மக்ரோன் பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க நகர்கையில், பாரிய போராட்டங்கள் தொடர்கின்றன

மொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையைஇங்கேகாணலாம்

அடுத்த மாதம் தேசிய நாடாளுமன்றத்தில் ஓய்வூதிய சட்டமசாதாவை நிறைவேற்றுவதற்குத் தயாரிப்பு செய்யும் வகையில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதை அவரின் மந்திரி சபையில் முன்வைத்த பின்னர், அவரின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக நூறாயிரக் கணக்கான வேலைநிறுத்தக்காரர்களும், “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களும் இளைஞர்களும் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் எங்கிலும் போராட்டங்களில் அணிவகுத்தனர். வரவிருக்கும் ஆண்டுகளில் மற்றும் தசாப்தங்களில் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கு பிரெஞ்சு அரசை அனுமதிக்கும் அந்த சட்டமசோதாவுக்கு எதிராக இரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் ஆறு வாரகால வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்ட பின்னர் இந்த போராட்டங்கள் வந்துள்ளன.

தொழிலாளர்களின் பெரும் பெரும்பான்மையினர் இந்த வெட்டுக்களை எதிர்ப்பதுடன், “பணக்காரர்களின் ஜனாதிபதி" என்று புனைபெயர் எடுத்துள்ள முன்னாள் முதலீட்டு வங்கியாளர் மக்ரோனையும் எதிர்க்கின்றனர். ஓய்வூதிய வெட்டுக்களை 61 சதவீதத்தினர் எதிர்ப்பதாகவும், பிரெஞ்சு மக்களில் 82 சதவீதத்தினர் 2017 இல் மக்ரோன் பதவியேற்றதற்குப் பின்னர் இருந்து அவர்களின் நிலைமை தனிப்பட்டரீதியில் மோசமாகி இருப்பதாக நம்புவதாகவும் Elabe கருத்துக்கணிப்பு ஒன்று இவ்வாரம் கண்டறிந்தது. இருப்பினும் கூட மக்ரோன் இந்த வெட்டுக்களை பெப்ரவரி 17 இல் தேசிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசிக்கிறார், அங்கே அவரது கட்சி தான் பெரும்பான்மையில் உள்ளது.

ஜனவரி 16 இல் நடந்த கடந்த தேசிய போராட்டத்திற்குப் பின்னர் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அனைத்து புள்ளிவிபரங்களும் ஒப்புக் கொள்கின்றன. இருப்பினும் கூட ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பும் (CGT) மற்றும் பொலிஸூம் தேசியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை 239,000 இல் இருந்து 1.3 மில்லியனுக்குள் வைத்து பரந்தளவில் வேறுபட்ட புள்ளிவிபரங்களை வழங்கின. பாரீசில் நடந்த மிகப்பெரிய அணிவகுப்புடன் சேர்ந்து, மார்சைய், துலூஸ், போர்த்தோ, லு ஹாவ்ர் மற்றும் லியோனிலும் பத்தாயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்தனர். மொத்தம் 200 பிரெஞ்சு நகரங்களில் அணிவகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் நீஸ், ருவான், நாந்தேர், கிளேர்மொன்-ஃபெர்றோன் ஆகிய நகரங்களிலும் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன.

தங்கள் ஓய்வூதியங்கள் மீதான வெட்டுக்களுக்கு எதிராக லியோனில் போராடிய தேசிய வழக்குரைஞர்கள் கவுன்சிலின் நூற்றுக் கணக்கான உறுப்பினர்கள் லியோன் நீதித்துறை தீர்பாணையத்தை ஆக்கிரமித்தனர். பாரிசீல் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் பலவும் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கின, அதேவேளையில் ஈஃபிள் கோபுர பணியாளர்களும் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

மக்களின் அதிகரித்து வரும் கோபம் மற்றும் எதிர்ப்புக்கு இடையிலும் அரசாங்கம் அதன் வெட்டுக்களைப் பலவந்தமாக முன்னெடுக்க நகர்வதால், அரசியல் பதட்டங்கள் இன்னமும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனம் பிளாக்ரோக் உட்பட நிதி நிறுவனங்களுடன் செயலாற்றி அவர் வெட்டுக்களைக் முன்னெடுத்துள்ள, மற்றும் ஓய்வூதியங்களில் இருந்து எடுக்கப்படும் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை பெரும் செல்வந்தர்களுக்கும் இராணுவ-பொலிஸ் படைகளுக்கும் பாய்ச்ச தீர்மானகரமாக உள்ள மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றும் இல்லை. மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான ஒரு போராட்டமே தொழிலாள வர்க்கத்திற்கு முன்னிருக்கும் ஒரே பாதையாக உள்ளது.

ஆனால் பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவமோ மக்ரோனைக் கீழிறக்குவதற்கான தீவிர போராட்டத்தை முடக்கி வருகிறது. 2017 இல் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே இந்த வெட்டுக்களைப் பேரம்பேசி வந்துள்ள அவை, பிரெஞ்சு தேசிய இரயில்வேயில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் வெடித்ததும் தான் அதை கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியாக கடந்த இலையுதிர் காலத்தில் அதற்கு எதிராக இரயில்வே வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தன. பின்னர் அவை—பிரெஞ்சு துறைமுக தொழிலாளர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களின் காலவரையற்ற வெளிநடப்பை முடக்கியதன் மூலம்—இரயில்வே வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தின, அதேவேளையில் வெட்டுக்களைப் பேரம்பேசுமாறு மக்ரோனுக்கு கோரிக்கை விடுத்து ஒரு திவாலான மூலோபாயத்தை முன்னெடுத்தன.

இந்த வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அல்ல சாமானிய தொழிலாளர்களே தொடங்கினர் என்பதை ஏற்கனவே வேலைநிறுத்தக்காரர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அங்கே தொழிற்சங்கங்களின் துரோகத்தின் மீது வேலைநிறுத்தக்காரர்களிடையே அமைதியின்மையும் கவலையும் அதிகரித்து வருகிறது.

பாரீசின் போக்குவரத்துத்துறை தொழிலாளி செடெரிக்(Cédric) உலகசோசலிசவலைத்தளத்திடம்கூறினார்: “நாம் ஊடகங்கங்கள் சொல்வதை கேட்கும்போது, வேலைநிறுத்தக்காரர்களாகிய எங்களிடையே உத்வேகம் பலவீனமடைந்திருப்பாக அவர்கள் உணர்வதைக் காண்கிறோம், அது உண்மையில்லை என்பதைக் காட்டுவதற்கே இன்று இங்கே நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். துரதிருஷ்டவசமாக, நாங்கள் வேலைக்குச் சென்றிருந்தாலும், அது எங்களின் சொந்த சுதந்திரமான விருப்பத்தால் அல்ல; அதற்கும் மேலாக, மாத இறுதியில், நாங்கள் சாப்பிட வேண்டும். பொருளாதார நிலைமை தான் அனைத்திற்கும் மேலாக எங்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்தது. ஆனால் எங்களின் அதிருப்தியைக் காட்ட நாங்கள் அதிக தன்னிச்சையான நடவடிக்கைகளுடன் மீண்டும் ஒன்றுகூட முயன்று வருகிறோம்,” என்றார்.

மற்றொரு போக்குவரத்துத்துறை தொழிலாளியான பிரெடெரிக், இரயில்வே தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதற்காக தொழிற்சங்கங்களை விமர்சித்தார்: “நாங்கள் அனைவரும் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு சென்றிருந்தால், ஒரு வாரத்திலோ அல்லது அதற்கு கூடுதலாகவோ மக்ரோனைத் தோற்கடித்திருக்க முடியும். ஆனால் வேலைநிறுத்தத்தில் இல்லாத தொழிலாளர்கள் எங்களைப் பின்தொடரவில்லை. மேலும், நீங்கள் குறிப்பிட்டதைப் போல, தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் துல்லியமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. அதனால் தான் தனிப்பட்டரீதியில், நான் எந்த தொழிற்சங்கத்திலும் இல்லை அல்லது ஒரு தொழிற்சங்க உறுப்பினராக இல்லை,” என்றார்.

தேசிய நாடாளுமன்றத்தின் மூலமாக மக்ரோன் வெட்டுக்களை முன்னெடுத்தால், வேலைநிறுத்தத்தையும் போராட்டங்களையும் அவர்கள் தொடர இருப்பதாக பல வேலைநிறுத்தக்காரர்களும் WSWS க்கு தெரிவித்தனர். “மக்ரோனை ஆதரிக்கும் சிறுபான்மையினருடன் சேர்ந்து அவரின் அந்த சட்டத்தைத் திணிக்க இன்று அவர் முடிவெடுத்துவிட்டார் என்பதற்காக நாங்கள் போராட்டத்தை நிறுத்தி விடுவோம் என்பதல்ல. மாறாக நாங்கள் 50, 51 நாட்கள் வேலைநிறுத்ததில் இருந்துள்ளோம், நாங்கள் நிதிரீதியாக வற்றிப் போயுள்ளோம். தெளிவாக அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். ஆனால் இந்தாண்டு முடிவு வரையில் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்த வேண்டுமானால், நாங்கள் செய்வோம், வாரத்திற்கு இரண்டு நாட்களாவது இருக்கலாம்.”

வங்கிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் நிதியியல் சந்தைகளால் ஆதரிக்கப்படும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே விரைவிலேயே ஒரு வெடிப்பார்ந்த மோதல் வெடிப்பதற்கான நிலைமைகள் எழுந்து வருகின்றன. அதுபோன்றவொரு போராட்டத்தில், பிரான்ஸ் தொழிலாளர்களின் தீர்க்கமான கூட்டாளிகள், வங்கிகளுக்கு எதிராக அணிதிரண்ட உலகெங்கிலுமான தொழிலாளர்கள் ஆவர். இருப்பினும், இந்த போராட்டம் தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியான கவசத்திற்குள்ளும் மற்றும் மக்ரோனுடன் உடன்பாடுகளை எட்டுவதற்கான அவற்றின் திட்டங்களுக்கு உள்ளேயும் அடிபணிந்திருக்கும் வரையில், சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் மற்றும் பிரான்சின் பரந்த தொழிலாளர் அடுக்குகள் மத்தியில் நிலவும் இந்த ஆதரவை அணித்திரட்ட முடியாது.

மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கும் மற்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ நிதியியல் பிரபுத்துவத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிவதற்குமான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து நனவுபூர்வமாக சுயாதீனமான, தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதே தீர்க்கமான கேள்வியாகும். பெருவாரியான மக்கள் எதிர்ப்பு மக்ரோனையும் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தையும் சர்வாதிகார போக்கில் நிறுத்தி உள்ளதற்கு மத்தியில் கண்மூடித்தனமான வெட்டுக்களைத் திணிப்பதற்கு வங்கிகள் தீர்மானமாக இருப்பது முன்பினும் தெளிவாக உள்ளது.

பாரிய மக்கள் எதிர்ப்பை திட்டவட்டமாக அவமதித்து, மக்களை ஏழ்மைப்படுத்தும் ஒரு வெட்டைத் திணிப்பதன் மூலமாக மக்ரோன் ஜனநாயக கோட்பாடுகளை நசுக்குகிறார் என்று சரியாக குற்றஞ்சாட்டியவர்களுக்கு எதிராக, நேற்று காலை மக்ரோன் ஒரு விஷமத்தனமான வசைபாடலைத் தொடுத்தார்.

“நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழவில்லை, ஏதோவொரு விதமான சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது என்ற அசாதாரண குற்றத்திற்குரிய அரசியல் வாதங்களுடன், அரசுக்கு விரோதமாக நிலைநிறுத்தப்படும் இந்த கருத்தால், இன்று நம் சமூகம் நலிந்து போயுள்ளது,” என்று மக்ரோன் தெரிவித்தார். பின்னர் அவர், பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகம் படுமோசமாக பலவீனமடைந்துள்ளது, பிரான்சில் சர்வாதிகாரம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் எச்சரித்தார்.

“சர்வாதிகாரத்திற்கு செல்லுங்கள்” (Allez en dictature) என்று கூறிய அவர், “சர்வாதிகாரங்கள் வெறுப்பை நியாயப்படுத்துகின்றன. சர்வாதிகாரங்கள் பிரச்சினைகளில் இருந்து வெளியேற வன்முறையை நியாயப்படுத்துகின்றன. ஆனால் ஜனநாயகங்களில் ஓர் அடிப்படை கோட்பாடு உள்ளது அது மற்றவர்களை மதிக்கிறது, வன்முறையை சட்டவிரோதமாக ஆக்குகிறது, சண்டையிடுதல் வெறுக்கப்படுகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். “இன்று நமது ஜனநாயகத்தில் மவுனமாக இருப்பவர்கள் அனைவரும், நமது ஜனநாயகம் மற்றும் நமது குடியரசைப் பலவீனப்படுத்துவதில், இன்றும் எதிர்காலத்திலும், உடந்தையாக இருக்கிறார்கள்,” என்றவர் குற்றஞ்சாட்டினார்.

மக்ரோனின் வாதங்கள், உண்மையில், ஒரு சர்வாதிகாரி தனது ஆட்சியை நியாயப்படுத்த முயன்று வரும் வாதங்களாகும். மதிப்பு மற்றும் அஹிம்சை ஆகிய அனைத்தையும் அவர் பாசாங்குத்தனமாக துணைக்கிழுப்பதைப் பொறுத்த வரையில், அவர் பெரும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கருத்துக்கள் மற்றும் பொருளாதார நலன்களை மதித்து அல்ல மாறாக அவற்றை அவமதித்தே அவர் வெட்டுக்களைத் திட்டமிடுகிறார். அவர் வெறுமனே முத்திரைவில்லை குத்தும் நாடாளுமன்றம் மூலமாகவும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதன் மூலமாகவும் இத்தகைய வெட்டுக்களை முன்னெடுத்து இப்போது தொழிலாளர்களை வறுமைக்குட்படுத்த முயன்று வருகிறார்.

மக்ரோன் "மஞ்சள் சீருடை" போராட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்டவர்களைப் பொலிஸ் கைது மட்டும் செய்திருக்கவில்லை, மாறாக Zineb Redouane மற்றும் Steve Caniço ஐ படுகொலை செய்வதிலும் மற்றும் வயதான போராட்டக்காரர் Geneviève Legay ஐ அடித்து துன்புறுத்துவதிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளைக் கௌரவப்படுத்தி உள்ளார். உயிர் ஆபத்தான வன்முறை சகித்துக் கொள்ளப்படுவது மட்டுமல்ல, மாறாக கௌரவிக்கப்படும் என்பதை பொலிஸிற்கு எடுத்துக் காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சின் பாசிசவாத சர்வாதிகாரியும், யூத-விரோத இனப்படுகொலையாளருமான பிலிப் பெத்தனை "மாவீரர்" என்று அவர் அரசியல்ரீதியில் குற்றகரமாக அழைப்பு விடுத்ததிலேயே 2018 இல் இதை அவர் எடுத்துக்காட்டினார்.

மக்ரோன் மற்றும் சர்வதேச வங்கிகளுக்கு எதிராக அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, பிரான்சிலும் சர்வதேச ரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டுவதும், மற்றும் அரசு அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் அந்த அமைப்புகளுக்கு மாற்றுவதற்கான ஒரு போராட்டமும் அவசியமாகும்.

Loading