பாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் உச்சநீதிமன்றம், பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act-CAA) இற்கு எதிரான மாணவர்கள் போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான பொலிஸ் தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.

நேற்று, இந்தியாவின் உச்சநீதிமன்றம், தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிக் பல்கலைக்கழகம் (JMI) மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) ஆகிய பல்கலைக்கழக மாணவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கொண்டு வந்த ஒரு மனுவை நிராகரித்ததுடன், CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வன்முறை என சித்தரிக்க முயலும் இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவை கொந்தளிப்புக்குள்ளாக்கிய CAA எதிர்ப்பு போராட்டங்களை நசுக்குவதை பொலிஸூம் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கமும் தொடர்வதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் நீதிமன்ற தீர்ப்பு கண்கூடாக பச்சைக்கொடி காட்டுகிறது.

இந்திய தலைநகரும் மற்றும் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள நகரமுமான தில்லியிலும், மேலும் இந்தியா முழுவதுமான நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் அத்தகைய போராட்டங்கள் செவ்வாயன்றும் தொடர்ந்தன.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, குடியுரிமையை நிர்ணயிப்பதற்கும் வழங்குவதற்குமான அளவுகோலாக மதத்தை CAA உருவாக்குவது தொடர்பான கடுமையான பாராளுமன்ற விவாதம் நான்கு நாட்களுக்கு முன்னர் கடந்த வாரத்தில் நடத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இது, 2015 க்கு முன்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த அல்லது அவர்களது மூதாதையர்கள் நுழைந்த முஸ்லீம் அல்லாத அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் உண்மையான குடியுரிமையை வழங்குகிறது.

CAA இன் உள்ளடக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC) தயாரிக்கப்படுவதற்கான பிஜேபி இன் திட்டத்தின் பின்னால் உள்ள மோசமான, வகுப்புவாத வடிவமைப்புகளை தெளிவுபடுத்துகிறது, அதாவது இதன் கீழ், நாட்டிற்குள் “சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை” தேடிப்பிடித்து வெளியேற்றுவதற்கு வெளிப்படையாக நோக்கம் கொண்டு, இந்தியாவின் அனைத்து 1.3 பில்லியன் குடியிருப்பாளர்களும் தங்களது குடியுரிமையை “நிரூபிக்கும்” ஆவணங்களை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள். அதன்படி, முஸ்லீம்கள் மட்டுமே நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவதற்கான, தடுத்து வைக்கப்படுவதற்கான மேலும் நாடுகடத்தப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள். மேலும், இதுவரை NRC நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரே மாநிலமான அசாமில் ஏற்பட்ட அனுபவம் நிரூபித்தபடி, ஏழை மக்களை அச்சுறுத்துவதற்கும் பலியிடுவதற்கும் வைராக்கியம் கொண்ட இந்து வகுப்புவாத சிந்தனை மிக்க அதிகாரிகளால் இது பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது (பார்க்கவும்:இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது)

நாடு முழுவதிலுமுள்ள பெருமளவிலான இந்தியர்களாலும், மற்றும் இன, குறுங்குழுவாத மற்றும் சாதிய ரீதிகளிலும் CAA பற்றி சரியாக உணரப்பட்டுள்ளது, அதாவது அது இந்தியாவை இந்து இராஷ்டிரா அல்லது இந்து தேசமாக மாற்றுவது குறித்த பிஜேபி மற்றும் பாசிச இராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்திலுள்ள (RSS) அதன் கருத்தியல் வழிகாட்டிகளின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய படியாக உள்ளது.

இந்தியா முதலில் ஒரு இந்து தேசம், அதில் முஸ்லீம்கள் துன்பத்துடன் தான் வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையிலான மோடி அரசாங்கத்தின் நீண்ட தொடர் நடவடிக்கைகளில் இது சமீபத்தியதாகும். ஆகஸ்டில், மோடி அரசாங்கம் அரசியலமைப்பை சட்டவிரோதமாக மாற்றியமைத்து, நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீரின் பகுதியளவிலான தன்னாட்சி அந்தஸ்தை நீக்கி, பின்னர் அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரமிறக்கியது, அதன் மூலம் இப்பகுதியை மத்திய அரசின் நிரந்தர கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மோடி அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் இன் கோரிக்கைகளுக்கு இணங்க, 1992 இல் அயோத்தியில் இந்து வெறியர்களால் இடிக்கப்படும் வரை பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது ஒரு இந்து கோவில் கட்டமைக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. பிஜேபி தலைமையின் தூண்டுதலின் பேரிலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை நேரடியாக மீறும் வகையிலும் அவர்கள் மசூதியை இடித்தனர்.

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (JMI) மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) மாணவர்களை குறிவைத்ததான பொலிஸின் வன்முறை மிக்க தாக்குதல்கள், இந்தியா எங்கிலுமான மாணவர்களின் சீற்றத்தையும், அவர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் தூண்டியுள்ளன.

இந்தியாவின் தலைநகரில், CAA ஆர்ப்பாட்டங்களில் முன்னணி வகித்த அதன் மாணவர் அமைப்பை அச்சுறுத்தும் முயற்சியில், ஞாயிற்றுக்கிழமை JMI வளாகத்திற்குள் பொலிசார் சட்டவிரோதமாக புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, கண்ணீர்ப்புகை, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கைத்தடிகளைக்கொண்டு பொலிசார் மாணவர்களை தாக்கினர். குறிப்பாக இந்த கொடூரமான நிகழ்வில், பொலிசார் பல்கலைக்கழக நூலகத்திற்குள் நுழைந்து, அங்கு அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகளை காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். பல மாணவர்களுக்கு எலும்பு முறிவும் மேலும் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்த நிலையில், ஐம்பதுக்கும் அதிகமான மாணவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.

நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பொலிஸின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராக JMI மாணவர்கள் பேசினர். அப்போது, MBA மாணவரான மொஹமத் முஸ்தபா தன்னை பொலிசார் “இரக்கமின்றி தாக்கிவிட்டனர்” என்றும், அதனால் தான் “மயக்கமடைந்து விட்டதாகவும்” கூறினார். அதனையடுத்து பொலிசார் அவரை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், “அவர்கள் என்னை குளிர்ந்த தரையில் உட்கார வைத்துவிட்டனர்,” என்றும் “நான் சாகப் போகிறேனோ என நினைத்தேன் என்றாலும் எனக்கு எந்தவொரு சிகிச்சையும் வழங்கப்படவில்லை” என்றும் முஸ்தபா தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பொலிசார் மீண்டும் தேவையான அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த பல்கலைக்கழகமான AMU இன் மாணவர்களும், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினர். அலிகாரில் பொலிசார் இன்னும் வன்முறை மிக்க வகையில் தண்ணீர் பீரங்கியால் மாணவர்களைத் தாக்கினர். அதனால் 80 க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது. சிகிச்சையில், PhD மாணவர் ஒருவரின் கை, வெடிக்கும் கண்ணீர்ப்புகை குண்டின் பாகத்தினால் தாக்கப்பட்டு அதனால் தொற்றுக்குள்ளாகியதால் அதனை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது.

திங்களன்று, உச்சநீதிமன்றத் தலைவர், “வன்முறை” நிறுத்தப்படும் வரை பொலிஸின் மிருகத்தனம் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதிமன்றம் விரும்பாது என்று அறிவித்தார். இவ்வாறாக தலைமை நீதிபதி சரத் ஏ. போப்டே தில்லியில் நடந்த CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிக்கவை என்ற பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் கூற்றுக்களை பறைச்சாற்றினார், அதே நேரத்தில் மாநிலப் பாதுகாப்பு படையினர் வெறி கொண்டு தாக்கியது குறித்த முக்கியத்துவத்தை எக்காளத்துடன் புறக்கணித்தார்.

பொலிஸ் ஆத்திரமூட்டிகள் ஞாயிறன்று தொடங்கிய வன்முறை மிக்க சம்பவங்கள் தொடர்பாக CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதாரங்களை வழங்கியுள்ளது பற்றி இது குறிப்பிடவில்லை.

நேற்று, போப்டே தலைமையிலான ஒரு உச்சநீதிமன்ற அமர்வின் விசாரணையும் இதே தொனியில் நடந்தது. “வேறுபட்ட” மாநிலங்களில் நடக்கும் பொலிஸ் வன்முறை குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது நீதிமன்ற கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று கூறி, உண்மையை கண்டறியும் குழுவிற்கு உத்தரவிட தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். மேலும், என்ன நடந்தது என்பது குறித்து தனிப்பட்ட விசாரணை நிலுவையிலுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது குற்றவியல் வழக்குகளைத் தொடர்வதை நிறுத்துமாறு காவல்துறையை அறிவுறுத்த விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் அவர் நிராகரித்தார். “நீங்கள் நிரபராதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருக்கலாம்,” “ஆனால் உங்களை குற்றவாளி என பொலிசார் கருதினால், (பின்னர்) உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (First Information Report - FIR) தாக்கல் செய்யப்படும்,” என்று தலைமை நீதிபதி போப்டே கூறினார்.

நேற்றைய தீர்ப்பும் உச்சநீதிமன்ற நடப்பை முற்றிலும் பேணுவதாகவே உள்ளது. தற்போதைய பிஜேபி அரசாங்கத்தின் கீழும் சரி, அதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழும் சரி, ஜனநாயக மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு நீதிமன்றம் பலமுறை அனுமதித்துள்ளது. உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்த மலிவு உழைப்பு நடைமுறை மற்றும் கொத்தடிமை நிலைமைகளை எதிர்த்துப் போராடிய “குற்றத்திற்காக” 13 மாருதி சூசுகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்த ஜோடிக்கப்பட்ட கொலை குற்றத்திற்கு ஆதரவளித்து தீர்ப்பு வழங்கப்பட்டதும் இதில் அடங்கும்.

ஆகஸ்ட் தொடங்கி, பிஜேபி அரசாங்கம் காஷ்மீரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அதன் அரசியலமைப்பு சதியை நிலைநாட்டுவதற்காக பல தொடர்ச்சியான தீர்ப்புகளை இந்தியாவின் உச்சநீதிமன்றம் வழிங்கியுள்ளது. இதில், ஆயிரக்கணக்கானோர் “தடுப்பு” காவலில் வைக்கப்பட்டதும், மாதங்கள் நீடித்த இணைய மற்றும் கைபேசி சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதும் அடங்கும்.

நேற்று, வடகிழக்கு தில்லியிலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பகுதியான சீலாம்பூரில் ஆயிரக்கணக்கான CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதினர். ஆர்ப்பாட்டக்காரர்கள், CAA, NRC மற்றும் தில்லி பொலிஸை கண்டித்து கோஷமிட்டனர் என்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.தடியடி மற்றும் சரமாரியான கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக ஐந்து சுரங்கப்பாதை நிலையங்களை பொலிசார் மூடினர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி பதிலடி கொடுத்தனர்.

மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பிற மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமையிலும் கூட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. சென்னையிலுள்ள மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து பொலிசார் பல எதிர்ப்பாளர்களைக் கைப்பற்றினர். புனேயில், மகாராஷ்டிர பொலிசார் ஆயிரக்கணக்கான பெர்குசன் கல்லூரி மாணவர்கள் வளாகத்தைத் தாண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாதென தடை விதித்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் அவர்களது தேசிய கூட்டணிக் கட்சிகளான ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் சில ஆர்ப்பாட்டங்களுக்கு இன்னமும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் சீற்றத்தைச் சுரண்டவும், மேலும் இந்திய ஸ்தாபக அரசியலின் பிற்போக்குத்தன கட்டமைப்பிற்குள் அதனை கட்டுப்படுத்தவும் திசைதிருப்பவும் முயல்கின்றன.

இதில், இந்து வலதுசாரிகளுக்கு அடிபணிவதற்கும் அவற்றிற்கு மறைமுக ஆதரவளிப்பதற்கும் பேர்போன உச்சநீதிமன்றமும், காங்கிரஸ் கட்சியும் பிஜேபி அரசாங்கத்தை எதிர்ப்பதில் மதச்சார்பற்ற அரண்களாக செயல்பட முடியும் என்ற பிரமைகளை ஊக்குவிக்கும் வகையில், குறிப்பாக ஸ்ராலினிஸ்டுகள் இழிந்த பாத்திரம் வகிக்கின்றனர்.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் முயற்சியில், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்திய அதிகாரிகள் இணைய அணுகலை துண்டித்துள்ளனர்.நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கையின் படி, காஷ்மீரில் தொடர்ச்சியாக இணைய தடை விதிக்கப்பட்டுள்ளது உட்பட, சுமார் 60 மில்லியன் பேருக்கு இணைய அணுகலை மறுத்துள்ளனர்.

விரைவாக மோசமடைந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையையும், மேலும் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் நிலையில், பிஜேபி அதன் இந்து மேலாதிக்கத் திட்ட நிரலை தீவிரமாக செயல்படுத்த, அதன் பாசிச அடிதளத்தை அணிதிரட்டவும் இந்தியாவின் தொழிலாளர்களை மற்றும் உழைப்பாளர்களை அச்சுறுத்தவும், மேலும் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நேற்று, மோடியின் முக்கிய ஆதரவாளரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அரசாங்கம் அதன் CAA அமலாக்கத்தில் ஒருபோதும் பின்வாங்காது என உறுதிபூண்டார். மேலும் அவர், “நீங்கள் விரும்பும் அனைத்து வகைகளிலும் நீங்கள் எதிர்க்க முடியும்,” “ஆனால் பிஜேபி இன் நரேந்திர மோடி அரசாங்கம் அதில் உறுதியாகவுள்ளது” என்று அறிவித்தார்.

“நகர்புற நக்சலைட்டுக்களும்” காங்கிரஸ் கட்சியும் அமைதியின்மையைத் தூண்டுவதாக மோடி குற்றம்சாட்டினார். மேட்டுப்புற இந்தியாவின் தொலைதூரக் காடுகளிலுள்ள மாவோயிச கிளர்ச்சியாளர்களை குறிப்பது போல, எதிரிகளை வன்முறையாளர்கள் மற்றும் தேசத் துரோகிகள் என குறிப்பிடுவதற்கு பிஜேபி வழமையாக பயன்படுத்தும் சொல்லாக “நகர்ப்புற நக்சலைட்டுகள்” என்பது உள்ளது. அச்சுறுத்தும் வகையில், சென்ற மாதம், “நகர்ப்புற நக்சலைட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை” எடுக்க அரசாங்கத்தின் முதன்மை கிளர்ச்சி எதிர்ப்புப் படையான துணை இராணுவ மத்திய ரிசர்வ் பொலிஸ் படைக்கு (Central Reserve Police Force-CRPF) ஷா அழைப்பு விடுத்தார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

Mass protests erupt against Modi-led Indian government’s Hindu supremacist agenda

[17 December 2019]

இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது

[13 December 2019]

Modi’s assault on Kashmir and the Indian working class

[5 November 2019]

Loading