையும் வயதையும் நிறுத்தி நிறுத்தி சற்று கரகரப்பான குரலில் கூறினார். வழக்கைப் பற்றி நீதிபதி சில நிமிடங்கள் விசாரணை செய்வதை கேட்டுக் கொண்டிருக்கையில், அசான்ஜ் தனது ஸ்வெட்டரின் கைப் பகுதியை தனது குறுக்கு கால்களுக்கு மேல் இழுக்கத் தொடங்கினார்” என்றும் தெரிவித்தார்.

சிறையில் தனது மகன் இறந்துவிடக் கூடும் என அஞ்சுவதாக அசான்ஜின் தந்தை ஜோன் ஷிப்டன் கடந்த வாரம் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த சோகமான நிகழ்வு நடக்கிறது. இது, “படிப்படியாக கடுமையாக கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் தரமற்ற வடிவங்களில் அவர் துன்புறுத்தப்பட்டதன்” விளைவாக “உளவியல் சித்திரவதையால்,” அசான்ஜ் பாதிக்கப்பட்டார் என்று கடந்த மே மாதம் சித்திரவதை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர் கண்டறிந்ததை உறுதிப்படுத்தியது.

பிரிட்டிஷ் சிறையில் அசான்ஜ் எவ்வளவு சித்திரவதைக்கு ஆளானாலும், போர்க் குற்றவாளிகள் எவ்வளவிற்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் என்பது பற்றி முடிந்தளவிற்கு அம்பலப்படுத்திவிட்டார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சென்ற வாரம் பதிவிட்ட ட்வீட்டிலும், நேற்று ஆற்றிய பாசிச பிரச்சார உரையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்கப் போர்கள் பொய்களை அடிப்படையாக கொண்டிருந்ததையும், மில்லியன் கணக்கான உயிர்களை கொன்று குவித்ததையும் ஒப்புக்கொண்டார்.

ஆயினும், அசான்ஜூம் துணிவுமிக்க இரகசிய செய்தி வெளியீட்டாளரான மானிங்கும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த போர்கள் தொடர்பாக பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் குற்றவியல் தன்மை பற்றி வேறெவரையும் காட்டிலும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அசான்ஜிற்கு எதிராக பொய் சாட்சியங்களை வழங்க மறுத்ததற்காக அமெரிக்க அரசாங்கத்தால் ஏழு மாதங்களுக்கும் மேலாக மானிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸூக்கு அவர் கசியவிட்ட ஆவணங்கள், அமெரிக்காவால் மூடிமறைக்கப்பட்டதான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்து போனதைப் பற்றி அம்பலப்படுத்தியமை, அமெரிக்க இராணுவத்திற்குள் இரகசிய படுகொலை பிரிவுகள் இருப்பதையும், அவர்களால் வெகுஜன சித்திரவதை முறைகள் பயன்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தியது.

சீனா மற்றும் ரஷ்யா உட்பட, புதிய மற்றும் இன்னும் பேரழிவு தரும் இராணுவ மோதல்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தயாரிப்பு செய்து வரும் நிலையில், இத்தகைய வரலாற்று குற்றங்களை உலக மக்களுக்கு அம்பலப்படுத்தியதற்காக அசான்ஜ் மீது வழக்கு தொடுப்பதற்கான இந்த முயற்சி, அவரை துன்புறுத்துவது போருக்கு எதிரான எதிர்ப்பை குற்றப்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதை நிரூபிக்கிறது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் கசப்பான கன்னைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்பை குற்றம்சாட்ட அவர்கள் முற்படுகையில், அசான்ஜை மௌனமாக்குவதற்கான அவரது அரசாங்கத்தின் முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியினர் முழு ஆதரவளிக்கின்றனர். மேலும், இராணுவம் மற்றும் உளவு அமைப்புகளின் தலைசிறந்த கட்சியாக தங்களது பங்கை நிரூபிக்கும் வகையில், ஜனநாயகக் கட்சியினர் ஒபாமா நிர்வாகம் தொடங்கி வைத்த அசான்ஜ் மீதான துன்புறுத்தலை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சர்வதேச அளவிலான பெருநிறுவன வெளியீடுகள், இந்த பிரச்சாரத்தின் பிரச்சாரகர்களாக செயலாற்றி வருவதுடன், அசான்ஜை இடைவிடாது அவதூறாகப் பேசுவதுடன் அவருக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை விஷமாக்க முயல்கின்றன. அசான்ஜிற்கு எதிரான உளவுச் சட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.

