இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலுக்கான தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அடுத்த பொதுக் கூட்டம் அக்டோபர் 24 வியாழக்கிழமை கண்டியில் நடைபெறும்.

சோ.ச.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, கட்சியின் நீண்டகால அரசியல் குழு உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் ஆவார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடையே சர்வதேச சோசலிசத்திற்காக போராடிய நீண்ட வரலாறு அவருக்கு உள்ளது.

இலங்கை ஆளும் வர்க்கம் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது –இந்த நெருக்கடி உலகப் பொருளாதார பொறிவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உக்கிரமாக்கப்படும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீள் எழுச்சியின் ஒரு பகுதியாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாகும்.

அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து கட்சிகளும் மக்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து போயுள்ளன. சோ.ச.க.வைத் தவிர, ஜனாதிபதி தேர்தலில் மேலும் 34 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நீண்ட பட்டியல் இலங்கையின் ஆளும் உயரடுக்கின் நெருக்கடியின் மற்றொரு அறிகுறியாகும்.

ஆழமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சியையும், வளர்ந்து வரும் வெளிநாட்டுக் கடன்களையும் எதிர்கொண்டு, வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் அதிர்ச்சியடைந்து போயுள்ள ஆளும் வர்க்கக் கட்சிகள், உலகெங்கிலும் உள்ள தங்கள் சமதரப்பினரைப் போலவே, சர்வாதிகார முறைகளை நோக்கி நகர்கின்றன. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட இந்த கட்சிகள் அனைத்தும் “வலுவான அரசாங்கத்தை” அமைக்கவும் “தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதவும்” அழைப்பு விடுக்கின்றன. இது அடக்குமுறையின் மொழி ஆகும்.

நவ சம சமாஜக் கட்சி, முன்நிலை சோசலிச கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடது கட்சிகள் “சோசலிச” வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாகக் கூறுகின்றன. இந்த கூற்றுக்கள் போலியானவை. இந்த முழு தேசியவாதக் கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையினுள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான ஆழமான தாக்குதல்களுக்கு தேசியவாத தீர்வு என்று எதுவும் கிடையாது.

சோ.ச.க., ஏனைய அனைத்து கட்சிகளுக்கு எதிராகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டவும் சர்வதேச ஐக்கியத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்கிறது. அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக துன்புறுத்தப்படும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் அம்பலப்படுத்திய செல்சி மனிங் ஆகியோரைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய பிரச்சாரம், இந்த போராட்டத்தின் தீர்க்கமான ஒரு அங்கம் ஆகும்.

இந்த சூழலில், தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக சோ.ச.க. போராடுகின்றது.

சோ.ச.க. தேர்தல் கூட்டங்களில் இதைப் பற்றியும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் பிற முக்கிய அரசியல் பிரச்சினைகளையும் பற்றி கலந்துரையாடப்படும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டம் நடக்கும் இடங்கள் மற்றும் திகதிகள்:

அக்டோபர் 24, மாலை 4 மணி. - கண்டி, டெவன் மண்டபம்

அக்டோபர் 30, மாலை 4 மணி. - காலி விளையாட்டரங்க மண்டபம்

நவம்பர் 3, பி.ப. 2 மணி - ஹட்டன், நகர மண்டபம்

நவம்பர் 6, மாலை 4 மணி. - சிலாபம், சுதசுன மண்டபம்

நவம்பர் 7, மாலை 4 மணி. - கம்பஹா, நகரசபை நூலக மண்டபம்

நவம்பர் 8, மாலை 3.30 மணி. - குருணாகல், வை.எம்.பி.ஏ. மண்டபம்

நவம்பர் 11, மாலை 4 மணி. – கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

Loading