ஸ்பானிய தேர்தல்களும், பாசிசவாத வோக்ஸ் கட்சியின் வளர்ச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்பானிய தேர்தல்களில் பாசிசவாத வோக்ஸ் கட்சி வேகமாக மேலுயர்ந்திருப்பது ஸ்பெயினிலும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் தீவிர அரசியல் அபாயங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். அதிகரித்து வரும் அரசியல் போராட்டம் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான கோபத்தை முகங்கொடுத்திருக்கும் ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தில் எழும் சமூக எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கு பணிபுரியும் பாசிசவாத பொலிஸ் அரசுகளை அமைப்பதை நோக்கி நகர்கிறது.

ஸ்பானிய இரண்டாம் குடியரசின் கீழ் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வந்த தீவிரமயப்படலுக்கு எதிராக 1936 இல் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்கிய பாசிசவாத சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் "தேசிய ஆயுதப்படை" இனது முன்வரலாறை வோக்ஸ் கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாகவே புகழ்ந்துரைத்துள்ளனர். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு போர், கால் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கும் மற்றும் பிராங்கோ மரணித்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1978 வரையில் ஸ்பெயினை ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரத்திற்கும் இட்டுச் சென்றது. பிராங்கோ நூறாயிரக் கணக்கானவர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்தார், வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதித்தார், பத்திரிகைகளைத் தணிக்கை செய்ததுடன் இரகசிய பொலிஸால் ஆயிரக் கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.

ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களால் பிராங்கோ ஆட்சி மிகவும் வெறுக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்த பின்னர் 2014 இலேயே வோக்ஸ் கட்சி நிறுவப்பட்டது, அதற்கு நடைமுறையளவில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக, ஆயுதப்படையின் உயரதிகாரிகள் மத்தியிலும் மற்றும் ஜனரஞ்சக கட்சிக்கு (Popular Party - PP) உள்ளேயும் அது பரந்த தொடர்புகளைக் கொண்டிருந்த போதினும் கூட, வாக்குகளில் வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக, 50,000 அல்லது அதற்கும் குறைவான வாக்குகளையே வென்றது.

ஆனால் அக்டோபர் 2017 இல் கட்டலான் சுதந்திரத்திற்கான அமைதியான கருத்து வாக்கெடுப்பில் நடத்தப்பட்ட மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறைக்குப் பின்னரும், மற்றும் கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கடந்த மாதம் பார்சிலோனாவில் நடந்த பாரிய போராட்டங்களுக்கு எதிராக ஊடகங்களினது ஸ்பானிய தேசியவாத தாக்குதல்களுக்கு மத்தியிலும் தான் வோக்ஸின் வாக்குகள் அதிகரித்தன. ஞாயிறன்று, வோக்ஸ் 3.6 மில்லியன் வாக்குகள், அல்லது 15 சதவீதம் வாக்குகள் வென்று, அதன் நாடாளுமன்ற அணியின் ஆசனங்களை 24 இல் இருந்து 52 ஆக இரட்டிப்பாக்கியது — அது ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் ஜனரஞ்சக கட்சிக்கு (PP) அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ளது.

வோக்ஸின் வளர்ச்சியானது, நவ-பாசிசவாத கட்சிகளையும், தேசியவாதம் மற்றும் பாசிசவாத சர்வாதிகாரிகளைப் பொதுமக்கள் மத்தியில் உத்தியோகபூர்வமாக சட்டபூர்வமாக்குவதையும் நோக்கி திரும்பி உள்ள ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் பரந்த போக்கின் ஒரு பகுதியாகும்.

