ட்ரம்பின் வரவு-செலவு திட்ட முன்மொழிவு: சமூக எதிர்புரட்சியில் ஒரு புதிய தாக்குதல்

13 February 2020

டொனால்ட் ட்ரம்பின் முன்மொழியப்பட்ட பெடரல் வரவு-செலவு திட்டக்கணக்கு, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரங்களுக்கு எதிராக அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் தாக்குதலை ஆழப்படுத்தி வருகிறது என்பதற்கு ஓர் அறிவிப்பாக உள்ளது.

முன்மொழியப்பட்ட இந்த வெட்டுக்கள் பெருந்திரளான உழைக்கும் மக்களிடம் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதியியல் பிரபுத்துவம் மற்றும் செல்வசெழிப்பான நடுத்தர உயர்மட்ட வர்க்கத்தின் கரங்களுக்கு கைமாற்றும், இது நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாசகரமான விளைவுகளை கொண்டிருக்கும் என்பதுடன், “மறந்துவிடப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை" பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் ட்ரம்பின் கூற்று முற்றிலும் மோசடியானது என்பதை இது அம்பலப்படுத்துகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ஜெ. ட்ரம்ப் பத்திரிகைதுறை உறுப்பினர்களுடன் உரையாடுகிறார் [அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகையின் படம்/ ஜொய்ஸ் என். போகோசியன்]

ட்ரம்ப் மருத்துவ சிகிச்சை உதவி திட்டத்திலிருந்து 900 பில்லியன் டாலரும், மருத்துவக் கவனிப்பு திட்டத்திலிருந்து 500 பில்லியன் டாலர், சமூக பாதுகாப்பு திட்டத்திலிருந்து 24 பில்லியன் டாலர், தொழிலாள வர்க்க குழந்தைகளுக்கான பள்ளிக்கல்வி திட்டங்கள், வீடற்ற மாணவர்களுக்கான திட்டங்கள், வறிய கிராம பள்ளிகளுக்கான உதவித்திட்டம், மத்திய அரசு மாணவர் கடன் உதவி மானியம் மற்றும் உணவு வில்லை திட்டம், வறிய கைக்குழந்தைகள் மற்றும் அவற்றின் தாய்மார்களுக்கான திட்டங்கள் என இவற்றிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களையும் வெட்ட முன்மொழிகிறார். இது, அமெரிக்க அணுஆயுத தளவாடங்களை நவீனப்படுத்துவதற்கான 50 பில்லியன் திட்டம் உட்பட, ரஷ்யா மற்றும் சீனா என "வல்லரசு" போட்டியாளர்களை நோக்கி ஒரு போருக்கான அடிவைப்பிலும் அமெரிக்க இராணுவத்தை நிறுத்துகிறது.

கல்வித்துறை (8 சதவீதம்), உள்துறை (13.4 சதவீதம்), வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி (15.2 சதவீதம்), சுகாதாரம் மற்றும் மனிதவள சேவைகள் (9 சதவீதம்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (26.5 சதவீதம்) என இத்துறைகளில் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள வெட்டுக்கள் சமூக திட்டங்களையும் பெருநிறுவன நடவடிக்கை மீதான அரசு நெறிமுறைகளையும் அழிப்பதை நோக்கிய படிகளாகும்.

வெள்ளை மாளிகை வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவின் அறிவிப்பு ஒரு திட்டமிட்ட நிகழ்முறையை தொடங்குகிறது. இதில் ஜனநாயகக் கட்சி முன்வைக்கப்பட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆத்திரமடைவது போன்று பாசாங்கு செய்வதும். பின்னர் பல கோரிக்கைகளுக்கும் இறுதியில் ஒத்து போவதும் உள்ளடங்கும். பரந்த பெரும்பான்மை அமெரிக்கர்கள் சமூக திட்டங்களுக்கான செலவுகளை அதிகரிக்கவும், பணக்காரர்கள் மீது வரிகளை அதிகரிக்கவும், செல்வ வளத்தை மறுபகிர்வு செய்யவும் கோரி வருகின்ற நிலைமைகளின் கீழ், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் கூடுதலாக வலதுக்கு மாற்றுவதே கட்சி வித்தியாசமின்றி இந்த வரவு-செலவு திட்டக்கணக்கின் தவிர்க்கவியலாத விளைவாக இருக்கும்.

இது பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி சபாநாயகர் நான்சி பெலோசியால் முன்னோட்டமாக வெளியிடப்பட்டது, கடந்த வியாழக்கிழமை அவரிடம் ட்ரம்பின் வரவிருக்கும் வரவு-செலவு திட்டக்கணக்கு குறித்து வினவப்பட்ட போது, அவர் கூறினார்:

நான் எந்நேரத்திலும் என் உறுப்பினர்களுக்கு கூறுவதெல்லாம், 'என்றென்றும் விரோதம் என்ற ஒன்று கிடையாது. வேண்டுமானால் என்றென்றும் நட்புறவு உண்டு, மாறாக இப்போது உங்களின் எதிரியாக நீங்கள் கருதும் ஒருவருடன் எது உங்களை நல்லிணக்கத்திற்குக் கொண்டு வரும் என்று உங்களால் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது. அடுத்து என்ன நடக்கிறதோ அதில் யார் வேண்டுமானாலும் கூட்டாளியாக ஆகக்கூடும்.'

ட்ரம்புடன் நட்புறவு பாராட்டும் இந்த முன்மொழிவானது ஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை முயற்சி தோல்வி அடைந்து 24 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் வந்தது. அந்த நிகழ்முறையில் ட்ரம்பை ஒரு "தேசதுரோகி" என்றும், உக்ரேனின் வலதுசாரி தேசியவாத அரசாங்கத்திற்குப் பணமும் வலதுசாரி துணை இராணுவப் படைகளுக்கு ஆயுதங்களும் வழங்கும் 391 மில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்தி வைத்ததற்காக அவரை ரஷ்யாவின் கைப்பாவை என்றும் இதே பெலோசியும் ஜனநாயகக் கட்சியின் குற்றவிசாரணை மேலாளர்களும் தான் குறிப்பிட்டார்கள். மக்கார்த்தியிச மொழியில் பேசியவாறு, ஜனநாயகக் கட்சியின் முன்னணி குற்றவிசாரணை மேலாளர் Adam Schiff கூறுகையில், “நாம் ரஷ்யாவை இங்கிருந்து சண்டையிட வேண்டியதில்லை ரஷ்யாவுடன் அங்கிருந்தே சண்டையிட முடியும்,” என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு தவிர்க்க முடியாத நிர்பந்தமாக, அமெரிக்கா உக்ரேனை ஆயுதமயப்படுத்துவதை ட்ரம்ப் தடுப்பதாக தெரிவித்தார்.

ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் சம்பந்தமாக ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சி தலைமையினது குற்றச்சாட்டுக்களும் மற்றும் இணைய தணிக்கைக்கான ஜனநாயக கட்சியினரின் தர்மயுத்தமும், சமூக மற்றும் ஜனநாயக கொள்கை மீது இரு கட்சிகளினது நட்புறவுக்கான அவர்களின் முறையீடுகளுடன் முரண்படுகிறது.

முதலில் ஜனவரி 2017 இல் ட்ரம்ப் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து உடனடியாகவும் மற்றும் அவரின் பயணத் தடை மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதலுக்கு விடையிறுத்தும் வெடித்த பெருந்திரளான மக்கள் போராட்டங்களை ஜனநாயகக் கட்சி திசைதிருப்பி ஒடுக்கியதன் மூலமாகவும், பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில், ட்ரம்ப் திட்டநிரலின் பிரதான அம்சங்கள் மீது வாக்களித்ததன் மூலமாகவும், ட்ரம்ப் பதவி ஏற்ற நாளில் இருந்து, வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சி ஒத்துழைத்துள்ளது.

ஜூன் 2019 இல், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சாதனையளவிலான 750 பில்லியன் டாலர் பென்டகன் வரவுசெலவு திட்டக்கணக்கை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக பெருவாரியாக வாக்களித்தனர், அது குவான்டனாமோ வளைகுடாவில் கைதிகளைத் தொடர்ந்து அடைத்து வைக்க அரசாங்கத்தை அனுமதித்ததுடன், ட்ரம்பின் எல்லைச் சுவருக்கான "மீண்டும் நிரப்பும்" நிதிக்கு 3.6 பில்லியன் டாலர் வழங்கியது.

