இந்தியாவில் மதர்சன் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை மாவோயிச தொழிற்சங்கத் தலைவர்கள் தனிமைப்படுத்துகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technologies & Engineering - MATE) நிறுவனத்தில் 500 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களின் மூன்று மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்தை மாவோயிச தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.

ஒரே தொழிற்சாலையில் பணிபுரியும் 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அணிதிரட்ட மறுத்து, இன்னும் பரந்த அளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிலாளர்களிடமிருந்தும் அருகிலுள்ள ஒரகடம் தொழில்துறை பகுதிகள் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் ஆதரவைக் கோருவதற்கு பதிலாக தொழிலாள வர்க்கத்தின் மீது எதிர்ப்பினைக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) மாநில அரசிடம் பயனற்ற முறையீடுகளை செய்யும்படி மதர்சன் தொழிலாளர்களை தொழிற்சங்கத் தலைவர்கள் வழிநடத்துகின்றனர்.

தொழிலாளர்கள் அவர்களது புதிய தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் [Chengai Anna Mavatta Jananayaga Thozhilalar Sangam (CAMJTZ)] அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அத்துடன் ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளையும் தகாதவார்த்தைகளால் இழிவுபடுத்துவதையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனக் கோரி ஆகஸ்ட் 26 இலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். CAMJTZ அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலுடன் (AICCTU) இணைக்கப்பட்டுள்ளது, இது இந்திய மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) — விடுதலை [CPI-ML-Liberation] அமைப்பின் தொழிற்சங்க பிரிவாகும்.

AICCTU தலைவர்கள் மதர்சன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான அதன் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ள மற்றும் உற்பத்தியைத் தக்கவைக்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களைப் பயன்படுத்துவதற்கும் MATE நிர்வாகத்தின் கைகளைப் பலப்படுத்தியுள்ளது. நிர்வாகம் இதுவரை வேலைநிறுத்தப்போராடத்தில் ஈடுபட்ட 44பேரினை பணிநீக்கம் செய்திருக்கிறது.

மதர்சன் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதில் மற்றும் அவர்களின் போராட்டங்களை அஇஅதிமுக அரசாங்கத்திடம் முறையீடு செய்வது மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற போராட்டங்களுக்குப் பின்னால் திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகித்தவருமான எஸ்.குமாரசாமி, கடந்த மாதம்வரை AICCTU வின் தேசியத் தலைவராக இருந்தார். தங்களுக்கு ஆதரவாக செயல்பட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று தொழிலாளர்கள் மத்தியில் பிரமைகளை பரப்ப அவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த மாதம், குமாரசாமி அறிவிக்கப்படாது மற்றும் விளக்கம் கொடுக்கப்படாது, AICCTU மற்றும் CPI-ML-Liberation கட்சி இரண்டிலிருந்தும் பிரிந்து வந்ததுடன் இடது தொழிற்சங்க மையம் (LTUC) என அழைக்கப்படும் ஒரு புதிய தொழிற்சங்க கூட்டமைப்பை அமைத்துள்ளார். அவர் தலைமையிலான பிளவுக் குழு இப்போது தங்களை "கம்யூனிஸ்ட் கட்சி" என்று அழைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரையின் இணை ஆசிரியர் புதுதில்லியில் உள்ள AICCTU தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து இந்தப் பிளவு குறித்து விசாரித்தார். அதற்கு கடந்தமாதம் AICCTU மற்றும் CPI-ML-Liberation இலிருந்து குமாரசாமி வெளியேறிவிட்டதாக AICCTU செய்தித்தொடர்பாளர் ராஜீவ் டிம்ரி ஒப்புக்கொண்டார். ஆனால் முன்னாள் தலைவர் விலகியதற்கான அரசியல் அடிப்படைக் காரணங்களை விளக்க மறுத்துவிட்டார் மேலும் வரும் மார்ச் 2020 இல் வரவிருக்கின்ற கட்சி மாநாட்டில் இந்த பிரச்சனையைப் பற்றி விவாதிப்பார்கள் என்று கூறியுள்ளார். எஸ்.எம். பானர்ஜி என்பவர் AICCTU வின் தேசியத் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் இது குறித்து ஏனைய தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூடுதலாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மதர்சன் தொழிலாளர்களுக்கு அந்த பிளவு குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

நவம்பர் 28 அன்று குமாரசாரமியின் தலைமையில் புதிய LTUC "மதர்சன் தொழிலாளர்களின் வேலைநிறுத்த பிரச்சினைகளை தீர்க்க தலையிட வேண்டும்" என்று அஇஅதிமுக அரசாங்கத்திடம் முறையிடுவதற்காக மதர்சன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலளார்களை அழைத்துக்கொண்டு மாநில அரசாங்கத்தின் தலைமையகமான சென்னையிலுள்ள செயலகத்தை நோக்கி ஒரு எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. மதர்சன் நிர்வாகத்திற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து நிறுவனத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் இத்தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. மாவோயிச தொழிற்சங்க தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதர்சன் தொழிலார்களின் முந்தைய போராட்டங்களின்போது நடந்தது போல் அஇஅதிமுக அரசாங்கமானது தொழிலாளர்கள்மீது காவல்துறையினரை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. சுமார் 200 தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் அன்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

