இடிக்கப்பட்ட மசூதி குறித்த தீர்ப்பை வழங்கி

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்து மேலாதிக்க வன்முறையை சட்டபூர்வமாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை வழங்கிய அதன் தீர்ப்பில், உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரபல மசூதி ஒன்றை இடிப்பதற்காக ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியும் (BJP) மற்றும் அதன் இந்து மேலாதிக்க கூட்டணிக் கட்சிகளும் அதிகரித்தளவில் நிகழ்த்தியுள்ள வன்முறையையும், பல தசாப்தங்கள் நீண்ட கிளர்ச்சியையும் சட்ட ரீதியாக நியாயப்படுத்தி, புராண இந்து கடவுளான இராமருக்கு அந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டமைக்க ஆணையிட்டுள்ளது.

அப்போதைய மிக மூத்த பிஜேபி தலைவர்களின் வற்புறுத்தலின் பேரிலும், உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படையான உத்தரவுகளை மீறியும், இந்து வகுப்புவாத ஆர்வலர்கள் டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை கடுமையாக தாக்கி, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அக்கட்டமைப்பை கோடாரிகளையும், பெரிய சம்மட்டிகளையும் கொண்டு இடித்து தகர்த்தனர். பாபர் மசூதி இடிப்பு என்பது, இந்திய துணைக் கண்டம் 1947 இல் வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் முக்கியமாக இந்து இந்தியா என்று பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவில் இது மிகக் கடுமையான இரத்தக்களரியை அப்போது தூண்டியது. 2,000 க்கும் அதிகமானோர், அவர்களில் பெரும்பாலானோர் ஏழை முஸ்லீம்கள், வகுப்புவாத கலவரங்கள் மற்றும் அட்டூழியங்களால் கொல்லப்பட்டனர்.

இந்திய உச்ச நீதிமன்றம் அதன் சனிக்கிழமை தீர்ப்பை வழங்கி, பாபர் மசூதி அழிக்கப்பட்டதை சட்ட ரீதியாக செல்லத்தக்கதாக்கி, இராமர் வழிபாட்டிற்கு அர்ப்பணிப்பாக ஒரு கோவிலை அது முன்பிருந்த இடத்தில் கட்டமைப்பதற்கு அனுமதியையும் வழங்கியுள்ளது. உண்மையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராம் மந்திர் (கோவில்) கட்டுமானப் பணியை மேற்பார்வையிட பிஜேபி அரசாங்கத்திற்கு “உத்தரவிட்டுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அவரது பிஜேபி யும், மேலும் பிஜேபி க்கு பெரும்பாலான முன்னணி தலைவர்களை வழங்கும் நிழல் இந்து தேசியவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர்களும், நீதிமன்றத் தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதில் ஆச்சரியமில்லை.

“இந்த தீர்ப்பு நீதித்துறை செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும்,” என்று மோடி ட்வீட் செய்தார்.

இன்னும் கூடுதல் அருவருப்பான பாசாங்குத்தனத்தின் உச்சக்கட்டமாக, இந்தியாவின் பிரதமர், இந்த ஒரு தீர்ப்பு இந்து மேலாதிக்க உரிமையை சரியாக நிலைநாட்டுவதோடு, அதற்கு மேலும் வலுவூட்டும் என்றும், “இது சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை தெளிவாக விளக்குகிறது” என்றும் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே, ராம் மந்திரை கட்டியெழுப்ப பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆர்.எஸ்.எஸ். இலிருந்து பிரிந்து உருவான அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை மேற்கொண்ட பிரச்சாரம் மத தெளிவின்மையை —அதாவது பாபர் மசூதி இருந்த இடம் புராணக் கடவுள் இராமர் பிறந்த இடம் என்ற கூற்றால் எடுத்துக் காட்டியது போல— திட்டமிடப்பட்ட வகுப்புவாத அரசியல் ஆத்திரமூட்டலுடன் இணைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில், “இந்து தன்மையை” அதாவது, இந்து மேலாதிக்கத்தை வலியுறுத்துவதற்காக, பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற அவர்களின் தீமூட்டும் கோரிக்கையை பிரபலப்படுத்தும் வகையில், பிஜேபி தலைவர் எல்.கே. அத்வானி தேசிய அளவிலான பேரணிகளை நடத்தினார். அத்வானியின் ராம ரத யாத்திரை பிரச்சாரம் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வகுப்புவாத வன்முறையை தூண்டியதுடன், 1990 அக்டோபர் தொடக்கத்தில் பாபர் மசூதியை இடித்து தகர்க்கும் முயற்சியின் உச்சக்கட்டத்திற்கு இட்டுச் சென்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பாபர் மசூதி மீதான வெற்றிகரமான தாக்குதலை மூடி மறைப்பதற்காக, அத்வானியும் மற்றும் பிஜேபி இன் பிற மூத்த தலைவர்களும் டிசம்பர் 6, 1992 அன்று மிகப்பெரும் பேரணி ஒன்றை ஒழுங்கமைத்து அதில் உரையாற்றினர், இதை பிஜேபி இன் உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி” என்று அரசாங்க விசாரணை ஆணையம் கண்டறிந்தது. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.– வி.ஹெச்.பி. ஆர்வலர்கள் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியை அழித்த அதேவேளை, உத்திரபிரதேசத்தின் பிஜேபி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான பொலிசார் அங்கு நின்றிருந்தனர்.

