பிரிட்டன் பொது தேர்தல் விவாதத்தில் கோர்பினின் "இடது" பாசாங்குத்தனங்கள் அம்பலமாயின

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பழமைவாத தலைவர் போரீஸ் ஜோன்சன் மற்றும் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினுக்கு இடையே தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பொது தேர்தல் விவாதம், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஏதேனும் மாற்றீட்டை வழங்குவதற்கான கோர்பினின் வாதங்களை பேரழிவுகரமான முறையில் அம்பலப்படுத்தியுள்ளது.

ITV ஒளிபரப்பிய இந்த விவாதம், பதவியிலிருக்கும் ஒரு பிரதம மந்திரிக்கும் ஒரு எதிர்கட்சி தலைவருக்கும் இடையே பிரிட்டனில் நடத்தப்பட்ட முதல் விவாதமாக இருந்தது. ITVதகவல்படி, அதை 6.7மில்லியன் பேர் பார்வையிட்டனர், இத்துடன் ITVஇன் யூடியூப் சேனலில் 350,000க்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டிருந்தனர்.

முதல் பகுதி பிரெக்ஸிட் மீது மையமிட்டிருந்தது, ஜோன்சன் கூறுகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்ற மறுத்ததினாலேயே இந்த தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

கோர்பின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கான அவர் திட்டத்தை அறிவிக்கையில், ஒரு பிரெக்ஸிட் உடன்படிக்கை மீது மறுபேரம் செய்வது பின்னர் ஆறு மாதங்களுக்குள் —ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கும் சாத்தியக்கூறுடன் சேர்ந்து— ஒரு புதிய கருத்து வாக்கெடுப்பு நடத்துவது குறித்து விவரித்தார்.

அவரின் சொந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு ஜோன்சனின் தொடர்ச்சியான கோரிக்கைகளை முகங்கொடுத்த கோர்பின், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிப்பாரா இல்லை வெளியேறுவதை ஆதரிப்பாரா என்பதை அவர் குறிப்பிட மறுத்தார். இது அவரின் கட்சிக்குள்ளேயே நிலவும் ஆழ்ந்த பிளவுகளை மறைப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்தது, அவரது கட்சியில் 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தொழிற்கட்சி வேட்பாளர்களும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கோர்பின் என்ன உடன்படிக்கை செய்தாலும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதையே ஆதரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கோர்பினின் ஆதரவாளர்கள், தொழிற் கட்சியில் இதுவரையில் இருந்திராத மிகவும் இடதுசாரி தலைவர் என்று அவரைக் குறித்து வலியுறுத்துகின்றனர். அந்த விவாதத்தில் ஜோன்சன் தலைதூக்குவதை அவர் எதிர்கொண்டால், 10 ஆண்டு கால டோரி சிக்கன கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரே அரசியல் தலைவராக இருந்து, அவரின் மிகப் பலமான திட்டங்களின் அடிப்படையில் ஈடன் கல்லூரியில் படித்து வந்த சீமானை ஒன்றுமில்லாமல் செய்வார் என்று அவர்கள் வாதிட்டிருந்தனர்.

அந்த விவாதத்திற்கு முந்தைய ஒரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் அனுமானித்தது: “அவர் [கோர்பின்] அந்த விவாதத்தின் போது, 'பலரின்' தரப்பில் நிற்கும் பிரதம மந்திரி வேட்பாளராக தன்னைச் சித்தரிக்க வர்க்க போர்முறை தாக்குதல்களைப் பயன்படுத்தி, திரு. ஜோன்சனுக்கு எதிராக தீவிர தொனியை எடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.”

டோரி வலதுசாரி வட்டாரங்களில் கைப்பற்றப்பட்டுள்ள சொல்லாடலான, கோர்பினும் அவரின் நிழலுலக சான்சிலரும் அபாயகரமான "மார்க்சிஸ்டுகள்" என்பதற்கு அழுத்தமளித்து, ஒரு புள்ளியில் ஜோன்சன் கூறுகையில், “சொல்லப் போனால் ஜெர்மி கோர்பினும் தொழிற் கட்சியும் முதலாளித்துவத்தை தூக்கியெறிய விரும்புவதாகவும், இந்நாட்டில் செல்வவளத்தை உருவாக்குவதற்கான அடித்தளங்களை அழிக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்கள். அது இந்நாட்டுக்கு பேரழிவுகரமாக இருக்கும் என்பதை நான் கூற வேண்டியிருக்கிறது,” என்றார்.

இந்த அனுகூலத்தைப் பெற்ற நிலையிலும், கோர்பின் கூறுகையில், பிரதம மந்திரியாக இருந்து, கடந்தாண்டுகளில் வலதுசாரி பிளேயர்/பிரௌன் தொழிற்கட்சி அரசாங்கங்களின் கீழ் நிலவிய அதே நிலைமைகளுக்குத் திரும்ப எடுத்து செல்ல மட்டுமே அவர் விரும்புவதாக தெரிவித்தார்! இதைக் கூறியதுடன் சேர்ந்து, “நாம் பில்லியனர்கள் மற்றும் மிகவும் வறியர்களின் ஒரு சமூகமாக உள்ளோம், இரண்டுமே சரியில்லை,” என்று கூறி அவர் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கத்தின் கீழ் பெரும் பணக்காரர்களுக்கு எதிராக எந்த தீவிர நகர்வுகளும் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அதற்கு பதிலாக, “ஒரு காலகட்டத்திற்கு மேல், கல்வியில் முறையாக மறுமுதலீடு செய்வதற்காக, நாடாளுமன்றம் மூலமாக, 2010 இல் இருந்த ஏறத்தாழ அந்த மட்டங்களுக்கு பெருநிறுவன வரியை உயர்த்துவோம். பல்கலைக்கழக கல்விக் கட்டணங்களை இல்லாமல் செய்வதற்கான நிதி வழங்கல்களுக்காக … நமது சமூகத்தில் விகாரமான மட்டங்களில் உள்ள சமநிலையின்மையைச் சரி செய்யத் தொடங்குவோம்,” என்றார்.

14 மில்லியன் மக்கள் வறுமையில் வாழும் நிலைமைகளின் கீழ், அதிலும் பலர் உணவு வினியோக கூடங்களைச் சார்ந்திருக்கின்ற நிலையில், கடந்த தசாப்தத்தில் சிக்கன வெட்டுக்களின் காரணமாக "தடுத்திருக்கக்கூடிய" மரணங்களினால் 130,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், வேண்டுமென்றே இந்த வெற்று வாக்குறுதி வழங்கப்படுகிறது.

தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் பெறப்பட்ட முற்றிலும் திருத்தப்பட்ட ஆவணத்தை அவர் வைத்திருந்த போது, ஒரேயொரு தருணத்தில் தான் கோர்பின் தாக்குதலுக்குச் சென்றார், “எங்களுக்குத் தெரிய வந்துள்ள வரையில், திரு ஜோன்சன் என்ன செய்துள்ளார் என்றால், அமெரிக்காவுடன் அவர் தொடர்ச்சியான இரகசிய கூட்டங்களை நடத்தியுள்ளார் இதில் —அவர்கள் குறிப்பிடுவதைப் போல— நமது 'NHS சந்தைகளை' அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்து விட அவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள்.”

NHS தொழிலாளர்கள் அதிகநேரம் பணியாற்றுகிறார்கள் என்பதால் சாத்தியமானால் வாரத்திற்கு நான்கு நாள் வேலைக்கு முன்மொழிந்ததற்காக அவரை ஜோன்சன் தாக்கிய போதும் கூட, கோர்பின், “பிரிட்டன் முழுவதிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்" விதத்தில் பொருளாதாரத்தில் வாரத்திற்கு நான்கு நாள் வேலை ஏற்படுத்தப்படும் என்று கோர்பின் பதிலளித்தார்.

அவர் கூறியது எதுவுமே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் வலதுசாரிகளிடம் இருந்து விதிவிலக்கானது இல்லை என்பதை கோர்பின் உறுதிப்படுத்தினார், அவர்களில் சிலர் அவரை நோக்கி ஊளையிட்டு பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் இருப்பதை அவருக்குச் சமிக்ஞை செய்தனர். டோரியை ஆதரிக்கும் Daily Telegraph,“தொழிற்கட்சி தலைவர் உறவினராக இருந்து ஒன்றுபடுத்தும் பெருந்தகையாக தன்னை காட்டிக் கொள்ள முயன்றார்...” என்று குறிப்பிட்டது.

விவாதத்தில் கோர்பின் வென்றதாக கிடைத்த 49 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 51 சதவீதத்தினர் ஜோன்சன் வென்றதாக கருதியதாக உடனடி YouGov கருத்துக்கணிப்பு கண்டறிந்தது, அந்தளவுக்கு கோர்பின் மிகவும் மந்தமாக இருந்தார்.

கோர்பின் அரைத்த மாவையே அரைக்கும் வெறும் ஒரு சமூக ஜனநாயகவாதி என்பதற்கு அந்த விவாதம் நிரூபணமாக இருந்தது. அவரின் "சீர்திருத்தங்கள்" மிகவும் இற்றுப் போயிருந்ததுடன், டோனி பிளேயர் அரசாங்கத்திற்கு முன்னர் எந்தவொரு காலத்திலும் இருந்ததை விட அவரின் திட்டநிரல் மிகவும் முதலாளித்துவ சார்பாக உள்ளது, அவரை ஒரு "இடது" சீர்திருத்தவாதி என்று கூட கருதி விட முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்திடம் மிரண்டு போயுள்ள அவர், அதன் நிழல் அவர் மீது விழும் போதெல்லாம் நடுங்குகிறார். கோர்பின் எதற்காகவும் யாருக்காகவும் போராட மாட்டார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் உளவுத்துறை முகமைகள் ஒழுங்கமைத்து, அவர் கட்சியிலேயே உள்ள பழமைவாதிகள் மற்றும் பிளேயரிசவாதிகளால் தலைமை தாங்கப்படும் போலி பிரச்சாரத்தை, அதாவது கோர்பின் ஒரு யூத-எதிர்ப்புவாத கட்சிக்குத் தலைமை தாங்குகிறார் என்ற வாதத்தை, எதிர்க்க அவர் மறுப்பதிலேயே அவரின் அரசியல் கோழைத்தனம் எடுத்துக்காட்டப்படுகிறது.

“ஒரு சமயம் தலைசிறந்த கட்சியாக இருந்த ஒன்றை, யூத-எதிர்ப்புவாத குப்பைக்குழியாக மாற்றுவதற்கு நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் தான் பொறுப்பாகிறீர்கள்,” என்று பிரிட்டிஷ் யூதர்களுக்கான யூத ஆணைய பிரதிநிதிகளின் கருத்துக்கு விடையிறுக்குமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர் Julie Etchingham கோர்பினிடம் வினவினார்.

கோர்பின் இந்த அவதூறைக் கண்டிப்பதற்கு பதிலாக, “என் கட்சிக்குள் எவரேனும் யூத-எதிர்ப்பு நடவடிக்கை புரிந்திருந்தாலோ அல்லது ஏதேனும் யூத-எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டிருந்தாலோ அவர் மீது நான் கட்சிக்குள் நடவடிக்கை எடுத்துள்ளேன். அவர்கள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது நீக்கப்பட்டிருக்கிறார்கள், நாங்கள் ஒவ்வொரு விடயத்தையும் விசாரித்துள்ளோம்,” என்று வலியுறுத்தினார்.

முஸ்லீம்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது ஜோன்சன் தொடர்ச்சியாக பல நிஜமான இனவாத மற்றும் தரங்குறைந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பதைக் கூட கோர்பின் சுட்டிக்காட்டவில்லை.

அரச குடும்பத்தைச் சூழ்ந்து வரும் நெருக்கடி குறித்தும் முடியாட்சி அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான திறன் குறித்தும் வினவப்பட்ட போது, கோர்பின், அது "சற்று மேம்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

பிளேயரிச வலதின் தகவல் குழுவாக செயல்பட்டு வரும் ஒரு பத்திரிகையில் கோர்பினை நோக்கி ஒரு பொதுவான அனுதாப குரலாக விளங்கும் கார்டியன் கட்டுரையாளர் ஆதித்யா சக்ரபோர்ட்டியே கூட, இவ்வாறு எழுதினார், “சுமூகமான, கண்ணியமான அரசியல் குறித்த சில வெற்று பேச்சுக்கள் கூட [தொழிற்கட்சி தலைவராக ஆனதும் கோர்பினின் அறிக்கை] எனக்கு வெகு குறைவாகவே நினைவில் வருகிறது, ஆனால் ஒரு தேர்தல் என்பது ஒரு போர் தான். அவரின் எப்போதைக்குமான கடைசி போட்டியாக இருக்கக்கூடிய — அல்லது ஜோன்சனை வெளியேற்ற, அவரின் கடுமையான பேரழிவு பிரெக்ஸிட்டைத் தடுக்க மற்றும் இறுதியாக டோரிக்களால் அழிக்கப்பட்ட சில அழிவுகளை மாற்றுவதற்கு அவருக்கு உதவக்கூடிய, ஒரு தேர்தலுக்கு, இப்போதிருந்து கோர்பினுக்கு மூன்று வாரங்கள் உள்ளன. அவருக்கும் அவர் குழுவினருக்கும் போராடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை ஏற்க வேண்டுமானால், அவர்கள் உண்மையில் போராட வேண்டியிருக்கும்.”

சோசலிச தொழிலாளர் கட்சியில் உள்ள கோர்பினின் போலி-இடது உற்சாகமூட்டிகள், “தொழிற் கட்சிக்குள், 'ஜோன்சனைத் தாக்காதே' என்று கூறிய ஒரு கூட்டம் எங்கேனும் நடந்திருக்க வேண்டும்,” என்பதையே அந்த விவாதம் எடுத்துக்காட்டியது என்று கூறி, அவர்கள் தேர்வு செய்த தலைவர் எந்த நம்பகமான மாற்றீட்டையும் முன்வைக்க மறுத்ததன் மீது அவர்களின் கவலையை வெளிப்படுத்தினர்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டிஷ் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது: சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் வேண்டாம்! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! வர்க்க போராட்டத்திற்காக மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக!

Loading