உளவுச் சட்ட வழக்கு ஊடாக “முதல் திருத்தத்திற்கு சவால் செய்யாமல் திரு. அசான்ஜை பல ஆண்டுகளுக்கு கூட்டாட்சி அரசாங்கம் சிறையிலடைக்கக் கூடும் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மே மாதம் புகார் செய்த போது, நியூ யோர்க் டைம்ஸ் முதல் கார்டியன் பத்திரிகை வரையிலுமான அனைத்து ஸ்தாபக சுருக்கெழுத்தாளர்களுக்காகவும் அது பேசியது.

பிரிட்டனில், ஜெர்மி கோர்பினின் தொழிற் கட்சி உட்பட அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் அசான்ஜை தடுத்து வைப்பதற்கு உடந்தையாக உள்ளன, இது அவரது உயிருக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆஸ்திரேலியாவில், அடுத்தடுத்து பதவிக்குவந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சியின் அரசாங்கங்கள், உண்மையில் அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் என்றாலும், அவரை பாதுகாக்க மறுத்துவிட்டன. மாறாக, அவருக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பழிதீர்ப்பில் ஆஸ்திரேலிய ஸ்தாபகமும் இணைந்து கொண்டது.

போலி-இடது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மிகுந்த சுய-பாணியிலான “சிவில் உரிமைகள்” அமைப்புக்கள் தங்கள் பங்கிற்கு அசான்ஜை கைவிட்டுவிட்டதுடன், ஏகாதிபத்தியப் போர் மற்றும் அடக்குமுறை கொண்டு அவர்களது அமைதியை அவர்கள் பாதுகாக்கும் வகையில் ஓநாய்களிடம் அவரை வீசியெறிந்துவிட்டன.

உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் எந்தவொரு பிரிவினரும் அசான்ஜ் அல்லது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மாட்டார்கள் என்பதை இந்த பதிவு நிரூபிக்கிறது.

அசான்ஜ் மற்றும் மானிங் போன்ற வர்க்கப் போர் கைதிகளை விடுவிப்பதற்கும், சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பத்தைத் தோற்கடிப்பதற்குமான ஒரே சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கமே உள்ளது. தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 48,000 அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் முதல், அசான்ஜை அவரை துன்புறுத்துபவர்களிடம் ஒப்படைத்த அதே ஊழல் நிறைந்த ஈக்வடோரிய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நூறாயிரக்கணக்கானவர்கள் வரை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அசான்ஜின் பாதுகாப்பு என்பது, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பதில் ஒரு முக்கிய கூறாகும். அவருக்கு எதிரான பிரச்சாரம் எப்போதுமே அரசாங்கத்தின் குற்றங்களையும் சட்டவிரோதங்களையும் எதிர்க்கும் மற்றும் அதிகாரத்துவங்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் எவரையும் பழிவாங்குவதற்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது. அவர் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்படுமானால், அது ஜனநாயக உரிமைகள் மீதான, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இன்னும் பெரிய தாக்குதல்களுக்கான மடைதிறப்பாக இருக்கும்.

அசான்ஜ், மானிங் மற்றும் அனைத்து வர்க்கப் போர் கைதிகளின் உடனடி மற்றும் நிபந்தனையற்ற விடுதலைக்கான எங்களது சர்வதேச பிரச்சாரத்தில் இணையும் படி அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் உரிமைகளின் பாதுகாவலர்கள் ஆகியோருக்கு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கின்றது.

Loading