நவம்பர் 18 அன்று, பிற்போக்குத்தனமான தமிழ் தேசியவாத பிரச்சாரத்தின் பின்னால் மதர்சன் தொழிலாளர்களை திசை திருப்பும் ஒரு தெளிவான முயற்சியாக “எழுக தமிழ்” என்ற கோஷத்திற்குப் பின்னால் LTUC மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளான ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கம் [Democratic Advocates Union (DAU)], மக்களுக்கான ஜனநாயக இளைஞர்கள் [Democratic Youth for People (DYP)] மற்றும் மக்களுக்கான ஜனநாயக மாணவர்கள் [Democratic Students for People (DSP)] மற்றும் இவற்றுடன் மதர்சனின் நிரந்தரத் தொழிலாளர்கள் சங்கமும் (CAMJTS யும்) சேர்ந்து சென்னையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து சிந்தாரிப்பேட்டை சந்திவரை ஒரு அணிவகுப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தமிழ் தேசிய போராட்டத்தில் பங்கேற்குமாறு மதர்சன் வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களை அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்தி மொழியை திணிப்பதற்கான திட்டங்கள் உட்பட இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) மத்திய அரசின் பேரினவாத கொள்கைகள் தொடர்பாக தமிழகத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருக்கும் உண்மையான கோபத்தை LTUC மற்றும் அதன் கூட்டாளிகள் சாதகமாக சுரண்டியுள்ளன.

பாஜக அரசாங்கத்தின் இந்தி-இந்து வகுப்புவாத கொள்கைகளை கண்டிக்கும் அதேவேளையில், நவம்பர் 18 ஆர்ப்பாட்டத்தின்போது தலைவர்கள் எழுப்பிய முழக்கங்களும் உரைகளும் தமிழகத்தை தளமாகக் கொண்ட பிராந்தியக் கட்சியான திராவிட முனேற்றக் கழம் (திமுக) போன்ற கட்சிகளின் உரைகளுக்கு ஒத்தவையாக இருந்தன. "எழுக தமிழ்," "தமிழக நலன்களைப் பாதுகாக்க நாம் களத்தில் இறங்குவோம்," "தமிழ் மொழியைக் காப்போம்," "வெல்க தமிழ், தமிழ் நீடூழி வாழ்க," "எழுக தமிழ், சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையை தோற்கடிப்போம்," "வேலை வழங்குவதில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கு." போன்ற கோஷங்களை அவர்கள் பயன்படுத்தினர்.

இந்த முழக்கங்கள், குறிப்பாக கடைசி, தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை இந்தியாவில் வேறு இடத்திலிருக்கும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரிப்பதற்கு உதவுகின்றன.

கூட்டத்தில் உரையாற்றிய குமாரசாமி, தமிழ் தேசியவாத பிரச்சாரத்தை மதர்சன் தொழிலாளர்களுக்கு முன்மாதிரியாகப் பாராட்டி பேசியபோது, “இந்த பேரணியைப் பார்த்தபின், வேலைநிறுத்தம் செய்யும் மதர்சன் தொழிலாளர்கள் இன்னும் போர்க்குணமிக்க போராட்டத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர்” என்றார்.

நவம்பர் 18 ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 MATE தொழிலாளர்கள் பங்கேற்றனர், இது தங்கள் வேலைநிறுத்தத்தால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்காக போராட மாவோயிச தொழிற்சங்கத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணத்தில் இருந்தது. ஆனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல MATE தொழிலாளர்களிடம் பேசியபோது, அவர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறினர். "ஆனால் நாங்கள் இங்கு வந்தபோது, அது வேறு ஏதோவொன்றாக இருந்தது."

குமாரசாமி மற்றும் அவரது புதிதாக உருவாக்கப்பட்ட எல்.டி.யூ.சியின் பிற்போக்குத்தனமான பங்கு மாவோயிஸ்ட் சிபிஐ-எம்எல்-விடுதலையின் முழுமையான முதலாளித்துவ அரசியலில் இருந்து எழுகிறது. அக்டோபர் 18 அன்று காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.சி.டி.யு ஏற்பாடு செய்த மதர்சன் வேலைநிறுத்தக்காரர்களின் உண்ணாவிரதத்தின் முடிவில், தொழிற்சங்கத் தலைவர்கள் “வெல்க தமிழ்” என்ற முழக்கத்தை எழுப்பினர்.

சிபிஐ-எம்எல்-விடுதலை இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சிபிஎம், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அல்லது சிபிஐ ஆகியவற்றுடன் கூட்டணியில் உள்ளது. இது சமீபத்திய பொதுத் தேர்தல்களில் பெருவணிக தமிழ் பிராந்திய கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கூட்டணியில் போட்டியிட்டது. சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவற்றின் ஸ்ராலினிச வழிகாட்டிகளுக்கு ஏற்ப, சிபிஐ-எம்எல்-விடுதலை, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்க தயாராக இருந்தது. சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக காங்கிரஸ் இருந்தது.

மதர்சன் தொழிலாளர்கள் மாவோயிச சிபிஐ-எம்எல்-விடுதலை மற்றும் அதன் ஏ.ஐ.சி.டி.யுவில் இருந்து மட்டுமல்லாமல், குமாரசாமி மற்றும் அவரது எல்.டி.யூ.சி ஆகியோரிடமிருந்தும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக முறித்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

அவர்கள் ஆலையில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் தொழில்துறை பகுதிகளிலும், இந்தியாவின் பிற இடங்களிலும் உள்ள மற்ற தொழிலாளர்களிடம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி அழைப்பு விடுக்க வேண்டும். அந்த முயற்சி அடிமை உழைப்பு நிலைமைகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிரான நல்ல ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் பொதுவான போராட்டமாகவும், மத்தியில் பாஜக அரசாங்கமும் மாநில அளவில் அனைத்து அரசாங்கங்களும் மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகைய போராட்டம் அனைத்து தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை நிலைநாட்ட சர்வதேச சோசலிசத்தின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading