இந்தியா: திருச்சியில் குழந்தையின் துயர மரணம் பேரழிவு தரும் சமூக நிலைமைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை நகரத்திற்கு அருகிலுள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டு வயது குழந்தை, கைவிடப்பட்ட அழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த துயரச் சம்பவம், இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும், கிராமப்புற உழைப்பாளிகளும் எதிர்கொள்ளும் பேரழிவு மிக்க சமூக நிலைமைகளை மட்டுமல்ல, மாநில மற்றும் மத்திய மட்டங்களில் ஆளும் உயரடுக்கின் பாசாங்குத்தனத்தையும் அம்பலப்படுத்துகிறது.

அக்டோபர் 25ம் தேதி சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான், பல்வேறு மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும் அங்கு சிக்கிக்கொண்டான், இறுதியாக அவனது துண்டிக்கப்பட்ட மற்றும் மிகவும் சிதைந்த உடல் நான்கு நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை மீட்பதற்கான நடவடிக்கையின் போது, மாநில அரசாங்க அதிகாரிகள் தெளிவான திட்டம் இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிடப்படாத சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் தேசிய பேரிடர் படையை (National Disaster Response Force – NDRP) அழைத்தனர். NDRP பணியாளர்கள் மிகவும் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்தபோது, குழந்தை சிக்கி பல நாட்கள் பட்டினி கிடந்து இறந்துபோயிருந்தது.

சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலைமைகள், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் வறிய நிலையையும், அப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்கொள்ளும் வறுமை நிலையையும் தான் எடுத்துக்காட்டுகிறது. சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் ஒரு ஏழை விவசாயி, அவர் மேலதிக வருமானத்திற்காக கட்டுமான வேலைகளையும் செய்யத் தள்ளப்பட்டிருந்தார். சுஜித்தின் தாய் பகுதிநேரமாக தையல் வேலை செய்துவந்தார். தனது உறவினரின் வீட்டுக்குச் செல்ல வயல்களினூடாக ஓடிக்கொண்டிருந்தபோது சுஜித் தவறி கிணற்றில் விழுந்துள்ளான். அரோக்கியராஜ் தனது நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி இல்லாத நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்காக அக் கிணற்றை தோண்டியிருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டது, ஆரோக்கியராஜ் உட்பட முழு குடும்பமும் கிணறு தோண்டப்பட்ட இடத்தையே மறந்துவிட்டது. கைவிடப்பட்ட 650 அடி ஆழ்துளை கிணற்றை சரியாக மூட அவர்கள் தவறியது குடும்பத்தின் வறுமை நிலைமையை காட்டுகிறது.

மேலும், தமிழகத்தில், 2010 இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அங்கே, மூழ்கும் கிணறுகள் குறித்த நெறிமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விதிகள் 2015 உள்ளது, அதன்படி கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை நிரப்புவதற்கான பொறுப்பு உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளது, மாறாக ஏழை விவசாயிகளிடம் அல்ல. ஆனால் வறுமையில் வாடும் மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் மனப்பான்மையை காட்டும் விதமாக, பொறுப்பை அதிகாரிகள் செய்யத் தவறிவிட்டனர்.

இத்தகைய துயர மரணங்களுக்கான நிலைமைகளை உருவாக்கிய பின்னர், இரு முக்கிய பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளின் முன்னணி அரசியல்வாதிகள் –ஆளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) மற்றும் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக)– சுஜித்தின் மரணம் குறித்து முதலைக் கண்ணீரை வடிக்க தலையிட்டுள்ளனர். அதிமுகவின் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சுஜித்தின் குடும்பத்தினரை சந்தித்து அவரது மரணம் “துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினும் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். எடப்பாடி கே.பழனிசாமி தமிழக அரசு சுஜித்தின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், அதிமுக மேலும் 1 மில்லியன் ரூபாய் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

தமிழக தகவல் அமைச்சர் கடம்பூர் ராஜு, சுஜித்தின் மரணம் ஒரு பொது இடத்தில் நடந்த ஒரு விபத்து அல்ல என்ற உண்மையை சாதகமாக்கி, "இது அவரது பெற்றோரின் அலட்சியம் காரணமாக ஒரு தனியார் இடத்தில் நடந்தது" என்றார். இது, குழந்தையின் மரணத்திற்கான பொறுப்பை அரசாங்க அதிகாரிகளிடமிருந்து சுஜித்தின் வறிய குடும்பத்தின் மீது சுமத்தும் ஒரு முயற்சியே.

இந்தியாவில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் விழுந்து ஒரு துயரமான முடிவை சந்தித்த முதல் குழந்தை சுஜித் அல்ல. கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் குறைந்தது 10 குழந்தைகள் இதேபோல் இறந்துவிட்டனர். இதேபோன்ற சம்பவங்கள் 2012 ஜூன் மாதம் ஹரியானாவின் மானேசர் மற்றும் 2019 ஜூன் மாதம் பஞ்சாபில் உள்ள பகவான்புரா போன்ற நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன. அவை பதிவாகிய வழக்குகள் மட்டுமே, உண்மையான சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

முறையான நீர்ப்பாசன வசதிகள் இல்லாத நிலையில், தமிழ்நாட்டின் விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளில் பெருகிய முறையில் ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதற்கு மாறிவிட்டனர். மாநில அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, டெல்டா (திருச்சி மாவட்டத்திற்கு அருகில்) இன்று இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகளைக் கொண்டுள்ளது, இது நிலத்தடி நீரை அடைய மிக மிக ஆழமாக அடியில் சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் உருவாக்கிய ஒருங்கிணைந்த வறட்சி தீவிரத்தன்மை குறியீட்டின்படி, மாநிலத்தில் சுமார் 3.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டிலும், பொதுவாக இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் கடுமையான வறுமை நிலைமைகள், இது சுஜித்தின் மரணம் போன்ற துன்பகரமான சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அவர்களிடையே தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. செய்தித்தாள் அறிக்கைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL) மற்றும் தமிழக மகளிர் விவசாயிகள் உரிமைகள் கூட்டமைப்பு போன்ற குழுக்கள் நடத்திய சுயாதீன விசாரணைகளின் படி, மாநிலத்தில் 2016 டிசம்பர் மற்றும் 2017 ஜனவரியில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்திய அரசு 2017 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி, 2013 முதல் ஒரு ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீர்ப்பாசனம் மற்றும் மானிய உரம் போன்ற விவசாயிகளுக்கு வசதிகளை வழங்கும்போது,மத்திய மற்றும் மாநில அளவில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் பணம் இல்லை என்று புகார் கூறுகின்றன. ஆனால் மத்தியில் உள்ள அரசாங்கங்கள் போட்டியாளர்களுக்கு, முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிராக ,இந்திய உயரடுக்கின் பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் நலன்களைத் தொடர இந்தியாவின் இராணுவ சக்தியை அதிகரிப்பதற்காக, பாதுகாப்புக்காக பெரும் தொகைகளை ஒதுக்குகின்றன. இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) கடைசி வரவு-செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு செலவினமாக 3180 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரும் ஒதுக்கீட்டை நியாயப்படுத்தி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு நவீனமயமாக்கலுக்கு உடனடித் தேவை இருப்பதாகவும் அது ஒரு “தேசிய முன்னுரிமை” என்றும் கூறினார்.

சுஜித்தின் மரணத்தால் வெளிப்படுத்தப்பட்டது போல் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் பரிதாபகரமான சமூக நிலைமைகளுக்கு மேலும் தள்ளும் அதேவேளையில், தங்களது கைகளில் பிரமாண்டமான செல்வத்தை திரட்டுவதன் மூலமாக ஆடம்பரமான வாழ்க்கையை சமூகத்தின் உச்சியில் ஒரு சிறிய உயரடுக்கினர் இன்பமாக அனுபவிப்பதற்கான நிலைமைகளை இந்திய முதலாளித்துவ வர்க்க ஆட்சி உருவாக்கியுள்ளது. கால் நூற்றாண்டு நவ-தாராளவாத “சீர்திருத்தம்” இந்தியாவை உலகின் மிக சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. அனைத்து இந்தியர்களில் முக்கால்வாசி பேர் தங்கள் வாழ்க்கையை ஒரு நாளைக்கு 150ரூபாய்க்கு (2 அமெரிக்க டாலருக்கும்) குறைவாகவே செலவழிக்கிறார்கள், முதல் 1 சதவிகித பணக்காரர்கள் அனைத்து வருமானத்திலும் 23 சதவிகிதம் மற்றும் நாட்டின் மொத்த செல்வத்தில் 60 சதவிகிதத்தை அபகரித்துள்ளனர். இந்த சமூக துருவமுனைப்பு இந்திய பில்லியனர்களின் அதிவேக வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1990 களின் நடுப்பகுதியில் இரண்டு இந்திய கோடீஸ்வரர்கள் இருந்தனர், இப்போது, ஃபோர்ப்ஸ் அறிக்கை படி, 131 பேர் உள்ளனர்.

முதலாளித்துவ சந்தையை போற்றி, தனிப்பட்ட செல்வ திரட்டலை, வெறித்தனமான வகுப்புவாதத்துடன் இணைக்கும் மோடி ஆட்சி, இந்த சமூக கொள்ளைக்கான நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்ட நிலையாகும்.

Loading