ஜூன் 2019 இல், குடும்பத்தைப் பிரித்து புலம்பெயர்ந்த குழந்தைகளைத் தடுப்புக்காவலில் வைப்பதன் மீதான பாரிய எதிர்ப்பு மத்தியிலும், இந்த தொடர்ந்து நடந்து வரும் பிரச்சினைகளை ஜனநாயகக் கட்சியும் பெருநிறுவன ஊடகங்களும் தேசிய செய்திகளில் இருந்தே இன்றியமையாத விதத்தில் இருட்டடிப்பு செய்துள்ள நிலையில், குடியமர்வு மற்றும் சுங்க அமுலாக்க ஆணையத்திற்கும் (ICE) சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையத்திற்கும் (CBP) ட்ரம்ப் 4.6 பில்லியன் டாலர் நிதி வழங்குவதற்கு ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்தனர்.

இவை வெறுமனே படுமோசமான சான்றுகள் மட்டுமே. ட்ரம்பின் பெருநிறுவன வரி வெட்டு, இதை முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவு திட்டக்கணக்கு விரிவாக்கும் என்கின்ற நிலையில், ஆரம்பத்தில் இது ஒபாமா வெள்ளை மாளிகையால் முன்மொழியப்பட்டது. உணவு வில்லைகள், மருத்துவக் கவனிப்பு மற்றும் வறிய குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களுக்கான நிதிகளை ஒபாமா குறைத்தார்.

இன்றோ, வார்த்தையளவில் ட்ரம்பின் வரவு-செலவு திட்டக்கணக்கை எதிர்த்தும் மிதமான சமூக செலவின அதிகரிப்புக்கான பேர்ணி சாண்டர்ஸின் முன்மொழிவுகள் மீதான தாக்குதல்களில் ஒருமுனைப்பட்டும், ஜனநாயகக் கட்சியின் சில ஜனாதிபதி வேட்பாளர்கள், கூடுதலாக பற்றாக்குறையைக் குறைக்குமாறு கோருவதற்கு ட்ரம்பின் வரவுசெலவு திட்டக்கணக்கு முன்மொழிவை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி உள்ளனர்.

ட்ரம்பின் வரவு-செலவு திட்டக்கணக்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் கசிந்த பின்னர், “முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடென் யதார்த்தத்திற்கு முரணான சமூக கொள்கை இலட்சியங்களுக்கு அழைப்புவிடுக்கும் திட்டநிரலை ஜனநாயகக் கட்சியினர் தழுவ வேண்டாமென எச்சரித்துள்ளார் மற்றும் Buttigieg ஞாயிறன்று Nashua, N.H. இன் நகர சபை நிகழ்வில் அறிவிக்கையில் 'கடன் குறித்து அதிகமாக பேசுவது முற்போக்கு வட்டாரங்களின் பாணியில்லை' என்றாலும் கூட, அதிகரித்து வரும் பற்றாக்குறை மீது தீவிரமாக கவனம் செலுத்துவதற்கான நேரமிது என்று அறிவித்தார்,” என்று நேற்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.

ஜனநாயகக் கட்சியுடன் அணிசேர்ந்த பெருநிறுவன ஊடகங்கள் ட்ரம்பின் வரவு-செலவு திட்டக்கணக்கை வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பதவியை ஜெயிக்கக்கூடும் என்பதன் மீதான கவலையை விட வெகு குறைவான கவலையுடனே வரவேற்றுள்ளன.

நேற்று புதிய ஹாம்ஷைர் முதன்மை வேட்பாளர் தேர்வு போட்டியில் முன்னணியில் இருந்த தொலைக்காட்சி புகழ் கிறிஸ் மாத்தியூஸ் கூறுகையில், சோசலிசவாதிகள் "மத்திய பூங்காவில் மரண தண்டனை" நிறைவேற்றுவார்கள் என்றார், அதேவேளையில் சக் டோட், சாண்டர்ஸ் ஆதரவாளர்களை நாஜி "பழுப்புநிற சட்டைகளுடன்" ஒப்பிட்டார்.

இந்த மொழியானது, அவர்களின் உள்ளார்ந்த மோதல்கள் எவ்வளவு தான் தீவிரமாக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் இவ்விரு கன்னைகளுமே அடிமட்டத்திலிருந்து அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு மனோநிலையிலிருந்து நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தைப் பாதுகாக்கும் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தில் அணிதிரண்டுள்ளன என்பதையே எடுத்துக்காட்டுகிறது. நீண்டகாலமாக வாஷிங்டனுக்கு உள்ளேயே இருந்து வருபவரும் ஜனநாயகக் கட்சியின் விசுவாசமான மாநில வேட்பாளர் தேர்வுக்குழு உறுப்பினருமான சாண்டர்ஸ் குறித்து அவர்களுக்கு அச்சமில்லை. அவர்கள் எதற்கு அஞ்சுகிறார்கள் என்றால், அந்த வேர்மாண்ட் செனட்டரால் கட்டுப்படுத்த முடியாமல் போகக்கூடிய, சாண்டர்ஸ் இற்கான ஆதரவில் பிரதிபலிக்கப்படும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்து வரும் இடது நோக்கிய இயக்கம் குறித்து அஞ்சுகிறார்கள்.

ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளும் பிரான்ஸ், சிலி, போர்த்தோ ரிக்கோ, சூடான் மற்றும் ஏனைய இடங்களின் பாரிய பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களை வரவிருப்பதன் அறிகுறிகளாக பார்க்கின்றன.

இந்த பதவிநீக்க குற்றவிசாரணையில் இருந்து வெற்றிகரமாக மேலெழுந்துள்ள ட்ரம்ப் ஒரு பாசிசவாத இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் மற்றும் 2020 தேர்தல்களின் முடிவு என்னவாக இருந்தாலும் அதிகாரத்திலேயே தங்கியிருக்க அச்சுறுத்துவதன் மூலமாகவும் வரவிருக்கும் வர்க்க மோதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறார்.

ஜனநாயகக் கட்சியைச் சீர்திருத்த முடியும் என்றும், ஆளும் வர்க்கத்தை முற்போக்கான சமூக கொள்கையை நிறைவேற்ற அழுத்தமளிக்க முடியும் மற்றும் எந்த சுயாதீனமான சமூக போராட்டமும் அவசியமில்லை என்றும் மக்களிடையே பிரமைகளை ஊக்குவிப்பதற்காக, ஜனநாயகக் கட்சியின் பிரிவுகள், சாண்டர்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிசவாதிகள் உறுப்பினர் அலெக்சாண்டரியா ஒக்காசியோ-கோர்டெஸ் போன்ற பிரமுகர்களை முன்கொண்டுவந்து, வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

இதுவொரு நம்பிக்கையற்ற கற்பனாவாதமாகும். ஜனநாயகக் கட்சி தேர்வுக்குழுவின் (DNC) பரந்த மோசடிக்கு முன்னால் சாண்டர்ஸ் வேட்பாளராக ஜெயித்து வந்தாலும் கூட, அவரின் ஒட்டுமொத்த வேலைத்திட்டமும் அமெரிக்காவை நடத்தி வரும் தளபதிகள் மற்றும் தலைமை செயலதிகாரிகளின் வலையமைப்பும் தானே முன்வந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வழங்குமாறு கோருவதற்கு ஒப்பானதாக உள்ளது. பிராங்க்ளின் ரூஸ்வேல்ட் இனது புதிய உடன்படிக்கையின் பிரயோசனமற்றத்தன்மையை விவரித்து லியோன் ட்ரொட்ஸ்கி எழுதுகையில், New Dealers -புதிய உடன்பாட்டாளர்கள்- "ஏகபோகவாதிகளிடம் கண்ணியத்தையும் ஜனநாயக கோட்பாடுகளையும் மறந்துவிட வேண்டாமென முறையீடுகளை வீசிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறுமனே மழைக்காக பிரார்த்தனை செய்வதை விட மேலானதா?” என்று எழுதினார்.

2020 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வேட்பாளர்கள்—ஜனாதிபதிக்கு ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு நோரிஸ்சா சான்டா குரூஸ்—உலக பொருளாதாரத்தின் உயர்மட்ட கட்டளையகத்தின் கட்டுப்பாட்டை எடுக்கும் போராட்டத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு கட்சிகளுடனும் முறித்துக் கொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

ட்ரம்ப் முன்மொழிந்த ஒட்டுமொத்த வரவு-செலவு திட்டக்கணக்கு மொத்தம் 4.8 ட்ரில்லியன் டாலராகும். இது உலகின் 2,170 பில்லியனர்கள் வைத்துள்ள 27 ட்ரில்லியன் டாலரை விட மிக மிக குறைவாகும். உலகின் செல்வவளத்தை மறுபங்கீடு செய்வதற்கு, நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதற்கான மற்றும் உலகின் உற்பத்தி சக்திகளைச் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குமான ஒரு பாரிய புரட்சிகர இயக்கம் தேவைப்படுகிறது.

Eric London