அப்போதிருந்து, இந்தியாவை இந்து ராஜ் அல்லது இந்து தேசமாக மாற்றும் அவர்களது இலக்கை அடைவதற்கான முக்கிய படியாக ராம் மந்திர் கட்டுவதை பிஜேபி உம் ஆர்.எஸ்.எஸ். உம் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.

சனிக்கிழமை வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, 2010 அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை புறம் தள்ளிவிட்டது, அது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்ற பாகங்களாக பிரித்து, இந்து அமைப்புக்களுக்கு மூன்றில் இரண்டு பாகங்களையும், எஞ்சிய ஒரு பாகத்தை வாஃஹ்பின் சுன்னி (முஸ்லீம்) மத்திய வாரியத்திற்கும் ஒதுக்கீடு செய்திருந்தது. அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு, “இந்து மேலாதிக்க சித்தாந்தத்தையும், வன்முறையையும் நியாயப்படுத்தும் ஒரு வெட்கக்கேடான முடிவு” என்று சரியாக அழைத்தது. (பார்க்கவும்: Indian High Court abets Hindu supremacists with Babri Masjid ruling).

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு சனிக்கிழமை வழங்கிய ஏகமனதான தீர்ப்பு, ஒட்டுமொத்த இடத்திற்கான உரிமையை வழங்கவில்லை என்று கோபமடைந்திருந்த இந்து வலதின் கோரிக்கைகளுக்கு ஏற்புடையதாக இன்னும் கூடுதலாக வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டது.

நவம்பர் 9 உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்தியாவின் அரசு நிறுவனங்கள் எந்த அளவிற்கு இந்து வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும், இந்தியாவின் ஆளும் உயரடுக்கு மிக அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகளுடன் முறித்துக்கொண்டு, சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கி திரும்புவதையும் உறுதிப்படுத்துகிறது.

இது, காஷ்மீருக்கு எதிரான மோடி அரசாங்கத்தின் அரசியலமைப்பு சதித்திட்டத்தையடுத்து நெருக்கமாக பின்தொடர்கிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பிஜேபி அரசாங்கம், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் (J&K) தனிப்பட்ட பகுதியளவிலான தன்னாட்சி அந்தஸ்தை சட்டவிரோதமாக பறித்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதோடு, அப்பகுதியை மத்திய அரசின் நிரந்தர கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இச்சூழ்நிலையில், பெரும் எதிர்ப்புகளை எதிர்நோக்கி, மிகப்பெரும் “தடுப்பு” கைது நடவடிக்கைகள், மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள், பெரும்பாலான செல்போன் சேவைகளையும் மற்றும் அனைத்து இணைய தளங்களையும் அணுகுவதற்கு மறுப்பு ஆகியவை உட்பட ஜம்மு-காஷ்மீரை புதிய முற்றுகையின் கீழ் புது தில்லி கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் பச்சைக்கொடி காட்டி வந்தது. இந்தியாவின் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, உலக அரங்கில் இந்தியாவின் பெரும் வல்லரசு அபிலாஷைகளை உறுதிபடுத்த “உறுதியான நடவடிக்கைகளை” எடுக்கவும், இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தவும் விரும்பிய, மேலும் காஷ்மீர் மீதான மோடியின் தாக்குதலுக்கு ஆதரவாக இருந்ததுமான இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கிலிருந்து தங்களுக்கான குறிப்பை அவை எடுத்துக் கொண்டுள்ளன.

அயோத்தி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிர்க்கட்சியினரின் பிரதிபலிப்பு இதேபோன்று உள்ளது. சமீபகாலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் முன்னுரிமை பெற்ற அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றதோடு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோவிலை கட்டமைக்க அதன் ஆதரவையும் தெரிவித்தது.

