காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் இணைய தடை விதிப்புக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

பிரதமர் நரேந்திர மோடியும், அவரது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி அரசாங்கமும், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் கிட்டத்தட்ட ஆறுமாத காலமாக விதித்துள்ள இணைய அணுகலுக்கான தடையை இப்போதும் தொடர்வதற்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அதன் ஜனவரி 10 தீர்ப்பில் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான இந்திய அரசியலமைப்பின் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக இணைய அணுகலானது “அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று அறிவிக்கும் அதேவேளையில், மோடி அரசாங்கம் காஷ்மீருக்கு இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டுமென்றோ, அல்லது எந்தவொரு பகுதிக்கும் அது விதித்திருக்கும் இணைய தடை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கவோ இந்த தீர்ப்பு வெளிப்படையாகவே தவறிவிட்டது. இவ்வாறு செய்வதன் மூலம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது பிஜேபி அரசாங்கம் தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மீண்டும் அதன் ஆதரவை வழங்கியுள்ளது.

பல வாரங்களாக, ஏன் பல சந்தர்ப்பங்களில், ஜம்மு காஷ்மீரின் பெரும்பகுதிகளில் ஊடகங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் மக்களின் இயக்கம் ஆகியவற்றிற்கு பல மாதங்களாக நீடிக்கும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் திணித்திருப்பதை சவால் செய்யும் உறுதியான மனுக்களுக்கு பதிலிறுக்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கின் முன்னணி மனுதாரர் காஷ்மீர்டைம்ஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின் ஆவார்.

கடந்த ஆகஸ்டில் முதன்முதலாக உச்ச நீதிமன்றத்தில் பாசின் தனது வழக்கை பதிவு செய்தபோது, கட்டுப்பாடுகள் தற்காலிகமானவையே, விரைவில் அவை நீக்கப்படும் என்றும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் கூற்றுக்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அவரை அது அறிவுறுத்தியது.

இத்தகைய தடைகள் பின்னர் பல மாதங்கள் தொடர்ந்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் விதித்திருந்த இணைய சேவை தடைகளுக்கான உத்தரவுகளை ஒரு வார காலத்திற்குள் மோடி அரசாங்கம் “மீளாய்வு” செய்யவும், அதன் விபரத்தை “பொது களத்தில்” பதிவிடவும், மேலும் மருத்துவமனைகள் மற்றும் “128 பிற அத்தியாவசிய சேவைகளை” வழங்கும் நிறுவனங்களுக்கும் இணைய சேவையை வழங்க “பரசீலனை செய்யவும்” கோரும் ஒரு தீர்ப்பை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியதுடன் இது முடிவுக்கு வந்தது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், அதன் தற்போதைய இணைய கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான மூன்று பக்க சுருக்க உத்தரவை வெளியிட்டது.

என்றாலும், கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பின்னர் தற்போது கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் 7 மில்லியன் மக்களுக்கு இணைய வசதி தடை செய்யப்பட்டு முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது, அதாவது ஜனவரி 26 முதல் அல்லது வெறும் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 300 இணைய தளங்களை மட்டும் (ஆனால் எந்தவித சமூக ஊடக தளங்களையும் அணுக முடியாமல்) அணுக முடிவதாக கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீருக்கும் அப்பாற்பாட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளது. “ஜனநாயக” நாடான இந்தியாவைக் காட்டிலும் எந்தவொரு நாடும் இணைய அணுகலை இந்தளவிற்கு அடிக்கடி தடை செய்யவில்லை. தில்லியை தளமாகக் கொண்ட மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Centre), 2019 ஆம் ஆண்டில் இந்திய அதிகாரிகள், ஜம்மு காஷ்மீருக்கு வெளியே ஐம்பது முறைகளுக்கும் அதிகமாக இணைய அணுகலுக்கு தடை விதித்தது உட்பட, மொத்தம் 106 முறை நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவைகளை தடை செய்துள்ளனர். டிசம்பர் மாதம், பிஜேபி தனது முஸ்லீம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக எழுந்த பரந்த மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்காக தில்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் இணைய தடைகளை செயல்படுத்தியது.

காஷ்மீர் முற்றுகையின் ஒருநிலை

ஆகஸ்ட் 5 அன்று, மோடி அரசாங்கம், நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் (J&K) அதன் சிறப்பு, பகுதியளவிலான தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்தை சட்டவிரோதமாக நீக்கி, விரைவில் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அது பிரிக்கப்படும் என்று அறிவித்ததுடன், மத்திய அரசாங்கத்தின் நிரந்தர கட்டுப்பாட்டின் கீழ் அதனை கொண்டு வந்தது. இந்த அரசியலமைப்பு சதித்திட்டத்தைச் செயல்படுத்த, ஒட்டுமொத்த பிராந்தியமும் கடும் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டதுடன், தகவல் தொடர்பு இருட்டடிப்பும் அங்கு நிகழ்த்தப்பட்டது. மேலும், முழு ஊரடங்கு உத்தரவுகளை விதிக்கவும், எதிர்ப்பின் அனைத்து அறிகுறிகளையும் வன்முறையால் நசுக்கவும் என ஏற்கனவே அம்மாநிலத்தில் இருந்து வரும் அரை மில்லியன் சிப்பாய்களுக்கு கூடுதலாக, மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டன.

அனைத்து கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்புக்களும் மற்றும் இணைய சேவைகளும் அங்கு தடை செய்யப்பட்டன. மேலும், பிரிட்டிஷ் காலனித்துவ சகாப்த காலச் சட்டத்தைப் பயன்படுத்தி, குற்றவியல் நடைமுறை சட்ட (Code of Criminal Procedure-CrPC) பிரிவு 144 இன் படி, மக்கள் இயக்கத்திற்கும், நான்கு பேருக்கு அதிகமானோர் கூடும் கூட்டத்திற்கும் தடை விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் அங்கு திணிக்கப்பட்டன. காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் எந்தவித குற்றச்சாட்டுமின்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

தரைவழி மற்றும் கைபேசி தொடர்புகள் இறுதியில் மீட்டெடுக்கப்பட்டன, அதிலும் முதலில் ஜம்முவிற்கும், பின்னர் மிகவும் தாமதமாக அதிக மக்கள்தொகை கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் தொலைபேசி தொடர்புகள் வழங்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட, நூற்றுக்கணக்கானோர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் இயக்கம், மற்றும் அவர்களது தகவல் தொடர்பு அணுகல் ஆகிய இரண்டிற்கும் அரசாங்கம் திணித்துள்ள கட்டுப்பாடுகளால் அவர்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினர். காஷ்மீர் முற்றுகையின் உச்சமாக, அங்கு நோயாளிகளும், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனைகளுக்கு செல்வதிலும், பிற சுகாதார வசதிகளை அணுகுவதிலும் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இணைய அணுகல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையானது, மருத்துவ வசதிகளை நோயாளிகள் அணுகுவது, வங்கி சேவைகளை மக்கள் பெறுவது மற்றும் அனைத்து வகையான வணிக பரிவர்த்தனைகளை மேற்கொள்வது உட்பட அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துள்ளது.

பாசின் தனது மனுவில், மக்கள் இயக்கங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினாலும் மற்றும் இணைய முடக்கத்தினாலும், ஆகஸ்ட் 5, 2019 முதல் அக்டோபர் 11 வரை காஷ்மீர்டைம்ஸ் நாளிதழை பிரசுரிக்க முடியவில்லை என்ற நிலையில், “செய்தித்தாளின் துண்டிக்கப்பட்ட நகல்களே பின்னர் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன” என்று புகார் செய்தார். செய்தி முகப்பு / இணைய தளமும் “இன்றுவரை முடக்கப்பட்டுள்ளது.”

மனுதாரர்களை எதிர்கொள்ளும் விதமாக, “இந்திய-எதிர்ப்பு” செய்திகள் எல்லை தாண்டி (அதாவது பாகிஸ்தானிலிருந்து) பரவுவதை தடுப்பதும், “அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும்” அவசியம் என்று கூறி இணைய கட்டுப்பாடுகளை அரசாங்கம் நியாயப்படுத்தியது. இந்த வாதங்கள், காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் அதன் அரசியலமைப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை நசுக்குவதையும், காஷ்மீர் மீதான இந்திய அரசு அடக்குமுறை பற்றிய தகவல்கள் வெளியுலகிற்கு பரவுவதை தடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளதை மறைமுகமாக ஏற்கின்றன.

ஏனென்றால், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அதன் ஜனவரி 10 தீர்ப்பில், இணைய அணுகலை இடைநிறுத்தம் செய்து உத்தரவிடும் அளவிற்கு அரசுக்கு சரியான “பாதுகாப்பு கவலைகள்” இருக்க வேண்டும் என்று அறிவித்து, இணைய அணுகல் “அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்படுகிறது” என்று முதன்முறையாக பதிவு செய்தது என்பதுடன், இந்த உத்தரவுகள் நீதித்துறை மீளாய்வுக்கு உட்பட்டவை என்று தீர்ப்பளித்ததால், பெரும்பாலான இந்திய ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இதை “ஜனநாயகத்துக்கு” ஆதரவான ஒரு அடி என்பதாக கருத்தை முன்வைக்கின்றன.

காஷ்மீரில் அரசு அடக்குமுறைக்கு சவால் செய்யும் பல மனுக்களில் புகார் அளித்தவர்களில் ஒருவரான, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத்தின் கருத்துக்களும் இந்த விடயத்தில் ஒத்திருந்தன. ஆசாத் தீர்ப்பை “வரவேற்றார்” என்பதுடன், “மிகுந்த வரலாற்று ரீதியான முடிவை” எடுத்ததற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியும் தெரிவித்தார்.

இவையனைத்தும் மட்டமானவையே. உண்மையில், காஷ்மீரில் தொடர்ச்சியான அடக்குமுறையை செயல்படுத்துவதற்கான, மற்றும் இந்தியா எங்கிலுமாக இணைய அணுகலுக்கு வழமையாக இடைக்கால தடைகளை விதிப்பதற்குமான ஜனநாயக முகப்பை உருவாக்கவே நீதிமன்றம் செயலாற்றியுள்ளது.

5 மாத காலத்திற்கு அதிகமாக இணைய அணுகலுக்கு எந்தவொரு பகுதியிலும் அரசாங்கம் தடை விதித்திருப்பது சட்டவிரோதமானது என்றோ, அல்லது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகங்களுக்கு இணைய வசதியை உடனடியாக வழங்க வேண்டுமென்றோ அறிவிக்க உச்ச நீதிமன்றத்தின் மேற்குறிப்பிட்ட தீர்ப்புகள் தவறியதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பின் ஷரத்தில், அடக்குமுறையை நியாயப்படுத்தும் சட்ட வாதங்களை அரசை வழங்க வைப்பதற்கு மிகுந்த பாடுபட்டது. “[அரசியலமைப்பின்] பிரிவு 19 (1) இன் கீழ் வழங்கப்பட்ட [பேச்சு சுதந்திரத்திற்கான] உரிமை சில விதிவிலக்குகளைக் கொண்டுள்ளது, “இது, பொருத்தமான சில விடயங்களில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று அது அறிவித்தது. அந்த “வழக்குகள்” பற்றி விரிவாக கூறும் வகையில், அதாவது, அரசாங்கம் தணிக்கைக்கு உத்தரவிடலாம், ஊடகங்களையும் இணையத்தையும் தடை செய்யலாம், மற்றும் எதிர்ப்புக்களுக்கு தடை விதிக்கலாம் என்ற சாக்குப்போக்குகளின் கீழ், இதையும் சேர்த்து கூறியது: “இத்தகைய கட்டுப்பாடுகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவுகள், பொது ஒழுங்கு, ஒழுக்கம் அல்லது ஒழுக்கநெறி அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது ஒரு குற்றத்திற்கு தூண்டுதலளித்தல் ஆகியவை தொடர்பான நலன்களை மேம்படுத்துவதில் இருக்க வேண்டும்.”

சட்டப்பிரிவு 144

உச்ச நீதிமன்றம் அதன் ஜனவரி 10 தீர்ப்பில், பிஜேபி அரசாங்கத்தின் பல மாதங்களான மற்றும் தற்போது வரை நீடிக்கும் இணைய சேவை இடைநிறுத்தத்தைப் போல சட்டப் பிரிவு 144 இன் அரசியலமைப்பை கையாண்டது. சட்டப் பிரிவு 144 இன் கீழ் “மீண்டும் மீண்டும் உத்தரவுகள்” பிறப்பிப்பது “அதிகார துஷ்பிரயோகமாக இருக்கும்” என்றும், பொது ஒழுங்கு அல்லது பாதுகாப்பிற்கு ஏதேனும் உண்மையான கைதுசெய்யப்பட வேண்டிய அளவிற்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே 144 தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, ஒருபோதும் “எந்தவொரு ஜனநாயக உரிமைகளையும் நியாயமான முறையில் வெளிப்படுத்துவது, அல்லது குறை கூறுவது அல்லது பயன்படுத்துவதை அடக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என்று இது தீர்ப்பளித்தது.”

ஆனால் எந்தவொரு அரசாங்க உத்தரவும் 144 தடைகளை சட்டவிரோதமாக திணிப்பதாக தீர்ப்பளிக்க நீதிமன்றம் கடுமையாக மறுத்துவிட்டது. அதன் இணைய தீர்ப்பைப் போலவே, 144 தடை உத்தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவை நீதித்துறை மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அது தீர்ப்பளித்தமை, இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தற்போதைய அடக்குமுறைக்கான ஜனநாயக முகப்பை வழங்குவதாக உள்ளது.

மோடியின் ஆகஸ்ட் 5 அரசியலமைப்பு சதித்திட்டத்தை ஆதரித்ததைப் போலவே, காஷ்மீரில் அடக்குமுறை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதான செய்தி ஊடகங்கள் பெரிதும் பாராட்டியுள்ளன. என்றாலும், சில விமர்சனக் குரல்களும் அங்கு எழுந்துள்ளன.

சென்னையை தளமாகக் கொண்ட இந்து நாளிதழ் அதன் ஜனவரி 11 தலையங்கத்தில், உச்ச நீதிமன்றம் “இணையத்திற்கு காலவரையற்ற தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறும் அதேவேளை, இணைய சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு அறிவுறுத்தத் தவறியது,” என்று புகார் கூறியது. மேலும், “அரசாங்கத்தின் செயல்பாடுகளின் மதிப்பு” மீதான தீர்ப்பை வழங்குவதில் “நீதிமன்றத்தின் தவறுதல்” “ஏமாற்றமளிக்கிறது” என்றும் இது குறிப்பிட்டது.

உண்மையில், காஷ்மீர் முற்றுகை குறித்த அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்க “நீதிமன்றம் தவறியது”, குறிப்பாக மனு அளித்தபோது அவ்வாறு செய்ய தவறியதானது, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அதன் அரசியல் மற்றும் சட்டபூர்வ-அரசியலமைப்பு இரண்டுக்கும் காஷ்மீர் மீதான கடும் அடக்குமுறைக்கு ஒப்புதல் அளிப்பதாகவே உள்ளது.

மேலும், இது அதன் முந்தைய செயல்பாடுகளுடன் முற்றிலும் ஒத்துப் போகிறது. முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தொழிலாளர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களை அவை தொடுத்தது போல, இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் அதன் முழு சட்ட அமைப்பும் மோடியின் பிஜேபி அரசாங்கத்தின், மற்றும் பாசிச இராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (RSS) அதன் கருத்தியல் வழிகாட்டிகளின் கோரிக்கைகளுக்கு அதிகரித்தளவில் தலைவணங்கியுள்ளன.

பிஜேபி தலைமையின் தூண்டுதலின் பேரிலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நேரடியாக முரண்பாடாக செயல்பட்டும் 1992 இல் அயோத்தியில் இந்து வெறியர்கள் பாபர் மசூதியை இடித்து தகர்த்தது வரை அது இருந்த இடத்தில் ஒரு இந்து கோவிலைக் கட்ட வேண்டும் என்று நவம்பரில் தீர்ப்பை வழங்கியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் காஷ்மீர் தீர்ப்பு முன்னிலைப்படுத்தப்பட்டது.

டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முஸ்லீம்-விரோத CAA இற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை “வன்முறை” என்று முத்திரை குத்துவதில் பிஜேபி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார், அதன் மூலம் பொலிஸ் வன்முறை கொண்டு அவர்களை அடக்குவதை அவர் நியாயப்படுத்தினார்.

எதிர்பார்த்த படி, இந்திய ஸ்ராலினிஸ்டுகள், ஜனவரி 10 தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தை ஜனநாயக உரிமைகளுக்கான “பாதுகாவலன்” என்று அறிவிக்க முனைந்ததை பிடித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் பிற வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், ஜனவரி 10 அன்று வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் முடக்கம் குறித்து “குறிப்பிடத்தக்க கருத்துக்களை” தெரிவித்த நீதிமன்றத்தை பாராட்டியது. இந்நிலையில், இணைய தடையை வாபஸ் பெற அரசுக்கு உத்தரவிடவோ, அல்லது அதன் 144 தடை உத்தரவுகளில் ஏதேனும் ஒன்றை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கவோ நீதிமன்றம் தவறியது குறித்து ஸ்ராலினிஸ்டுகள் மவுனம் சாதித்தனர் என்பதை எடுத்துக் கூற தேவையில்லை.

பல தசாப்தங்களாக, சிபிஎம் உம் மற்றும் அதன் சகோதரத்துவ ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்துள்ளன, அதேவேளை, பிஜேபி மற்றும் இந்து மேலாதிக்க வலதை எதிர்க்கும் பெயரில், தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சிக்கும், பிற வலதுசாரி பிராந்திய மற்றும் சாதிய கட்சிகளுக்கும், மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய முதலாளித்துவ அரசின் பிற அழிந்து வரும் நிறுவனங்களுக்கும் அடிபணியச் செய்கின்றன.

Loading