பிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களால் நேட்டோ பிளவுறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓர் அணு ஆயுதமேந்திய சக்தியான ரஷ்யாவுடன் நேட்டோ அதன் போருக்கான திட்டங்களைத் தீவிரப்படுத்துகின்ற நிலையில், அக்கூட்டணியில் அதிகரித்து வரும் பிளவுகளுக்கு மத்தியில், புரூசெல்ஸில் நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அவர்களின் புதன்கிழமை உச்சி மாநாட்டில் ஒருங்கிணைந்திருக்க முயன்றனர்.

நேட்டோ "மூளைச் சாவு" அடைந்துள்ளது என்று அறிவித்து பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இம்மாத தொடக்கத்தில் எக்னொமிஸ்ட் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பின்னர், கூட்டணியின் நிலைதான் திட்டநிரலின் மத்திய விடயமாக இருந்தது. அவர், ரஷ்யா சம்பந்தமான அமெரிக்க கொள்கையை "அரசுரீதியிலான, அரசியல்ரீதியிலான மற்றும் வரலாற்றுரீதியிலான விஷமப் பிரச்சாரம்,” என்று விமர்சித்து அமெரிக்காவிடம் இருந்து இன்னும் அதிக சுதந்திரமான இராணுவ கொள்கைக்கும் மற்றும் ரஷ்யாவுடன் ஐரோப்பிய உறவுகளை நெருக்கமாக்கவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அறிக்கை இலண்டனில் டிசம்பர் 3-4 இல் நேட்டோ நாடுகளது அரசு தலைவர்களின் உச்சி மாநாட்டையும் மற்றும் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய Operation Defender 2020 போர் ஒத்திகையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. தென் சீனக் கடலில் கடற்படை நடவடிக்கைகளுக்குக் கூடுதலாக, அட்லாண்டிக் எங்கிலும் இருந்து ஐரோப்பாவுக்கு வரவழைக்கப்படும் 20,000 அமெரிக்க துருப்புகள் உள்ளடங்கலாக 37,000 துருப்புகளுடன், ஒரு கால் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நேட்டோவின் மிகப்பெரிய தரைப்படை ஒத்திகைகள் அதில் உள்ளடங்குகின்றன. அது ரஷ்யாவுடனான போருக்கு ஒருங்கிணைந்த முற்றுமுதலான அணித்திரட்டலின் முன்மாதிரி ஒத்திகையாக உள்ளது.

ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைத்தும் மற்றும் ஐரோப்பிய இராணுவச் செலவுகள் அமெரிக்காவின் இராணுவ செலவுகளை அண்மிக்கவுள்ளன என்று பெருமைபீற்றியும் நேட்டோ அதிகாரிகள் ஓர் ஆக்ரோஷமான கொள்கையைச் சுற்றி அவர்களின் ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள். “நேட்டோவின் மரணம் சம்பந்தமான செய்திகள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை,” என்று புதன்கிழமை அம்மாநாடு தொடங்கிய போது லித்துவேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் Linas Linkevičius ராய்டர்ஸிற்குத் தெரிவித்தார்.

“நாம் ஒரு முக்கியமான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஒன்றுகூட இருக்கிறோம்,” என்று அம்மாநாட்டுக்கு முன்னதாக தெரிவித்த நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், “அது ரஷ்யா போன்ற மூலோபாய பிரச்சினைகள், ஆயுதக் கட்டுப்பாடுகள், அதுமட்டுமின்றி சீன வளர்ச்சியின் தாக்கங்கள் குறித்து கவனம்" செலுத்தும் என்றார்.

புரூசெல்ஸ் வந்தடைந்த ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், அதிகரித்து வரும் அமெரிக்க-ஜேர்மன் பதட்டங்கள் மற்றும் வர்த்தகப் போர் வரிவிதிப்புகள் இருந்தாலும், பேர்லின் இப்போதும் நேட்டோவை முக்கியமானதாக பார்க்கிறது என்று வலியுறுத்தினார். “நேட்டோவிலிருந்து முறித்துக் கொள்ளும் போக்குகளுக்கு" எதிராக எச்சரித்து, அவர் கூறுகையில் அமெரிக்கா உடனான கூட்டணி என்பது ஐரோப்பாவின் "ஆயுள் காப்பீடாகும், அது அவ்வாறே நீடிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்,” என்றார். “முக்கியம் என்னவென்றால் நேட்டோவின் அரசியல் அங்கம் பலப்படுத்தப்பட வேண்டும்,” என்று கூறி நேட்டோவில் மாற்றங்களை மேற்பார்வையிடும் ஒரு "வல்லுனர்களின்" குழுவை உருவாக்குவதற்கு மாஸ் முன்மொழிந்தார்.

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் பொது அறிவிப்பு எதுவும் செய்யவில்லை என்றாலும், நேட்டோவைச் சீர்திருத்த "அறிவார்ந்தவர்களின் குழு" ஒன்றுக்கு இதேபோன்ற முன்மொழிவுகளை அவர் முன்பே உச்சரித்திருந்தார். ஆனால் லு திரியோனின் முன்மொழிவை ஸ்டொல்டென்பேர்க் கண்டுங்காணாது விட்டுவிட்டு மாஸை ஆமோதித்தார்: “ஜேர்மன் முன்மொழிவு மதிப்புடையதென நினைக்கிறேன்.”

பேர்லின் மற்றும் பாரீசுக்கு இடையே விரோதங்கள் அதிகரித்து வருவதை நேட்டோ அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். ஒரு மூத்த இராஜாங்க அதிகாரி ராய்டர்ஸிற்குக் கூறினார்: “இது, ஐரோப்பாவின் இயல்பான தலைவர் யார், பாரீஸா அல்லது பேர்லினா, அல்லது இரண்டும் சாத்தியமா, என்பதைப் பற்றியதும் மற்றும் நேட்டோ எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதையும் பற்றியதாகும்” என்றார்.

எவ்வாறிருப்பினும், நேட்டோ சக்திகள், அவர்களின் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் மற்றும் இராஜாங்க பதட்டங்களுக்கு இராணுவத் தீவிரப்பாடு தான் ஒரே மூலோபாயமாக பார்க்கின்றன. உச்சி மாநாட்டுக்குப் பின்னர், நேட்டோ இரண்டு புதிய முனைவுகளை அறிவித்தது: சீனாவை உளவுபார்ப்பது, மற்றும் ஆகஸ்டில் வாஷிங்டன் அதன் சொந்த இராணுவ வான்வெளி கட்டளையகத்தைத் தொடங்கிய பின்னர் விரைவிலேயே, நேட்டோவின் வான்வெளி கட்டளையகத்தை உருவாக்குவது.

சீனாவின் 175பில்லியன் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கையும், மற்றும் அதன் கடற்படையில் கடந்த ஐந்தாண்டுகளில் 80கப்பல்கள் —ஒட்டுமொத்த பிரிட்டிஷ் கடற்படையை விட அதிக கப்பல்கள்— சேர்க்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய நேட்டோ, சீனா மீது அது உத்தியோகபூர்வமாக இராணுவ உளவுபார்ப்பைத் தொடங்குமென அறிவித்தது. “எங்கெல்லாம் இராணுவக் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறதோ, அதற்கு எதிராக பாதுகாக்க உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் பார்க்க வேண்டியிருக்கும்,” என்று நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் கெய் பைய்லெ ஹட்சிசன் அறிவித்தார்.

விண்வெளியை "நடவடிக்கைக்கான களமாக", அதாவது போர்க்களமாக, மாற்றுவதற்கு அவர்கள் தயாரிப்பு செய்து வருவதாகவும் நேட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர். “செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் தரவு படங்கள் போன்ற சேவைகளையும் மற்றும் தகைமைகளையும் வழங்குமாறு கூட்டாளிகளுக்கு கோரிக்கை விடுக்க நேட்டோ திட்ட வகுப்பாளர்களை அது அனுமதிக்கும்,” என்று ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்தார். “கடல் போக்குவரத்துக்கும், உளவுத்தகவல் சேகரிப்பதற்கும், ஏகவுணை தொடுக்கப்படுவதை கண்டறிவதற்குமான திறன் உட்பட கூட்டாளிகளின் தடுப்புமுறை மற்றும் பாதுகாப்புமுறைக்கு விண்வெளியும் இன்றியமையாததாகும். சுமார் 2,000செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சுமார் பாதி எண்ணிக்கை நேட்டோ நாடுகளுக்குச் சொந்தமானது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பின்னர் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பெயோ மாஸின் உதவிக்கு நன்றி கூறினார். நேட்டோவில் இருந்து "மிகவும் வித்தியாசமான மதிப்பு முறைகளை" கொண்டிருப்பதற்காக ரஷ்யா, சீனா மற்றும் ஈரானைக் கண்டித்த அவர், நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் அவற்றை "எதிர்க்க" வேண்டுமென கோரியதுடன், குறிப்பாக "சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்நிறுத்தும் நீண்டகால அச்சுறுத்தலை" வலியுறுத்தினார். 2020 க்குள் 100பில்லியன் டாலர் அளவுக்கு இராணுவச் செலவுகளை அதிகரிப்பதற்கு சூளுரைத்துள்ள ஐரோப்பிய சக்திகள் தொடங்கிய கட்டமைப்பையும் அவர் பாராட்டினார்.

முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்குள் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் முன்நகர்த்தப்பட்டு வரும் இராணுவத் தீவிரமயமாக்கல் சுழற்சியிலிருந்து தப்பிக்க வழியில்லை என்பதை இந்த உச்சி மாநாடு மீண்டுமொருமுறை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் தொடங்கப்பட்ட ஏகாதிபத்திய போர்கள் ஒரு முட்டுச் சந்துக்கும் அணுஆயுத போர் அபாயத்திற்கும் இட்டுச் சென்றன என்பதை அவர்கள் முடிவாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றாலும், நேட்டோ மீதான மக்ரோனின் விமர்சனங்கள் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் எச்சரிக்கை மணியொலியை எதிரொலித்தது. ஆனால் அவர்களிடம் வேறெந்த மாற்று கொள்கையும் இல்லை.

“1990கள் மற்றும் 2000களில், வரலாற்றின் முடிவு, முடிவற்ற ஜனநாயகத்தின் விரிவாக்கம், மேற்கத்திய முகமை ஜெயித்துவிட்டது என்ற கருத்துக்களைச் சுற்றி ஒரு கருத்துரு அபிவிருத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டது,” என்று தி எக்னொமிஸ்ட் இல் மக்ரோன் தெரிவித்தார். “மக்களின் ஆதரவில்லாமலேயே நமது நன்மதிப்புகளையும் ஆட்சி மாற்றங்களையும் திணிக்க முயன்றதன் மூலம் சில வேளைகளில் நாம் தவறுகள் செய்துவிட்டோம். இதை தான் நாம் ஈராக் மற்றும் லிபியாவில் பார்த்தது … ஒருவேளை சிரியாவுக்குத் திட்டமிடப்பட்டதும் இதுவாக இருந்திருக்கலாம், ஆனால் அது தோல்வி அடைந்தது. அது மேற்கத்திய அணுகுமுறையின் ஓர் அம்சம், பொதுவான வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அதுவொரு பிழையாக, அனேகமாக துயரகரமான ஒன்றாக இருந்துள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரிய போர்களில் பிரான்சும், ஜேர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகளும் பங்குப்பற்றி இருந்தன என்பதை மக்ரோன் கூறவில்லை, இவற்றில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர், மேலும் நேட்டோ அதிகாரங்களுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையே நிலவும் உயர் அபாய இராணுவ விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு அவை இட்டுச் சென்றன.

“ஒரு மோதலுக்குச் செல்வதில் இருந்து உலகைத் தடுக்க" எக்னொமிஸ்ட் இல் ரஷ்யாவுடன் நல்லுறவுகளுக்கு அழைப்பு விடுத்த போதினும், அதேவேளையில் மக்ரோன் மாலி போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இரத்தந்தோய்ந்த போர்களைத் தொடுத்து வருகிறார். மாலி போருக்குப் பேர்லின் 1,000 துருப்புகளைப் பங்களிப்பு செய்துள்ளது, ஒரு தனித்துவமான ஐரோப்பிய இராணுவக் கொள்கைக்கான மக்ரோன் அழைப்பின் முக்கிய நோக்கமே இந்த துருப்புகளைப் பெறுவதற்காக இருந்தது.

அமெரிக்காவுடன் ஐரோப்பாவின் அதிகரித்து வரும் வர்த்தகப் போர் மற்றும் மூலோபாய மோதல்கள் இருந்தாலும், மக்ரோனின் முன்மொழிவுகள் பரந்த ஆதரவை வெல்லவில்லை, இப்போதைக்கு ஐரோப்பிய நேட்டோ சக்திகள் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா-தலைமையிலான தீவிரப்பாட்டையே ஆதரித்து வருகின்றன. “மக்ரோன் அவரின் வீரியமான விமர்சனங்களுக்காக நேட்டோவுக்குள் ஆதரவைப் பெறவில்லை,” என்று “பிரான்சின் நிலைப்பாட்டுக்கு நெருக்கமான ஒரு நாட்டின்" இராஜாங்க அதிகாரி கூறியதை மேற்கோளிட்டு, Ouest France நாளிதழ், “பாரீஸ் தனிமைப்பட்டுள்ளது,” என்று தீர்மானித்தது.

ஜேர்மன் Marshall Fund சிந்தனைக் குழாமின் ஓர் அதிகாரி Ulrich Speck கூறியதை அந்த பத்திரிகை மேற்கோளிட்டது, அவர் கூறினார்: “மக்ரோன் ஜேர்மனியை ஒரு நிலைப்பாடு எடுக்க நிர்பந்தித்தார், பேர்லினைப் பொறுத்த வரையில் நேட்டோ இன்னமும் ஐரோப்பிய பாதுகாப்புக்கான எதிர்காலமாக விளங்குகிறது. … கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவை விலக்கிவைக்கும் விளையாட்டில் அமெரிக்காவை முன்நிறுத்த விரும்புகின்றன, மேலும் தெற்கில் பிரான்ஸ் தொடுத்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும் அவற்றுக்கு வெகு குறைவான ஆர்வமே உள்ளது,” என்றார்.

குறிப்பாக, அங்கே கிழக்கு ஐரோப்பாவில் பேர்லின் மற்றும் வாஷிங்டன் இரண்டுக்கும் மற்றும் பாரீசுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவது தெளிவாக உள்ளது. 2014 இல் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்திய பின்னர் அங்கே மீண்டும் உயிரூட்டப்படும் போரைத் தடுக்கும் ஓர் உடன்படிக்கையைப் பேரம்பேசும் முயற்சியில், பாரீஸ், வாஷிங்டனை தவிர்த்து விட்டு, அடுத்த மாதம் ஜேர்மன், ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்த திட்டமிடுகிறது. பால்கன் நாடான வடக்கு மாசிடோனியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதை பாரீஸ் அக்டோபரில் வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்ததன் மூலமாக, பேர்லின் மற்றும் வாஷிங்டனை கோபமூட்டியது. மேர்க்கெல் குரோஷியாவில் நேற்று உரையாற்றுகையில் இந்நகர்வைப் பகிரங்கமாக விமர்சித்தார்.

Neue Zurcher Zeitung நாளிதழ் எழுதியதாவது, மக்ரோனின் எக்னொமிஸ்ட் பேட்டி "பேர்லினுக்குப் பெரிதும் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக பதில் வந்தது: நேட்டோ மூளைச்சாவு அடைந்துவிடவில்லை, மாறாக ஐரோப்பிய பாதுகாப்பிற்கான ஆதாரக்கல்லாக உள்ளது. … நீண்டகாலமாக அறிந்திருந்த ஒன்று இப்போது பகிரங்கமாகி உள்ளது, ஆனால் அதனால் விளைவுகள் எதுவுமில்லை என்பதாக தெரிகிறது: பிரான்சும் ஜேர்மனியும் ஐரோப்பாவின் மூலோபாய எதிர்காலம் மீது வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.” அது தொடர்ந்து குறிப்பிடுகையில், மக்ரோன், “அவரையும் பிரான்சையும் முன்னணி சக்தியாக அமெரிக்காவின் இடத்தில் நிறுத்த முயற்சிக்க விரும்புகிறார். ஆனால் முன்னர் அமெரிக்கா வழங்கியதில் இருந்ததை விட அவர் வழங்கும் தலைமையில் அதிக பன்முகத்தன்மை மற்றும் இணைப்புத்தன்மை இல்லை.”

ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைக்கும் அமெரிக்க-தலைமையிலான நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு இடையிலான மூலோபாய மோதல் மீளெழுச்சி அடைவதென்பது ஓர் அபாயகரமான அறிகுறியாகும். இந்த இரண்டு பாரம்பரிய முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரங்களுக்கு இடையிலான மோதல் ஐரோப்பாவில் 20ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உலக போராக வெடித்தது. ஐரோப்பிய நாடுகள் போருக்கான உந்துதலை மெதுவாக்கும் கொள்கைகளையோ அல்லது மிதமாக்கும் கொள்கைகளையோ கொண்டிருக்கவில்லை, மாறாக போர் முனைவு சம்பந்தமான கொள்கைகளையே மையத்தில் வைத்து முன்நகர்த்திக் கொண்டிருக்கின்றன, இதை, ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்.

Loading