ஜேர்மன் ஆளும் வர்க்கம் புதிய போர்கள் மற்றும் புதிய குற்றங்களுக்குத் திட்டமிடுவதன் மூலமாக அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டதை கொண்டாடுகிறது

நாஜி ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் முதல்முறையாக, புதன்கிழமை, ஒரு நவ-பாசிசவாத கட்சி ஜேர்மனியில் ஒரு மாநில அரசாங்கம் அமைக்க உதவியது.

தூரிங்கியா மாநிலத்தின் பிராந்திய தேர்தலில் வணிக-சார்பு சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) வெறும் ஐந்து சதவீத வாக்குகளே பெற்றதற்கு மத்தியிலும், தோமஸ் கெம்மரிச், அமெரிக்காவில் ஓர் ஆளுநர் அந்தஸ்துக்கு இணையான பதவியான, தூரிங்கியாவின் முதலமைச்சர் பதவிக்கு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

இத்தேர்தல்களில் இடது கட்சி அதிககூடிய வாக்குகளைப் பெற்றது என்ற உண்மைக்கு மத்தியிலும், இடது கட்சி ஓர் அரசாங்கம் அமைப்பதைத் தடுப்பதற்காக நவ-பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியும் (AfD) மத்திய-வலது கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடனும் (CDU) சுதந்திர ஜனநாயக கட்சி ஒரு கூட்டணி ஏற்படுத்தப்பட்டதால் இது சாத்தியமானது.

இந்த அறிவிப்பானது, நாஜி மூன்றாம் குடியரசு முடிவுக்குப் பின்னர் முதல்முறையாக ஒரு ஸ்தாபக கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக பாசிசவாதிகளுடன் இணைந்து செயல்பட்டிருப்பதைக் குறித்தது. இது AfD இன் நவ-பாசிசவாதிகளுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்ற பிரதான கட்சிகளின் வாக்குறுதிகள் முறிந்திருப்பதைப் எடுத்துக்காட்டுகின்றது.

ஜேர்மனியின் மத்திய நிதியமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள வெள்ளிக்கிழமை ஏப்ரல் 21, 2017 இல் வாஷிங்டனில் 2017 உலக வங்கி குழுவின் வசந்தகால கூட்டத்தில் ஜி20 பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றுகிறார் (படம்: அசோசியேடெட் பிரஸ்/ கரோலின் காஸ்ட்னர்)

இதுவொரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். இது, ஆளும் வர்க்கம் அதன் இராணுவவாதம், சர்வாதிகாரம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த மீண்டுமொருமுறை பாசிசவாத சக்திகளில் தங்கியிருப்பதை தெளிவுபடுத்துகிறது.

தூரிங்கியா சம்பவங்களில் இருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொள்வதற்கான முன்னணி அரசியல்வாதிகளின் அனைத்து முயற்சிகளும், மற்றும் அதையடுத்து மாநிலத்தின் புதிய முதல்வரின் இராஜினாமாவும் ஓர் அடிப்படை யதார்த்தத்தை மறைக்க முடியவில்லை: அதாவது, ஜேர்மனியில் நாஜி ஆட்சி முடிந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், "இனிமேல் ஒருபோதும் அவ்வாறு நடக்காது” என்பதற்கு மாறாக "புதிய போர்கள் மற்றும் குற்றங்களை நோக்கி" செல்வது என்பதே ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விதியாக உள்ளது.

இந்த யதார்த்தம், கடந்த வாரயிறுதியில் Funke ஊடக குழுமத்தின் பத்திரிகைகள் மற்றும் பிரெஞ்சு பத்திரிகையான Ouest-Franceஉடன் தேசிய நாடாளுமன்ற (Bundestag) தலைவர் வொல்ஃப்காங் சொய்பிள இன் ஒரு நேர்காணலில் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நேர்காணலில் சொய்பிள ஜேர்மன் மீள்ஆயுதமயமாதல் மற்றும் வெளிநாட்டு போர்களில் பங்கெடுப்பதற்கு வக்காலத்து வாங்கிய நிலையில், அது ஜேர்மன் அதிகாரிகள் அவுஸ்விட்ச் மரண முகாம் விடுவிக்கப்பட்டதன் 75 ஆம் நினைவாண்டு பொது கொண்டாட்டங்களை நடத்தி வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் வெளியானது.

ஜேர்மனி சிப்பாய்களின் வாழ்வை மீண்டும் போரில் அபாயத்திற்கு உட்படுத்த வேண்டுமா என்று வினவப்பட்ட போது, சொய்பிள, “நாம் ஒவ்வொன்றையும் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கர்களிடம் விட்டுவிட முடியாது. அவுஸ்விட்ச் படிப்பினைகள், நீண்டகாலத்திற்கு எமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான ஒரு விவாதமாக முன்வைக்க முடியாது” என்று பதிலளித்தார்.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் போர் நடவடிக்கைகளுக்கான தயாரிப்பே உடனடி பிரச்சினையாகும். “நாம் தட்டிக்கழித்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஐரோப்பா ஒரு பலமான பாத்திரம் வகிக்க வேண்டுமானால், நாம் நமது பங்கை செய்தாக வேண்டும்,” என்று சொய்பிள தெரிவித்தார்.

மாலி உள்நாட்டு போரிலும், அத்துடன் "லிபியாவில் ஜேர்மன் சிப்பாய்களைக் கொண்ட நடவடிக்கையிலும்" ஜேர்மன் பங்களிப்பினது சாத்தியக்கூறை அவர் மேலெழுப்பினார். ஐரோப்பிய சக்திகள் பேர்லினில் ஆபிரிக்கா மீதான புதிய வேட்கைக்கு திட்டம் தீட்டிய சமீபத்திய லிபிய மாநாட்டு, “சான்சிலருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக" இருந்தது, மேலும் "அங்கே நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது எவ்விதத்திலும், மறுக்கமுடியாதிருப்பதால், விருப்பமில்லா பணிகளையும் கூட மேற்கொள்ளவேண்டும்" என்றார்.

இதுபோன்ற அறிக்கைகளின் நீண்டகால முக்கியத்துவம் மீது யாருக்கும் எந்த பிரமையும் கொள்ள வேண்டியதில்லை. மூன்றாம் குடியரசு வீழ்ந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் போர் மூலமாக அதன் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர விரும்புகிறது. வெளிநாடுகளில் தலையீடு செய்ய ஜேர்மனி "மிகவும் பலவீனமானதா" என்று கேட்கப்பட்ட போது, “நாம் தார்மீகரீதியான விலைகளைத் தொடர்ச்சியாக பிறர் மீதே சுமத்திவிட முடியாது,” என்று சொய்பிள பதிலளித்தார்.

சொய்பிள முன்னதாக கடந்த அக்டோபரில் "பூகோளமயப்பட்ட உலகில் ஜேர்மனியின் பாத்திரம்" என்ற அவரின் வெளியுறவு கொள்கை மீதான முக்கிய உரையிலும் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார். “ஒதுங்கி இருப்பது ஒரு வாய்ப்பல்ல, குறைந்தபட்சம் அது ஒரு நம்பகமான வெளியுறவு கொள்கை மூலோபாயமும் கூட கிடையாது,” என்றவர் அச்சுறுத்தி இருந்தார்.

“ஐரோப்பியர்களாகிய நாம் நமது சொந்த பாதுகாப்புக்காக இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது — நம்மைச் சுற்றி உள்ள உலகின் பாதுகாப்பிற்காக என்பதும் அதன் அர்த்தமாகும்.” “இராணுவப் படைகளைத் தயாராக வைப்பதும்,” இதில் உள்ளடங்கும். இது "ஒரு தார்மீக விலையும் கூட. இந்த சுமையைச் சுமந்து செல்வது ஒரு மிகப்பெரும் சவால் தான், குறிப்பாக ஜேர்மனியர்களுக்கு,” என்றார்.

கடந்த முறை ஆக்ரோஷமான வல்லரசு அரசியலின் "சுமையை" ஏற்றிருந்த ஜேர்மனி, அதன் நலன்களை இராணுவ பலத்தைக் கொண்டு அமுல்ப்படுத்தியது, அதை தொடர்ந்து மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்கள் நடத்தப்பட்டன. நாஜி ஜேர்மனியால் கட்டவிழ்த்து விடப்பட்ட இரண்டாம் உலக போரில், "தார்மீக விலை" என்பதில் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போரில் 27 மில்லியன் பேர் மரணமடைந்தார்கள், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் ஜேர்மனியிலும் பல பத்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள்.

புதிய போர்கள் மற்றும் ஏகாதிபத்திய குற்றங்களுக்கான சொய்பிள இன் மூடிமறைக்கப்படாத அழைப்புகள் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் மனோநிலையை வெளிப்படுத்துகிறது. இப்போது ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியராகவும் ஜேர்மன் அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை ஆலோசகராகவும் உள்ள ஹெர்பிரட் முன்ங்லெர், Augsburger Allgemeineபத்திரிகையின் ஒரு சமீபத்திய நேர்காணலில், “சான்றாக, ஜேர்மன் சான்சிலர் 'மூலோபாய தன்னாட்சி' குறித்து பேசும் போது அல்லது [முன்னாள் பாதுகாப்பு மந்திரியும் தற்போதைய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருமான] திருமதி. வொன் டெர் லெயென் 'அதிகாரத்தின் மொழியை' பற்றி குறிப்பிடும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்று குதூகலிக்கிறார்.

பின்னர் அந்த பேராசிரியர், எரிச்சலூட்டும் அகந்தையான முறையில் தொடர்ந்து கூறுகையில், “நீண்ட காலத்திற்கு முன்னரே, எதிர்காலத்தில் ஒரு பாத்திரம் வகிக்கும் காரணியாக நான் அதிகாரத்தை வலியுறுத்த தொடங்கிய போது, அந்த கருத்தை உறுதியாக வைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அது எவ்வளவு கொடூரமானது, பயங்கரமானது, எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு நமது மதிப்புகள் உள்ளன என்று கூறப்பட்டது. அந்த மிட்டாய்-உமிழ்வோர்கள், ஒவ்வொன்றும் சுயமாகவே நடக்கும் என்று நினைத்துவிட்டார்கள். உலகில் மனிதாபிமான விழுமியங்கள் கடவுளின் படைப்பின் வடிவில் உள்ளன என்ற ஒரு இறையியல் நம்பிக்கையால் ஆதரிக்கப்பட்டது. இவையும் கூட அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளே என்பது ஏதோவிதத்தில் மறக்கப்பட்டுவிட்டது,” என்றார்.

“அதிகாரம் சம்பந்தமான கேள்விகள்" மற்றும் "மிட்டாய்-உமிழ்வோர்" என்பதை கொண்டு அவர் என்ன அர்த்தப்படுத்துகிறார் என்பதை முங்லெர் கடந்த காலங்களில் பல முறை தெளிவுபடுத்தி உள்ளார். எண்ணற்ற நேர்காணல்களில், அவர் போர்க்கள டிரோன்களைக் கொள்முதல் செய்வது மற்றும் நிலைநிறுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் "வீரசாகச காலத்திற்குப் பிந்தைய சமூகம்" குறித்தும் புலம்பி உள்ளார், இந்த காலத்தில் மக்கள் ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய வேட்கைக்கு விலை கொடுக்க தயாராக இருக்கவில்லை. முங்லெர் Frankfurter Allgemeine Zeitungஉடனான ஒரு கலந்துரையாடலில், முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வாயுவை "மனிதநேய" ஆயுதம் என்று விவரிக்கும் அளவுக்குச் சென்றார்.

பின்னர் அங்கே முங்லெரின் சக தோழர், வலதுசாரி தீவிரவாதி பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் விடயம் உள்ளது, “ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை" என்று அறிவித்த இவர், பகிரங்கமாகவே ஜேர்மன் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறார் என்பதுடன் சமீபத்தில் அவர் பல்கலைக்கழகத்தில் ஓர் இடதுசாரி மாணவரை சரீரரீதியாக தாக்கி உள்ளார்.

2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு குழு விவாதத்தின் போது, பார்பெரோவ்ஸ்கி அறிவித்தார், “அகதிகளை ஏற்க நீங்கள் தயாராக இல்லை என்றால், பயங்கரவாதிகள் செய்வதைப் போல, கிராமங்களை எரியுங்கள், மக்களைத் தூக்கிலிடுங்கள், பயம் மற்றும் பீதியைப் பரப்புங்கள், இவ்வாறு செய்ய நீங்கள் தயாராக இல்லை என்றால், உங்களால் இதுபோன்ற ஒரு வாதத்தில் ஜெயிக்க முடியாது என்றால் பின்னர் நீங்கள் அதில் கைவைக்கக் கூடாது” என்றார்.

அரசின் செல்வாக்கான பிரிவுகளினது ஆதரவை அனுபவித்து வரும் ஒரு ஜேர்மன் கல்வியாளரால் இதுபோன்ற குற்றகரமான மொழி பயன்படுத்த முடிகிறது என்பது, நாஜிக்கள் எதற்காக வசைப்பெயரெடுத்தார்களோ அந்த குற்றகரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை சட்டபூர்வமாக்குவதுடன் ஜேர்மன் மீள்ஆயுதமயப்படுத்தலும் புதிய போர்களுக்கான தயாரிப்புகளும் இணைந்துள்ளன என்ற உண்மைக்குச் சான்று பகிர்கிறது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் 20 ஆம் நூற்றாண்டின் பேரழிவுகள் 21 ஆம் நூற்றாண்டிலும் மீண்டும் நடக்காமல் தடுக்க அவற்றின் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்யும். இம்முறை நாஜிசம் மீதான கணக்கெடுப்பு, புதிய குற்றங்கள் நடத்தப்பட்டதற்குப் பின்னர் அல்ல, முன்னதாகவே எடுக்கப்பட வேண்டும்.

Loading