ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர்

Laura Tiernan
25 November 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சிறையிலடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் ஊடகவியலாளரான ஜூலியன் அசான்ஜின் உயிரைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கும் படி கோரி, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலுமிருந்து 65க்கும் அதிகமான சிறந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையிலிருந்து, மருத்துவ நிபுணர் குழு மூலம் அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்கக் கூடிய ஒரு பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

“அத்தகைய அவசர பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை,” என்றால், “திரு அசான்ஜ் சிறையிலேயே இறந்துவிடக் கூடும் என்று தற்போதைய ஆதாரங்களால் நாங்கள் உண்மையில் கவலையடைகிறோம். அதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை மிகவும் அவசரம். இழப்பதற்கு நேரமில்லை” என்று அவர்கள் குறிபிட்டுள்ளனர்.

அவர்களது கடிதம் இங்கிலாந்து உள்துறை செயலர் பிரீத்தி படேலுக்கு அனுப்பப்பட்டு, தொழிற் கட்சியின் நிழல் உள்துறை செயலர் டயானே அபோட்டுக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலுக்கு மத்தியிலான டாக்டர்களின் இந்த அசாதாரண தலையீடு, அசான்ஜ் மீதான இடைவிடாத அரசு துன்புறுத்தல் குறித்த மக்கள் எதிர்ப்பிற்கு அடித்தளமாக இருப்பதுடன் ஒத்துப்போகிறது. ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த ஊடகவியலாளர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவிற்கு அவர் நாடுகடத்தப்படுவதையும், மற்றும் 175 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையையும் எதிர்கொள்ளவிருக்கிறார்.

இது தொடர்பாக, நோயறிதல் கதிரியக்கவியல் நிபுணரான டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட், அக்டோபர் பிற்பகுதியில் தனது சகாக்களுடன் சேர்ந்து பகிரங்க கடிதம் ஒன்றை தயாரிக்கத் தொடங்கினார். அதாவது, இலண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றத்தில் அக்டோபர் 21 அன்று அசான்ஜ் ஆஜராகையில் அவரது மோசமான நிலைமை பற்றி முன்னாள் பிரிட்டிஷ் இராஜதந்திரியும் இரகசிய செய்தி வெளியீட்டாளருமான கிரைக் முர்ரே எழுதிய குறிப்பை வாசித்த பின்னர் அவர் இதை செயல்படுத்தத் தொடங்கினார்.

“நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்று ஃப்ரோஸ்ட் அதை நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரு மருத்துவராக, நான் முன்னர் நினைத்திருந்ததைக் காட்டிலும் விடயங்கள் மிகவும் மோசமாக இருந்த நிலையில், நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்றும் கூறினார்.

சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸரின் அசான்ஜ் பற்றிய கண்டுபிடிப்புக்களை ஆதரித்தவர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர். மெல்ஸர், மே 9 அன்று இரண்டு மருத்துவ நிபுணர்களுடன் பெல்மார்ஷ் சிறைக்குச் சென்று அசான்ஜை பார்வையிட்டார். அண்மித்து ஒரு தசாப்த கால தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் அரசு துன்புறுத்தல்களுக்குப் பின்னர், நீடித்த “உளவியல் சித்திரவதைகளின்” விளைவுகளை அசான்ஜ் அனுபவித்து வருவதாக அவரது குழு கண்டறிந்தது.

நவம்பர் 1 அன்று, மெல்ஸர், “திரு அசான்ஜ் தொடர்ந்து தன்னிச்சையான துன்புறத்தலுக்கு ஆட்படுத்தப்படுவாரானால் அது முடிவில் அவரது உயிரையே விரைந்து பலிகொடுக்கச் செய்துவிடலாம்” என்று எச்சரித்தார்.

டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட்

மெல்ஸரின் தலையீடு முக்கியமானதாக இருந்தது என்று ஃப்ரோஸ்ட் கூறினார். மேலும், “அவர் தனது வேலையை அச்சமின்றி செய்தார், என்றாலும் அவர் அலட்சியம் செய்யப்பட்டார். ஆனால், அவர் தனது துறையில் ஒரு நிபுணராக இருந்தார் என்பதால் அவரது கருத்தை நாங்கள் மதித்தோம். எவராவது உண்மையை பேசுகையில் நீங்கள் இதைச் சொல்லலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து, சுவீடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மூத்த மருத்துவர்கள் இந்த பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில், முன்னணி மனநல மருத்துவர்கள், மருத்துவ உளவியலாளர்கள், நரம்பியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்களும் அடங்குவர்.

“ஒரு தொழில்முறை மருத்துவர், சித்திரவதை என்பது எங்கு நடந்தாலும் அதுபற்றி சந்தேகம் இருப்பதாக அவர் அறிய நேர்ந்தால் அது குறித்து புகாரளிக்க வேண்டியது அவரது கடமையே,” என்றும், “அந்த தொழில்முறை கடமை, முழுமையாகவும், அறிக்கை செய்யும் மருத்துவர்களுக்கு உள்ள ஆபத்து பற்றி கவலைப்படாமலும் செயல்படுத்தப்பட வேண்டும்” என்றும் கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த கடிதம், ஈக்வடோரிய தூதரகத்திற்குள் அசான்ஜ் மருத்துவ சிகிச்சையை அணுகவிடாமல் இங்கிலாந்து அரசாங்கம் மீண்டும் மீண்டும் மறுத்து வந்த நிலையில் அவரது உடல்நலம் மோசமடைவது குறித்த காலவரையறையை முன்வைக்கிறது. டிசம்பர் 2015 இல், தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழு (United Nations Working Group on Arbitrary Detention), “திரு அசான்ஜின் உடல்நிலை ஏதேனும் சாதாரண நோயைக் காட்டிலும் ஒரு கடுமையான ஆபத்திற்குள்ளாக்கும் நோயினால் பாதிப்படையும் நிலைக்கு சென்றுவிடக் கூடும்” என்று கண்டறிந்தது.

இந்த கடிதத்தின் படியான மருத்துவ காலவரையறை, பெல்மார்ஷில் அசான்ஜின் தற்போதைய கீழ்நோக்கிய வீழ்ச்சியுடன் முடிகிறது. கையொப்பமிட்டவர்கள், பெப்ரவரி 2020 இல் விசாரணைக்கு ஆஜராவதற்கு ஏற்றதாக அசான்ஜின் உடல்தகுதி இருக்குமா என்பது பற்றி அவர்கள் “தீவிரமாக கவலைப்படுவதாக” தெரிவித்தனர். “நரகம் போன்ற சிறைச்சாலை மருத்துவப் பகுதி” என்று கைதிகளால் விவரிக்கப்படும், பெல்மார்ஷ் சிறையின் “மருத்துவப் பிரிவில்” அசான்ஜ் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், வாரங்கள் நீடிக்கும் அமெரிக்க நாடுகடத்தல் விசாரணைகள் பெப்ரவரி 24 அன்று தொடங்கப்படவுள்ளன.

இந்த பகிரங்க கடிதத்தின் ஒரு பிற்சேர்க்கை, “திரு அசான்ஜிற்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதைச் சுற்றியுள்ள பயம் மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழல்” பற்றி சுட்டிகாட்டுகிறது. அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கை குறித்த அச்சத்தினால், “திரு அசான்ஜை பரிசோதிக்க தயாராக இருந்த மருத்துவ பயிற்சியாளர்களை கண்டுபிடிப்பதில் இருந்த சிரமங்கள்” பற்றி புகாரளித்த ஒரு உளவியல் நிபுணர் பற்றி இது தெரிவிக்கிறது. கையொப்பமிட்டவர்கள், “பல ஆண்டுகளாக இலண்டனின் மத்தியில் இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும், நம்மில் பலருக்கு மிகுந்த வருத்தத்தையும் அவமானத்தையும் தருகின்றன” என்று நிறைவு செய்தனர்.

