இலங்கை: ஜே.வி.பி. கல்வி மற்றும் சுகாதரம் சம்பந்தமாக ஒரு முதலாளித்துவ கற்பனாவாத திட்டத்தை முன்வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) அமைப்பு, ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் குறித்த இரண்டு கொள்கை அறிக்கைகளை தனித்தனியாக வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி-யைச் சுற்றியுள்ள “வல்லுநர்கள்” குழுவால் தயாரிக்கப்பட்ட அதன் அறிக்கையில், “தரமான கல்வி” மற்றும் “தரமான சுகாதாரப் பாதுகாப்பு” குறித்த முகாமைத்துவம் மற்றும் நிர்வாக திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

3 முதல் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு கல்வியை வழங்குதல், குழந்தைகள் மேம்பாட்டு மையத்தை அமைத்தல், சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யும் பாடசாலை முறையை அமைத்தல், அத்துடன் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் பிற நிபுணத்துவ சேவைகளுக்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவது உட்பட திட்டங்கள் கல்வி பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை ஆரோக்கியத்திற்காக முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதை 3 சதவீதமாக உயர்த்தவும், ஒரு தேசிய சுகாதார மேம்பாட்டு பணியகத்தை நிறுவுதல், மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க அரசு மருந்தகங்களின் அளவை அதிகரித்தல், அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோயாளர் காவு வண்டிகள் வழங்குதல் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அதன் சுகாதார கொள்கை பிரகடனத்தில் அடங்கும்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம், கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது பற்றிய வாய்ச்சவடால்களை மீறி, இப்போது சேவைகளில் இருக்கும் மற்றும் வளர்ந்து வரும் தனியார் முதலாளித்துவ முதலீட்டாளர்களின் வருகையைப் பாதுகாக்கின்றன.

கல்வி “சிதைக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ்” பிரேரிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு குறிப்பிட்டளவு காலம் தேவைப்படுவதால், தனியார் கல்வியை பல்வேறு மட்டங்களில் ஒழுங்குபடுத்துவதற்கு "தற்காலிக நிறுவன கட்டமைப்புகளை" உருவாக்க வேண்டும் என கல்விக் கொள்கையின் முன்னுரையில் கூறப்படுகின்றது. இது ஜே.வி.பி. அரசாங்கத்தின் கீழ் தனியார் கல்வி சேவைகள் பாதுகாக்கப்படும் என்று முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் கொடுப்பதாகும். "தற்காலிக" என்ற வினையெச்சம் மாணவர்களையும் பொது மக்களையும் திசை திருப்பிவிட பயன்படுத்தப்படுகிறது.

கல்வி குறித்த தனது அறிக்கையில், கல்வியை "பண்பு ரீதியாக" அபிவிருத்தி செய்வது பற்றி உத்தரவாதம் கொடுக்கின்ற அதே வேளை, "கல்வி என்பது தொழில் சந்தை மற்றும் தொழில் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக மட்டும் இல்லாமல், சமூகத் தேவையையும் பலன்களையும் அபிவிருத்தி செய்யக்கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பங்களிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்துகிறது. அதாவது, உழைப்புச் சக்தியை விற்பனைப் பொருளாக (முதலீட்டாளர்களுக்கு) விற்பதற்கு பொருத்தமான விதத்திலும் மேலும் மேலும் இலாபத்தை பிழிந்தெடுக்கக் கூடியவாறு உழைப்புத் திறனை உயர்த்தக் கூடியவாறு கல்வியை வடிவமைக்க வேண்டும்.

சுகாதார சேவையை “ஒழுங்கமைத்து” பராமரிப்பது என்ற போலிக்காரணத்தின் கீழ், தனியார் சுகாதார சேவை பாதுகாக்கப்படும் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பிரகடனத்தின் "தனியார் சுகாதார சேவை" என்ற பிரிவின் கீழ் குறிப்பிடப்படுவதாவது: "அனைத்து குடிமக்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனக் கருதும் அதே வேளை, பொதுவான தேசிய சுகாதார திட்டத்தின் படி, தனியார் சுகாதார சேவைகளின் அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படும்."

உலக முதலாளித்துவம் விரைவாக பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சரிந்து வருகின்ற சூழ்நிலையில், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையில், என்.பி.பி. முன்வைக்கின்ற தேசியவாத பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டங்களை அமுல்படுத்துவதற்கோ, தனியார் முதலீட்டை மக்களுக்கு “விரும்பத்தக்க வகையில்” "ஒழுங்குபடுத்துவதற்கோ" வாய்ப்பு கிடையாது.

இந்த புறநிலை உண்மை, என்.பி.பி.இன் கல்வி மற்றும் சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கிய "புத்திஜீவிகளுக்கு" தெரியாமல் போனதற்கு காரணம், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் உயர் நடுத்தர வர்க்கத்தின் நலன்களின் நோக்கில் இருந்து, அனைத்து சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளையும் பார்ப்பதே ஆகும்.

ஜே.வி.பி. முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு கட்சி ஆகும். அது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் முதல் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வரை, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஆதரவளித்த ஒரு கட்சி ஆகும்.

இலங்கை 2021ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும். மிக சமீபத்திய ஆய்வின்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2018 இல் நூற்றுக்கு 3.2 சதவீதமாகும். இது 17 ஆண்டுகளில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். இது இந்த ஆண்டு மேலும் 2.5 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின்படியே தனது பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் பாதீட்டுப் பற்றாக்குறையானது அடுத்த 2020 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்த பாதீட்டுப் பற்றாக்குறை, இந்த ஆண்டு 5.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நலன்புரி சேவைகளுக்கான சேவைகளையும், அதே போல், அரசாங்கத் துறையில் தொழில்கள் மற்றும் ஊதியங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும், அரசு நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு தனியார்மயமாக்கல் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு முதலாளித்துவ அல்லது "இடது" அரசாங்கமும் சர்வதேச பொருளாதார மூலதனம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு புறம்பாக தனது பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள முடியாது.

சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச மூலதனத்தின் பிடியை ஒழித்து, இலங்கையில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கி வீசுவதன் மூலம் மட்டுமே கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூக நல சேவைகளை பராமரிக்கவும் வறுமை, வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையை அகற்றுவதற்கு நிதியளிக்கவும் முடியும்.

அதாவது, வங்கிகள், தொழில் மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட முதலாளித்துவ சொத்துக்களை தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும். இலங்கையில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது. அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அதன் வேலைத்திட்டத்தைப் படிக்குமாறும், சோ.ச.க.வை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading