ஈரான் மற்றும் சிரியாவை அச்சுறுத்துவதற்காக ஐரோப்பா கடற்படை கப்பலை அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

இஸ்லாமிய அரசை (IS) இலக்கு வைக்கும் அமெரிக்கத் தலைமையிலான குண்டுவீச்சு தாக்குதல் நடவடிக்கையான Chammel இல் சார்ல்ஸ் டு கோல் (Charles de Gaulle) விமானந்தாங்கி கப்பல் மூன்று மாத காலத்திற்கு பங்கேற்கும் என்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜனவரி 16 அன்று ஆயுதப்படைகளுக்கு ஆற்றிய உரையில் அறிவித்ததையடுத்து, நேற்று அக்கப்பல் பிரெஞ்சு துறைமுகம் Toulon இல் இருந்து புறப்பட்டது. ஈரானிய ஆட்சியின் இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரியான ஜெனரல் காசிம் சுலைமானியை வாஷிங்டன் ஈராக்கில் படுகொலை செய்த மூன்று வாரங்களுக்குள் இது நடத்தப்படுகிறது. இவ்வாறாக, பிரான்சும் ஐரோப்பிய சக்திகளும் மத்திய கிழக்கு மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளில் தங்கள் இராணுவத் தலையீட்டை தீவிரப்படுத்தி வருகின்றன.

ஈரானிய கடற்கரையில் ஹோர்முஸ் (Hormuz) மூலோபாய நீரிணைப்புக்களில் ஐரோப்பிய கடற்படை கண்காணிப்பு இயக்கம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று பாரிஸ் அறிவித்தது, மேலும் ஜேர்மன், பெல்ஜியம், டச்சு, ஸ்பானிஷ், போர்த்துகீஸ் மற்றும் கிரேக்க கப்பல்களையும் இதில் ஈடுபடுத்தும். இந்த பிராந்தியத்தில் போர் வெடிப்பதற்கான அபாயத்திற்கு மத்தியில், தெர்மோநியூகிளியர் குண்டுகளுடனான ஆயுதங்களை தாங்கிய விமானந்தாங்கி மற்றும் ரஃபால் ஜெட் போர் விமானங்களையும் பாரிஸ் நிலைநிறுத்துகிறது என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

அது இவ்வாறு அறிவித்தது: “மத்திய கிழக்கின் சமீபத்திய நிகழ்வுகள், பதட்டங்களைத் தூண்டி, பெரியளவிலான போர் வெடிப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கின்ற நிலையில் உண்மையில் அவை கவலையளிக்கின்றன. சர்வதேச சட்டத்தை, குறிப்பாக கடற் சட்டங்கள் குறித்த ஐ.நா. மாநாட்டை மதித்து, பாரசீக வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் துணை கடற்படை கண்காணிப்பு பிரிவுகளை நிலைநிறுத்துவதன் மூலம் கடற்படை நிலைமை குறித்த அறிவையும் கண்காணிப்பையும் இந்த இயக்கம் உறுதியாக வழங்கும்.”

ஐரோப்பாவில், பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி அத்தகைய இயக்கம் “ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை…” என்று மறுத்ததுடன், “மிகக் கூர்மையான பதட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள இப்பிராந்தியத்தில் போர் விரிவாக்கம் அல்லாத நடவடிக்கைகளில் பங்கேற்க பிரான்ஸ் விரும்புவதையே தெளிவுபடுத்தியுள்ளது” என்று அவர் கூறினார். “போர் விஸ்தரிப்பு இல்லாத, அல்லது, எந்தவொரு நேரத்திலும் போர் விரிவாக்கம் நிறுத்தப்படலாம் என்ற ஒரு இடத்திற்கு நாங்கள் வந்து விட்டோம்” என்றும் அவர் கூறினார். மேலும், பிரான்ஸ் நிலைநிறுத்தியுள்ள விமானந்தாங்கிக் கப்பல், “ஈரானுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் அமெரிக்க மூலோபாயத்திற்கு ஒரு எதிரிடையாக உள்ளது” என்றும் பார்லி கூறினார்.

பார்லி என்ன கூறினாலும், மத்திய கிழக்கில் நிகழும் இராணுவ விரிவாக்கம் மற்றும் போரின் சுழற்சியில் வாஷிங்டன் விழித்துக் கொண்டதை தொடர்ந்து, இந்த ரோந்து ஐரோப்பாவின் வளர்ந்து வரும் ஈடுபாட்டிற்கு சாட்சியமளிக்கிறது. நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ஒவ்வொன்றும் இந்த பிராந்தியத்தை சூறையாடுவதன் மூலம் தங்கள் இலாப பங்கீட்டை அதிகரிக்க ஏலம் விடுகின்றன. குறிப்பாக வாஷிங்டன் இப்பிராந்தியத்தில் தனது இராணுவ ஆதிக்கத்திற்கு ஈரானை ஒரு தடையாகவே பார்க்கிறது, அதற்கான காரணம், 1991 இல் ஈராக் மீதான நேட்டோவின் போரினால் தொடங்கப்பட்ட 30 ஆண்டுகால ஏகாதிபத்தியப் போருக்குப் பின்னர் ரஷ்யா மற்றும் சீனா உடன் தெஹரான் அதன் உறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பதே.

பாக்தாத்தில் ஜனவரி 3 அன்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலால் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடுமையான பதட்டங்களுக்கு மத்தியில் சார்ல்ஸ் டு கோல் விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்கை நோக்கி நகர்கிறது. இது பிரெஞ்சுக்காரர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கு கடுமையான தாக்கங்களை கொண்டுள்ளது. மனிதகுலத்தை ஒரு முழுமையான பிராந்திய அல்லது உலகப் போரில் மூழ்கடிக்கக்கூடிய இராணுவ நிகழ்வு அல்லது தூண்டுதலுக்கான ஒருசில தவறான முடிவுகளிலிருந்து உலகம் விலகியுள்ளது.

அமெரிக்க-ஐரோப்பிய போர் திட்டங்களின் பொறுப்பற்ற தன்மையின் ஒரு முக்கிய காரணியாக இருப்பது, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியை நெரிக்க இராணுவ பதட்டங்களை பயன்படுத்துவதற்கு ஆளும் வர்க்கங்கள் திட்டமிடுவது தான். 2019 ஆம் ஆண்டு, அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின், ஐரோப்பிய நாடுகளில் பல தொழிலாளர்களின், மேலும் ஈராக், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் என வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் கண்டது. மேலும், ஒரு வருடத்திற்கும் மேலாக, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே தொடங்கப்பட்டதான பாரிய “மஞ்சள் சீருடையாளர்கள்” ஆர்ப்பாட்டங்களை மக்ரோன் எதிர்கொண்டுள்ளார்.

மக்ரோனின் பரவலாக வெறுக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்கு தள்ளியுள்ளது, இது, மே 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சில் எழுச்சி கண்ட மிக நீண்ட வேலைநிறுத்த போராட்டமாக உள்ளது.

பிரான்சின் விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கை சென்றடைவதற்கு முன்பே, பிரதமர் எட்வர்ட் பிலிப், ரஃபால் (Rafale) மற்றும் Hawkeye விமானங்கள் ஏவப்படுவதை கவனிக்க வெளிநாடு செல்வதற்கான முன்நிகழ்ந்திராத முடிவை எடுத்து வருகிறார். மேலும், பிரான்சின் தேசிய வான் பாதுகாப்பு கட்டளையகத்தின் முக்கிய பகுதியான விமானத்தளம் 942 லியோன்-மொன்ட் வேர்டனை (Lyon-Mont Verdun) பார்வையிட பிலிப்பும் பார்லியும் பிற்பகலில் லியோனுக்குப் பயணம் செய்வார்கள். இராணுவ தளத்தில் வான்வழி நடவடிக்கைகளுக்கான தேசிய மையத்திற்குள் இருந்து விமான மேலாதிக்க பயிற்சிகளை அவர்கள் பார்வையிடுவார்கள்.

இராணுவக் கொள்கையை விட உள்நாட்டு சமூக விடயங்களில் அரசியலமைப்பு ரீதியாக குற்றம்சாட்டப்பட்ட பிலிப்பை கொடியால் மூடி மறைத்து மத்திய கிழக்கு தலையீடுகளுக்கு மக்ரோன் அனுப்பி வைக்கிறார். மேலும், ஐரோப்பிய கூட்டணி குறி வைத்துள்ளது ஈரானை மட்டுமல்ல, சார்ல்ஸ் டு கோல் ஐ ஐரோப்பிய கூட்டணியின் கப்பல்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றன. அதன் மற்றொரு முக்கிய இலக்காக துருக்கியும், லிபியாவில் தேசிய உடன்படிக்கை படைகளின் அரசாங்கத்துடன் (GNA) பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் உள்ளது. அதற்கு பதிலாக, சைப்ரஸ், கிரீஸ் மற்றும் எகிப்து உடனான உறவுகளை வளர்த்துக் கொள்ள பாரிஸ் முயன்று கொண்டிருக்கிறது.

பிரெஞ்சு இராணுவ செய்தி வலைத் தளம் OpEx360 குறிப்பிடுகிறது, “நிக்கோசியா, ஏதென்ஸ் மற்றும் கெய்ரோ ஆகியவை அங்காரா மற்றும் GNA இடையே மேற்கொள்ளப்பட்ட கடல் எல்லைகள் ஒப்பந்தத்தை கடுமையாக புகார் செய்கின்றன. இந்த ஒப்பந்தம், துருக்கி தனது கண்ட எல்லையை விஸ்தரிக்கவும், ஈஸ்ட்மெட் எரிவாயு குழாய் வழித் திட்டத்தை சீர்குலைக்கவும் அனுமதிக்கிறது. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தின் முன்பு சைப்ரியாட் நீர்நிலைகளில் துருக்கியின் ‘சட்டவிரோத’ துளையிடுதல் குறித்து கண்டித்து, இவ்வாறு எச்சரித்தார்: ‘ஒருவேளை துருக்கி இந்த நடவடிக்கைகளை தொடருமானால், அதன் மீது பொருளாதாரத் தடைகளை உருவாக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். மேலும், இந்த மண்டலத்தில் இராணுவ பிரசன்னத்திற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.’”

சுலைமானின் கொலைக்குப் பின்னர் WSWS அடிக்கோடிட்டுக் காட்டியதைப் போல, “ஈரான் உடனான போரின் விளைவுகளை குறைத்து மதிப்பிட்டு யாரும் தவறு செய்துவிடக் கூடாது. மோதலின் வளர்ச்சி உலகளாவிய பரிமாணங்களை விரைவாகப் பெறும். ஏராளமான நாடுகளை போரின் சூழலுக்குள் இழுக்கும் மோதலின் தர்க்கத்திற்கு – இது பரந்த யுரேசிய நிலப்பரப்பில் பல நாடுகளின் முக்கிய நலன்களை பாதிக்கிறது - முந்தைய ஒரு காலப் பகுதியாக மட்டுமே இது இருக்கும்.

ஸ்ராலினிச ஆட்சி சோவியத் ஒன்றியத்தை கலைத்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ஏகாதிபத்தியப் போர்களின் இடைவிடாத விரிவாக்கம் கடும் ஆபத்துக்களை முன்வைக்கிறது. ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் உக்ரேன் மற்றும் இப்போது ஈரானில் நடந்த போர்களுடன், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் யூரேசியாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான பென்டகனின் முயற்சிகளுக்கு அடித்தளமாக இருக்கும் பெரும் சக்தி மோதல்கள் இன்று வெளிப்படையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. 1914 அல்லது 1939 இல் இருந்ததைப் போல, வாஷிங்டன், மாஸ்கோ மற்றும் பிற முக்கிய தலைநகரங்கள் அனைத்தும் உலகப் போருக்கு தயாராகி வருகின்றன.

சீனாவை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தனிமைப்படுத்துவதன் மூலம் வாஷிங்டனின் உலக மேலாதிக்கத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” திட்டத்தின் போது விடுக்கப்பட்ட, “கடல்வழி சுதந்திரத்தை” பாதுகாப்பதே இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் என்ற அமெரிக்காவின் கூற்றை எதிரொலிப்பதாக, சார்ல்ஸ் டு கோல் ஐ தென் சீனக் கடல் பகுதிக்கு அனுப்புவதாக பிரான்சும் அச்சுறுத்தியது. மேலும், ஆசியாவில் சீனாவின் முக்கிய போட்டியாளரான இந்தியாவில் பிரெஞ்சு துருப்புக்களை நிலைநிறுத்துவது உட்பட, அதனுடனான ஒப்பந்தங்களையும் பாரிஸ் குறைத்துக் கொண்டது.

சார்ல்ஸ் டு கோல் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படும் என்று மக்ரோன் அறிவிக்கையில், ரஷ்யாவை அச்சுறுத்தும் பயிற்சிகளுக்காக, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வடக்கு அட்லாண்டிக் மற்றும் வட கடல் பகுதிகளுக்கும் அது செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். OpEx360 ஆல் அறிவிக்கப்பட்ட பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயத்தின் பொது இயக்குநரகத்திற்கான ஒரு ஆய்வு இவ்வாறு வலியுறுத்துகிறது: “கையிலுள்ள பாதுகாப்பு சிக்கல்கள்… பிரெஞ்சு மூலோபாய நலன்களுடன் ஒத்திருப்பவை. அதனால்தான் பிரான்ஸ் நேட்டோ கட்டுப்பாட்டின் கீழ் Operation Lynx ஐ பால்டிக் நாடுகளுக்கு அனுப்பியது.”

முற்போக்கான தீர்வுகளை கொண்டிராத முதலாளித்துவ வர்க்கத்திற்காக பெருகி வரும் புவிசார் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்ரோனும் ஐரோப்பிய சக்திகளும் போரை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை கொண்டு தொழிலாளர்களை விரக்தியடையச் செய்வதற்கு முயற்சிப்பது மட்டுமல்லாமல், உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களை வன்முறை மிக்க அடக்குமுறைக்கு உட்படுத்தும் ஒரு இராணுவ-பொலிஸ் அரசை நிர்மாணிப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். இந்த ஆபத்துக்களும், ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்ட பிராந்திய அல்லது உலகப் போரும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக போராடுவதில் தொழிலாளர்களின் அவசியம் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Loading