பிரான்சில் மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியிறக்க சுயாதீன நடவடிக்கை குழுக்களைக் கட்டமையுங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள், எரிசக்தித்துறை, மருத்துவதுறை மற்றும் துறைமுக தொழிலாளர்களால், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் அவரது ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை தொடங்கப்பட்டு அண்மித்து இரண்டு வாரங்களாகின்றன. இன்று, நூறாயிரக் கணக்கான வேலைநிறுத்தக்காரர்களும் மாணவர்களும் மீண்டும் பிரான்ஸ் எங்கிலும் பாரிய போராட்டங்களில் அணிவகுத்தனர்.

ஐரோப்பாவின் இதயதானத்தில் வர்க்க போராட்டத்தின் இந்த வெடிப்பானது, சமூகத்தில் அடிப்படை வர்க்க கோடுகளை வரைந்துள்ளதுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியக்கூறு மற்றும் சக்தியை எடுத்துக்காட்டி உள்ளது. இரண்டு வாரங்களாக வெகுஜன போக்குவரத்து நின்று போயுள்ளது, பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, கனரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்புத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களால் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் முற்றுமுதலாக போக்குவரத்து நின்றுவிடும் ஆபத்து அதிகரித்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக, அல்ஜீரியா, ஈராக், பொலிவியா, சிலியில் பாரிய வெகுஜன போராட்டங்களும், அமெரிக்க மற்றும் மெக்சிக்கன் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுடன் சேர்ந்து, இந்த வேலைநிறுத்தமானது விரிவடைந்து வரும் உலகளாவிய வர்க்க போராட்ட மீளெழுச்சியின் உள்ளார்ந்த பாகமாகும். இது, சமூக சமத்துவமின்மை, நிதியியல் உயரடுக்கு மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அடக்கி வைக்கப்பட்டிருந்த எதிர்ப்பு பொங்கி எழுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.

பிரான்சிலும் அதற்கு அப்பாலும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அரசியல் பிரச்சினைகள் மேலெழுவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. டிசம்பர் 5 அன்று முதல் அணிவகுப்பில் வேலைநிறுத்தக்காரர்களைத் தாக்குவதற்கு, மக்ரோன், கவச வாகனங்கள், நீர்பீய்ச்சிகள் மற்றும் கலகம் ஒடுக்கும் பொலிஸை அனுப்பினார். பின்னர் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப், எந்த விட்டுக்கொடுப்பும் வழங்கப்படாது என்று சமிக்ஞை செய்து, கடந்த வாரம் உரையாற்றினார். மக்களில் 70 சதவீதத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில், அவர், "புள்ளிகள் அடிப்படையிலான" ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும், ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரித்து 64 ஆக ஆக்கும், மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய திட்டங்களைப் படிப்படியாக நீக்கும் மக்ரோனின் திட்டங்களை நாடாளுமன்றம் மூலமாக முன்னெடுக்க சூளுரைத்தார்.

ஜனநாயக கோட்பாடுகளைக் காலடியில் இட்டு நசுக்கும் ஓர் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான இந்த போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு அவசரமான பணிகளை முன்னிறுத்துகிறது: அதாவது, மக்ரோனைக் கீழிறக்குவதற்கான ஓர் அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்க தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பது மற்றும் ஒரு புதிய சோசலிச தலைமையைக் கட்டமைப்பதாகும்.

மக்ரோன் அவரின் ஓய்வூதிய வெட்டுக்களைத் திரும்ப பெற வேண்டுமென அவருக்கு பிரயோசனமற்ற முறையீடுகள் செய்யும் ஸ்ராலினிச அமைப்பான தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) முறையீடுகளுடன் தொழிலாளர்கள் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. வேலைநிறுத்தக்காரர்கள் கிறிஸ்துமஸ் இற்குப் பின்னரும் வேலைநிறுத்தத்தை நீடிக்க அழைப்பு விடுக்கின்ற நிலையில், CGT தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் பெரிய பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில் மக்ரோன் அவரின் ஓய்வூதிய வெட்டுக்களைப் பரிசீலனை செய்து திரும்ப பெறுவாரானால், கிறிஸ்துமஸ் க்கு முன்னதாக வேலைநிறுத்தத்தை CGT முடிவுக்குக் கொண்டு வரும் என்று உறுதியளித்து போராட்டங்களைத் தணிக்க முயன்று வருகிறார். தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், இந்த பாதை ஒரு காட்டிக்கொடுப்பிற்கும் தோல்விக்குமே இட்டுச் செல்கிறது.