இங்கிலாந்து மற்றும் சர்வதேச அளவிலான இந்த மருத்துவர்கள் தங்களது பகிரங்க கடிதத்தின் மூலமாக தம்மை மவுனமாக்குவதை நிராகரித்துள்ளனர். அவர்கள் தங்களது தொழில்முறை கடமையை மதித்து, ஜூலியன் அசான்ஜின் உயிரைப் பாதுகாக்க தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு டாக்டர் ஃப்ரோஸ்ட் தெரிவித்ததைப் போல, “வாழ்க்கையின் மற்ற துறைகளைப் போலவே மருத்துவத்தில் சில சமயங்களில், முன்னறியப்படாத வகையிலான ஒரு படித்த துணிகர நடவடிக்கையை எடுத்து அசாதாரண தீர்வுகளை நாடுவதன் மூலம் மட்டுமே அசாதாரண சூழ்நிலைகளை தீர்க்க முடியும்.”

உலகெங்கிலுமுள்ள மருத்துவர்கள், இங்குவெளியிடப்பட்டுள்ள பகிரங்க கடிதத்தில் கையொப்பமிட்டவர்களை doctors4assange@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தங்களது பெயரையும் தற்போதைய பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும்.

கையொப்பமிட்டவர்களின் அறிக்கைகள்

டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட்,நோயறிதல் கதிரியக்கவியல் நிபுணர்(ஸ்டாக்ஹோம்,சுவீடன்): “முதலில் நாம் ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், பின்னர் குறைந்தபட்சம் முடிந்த வரை அவரது உடல்நிலையைப் பாதுகாக்க வேண்டும். அதன் பின்னர், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவீடன் மற்றும் ஈக்வடோர் ஆகிய ஐந்து நாடுகளுக்கு குறையாமல் ஒன்றிணைந்து ஒரு மனிதனுக்கு எதிராக வேண்டுமென்றே கொடூரமாக சதி செய்யப்பட்டிருப்பது எப்போதிருந்து நிகழ்ந்தது என்பது பற்றி நாம் அனைவரும் விவாதிக்கலாம்.

“சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர், ஜூலியன் அசான்ஜ் இலண்டனின் மத்தியில் எல்லா இடங்களிலும் ‘உளவியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்’ என்று மதிப்பீடு செய்ததை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது எப்படி மற்றும் ஏன் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதை துல்லியமாக தீர்மானிக்க மற்றவர்களிடம் நாம் இதை விட்டுவிடுவோம்.

“தாமதமாக இருந்தாலும் கூட, இங்கிலாந்து சரியானதைச் செய்ய வேண்டும் என்று உலக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மாறாக, இங்கிலாந்து அரசாங்கம் மருத்துவர்களின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல், அதன் தற்போதைய பொறுப்பற்ற, ஆபத்தான மற்றும் கொடூரமான நடத்தையை தொடருமானால், உலக மக்கள் அனைவரும் அதற்கு பொறுப்பானவர்களை பொறுப்பேற்கும் படி சரியாக அழைப்பார்கள். இந்த சூழ்நிலையில் மருத்துவ சிகிச்சை மிகவும் அவசியம் என்பதுடன், இந்நிலையை தொடர அனுமதிக்கக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். இழப்பதற்கு நேரமில்லை என்பதால், சித்திரவதை இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.”

டாக்டர் சூ வேர்ஹாம் OAM,ஓய்வு பெற்ற பொது மருத்துவர் (ஆஸ்திரேலியா): “பல அனுபவமிக்க பார்வையாளர்கள் வழங்கிய சான்றுகளின் படி, மற்ற கைதிகளைப் போலவே, ஜூலியன் அசான்ஜூம், அவருக்கு மறுக்கப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சையை போதுமானளவு பெறுவதற்கு உரிமை உள்ளவராவார். மேலும், இது மறுக்கப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், நீதி மற்றும் உரிய செயல்முறையின் எந்தவொரு பாசாங்கையும் கேலிக்கூத்தாக்குகிறது. அவர், எந்தவிதமான உடல் மற்றும் மனநிலைமைகளுக்கும் முழுமையான மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது இன்றியமையாததாகும்.

“ஜூலியன் அசான்ஜை எங்களது அரசாங்கம் வெளிப்படையாக கைவிடுவது குறித்து பல ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையடைந்துள்ளனர், இதிலும் பார்க்க அசான்ஜின் மோசமடைந்து வரும் ஆரோக்கியம் காட்டிலும் வெட்கக்கேடானது. அசான்ஜ் வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதைக் காட்டிலும் அவற்றை மறைப்பதற்கே அரசாங்கம் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.

“போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வழங்குபவர்களுக்கு மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள், அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தான் நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும். பேரழிவுகர போர்கள் மற்றும் எங்கள் தேசம் ஈடுபடும் பிற வெட்கக்கேடான நிகழ்வுகள் பற்றியும், மற்றும் அரசாங்க இரகசியத்தை பாதுகாப்பதற்கான சாக்குப்போக்காக “தேசிய பாதுகாப்பு” என்பதை பயன்படுத்துவதிலும் ஆஸ்திரேலிய மற்றும் பிற அரசாங்கங்கள் பொய் கூறுகின்ற நிலையில், பொதுமக்கள் தெரிந்துகொள்ள உரிமையுள்ள உண்மைகளை ஆவணப்படுத்த இரகசிய செய்தி வெளியீட்டாளர்களையே அதிகரித்தளவில் சாமான்ய மக்கள் நம்பியிருக்கின்றனர். இரகசிய செய்தி வெளியீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமேயன்றி, அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.

பேராசிரியர் ஆண்ட்ரூ சாமுவேல்ஸ், பகுப்பாய்வு உளவியல் பேராசிரியர்,எசெக்ஸ் பல்கலைக்கழகம் (சமீபத்தில் ஓய்வு பெற்றவர்); முன்னாள் தலைவர், உளவியல் சிகிச்சைக்கான இங்கிலாந்து கவுன்சில் (2009-2012) (UK): “அரசியல் ரீதியாக அதிர்ச்சியடைந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றும் என்னைப் போன்ற உளவியலாளர்கள், இது, தன்னம்பிக்கையையும், உடல்நலத்தையும் கீழறுப்பதான ஒருங்கிணைந்த, அரசாங்க ரீதியான, களங்கம் ஏற்படுத்தும், குறைமதிப்பிற்குட்படுத்தும், தனிமைப்படுத்தும் வகையிலான செல்வாக்கு சேதம் என்பதுடன் உடல் ரீதியான சித்திரவதை என்பதை நன்கறிவார்கள்.

“மனிதகுலத்திற்கு அப்பாற்பட்ட வகையில், அசான்ஜ் ஒரு தீய மனிதன் என்று அனைவரும் கருதுவதாக அவர் நம்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்கு மாறாக, மனநல மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிறரிடமிருந்து கிடைக்கக்கூடிய தகவலறிந்த, நன்கு ஆதரிக்கப்பட்ட ஆதரவும் மற்றும் புரிந்துணர்வும் தானே சிகிச்சை அளிக்கிறது.”

டாக்டர் லிஸா ஜோன்சன் PhD, மருத்துவ உளவியலாளர் (ஆஸ்திரேலியா): “தீவிரமான கேள்விகள் என்பவை, திரு அசான்ஜின் தடுப்புக்காவல் நிலைமைகளினால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கள் பற்றி மட்டுமல்லாமல், விசாரணைக்கு ஆஜராகி அவரை பாதுகாத்துக்கொள்ள அவர் தயாராவதற்கான மருத்துவ தகுதியையும் சூழ்ந்துள்ளன. எனவே, அசான்ஜ் தனது நிலுவையிலுள்ள எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் மருத்துவ ரீதியாக தகுதியுள்ளவரா என்பதை தீர்மானிக்க தனிப்பட்ட சிறப்பு மருத்துவ மதிப்பீடு அவருக்கு தேவைப்படுகிறது.

“மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அதன் கடமைப்பாடுகளுக்கு இணக்கமாக, உலகெங்கிலுமான மருத்துவ நிபுணர்களின் அவசர எச்சரிக்கையை இங்கிலாந்து அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்பதுடன், மேலும் தாமதிக்காமல் சரியான சிறப்பு மற்றும் நிபுணத்துவ மருத்துவமனைக்கு அசான்ஜை மாற்ற வேண்டும்.”

“இந்த பகிரங்க கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் மவுனமாக இருக்க மறுப்பதுடன், ஜூலியன் அசான்ஜிற்கு நிகழும் அபாயகர மருத்துவ புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வர மீண்டும் மீண்டும் அவசர அழைப்பு விடுத்த பல மருத்துவ மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பக்கம் அவர்கள் வெளிப்படையாக நிற்கின்றனர்.”