இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய நகர்வுகளை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் தயாராக வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆழமடைந்து வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், மில்லியன் கணக்கான இலங்கையர்கள் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.

இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சி வேட்பாளர்களான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) சஜித் பிரேமதாசா மற்றும் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோட்டாபய இராஜபக்ஷவும், வெகுஜனங்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ள அதே சமயம், ஒரு "வலுவான அரசாங்கத்தை" நிறுவுவதாக ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவ்ஹீத் ஜம்மாத் அமைப்பு ஏப்ரல் 21, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை இருவரும் பயன்படுத்திக்கொண்டு, "தேசிய பாதுகாப்பு," "சட்டம் ஒழுங்கு" மற்றும் "ஒழுக்கமான சமூகத்தை" வலுப்படுத்துவதற்கே தாம் முன்னுரிமை கொடுப்பதாக அறிவித்தனர்.

பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களை உருவாக்குவதற்கான குறியீட்டு சொல்லான "வலுவான அரசாங்கம்" என்ற கோரிக்கை, தொழிலாள வர்க்கத்தின் பெருகி வரும் வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு இலங்கை முதலாளித்துவத்தின் பதட்டமான பதிலிறுப்பாகும். இலங்கை ஆளும் உயரடுக்கின் இடைவிடாத வலதுசாரி திருப்பமானது ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம், 2015இல் வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அதிகாரத்துக்கு வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த உறவை எதிர்த்த அமெரிக்கா, அவரை அதிகாரத்திலிருந்து நீக்க விரும்பியது. போலி-இடதுகள், “சிவில் சமூக” குழுக்களும் கல்விமான்களின் ஒரு அடுக்கும், இந்த அரசியல் ஆட்சி மாற்றத்தைத் தழுவிக்கொண்டு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் அட்டூழியங்கள் மற்றும் தீவு முழுவதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அவரின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சி கண்டு வந்த விரோதத்தை சிறிசேனாவிற்கான தேர்தல் ஆதரவாக திருப்பினர்.

பணப் பற்றாக்குறையை எதிர்கொண்ட சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகம், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிணை எடுப்புக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதன் சிக்கனக் கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு உறுதியளித்தது. எவ்வாறாயினும், பெப்ரவரி 2018 மாகாணத் தேர்தலில், ஆளும் கட்சிகள் அவமானகரமான தோல்வியை சந்தித்தன. இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்கள் சம்பந்தமான வெகுஜன எதிர்ப்பை வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டது.

ஆரம்பத்தில் இருந்தே, சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறிய பிரிவினரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பௌத்த அதிதீவிரவாதிகளுடன் இணைந்து சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் வெற்றியை அரசாங்கம் காட்டிக் கொடுத்துவிட்டது என்றும், மனித உரிமைக் குழுக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆயுதப்படைகளை பழிவாங்குகிறது என்றும் அது கூறிக்கொண்டது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், விக்ரமசிங்கவுடனான தனது கூட்டணியை முடித்துக்கொண்ட சிறிசேன, 2018 அக்டோபரில், திடீரென்று அவரை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றி, அவருக்கு பதிலாக இராஜபக்ஷவை நியமித்தார். சிறிசேனவின் அரசியலமைப்பு சதியின் அறிவிக்கப்பட்ட நோக்கமானது ஒரு "வலுவான அரசாங்கத்தை" ஸ்தாபிப்பதாகும். இருப்பினும், இராஜபக்ஷ சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதிய வாஷிங்டன், அவர் மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்புவதை எதிர்த்த அதே நேரம், சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை இலங்கை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.

வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளுக்கு மத்தியில் நடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களை, கொழும்பு உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் ஜனநாயக விரோத திட்ட நிரல்களை முன்னெடுப்பதற்காக பற்றிக்கொண்டன.

சிறிசேன அவசரகால சட்டங்களை திணிப்பதற்கும், நாடு முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. முழுமையாக ஒப்புதல் அளித்த அதேவேளை, அரசாங்கம் இராணுவ புலனாய்வு எந்திரத்தை பலவீனப்படுத்திவிட்டதாகவும், அதனால் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்கு வழி வகுத்துவிட்டதாகவும் கூறியது.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அதன் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய இராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தது. இராணுவத்தின் பிரிவுகள், பெரும் வணிகர்களின் சக்திவாய்ந்த பகுதியினர் மற்றும் தனியார் ஊடகங்கள், அரச அதிகாரத்துவத்திற்குள் உள்ள அடுக்குகள், பொது பல சேனா போன்ற சிங்கள இனவாதிகள் மற்றும் பாசிசக் குழுக்களும் இவருக்கு ஆதரவளிக்கின்றன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற முறையில், கோடாபய இராஜபக்ஷ, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை "வென்றதற்காக" பாராட்டப்படுகிறார். இந்த இரக்கமற்ற தாக்குதலின் இறுதி மாதங்களில், குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தெற்கில், தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்காக இராணுவமும் பொலிசும் அணிதிரட்டப்பட்டதுடன், அரசாங்கத்தை விமர்சிக்க துணிந்ததற்காக சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்காவின் கொலை உட்பட ஏழைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின்படி, இந்த வன்முறை நடவடிக்கைகள், கோடாபய இராஜபக்ஷவின் "தலைமைத்துவ சிறப்புகளை" நிரூபித்தன.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளர் தேர்தலில் "முன்னணியில் உள்ளார்" என்று கருதப்படுவது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான ஆபத்துக்களை சுட்டிக்காட்டுகிறது. கடந்த வாரம் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் அவரது முன்னுரிமைகள் குறித்து கேட்டபோது, "தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதே," என கோட்டாபய இராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்தார்.

தனது போட்டியாளருடன் பொருந்தக் கூடிய வகையில், இராணுவத்தின் தேர்தல் ஆதரவை பெறுவதற்காக முயற்சித்த அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாச, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே தனது பாதுகாப்பு அமைச்சராக இருப்பார் என்று அறிவித்துள்ளார். பௌத்த மதத்தின் முன்னுரிமை அந்தஸ்தைப் பாதுகாப்பேன் என்று பிரேமதாச பௌத்த உயர் பீடத்திற்கு உறுதியளித்து வருவதுடன், சமீபத்திய வாரங்களில், சிங்கள இனவாத சக்திகளுக்கு அதிகளவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை முதலாளித்துவ வர்க்கம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் 3.2 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 2.7 சதவீதமாக குறைந்துள்ள அதே நேரம், பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தெற்காசியாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு கடன்களில் ஒன்றாகும்.

மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி சமீபத்தில் ஒரு இலங்கை சிந்தனைக் குழுவிடம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை இரக்கமின்றி திணிக்க வேண்டும் என்று கூறினார். “ஒருவர் [வங்கியின் கோரிக்கைகளிலிருந்து] விலகினால், எங்களால் பணம் திரட்ட முடியாது, மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எதிர்கொள்வோம். அதாவது, இது அடிப்படையில் கிரேக்கம் போன்ற ஒரு சூழ்நிலை” என அவர் அறிவித்தார்.

கடந்த பன்னிரண்டு மாதங்களில், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழில், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமாக வெடித்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டபடி, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதற்கான கொழும்பின் உறுதிப்பாட்டை அமைதியாகவோ அல்லது ஜனநாயக ரீதியாகவோ செய்ய முடியாது. மேலும், சர்வதேச அளவில் தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ச்சி கண்டு வருவதைப் போலவே, இலங்கை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இன மற்றும் மத ரீதியில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்காக ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஐ.தே.க. மற்றும் இனவாதவாதிகள் முயற்சித்த போதிலும், அவற்றை மீறி போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

சோ.ச.க. தனது அறிக்கையிலும், அதன் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திலும் வலியுறுத்தியுள்ளபடி, முதலாளித்துவ இலாப அமைப்பையே சவால் செய்வதன் மூலம் மட்டுமே, பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய கொழும்பின் நகர்வுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் முன்னேற முடியும். இதற்கு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு புரட்சிகர கட்சியின் தலைமையில் தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும். சோ.ச.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல்:

"தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து வெளியேறி விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளத் தொடங்க வேண்டும். தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை வேலைத் தளங்களிலும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் ஸ்தாபிக்க வேண்டும் என்றும், அவர்கள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஏனைய தொழில்களில் உள்ள தொழிலாளர்களை அணுகுவதோடு, இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் தங்கள் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள முற்சிக்க வேண்டும் என்றும் சோ.ச.க. அறைகூவல் விடுக்கின்றது.

"இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கும், அதன் தலைமைத்துவத்தின் கீழ் கிராமப்புற மக்களையும் அணிதிரட்டி, முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும், சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் அடிப்படையாக அமைகின்றன.

"தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை உருவாக்க சோ.ச.க. போராடுகிறது. அத்தகைய அரசாங்கம் பெரிய வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்களையும் பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதுடன், வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இரத்துச் செய்யும். சோசலிச வழிமுறைகளில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மறுசீரமைக்கும்.”

சோ.ச.க.வில் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக அதைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த போராட்டத்தை மேற்கொள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் அழைக்கிறோம்.

Loading