இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை, 5,000 க்கும் அதிகமானோர் கைது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வணிக சார்பு தெலுங்கானா இராஷ்ட்ர சமிதி (TRS) யின் மாநில அரசு. 48,000 தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (Telangana State Road Transport Corporation - TSRTC) தொழிலாளர்கள் நடத்திய ஐந்து வார வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (Joint Action Committee - JAC) தலைவர்கள் உட்பட 5,000 க்கும் அதிகமானோரை வெள்ளிக்கிழமையன்று “தடுப்புக் காவலில்” வைக்கப்பட்டனர். அந்த வலதுசாரி அரசாங்கத்திற்கு கே. சி. ஆர் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் எதேச்சதிகார முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமை தாங்குகிறார்.

தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் நகரில், 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற செயற்கை ஏரி உள்ள "டேங்க் பண்டில்" சனிக்கிழமையன்று JAC அறிவித்த வெகுஜன பேரணியில் தொழிலாளர்கள் பங்கேற்பதைத் தடுக்க தெலுங்கானா மாநிலம் முழுவதும் பொலிஸ் சோதனைகள் மற்றும் வெகுஜன சுற்றிவளைப்புக்கு கே.சி.ஆர் அரசாங்கம் உத்தரவிட்டது.

தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்கும்படி அவரது பொலிசுக்கு அறிவுறுத்தினார், இது தொழிலாளர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கூட்டம் நடத்துவது போன்ற தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை மீதான அப்பட்டமான தாக்குதலேயாகும். இந்த பேரணி "பொதுமக்களுக்கு சிரமம்” மற்றும் "சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை" ஏற்படுத்தும் என்று காவல்துறை கூறியது.

ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தடையை மீறி பேரணியின் இடத்திற்கு செல்ல முடிவு செய்தபோது, காவல்துறையினர் குழுக்கள் அமைத்து அவர்களை தடியடிகளால் கடுமையாக தாக்கினர். அவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். பல தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர் மற்றும் சிலர் காவல்துறையினரின் தாக்குதலின் கீழ் சரிந்துவிழுந்தனர்.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்து பேரினவாத பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உட்பட மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தலைவர்கள் TRS அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக தொழிலாளர்களின் ஆதரவாளர்களாக இழிந்த முறையில் காட்டிக்கொண்டனர்.

TSRTC ஓட்டுநர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அக்டோபர் 5 முதல் கைது மற்றும் அவர்களின் மோசமான ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளில் கணிசமான முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைக்குத் திரும்புவது குறித்து கே.சி.ஆரின் இரண்டாவது இறுதி எச்சரிக்கையை மீறி அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், அதாவது நவம்பர் 5 உடனடியாக வேலைக்குத் திரும்பும் தேதியாக கெடு விதிக்கப்பட்டது அல்லது விசாரணை நடவடிக்கைகள் ஏதுமில்லாம்ல உடனடியாக நீக்கப்படுவர்.

தொழிலாளர்கள் மாலை 6 மணிக்குள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பி வராவிட்டால், அன்று மாலை அவர்கள் "எந்த சூழ்நிலையிலும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்" என்று வேலைநிறுத்தம் தொடங்கிய அன்றே முதல்வர் ஆணையிட்டிருந்தார்.

இழந்த ஊதியத்தின் விளைவாக தமக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துன்பங்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் இதுவரை கே.சி.ஆரின் அச்சுறுத்தல்களுக்கு சவால் விடுத்துள்ளனர் என்பது முதலமைச்சர் கே.சி.ஆர் ஐயும் அவர் பேசும் பெருநிறுவன நலன்களையும் மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

தொழிலாளர்கள் தங்கள் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்த 26 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் ஆனால் TSRTC ஐ தனியார்மயமாக்குவதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான எதிர்ப்பு மையப் பிரச்சினையாக இருக்கிறது. அதற்கு பதிலாக பெரும்பான்மையான மக்கள் சார்ந்துள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தை நேரடியாக மாநில அரசாங்கத்தில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் மாநில நிதியிலிருந்து பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்காக TSRTC க்கு வழங்கப்படாத நிலையில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அதிகரித்த கடன் மற்றும் மோசமான இழப்புகளின் விஷமத்தனமான சுழற்சிக்களுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளது.

நவம்பர் 2 ம் தேதி, சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், 10,400 TSRTC வழித்தடங்களில் 5,100 ஐ தனியார்மயமாக்குவதாக கே.சி.ஆர் அறிவித்தார்.

TSRTC யின் விதியைத்தான் இந்தியா முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சாலை போக்குவரத்து நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இந்திய ஸ்ராலினிச கம்யூனிசக் கட்சி (CPM) யின் இடது ஜனநாயக முன்னணியின் தலைமை ஆளும் கேரளா மாநிலத்தில், நவம்பர் 4 அன்று ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க கோரி ஒரு 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தினார்கள். அதற்கு CPM பொலிட்பீரோ உறுப்பினரான ஸ்ராலினிச முதலமைச்சர் பினராயி விஜயனின் பதில் தொழிலாளர்களைத் தாக்குவதாக இருந்தது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு (KSRTC) "dies non” சட்டத்தை (வேலையும் இல்லை, ஊதியமும் இல்லை) செயல்படுத்த அனுமதித்தார், ஏனெனில் தொழிலாளர்கள் தங்களது சம்பள காசோலைகள் மற்றும் பிற கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் செலுத்துமாறு கோருகின்றனர்.

கே.சி.ஆரின் எதேச்சதிகார முறைகள் மற்றும் டி.எஸ்.ஆர்.டி.சியை மாநில அளவில் தனியார்மயமாக்குவதற்கான அவரது உந்துதல் தேசிய மட்டத்தில் பாஜகவின் இந்து மேலாதிக்க பிரதமர் நரேந்திர மோடியின் எதேச்சதிகார ஆட்சிக்கு இணையாகும். ஆகஸ்ட் மாதம், மோடியின் கீழ் உள்ள பாஜக அரசு ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் இந்திய அரசியலமைப்பு காஷ்மீருக்கு நீண்ட காலமாக வழங்கிய சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது.

தொழிலாளர்களிடமிருந்து இன்னும் அதிகமான இலாபங்களை கசக்கி, இந்திய உயரடுக்கை மேலும் வளப்படுத்த, மோடியும் அவரது வலதுசாரி அமைச்சரவையும் மாபெரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு ஒற்றை எண்ணத்துடன் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கடந்த ஜனவரியில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரான நிதின் கட்கரி, அனைத்து பொது போக்குவரத்தையும் தனியார்மயமாக்க அனைத்து மாநில அரசுகளையும் பகிரங்கமாக அறிவுறுத்தினார். இந்த அத்தியாவசிய சேவைகளுக்கு நிதி வழங்க அரசுக்கு கட்டுபடியாகாது என்று அவர் கூறினார். இந்திய மக்கள் தங்கள் அன்றாட பயணங்களுக்கும் நீண்ட தூர பயணங்களுக்கும் தற்போதுள்ள ஒப்பீட்டளவில் மலிவான சாலை போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ளனர்.

டி.எஸ்.ஆர்.டி.சி தொழிலாளர்களின் மிகப்பெரிய தைரியம் மற்றும் வேகம் இருந்தபோதிலும், ஜே.ஏ.சியின் அழுகிய தொழிற்சங்கத் தலைமை காரணமாக வேலைநிறுத்தம் பெரும் ஆபத்தில் உள்ளது. இந்த நிர்வாகிகள், இந்திய தொழிலாள வர்க்கத்தின் மிகவும் உறுதியான எதிரியான மோடி தலைமையிலான பாஜக தேசிய அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனிக்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை "மில்லியன் மனித அணிவகுப்பு" என்று ஜேஏசி கூறியது, இது 2011 ஆம் ஆண்டில் கே.சி.ஆர் தலைமையிலான ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்புக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தெலுங்கானா ஒரு தனி மாநிலமாவதற்காக கிளர்ச்சி செய்தது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து இப்பகுதி கூறு போடப்பட்ட பின்னர் 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா ஒரு தனி மாநிலமாக மாறியது

தற்போதைய டி.எஸ்.ஆர்.டி.சி தொழிற்சங்கத் தலைவர்கள், ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புடன், தெலுங்கானாவின் தொழிலாளர்களிடம் கே.சி.ஆரின் டி.ஆர்.எஸ் கட்சியை ஆதரிக்குமாறு அறிவுறுத்தினர், தெலுங்கானா ஒரு தனி மாநிலமாக மாறினால் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்று உறுதியளித்தார். டி.எஸ்.ஆர்.டி.சி தொழிலாளர்களுக்கு எதிரான கே.சி.ஆரின் கடுமையான பாதை திருப்பிதாக்கக்கூடும் மற்றும் ஒரு பரந்த சமூக மோதலை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை கொண்ட தெலுங்கானா உயர் நீதிமன்றம், நவம்பர் 2 ம் தேதி அவர் அறிவித்த 5,100 வழிகளை தனியார்மயமாக்குவதற்கான கே.சி.ஆரின் நடவடிக்கையைத் தடுத்தது.

அதன் அடுத்த விசாரணை நவம்பர் 11 அன்று. உயர்நீதிமன்றம் தங்கள் பக்கம் இருப்பதாக மாயைகளை ஜே.ஏ.சி விதைத்து வருகிறது. இந்திய நீதிமன்றங்கள் எப்போதுமே தொழிலாள வர்க்கத்தின் மீது குறிப்பாக மிருகத்தனமாக இருந்தன. வட மாநிலமான ஹரியானாவில் உள்ள உயர்நீதிமன்றம் 13 அப்பாவி மாருதி சுசுகி வாகனத் தொழிலாளர்களுக்கு மார்ச் 2017 இல் கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தபோது இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

Loading