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்களும் அரசு அதிகாரிகளும் இராணுவவாதத்தை சட்டபூர்வமாக்கவும் மற்றும் நாஜிசத்தின் இனப்படுகொலை குற்றங்களைக் குறைத்துக் காட்டவும் நடத்திய ஆண்டுக்கணக்கிலான பிரச்சாரத்திற்குப் பின்னர், ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி தற்போது அங்கே மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உள்ளது. AfD க்கு எதிரான பாரிய போராட்டங்கள், நாஜிசத்திற்கு மறுவாழ்வு கொடுப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் உறுதிப்பாட்டை மட்டுமே தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த வாரம், நாடாளுமன்ற தலைவர் வொல்ஃப்காங் சொய்பிள "அமைதிவாத மனோபாவத்தை" இரண்டாம் உலக போரில் நாஜி தோல்வியின் நாசகரமான விளைவு என்பதாக கண்டித்தார், நாஜி தோல்வியை அவர் "1945 இன் பேரழிவு" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஓராண்டுக்கு முன்னர் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைத் தொடங்கியதுடன், நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை "மாவீரர்" என்று அவர் புகழ்ந்தார். மக்ரோனின் சமூக வெட்டுக்கள் மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், அவர் தொடர்ந்து அதிவலதுக்கு முறையிட்டு வருவதுடன், சமீபத்தியில் அதிவலது பத்திரிகையான Current Values இல் புலம்பெயர்ந்தவர்களையும் முஸ்லீம் முகத்திரையையும் தாக்கி பேட்டி அளித்தார். இதன் விளைவாக, ஒரு ஜனாதிபதி தேர்தலில், 55 க்கு 45 சதவீதம் என்ற அளவில், அவரால் இப்போது நவ-பாசிசவாத மரீன் லூ பென்னைத் தோற்கடிக்க முடியாது என்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

உத்தியோகபூர்வ ஐரோப்பிய அரசியலில் பாசிசத்தின் வளர்ச்சியானது, நாஜி கட்சி, முசோலினியின் தேசிய பாசிவாத கட்சி அல்லது பிராங்கோயிச ஃபலான்ச் அனுபவித்தது போன்ற பாரிய மக்கள் ஆதரவு மீண்டும் திரும்பி இருப்பதை அர்த்தப்படுத்தவில்லை. இது இப்போதைக்கு, சமூக மற்றும் அரசியல் போராட்டத்திற்கு எதிராக வன்முறையான வலதுசாரி தேசியவாத எதிர்ப்பை ஊக்குவிப்பதற்காக, உயர்மட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு, மிகவும் கவனமாக அரங்கேற்றப்பட்டுள்ள ஓர் அரசியல் நடவடிக்கையாக உள்ளது.

வோக்ஸ் கட்சியின் வளர்ச்சி ஒரு சரியான எடுத்துக்காட்டாக அமைகிறது. சுதந்திரத்திற்கான கட்டலான் கருத்து வாக்கெடுப்பை ஒவ்வொரு தரப்பிலிருந்தும் ஊடகங்கள் கண்டித்ததற்கு இடையே, அக்கட்சி அதன் கட்டலான்-விரோத பிரச்சாரத்தின் அடிப்படையில் மேலுயர்ந்தது என்றாலும், கட்டலோனியாவில் ஆயுதப்படைகளை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அரசியல் "குற்றவாளிகளுக்கு" மரண தண்டனை விதிக்க வேண்டுமென்றும் வோக்ஸ் கட்சி விடுத்த அழைப்புகளை ஏற்று எந்த பாரிய இயக்கமும் மேலெழுந்துவிடவில்லை. ஊடகங்களில் கட்டலான்-விரோத விஷமப் பிரச்சாரம் தொடுக்கப்படுவதற்கு மத்தியிலும், ஸ்பானிய மக்களில் பெரும் பெரும்பான்மையினர் கட்டலோனியாவில் பேச்சுவார்த்தை வழியாக ஒரு தீர்வையே ஆதரிக்கிறார்கள் என்பதை கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

வோக்ஸ் கட்சி மற்றும் பிராங்கோவை ஊக்குவிப்பதென்பது பெரும்பான்மையாக அரசு எந்திரங்களில் இருந்து வருகிறது. 2017 இல் அமைதியாக கருத்து வாக்கெடுப்பு ஒழுங்கமைத்ததற்காக கடந்த மாதம் பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள கட்டலான் அதிகாரிகளை வழக்கில் இழுப்பதில், PSOE அதன் பொது வழக்குரைஞர் உடன் உத்தியோகபூர்வமாக இணைவதற்கு வோக்ஸ் ஐ அனுமதித்தது. “பெருந்தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோவை" கௌரவப்படுத்தியும், உள்நாட்டு போரின் போது அக்டோபர் 1, 1936 இல் ஸ்பெயினின் ஆட்சியாளராக சுய-பிரகடனம் செய்து கொண்டமை பிராங்கோவை அரசு தலைவராக ஆக்கியது என்று அறிவித்தும், அதாவது பிராங்கோவின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை முற்றிலும் சட்டபூர்வமாக்கி தீர்ப்பளித்தும், ஜூனில் உச்ச நீதிமன்றம் ஓர் அசாதாரண தீர்ப்பை வழங்கியது.

இறுதியில் ஆளும் உயரடுக்கு, தேர்தல் பிரச்சாரத்தை, கட்டலோனியாவில் நடந்த பாரிய போராட்டங்களை முழுமையாக தாக்குவதன் மீது ஒருமுனைப்படுத்தியது, அந்த போராட்டங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு அவை மூர்க்கமாக ஒடுக்கப்பட்டிருந்தன. வேலைகள், சமூக திட்டங்கள் மற்றும் இராணுவ-பொலிஸ் வன்முறையை நிறுத்துவது போன்ற தொழிலாளர்களின் கவலைக்குரிய பிரச்சினைகள் மேசைக்குக் கொண்டு வரப்படவே இல்லை. முற்றிலும் முதலாளித்துவ வர்க்கத்திற்காக பேசி வரும் காபந்து சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் (PSOE), சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவச் செலவுகளை உயர்த்துவதன் மூலமாக பில்லியன் கணக்கான யூரோக்களுக்கு உறுதியளித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தது. இவை அனைத்தும் வோக்ஸ் கட்சியைப் பெருமைப்படுத்துவதில் விளைவைக் கொண்டிருந்தன.

ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தால் இதுவரையில் அதன் பாசிசவாத-ஆதரவு பிரச்சாரத்திற்கு பரந்த ஆதரவைப் பெற முடியவில்லை என்பது மனநிறைவுக்கான ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. பாசிசவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதுடன், அதன் கட்சிகள் அதிகரித்த ஆதரவைப் பெற்று வருகின்றன, மதிப்பிழந்த உத்தியோகபூர்வ கட்சிகளுக்கு ஒரே மாற்றீடு என்று அவை தொடர்ந்து ஊக்கப்படுத்தப்படுவதற்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், முதலாளித்துவ பிரச்சாரவாதிகள் அறிவிக்கையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை "வரலாற்றின் முடிவு" என்றும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெற்றி என்றும் பிரகடனப்படுத்தினர். உண்மையில், 1930 களில் ஐரோப்பிய முதலாளித்துவம் பாசிசவாத ஆட்சிகள் மீது அதன் தலைவிதியைப் பணயம் வைக்க உந்திச் சென்ற முரண்பாடுகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை. சோவியத்துக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாரிய வேலையின்மையால் தோற்றுவிக்கப்பட்ட சமூக சமத்துவமின்மை மீதான வெடிப்பார்ந்த கோபத்தை முகங்கொடுத்து, ஆளும் வர்க்கம் மீண்டும் சர்வாதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

1978 இல் பிராங்கோயிச பாசிசவாதிகளுக்கும், PSOE மற்றும் ஸ்பானிய ஸ்ராலினிஸ்டுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையின் சரிவை இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பானிய தேர்தல் வெளிப்படுத்தி உள்ளது. அந்த ஆட்சிமுறையின் இதயத்தானத்தில் இருந்த PSOE-PP இன் இருகட்சி ஏகபோகம் பொறிந்துள்ளது. 2015 க்குப் பின்னர் இருந்து ஸ்பெயினில் நடந்துள்ள தேர்தல்கள் ஒவ்வொன்றும் ஒரு தொங்கு நாடாளுமன்றத்தில் போய் முடிந்துள்ளதுடன், அப்போதிருந்து எந்தவொரு கட்சியும் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. ஆளும் வர்க்கம், வோக்ஸ் மூலமாக, மீண்டும் பிரான்கோயிசத்துக்குத் திரும்புவதன் மூலமாக விடையிறுத்து வருகிறது.

ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளாக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதே இந்த சூழ்நிலையில் முக்கிய பணியாகும். ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் பாசிசம் மற்றும் தேசியவாதத்திற்கு ஆழமாக, வரலாற்றுரீதியில் வேரூன்றிய எதிர்ப்பு உள்ளது. ஆனால் ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத பண்டிதர்கள், ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொடெமோஸை அலங்காரப்படுத்தி கொண்டிருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அரசியல் கணக்கை முடித்துக் கொள்ளாமல் அந்த எதிர்ப்பை அணித்திரட்ட முடியாது.

2014 இல் ஒரு "தீவிர ஜனநாயக" கட்சியாக நிறுவப்பட்ட பொடெமோஸ், சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கும், போரை ஆதரிக்கும் PSOE உடன் 2015 இல் இருந்து கூட்டணி அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளது. பொடெமோஸ் பொதுச் செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் இடைவிடாது ஸ்பானிய தேசியவாதத்தை ஊக்குவித்து வந்துள்ளதுடன், 1978 இல் பாராளுமன்ற ஆட்சி மாற்றத்திற்கான படுமோசமான பேரம்பேசல்களுக்கு அவரின் ஆதரவை எடுத்துக்காட்டியதுடன், வலதுசாரிகளையும் விட அவர் ஒரு சிறந்த தேசியவாதியாக இருப்பார் என்று 2017 இல் பெருமைபீற்றினார்: “எங்களை விட அவர்கள் அதிக தேசப்பற்று மிக்கவர்கள் என்று அவர்களை நாங்கள் கூற விடமாட்டோம்,” என்றார்.

பொலிஸ் அரசு எந்திரத்துக்குள் அதை ஒருங்கிணைத்துக் கொள்ள போட்டி போடுவதன் மூலமாக, பொடெமோஸ் கூடுதலாக வலதுக்கு நகர்ந்து வருகிறது. கட்டலான் தேசியவாதிகளை அது தாக்கிய நிலையிலும், பொலிஸைப் பாராட்டுவதற்காக இக்லெஸியாஸ் கடந்த மாதம் கட்டலோனியாவுக்கு விஜயம் செய்து, “பொலிஸ் சக்திகளுக்கு இடையே அமைப்புரீதியிலான உறவுகள் செயல்படுகின்றன,” என்று மகிழ்ச்சியாக அறிவித்து, PSOE க்கு மீண்டும் அவரின் விசுவாசத்தைச் சூளுரைத்தார்.

பொடெமோஸின் இந்த போலி-இடது தோரணையும் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலும் தான், PSOE ஐ தொழிலாள வர்க்கம் அதன் இடது பக்கத்திலிருந்து எதிர்ப்பதைத் தடுத்து, பொடெமோஸ் மற்றும் PSOE இல் இருந்து மக்கள் கட்சி (PP) வரையில் நீளும் கூட்டணிக்கு ஒரே எதிர்ப்பாளராக வோக்ஸ் தன்னை காட்டிக் கொள்வதற்கு அதை அனுமதிக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த பாரிய போராட்டங்களும் எதிர்ப்புகளும் ஏற்கனவே ஐரோப்பா எங்கிலும் மற்றும் அதற்கு அப்பாலும் கட்டவிழ்ந்து வருகின்றன. ஸ்பெயினில் தொழிலாளர்கள் அனைத்து மொழிரீதியான மற்றும் பிராந்தியரீதியான பிளவுகளைக் கடந்து, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்க போராடுவதற்காக, அவர்களை ஐரோப்பிய கண்டம் எங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான மற்றும் மக்கள் விரோத தேசியவாத அரசியலுக்குக் குழிபறிக்கும். இந்த போராட்டத்தை நடத்துவது என்பது ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைக்கும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading