இந்திய அரசாங்கத்தின் வகுப்புவாத குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் வெகுஜன போராட்டங்கள் தொடர்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு பகுதியாக தென்னிந்திய மாநிலம் தமிழகம் முழுவதும் வெகுஜன போராட்டங்கள் தொடர்கின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) தலைமையிலான மாநில அரசின் பொலிஸ் அடக்குமுறையை மீறி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக பா.ஜ.க.வின் கூட்டாளியாக இருப்பதுடன் இந்தியாவின் தேசிய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் CAA நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதில் அதன் பாராளுமன்ற ஆதரவு கருவியாகவும் இருந்தது.

CAA இன் கீழ், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2015 க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். எவ்வாறாயினும் இந்த நாடுகளில் இருந்து வந்த அனைத்து முஸ்லீம் குடியேறியவர்களுக்கும், இலங்கையில் இனவெறியால் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி ஓடிய தமிழர்கள் மற்றும் மியான்மரைச் சேர்ந்த அந்த நாட்டில் கொடூரமான இராணுவத் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட ரோஹிங்கியாக்கள் உட்பட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் இந்த வசதி மறுக்கப்படுகிறது. 1947 இல் இந்தியாவின் சம்பிரதாய சுதந்திரத்திற்குப் பின்னர் மத அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பாஜகவின் உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்த தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) நாடு தழுவிய விரிவாக்கத்துடன் CAA செயல்படுத்தப்படுகிறது. NRC இன் கீழ், அனைத்து 1.3 பில்லியன் இந்திய குடிமக்களும் தங்கள் குடியுரிமைக்கான ஆவண ஆதாரங்களை அரசாங்க அதிகாரிகளின் திருப்திக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் "குடிமக்கள் அல்லாதவர்கள்" என்று அறிவிக்கப்படுவார்கள், மேலும் தடுப்புக்காவல் மற்றும் இறுதியில் வெளியேற்றப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள்.

கடந்த வாரம் கோயம்புத்தூர், வேலூர், திருச்சி, மதுரை மற்றும் மாநில தலைநகரான சென்னை உள்ளிட்ட பல தமிழக நகரங்களில் CAA மற்றும் NRC க்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னைப் பல்கலைக்கழகம், புதிய கல்லூரி, முகமது சதக் கல்லூரி மற்றும் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பல பல்கலைக்கழக கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

டிசம்பர் 19 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் CAA மற்றும் NRC க்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோதமானது என்று கூறி போராட்டத்தை நடத்தியதற்காக பிரபல நடிகர் சித்தார்த், இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா, மற்றும் பல்வேறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உட்பட 600 பேர் மீது சென்னை போலீஸ் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டிசம்பர் 23 அன்று தமிழ்நாடு மாநில சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முனேற்றக் கழகத் (திமுக) தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் காங்கிரஸ் கட்சி, மறுமலார்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க), இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்), அத்துடன் இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போன்ற பல எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மாநில அரசு மற்றும் பொலிஸ் தடைகளை மீறி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பங்கேற்பவர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு தெளிவான முயற்சியாக, சென்னை உயர் நீதிமன்றம் சென்னை போலீசாருக்கு ஆளில்லா குட்டி விமானங்கள் (ட்ரோன்கள்) வழியாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வீடியோ எடுக்க உத்தரவிட்டது. உயரமான கட்டிடங்களிலிருந்து பேரணியை போலீஸ்காரர்கள் வீடியோ எடுப்பதை காணமுடிந்தது.

பொலிஸ் ஒடுக்குமுறை அதிகரித்த போதிலும், சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 60 மாணவர்கள் வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தினர். கடந்த வார தொடக்கத்தில் இரண்டு நாட்கள், சுமார் 20 மாணவர்கள் தங்கள் மைதானத்தில் நின்று வளாகத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். போராட்டக்காரர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் மற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதை காவல்துறை தடுத்தது.

டிசம்பர் 26 அன்று, சிபிஎம் மற்றும் சிபிஐ, மாவோயிஸ்ட் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், திராவிடர் கழகம் மற்றும் தமிழ் தேசியவாத மே 17 இயக்கம் ஆகியவை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட மறியல் போராட்டத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பங்கேற்றனர்.

CAA எதிர்ப்பு பேரணிகளில் எதிர்க்கட்சிகளின் பங்கு என்பது, பாஜகவின் இந்து மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பைத் திரட்டுவதுடன் எந்தவகையிலும் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் திசை திருப்புவதும் ஆகும். இந்த அமைப்புகள் ஒருபோதும் வகுப்புவாதத்திற்கு எதிரான ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

கடந்த காலங்களில், திமுக பாஜகவுடன் தேர்தல் கூட்டணிகளை ஏற்படுத்தி, இந்த இந்து மேலாதிக்கக் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கங்களில் இணைந்தது. அதேபோல், காங்கிரஸ் கட்சி இந்து மேலாதிக்கவாதிகளுடன் இணைந்த நீண்ட பதிவுகளைக் கொண்டுள்ளது. இதில், மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் பாசிச சிவசேனாவுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான காங்கிரஸின் சமீபத்திய முடிவிலிருந்து, 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவை ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகவும், இந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவாகவும் வகுப்புவாத ரீதியாக பிரித்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுடனான அவர்களின் கூட்டு ஒத்துழைப்பும் இதில் அடங்கும்.

சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை இந்த பெருவணிகக் கட்சிக்குப் பின்னால் உள்ள வெகுஜன CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும், வகுப்புவாத பாஜகவுக்கு எதிரான பிரதான "மதச்சார்பற்ற" அரணாக பொய்யாக ஊக்குவிப்பதற்கும் காங்கிரஸுடன் தீவிரமாக செயல்படுகின்றன.

டிசம்பர் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் WSWS நிருபர்கள் தலையிட்டு, பாஜகவின் இந்து மேலாதிக்க நடவடிக்கைகள் குறித்து WSWS கட்டுரைகளின் நூற்றுக்கணக்கான தமிழ் மொழி நகல்களை விநியோகித்தனர்.

டிசம்பர் 26 ஆர்ப்பாட்டத்தில் வழங்கிய ஒரு சுருக்கமான உரையில், தமிழ்நாட்டின் சிபிஎம் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய தேசியவாதம் மற்றும் தமிழக பிராந்தியவாதத்திற்கு விண்ணபம் செய்தார், “இந்த எதிர்ப்பு தேசத்தை பாதுகாப்பதாகும். எடப்பாடி [தமிழக முதல்வர்] தமிழகத்தை அழிக்க திட்டமிட்டுள்ளார்”.

CAA ஐ எதிர்ப்பதாக கூறும் 11 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார், இந்து வலதுசாரிகளுடன் நீண்டகாலமாக நிறுவப்பட்ட பதிவுகள் இருந்தபோதிலும் அவர்களை "மதச்சார்பற்ற சக்திகள்" என சித்தரித்தார்.

29 வயதான அஸ்வின், வகுப்புவாத சட்டங்களை கண்டித்தார். "NRC மற்றும் CAA ஆகியவற்றை நான் எதிர்க்கிறேன், ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். புதிய சட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமே குறிவைக்கின்றன, மற்ற மத சிறுபான்மையினரை அல்ல” என்றார். "மத வகுப்புவாதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதை நான் மிகவும் எதிர்க்கிறேன். நான் ஒரு உலகளாவிய குடிமகனாகவும், சர்வதேசவாதியாகவும் இருக்க விரும்புகிறேன்”.

19 வயதான தருண் கூறினார்: “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக இங்கு மற்ற சமூகங்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். பாஜக இப்போது அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது, இது போர் போன்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். ஹிட்லரின் கீழ் ஜேர்மனியில் யூதர்களுக்கு என்ன நடந்ததோ அது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு நடக்கலாம்”.

சினிமா துறையில் பணிபுரியும் 28 வயதான ஆலம்ஷா கூறினார்: “மத்திய அரசு முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டி வருகிறது. நான் ஒரு முஸ்லீம் என்பதால் நான் பயப்படுகிறேன். நாம் பார்ப்பது வகுப்புவாதத்தின் அதிகரிப்பு மட்டுமல்ல, அதிகரித்து வரும் சமூக நெருக்கடியும் ஆகும்.

"வகுப்புவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான உங்கள் திட்டத்துடன் நான் உடன்படுகிறேன். 1947 பிரிவினை தான் வகுப்புவாதம் மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் ஆபத்துக்கான மூலகாரணம் என்று சொல்வது சரியானது”.

பல்கலைக்கழக மாணவரான கவுதம், 26, கூறினார்: “நாங்கள் மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன, காவல்துறை எங்களை கொடூரமாக தாக்கியது. அவர்கள் கழிவறைகளை மூடிவிட்டு கல்லூரி வாயில்களை மூடி எங்கள் எதிர்ப்பை தடுக்க முயன்றனர்.

"புதிய சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இலங்கை தமிழர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மோடி அரசாங்கம் தடுப்பு முகாம்களை உருவாக்கியுள்ளது, இது அகதிகளுக்கான சிறைகளைப் போன்றது. அரசு அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதே என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”.

25 வயதான மாணவன் இசக்கி கூறினார்: "1947 பிரிவினை தொழிலாள வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்திய அரசியலமைப்பு இரண்டு மில்லியன் மக்களை வகுப்புவாத கொலை செய்ததிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் விளக்கும் வரை இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகமானது என்றுதான் நான் நினைத்தேன்." அவர் அனைத்து மத, சாதி மற்றும் மொழியியல் வேறுபாடுகளிலும் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் WSWS இன் போராட்டத்துடன் அவர் உடன்பட்டார்.

Loading