கடந்த வாரம் வெளிப்படையான விபரங்கள், மக்ரோன் கொள்கைகளின் வர்க்க குணாம்சத்தைத் தெள்ளத்தெளிவாக தெளிவுபடுத்துகின்றன. 2017 இல் அவர் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை வகுத்துக்கொண்டிருந்த நிலையில் தான், அவர் 6 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான BlackRock சர்வதேச நிதிய சொத்து நிறுவனத்தை சந்தித்தார். ஓய்வூதிய வெட்டுக்களை வடிவமைப்பதற்கான அவரின் முதன்மை நபர் ஜோன்-போல் டுலுவா, பல்வேறு அமைப்புகளில் இருந்து சட்டவிரோதமாக ஆறு இலக்க வருவாய் குவித்திருந்தார் என்பது வெளியானதும் நேற்று அவர் இராஜினாமா செய்தார். அரசு ஓய்வூதியங்களை வெட்டுவதிலும் மற்றும் முதலீட்டு ஓய்வூதிய கணக்குகளை அறிமுகப்படுத்துவதிலும் நேரடியாக ஆர்வம் கொண்டிருந்த சில காப்பீட்டு நிறுவனங்களால் அவருக்கு நிதி வழங்கப்பட்டிருந்ததும் அதில் உள்ளடங்கும்.

தொழிலாளர்களுக்குப் "புள்ளிகள் அடிப்படையில்" கணக்கிட்டு குறிப்பிட்டு கூறமுடியாத பணத்தொகையாக ஓய்வூதியங்கள் வழங்குவதற்கான மக்ரோனின் திட்டத்தைப் பொறுத்த வரையில், அதன் நோக்கம் வலதுசாரி முன்னாள் பிரதம மந்திரி பிரான்சுவா ஃபிய்யோனின் 2016 உரையின் ஒரு காணொளியில் சுருக்கமாக வரையறுக்கப்பட்டது. ஃபிய்யோன் தெரிவித்தார், “புள்ளிகள் அடிப்படையிலான" ஓய்வூதிய முறை, “அரசியல்வாதி எவரும் ஒப்புக் கொள்ளாத ஒரு விடயத்தை அனுமதிக்கிறது. அது ஒவ்வொரு ஆண்டும் அதன் அளவை, புள்ளிகளின் மதிப்பைக் குறைக்க அனுமதிக்கிறது, அவ்விதத்தில் ஓய்வூதியங்களின் மட்டத்தைச் குறைக்கிறது,” என்றார்.

இதுபோன்றவொரு மோசடியான பிற்போக்குத்தன முறையுடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றுமே இல்லை. மக்ரோனுக்கு முறையிடுவதற்கான CGT இன் கொள்கை திவாலானது, மற்றும் தசாப்தங்களாக ஓய்வூதியங்களை வெட்டுவதற்கும், தொழிலாளர் சந்தையின் நெறிமுறைகளைத் தளர்த்துவதற்கும் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்க அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிரெஞ்சு அரசாங்கங்களுடன் தொழிற்சங்க அதிகாரத்துவம் நெருக்கமாக ஒத்துழைத்து வந்திருப்பதன் பாகமாக அமைந்துள்ளது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியில் (NPA) இருந்து லூத் ஊவ்றியேர் (LO) வரையில் ஜோன்-லூக் மெலென்சோனின் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise) கட்சி வரையில் ஒட்டுமொத்த பிரெஞ்சு போலி-இடதும் ஓய்வூதிய வெட்டுக்களைத் திரும்ப பெற செய்ய மக்ரோனுக்கு அழுத்தமளிக்க முடியும் என்று வாதிடுவதில் தொழிற்சங்கங்களை ஆதரிக்கின்றன.

தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான, சர்வதேச நிதிய பிரபுத்துவத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை நசுக்குவதற்கான, மற்றும் முதலாளித்துவத்தை ஒரு சோசலிச சமுதாயத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான ஒரு போராட்டம் அவசியப்படுகிறது.

இன்றைய பூகோளமயப்பட்ட முதலாளித்துவத்தில், புரட்சிகர பாதையைத் தவிர தொழிலாளர்கள் வேறு முன்னோக்கிய பாதையைக் காண முடியாது. பிரான்சிலும் சர்வதேச அளவிலும் வெடித்து வரும் மோதல்கள், தசாப்தங்களாக முதிர்ந்துள்ள பூகோளமயப்பட்ட சமூக முரண்பாடுகளின் விளைபொருளாகும். 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய, அதுவும் குறிப்பாக 2008பொறிவுக்குப் பிந்தைய சகாப்தம், தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட செல்வவளம் இடைவிடாது பெரும் பணக்காரர்களின் பைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதையும், ஆப்கானிஸ்தானில் இருந்து சிரியா மற்றும் மாலி வரையிலும் ஏகாதிபத்திய போர்களையும் கண்டுள்ளது.

ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கிரெனல் (Grenelle) ஒப்பந்தங்களின் கூலி உயர்வுகளுக்குப் பிரதியீடாக மே 1968 பொது வேலைநிறுத்தத்தின் புரட்சிகர சந்தர்ப்பத்தை விற்றுத் தள்ளியது. தசாப்தங்களாக தொழில்துறை அழிப்பு மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு வரி விட்டுக்கொடுப்புகளால் நாசமாக்கப்பட்டுள்ள இன்றைய ஐரோப்பிய முதலாளித்துவத்தால் அதுபோன்ற விட்டுக்கொடுப்புகளை வழங்க முடியாது. மக்ரோன் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இராணுவத்திற்கும் பில்லியனர்களுக்கும் பாய்ச்சி உள்ளார் — அதுவும் கடந்தாண்டு அவர் மிகவும் ஆழமாக வெறுக்கப்பட்டவராக ஆன பின்னரும் கூட, ஒருவேளை அவர் எப்போதேனும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் கரங்களில் வீழ்ந்தால் அவரை மீட்பதற்காக 24 மணி நேரமும் ஒரு ஹெலிகாப்டர் நிறுத்த வேண்டியிருந்தது.

கடந்தாண்டு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள், ஏற்கனவே, தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூக போராட்டங்களின் சாத்தியக்கூறை எடுத்துக்காட்டி உள்ளனர். தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நகர்கின்ற வேளையில், போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாக எவ்வாறு ஒழுங்கமைப்பது மற்றும் தொழிலாளர்களின் கிளர்ச்சிகரமான இயக்கத்தை மக்ரோனுடன் பிணைப்பதற்கான அதன் முயற்சிகளை எவ்வாறு இணைப்பது என்பதே முக்கிய பிரச்சினையாகும்.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பதற்கான போராட்டமே இப்போது முக்கியமானதாகும். 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் வெடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர், லியோன் ட்ரொட்ஸ்கி பிரான்ஸ் எங்கே செல்கிறது (Whither France) என்பதில், அதுபோன்ற குழுக்கள் தான் "தொழிற்சங்கம் மற்றும் கட்சி எந்திரத்தின் எதிர்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிவகை" என்று எழுதினார். போல்ஷிவிக் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய, 1917 இல் ரஷ்ய தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சோவியத்களுடன் அவற்றை ஒப்பிட்டு, அவர் எழுதினார்:

ஒரு தற்காப்பு போராட்டத்தில் பிரான்சின் பெருந்திரளான மக்களை ஐக்கியப்படுத்துவதும் மற்றும் வரவிருக்கும் தாக்குதலுக்காக இந்த பெருந்திரளான மக்களுக்கு அவர்களின் சொந்த பலத்தைக் குறித்த நனவை உட்புகத்துவதுமே இப்போதைய கட்டத்தில் நடவடிக்கை குழுக்களின் பணியாக உள்ளன. விடயங்கள் நிஜமான சோவியத்களை எட்டுமா என்பது பிரான்சில் தற்போதைய சிக்கலான நிலைமை, புரட்சிகரமான இறுதி தீர்மானங்களைக் கட்டவிழ்த்து விடுமா இல்லையா என்பதைச் சார்ந்துள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste –PES) பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த முன்னோக்கைப் பரந்தளவில் விவாதிக்குமாறு வலியுறுத்துகிறது. வர்க்க போராட்டத்தின் ஓர் உலகளாவிய மீளெழுச்சிக்கு மத்தியில், மக்ரோன் அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே அபிவிருத்தி அடைந்து வரும் மோதலானது, சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டம் மீண்டும் அரசியல் திட்டநிரலில் நிற்கிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். இதற்கு, தொழிற்சங்கங்களினதும், மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி அல்லது அடிபணியா பிரான்ஸ் போன்ற கட்சிகளில் உள்ள அவற்றின் பாதுகாவலர்களினதும் எதிர்புரட்சிகர எதிர்ப்பில் இருந்து முறித்துக் கொள்வது அவசியமாகும்.

பெருந்திரளான மக்களின் வெடிப்பார்ந்த எதிர்ப்பின் முன்னால், ஒரு சமூக எதிர்புரட்சியை திணிப்பதற்கான மக்ரோனின் முயற்சிகளை ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பிரான்சில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அங்கே எந்த தேசிய பாதையும் இல்லை. இந்தப் போராட்டத்தில், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளே பிரெஞ்சு தொழிலாளர்களுக்கான சிறந்த கூட்டாளிகளாவர். நேட்டோ கூட்டணியின் போர் சதித்திட்டங்கள் மற்றும் சர்வதேச நிதிய சந்தைகளின் உபாயங்களுக்கு எதிராக, போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை ஏற்படுத்துவதே தீர்க்கமான கேள்வியாகும்.

பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்க வலியுறுத்துகிறது, அதன் மூலமாகவே தொழிலாள வர்க்கம் அதன் பொருளாதார மற்றும் தொழில்துறை பலத்தை ஒழுங்கமைக்க முடியும், அதன் போராட்டங்களை சர்வதேச அளவிலும் இணைத்து, சமூகத்தை புரட்சிகரமானரீதியில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். இதற்குள் இருந்து தான், PES, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்புகளுக்கு அரசு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கும், நிதியியல் பிரபுத்துவத்தைப் பறிமுதல் செய்வதற்கும் மற்றும் பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்திற்காக அல்லாது, சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்குமான ஓர் அரசியல் மூலோபாயத்தை முன்னெடுக்கிறது.

Loading