காங்கிரஸ், மதச்சார்பின்மையின் ஒரு அரணாக தாம் இருப்பதாக கூறுகிறது, ஆனால் உண்மையில் இது 1947 தெற்காசியாவின் வகுப்புவாதப் பிரிவினையை அமல்படுத்துவது உட்பட, இந்து வலதுடன் இணைந்த ஒரு நீண்ட மற்றும் மோசமான பதிவைக் கொண்டுள்ளது. பாபர் மசூதி மீதான 1992 தாக்குதல் குறித்து காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன, என்றாலும் அதைத் தொடர அவர் அனுமதித்தார். தற்போது, காங்கிரஸ், இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது தொடர்பாக, சமீபகாலம் வரை பிஜேபி இன் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் பாசிச சிவசேனா கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

பிஜேபி மற்றும் இந்து மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் நீதித்துறையும் காங்கிரஸூம் தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகள் என்ற தவறான பொய்யை ஊக்குவித்து வரும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு அதன் ஆதரவை சமிக்ஞை செய்யும் விதமாக மறைமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு இந்து மேலாதிக்கத்தின் குற்றவியல் தன்மையையும் வன்முறையையும் வெளிப்படையாக நியாயப்படுத்துவதோடு, அதற்கு சன்மானமும் வழங்குகிறது. ஆயினும், சிபிஎம் அரசியல் குழுவின் அறிக்கை, தீர்ப்பின் “கேள்விக்குரிய” அம்சங்களை வெறுமனே குறிப்பிடுகிறது, அதே நேரத்தில், “பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியாவிட்டால்” அயோத்தி சர்ச்சை நீதிமன்றங்களால் தீர்க்கப்பட வேண்டும் என்ற அதன் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்குவதில் ஒரு சட்டபூர்வ பரிகாசமாக மட்டுமே இருக்க முடியும். இது, மோடி, பிஜேபி அரசாங்கம் மற்றும் இந்து வலது ஆகியோரின் வன்முறை மிக்க, இந்து மேலாதிக்க ராம் மந்திர் போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு தெளிவான வெற்றியை வழங்குவதன் மூலமாக அவர்களை பலப்படுத்துவதற்காக முன்னரே தீர்மானிக்கப்பட்ட விளைவுகளுடன் புனையப்பட்டது.

இந்த தீர்ப்பு, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் மற்றும் அனைத்து மதங்களின் சமத்துவம் தொடர்பான பாசாங்குத்தனமான மறு உறுதிப்படுத்துதல்களில் புதைந்துள்ளது. 1992 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஒரு குற்றமே என அது ஒப்புக்கொள்கிறது. அதேபோல, முஸ்லீம் வழிபாட்டாளர்களை மசூதிக்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக வகுப்புவாத இந்து மகாசபாவுடன் இணைந்து செயல்படும் உள்ளூர் அதிகாரிகளுக்கு சட்டபூர்வமான சாக்குப்போக்கை வழங்குவதாக, 1949 இல் ராம் லல்லா (“குழந்தை ராம்”) சிலைகள் பாபர் மசூதிக்கு கடத்தப்பட்டது ஒரு குற்றவியல் நடவடிக்கையே என்பதாக இது கண்டறிந்தது.

ஆனால், இவை எதுவுமே இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஏகமனதாக ஒரு தெளிவற்ற, இந்து மேலாதிக்க தீர்ப்பை வெளியிடுவதைத் தடுக்கவில்லை என்பதுடன் —முஸ்லீம்கள் ஒருபோதும் ஒட்டுமொத்த பகுதி மீதான பிரத்தியேக அதிகார வரம்பை பயன்படுத்தவில்லை என்ற போலியான கூற்றின் அடிப்படையில்— சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான உரிமை சட்டபூர்வமாக கடவுள் ராம் லல்லா அல்லது குழந்தை தெய்வம் ராமனையே சாரும் என்றும் அறிவிக்கிறது.

இந்தியாவின் 200 மில்லியன் முஸ்லீம்களைப் பொறுத்தவரை, பாபர் மசூதியின் “குற்றகரமான” அழிவு குறித்தும், ராம் லல்லா கோவிலை கட்டியெழுப்பி, அதன் மூலம் இந்து மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முனையும் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றிற்காக, ஒரு புதிய மசூதி கட்டுவதற்கு குறிப்பிடப்படாத ஒரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்குவதன் மூலமாக அவர்கள் சாந்தமடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகவும், மற்றும் அதனையடுத்து டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை மூழ்கடித்த வகுப்புவாத வன்முறை அலை குறித்தும் அத்வானி, அல்லது பிற முக்கிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்கள் மீது வெற்றிகரமாக வழக்கு தொடர்வதில் இந்திய அரசு அதிகாரிகள் –அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறை– கண்ட தோல்வி குறித்து உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக மவுனமாக உள்ளது என்பதும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

இதுவே, “ஜனநாயக, மதச்சார்பற்ற” இந்தியாவின் நிலை, மேலும் 2019 இல் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் மனநிலையும் இதுவே!

Loading