இலங்கை: வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுதந்திர தினத்தில் போராட்டம் நடத்துகின்றனர்

Vimal Rasenthiran and Murali Maran
18 February 2020

இலங்கையின் ஆட்சியாளர்கள், பெப்ரவரி 4 அன்று 72 வது சுதந்திர தினத்தை கொழும்பில் இராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடுகையில், 26 ஆண்டுகால இரத்தக்களரியான உள்நாட்டுப் போரின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல நகரங்களிலும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இன்றைய நிகழ்வு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உறவினர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களில் சமீபத்தியதாகும்.

2009 மே மாதம் போரின் இறுதிவேளையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் உள்ளடங்கலாக அப்பாவி மக்கள் மீதும், அத்துடன் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் பாதுகாப்பு தேடி தஞ்சமடைந்திருந்த பதுங்கு குழிகளின் மீதும் இராணுவம் கொத்துக்குண்டுகள் உட்பட கண்மூடித்தனமாக குண்டுகளை மழையாக பொழிந்து போரை முடிவுக்கு கொண்டுவந்தது.

இன்றும் இந்தப் படுகொலை இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களாலும் இந்தியாவிலும் உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களாலும் ஒருமித்தவகையில் திகிலுடன் நினைவுகூரப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியின் பின்னர் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த ஏராளமான மக்களின் நிலை என்னவென தெரியாதுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்புப் படையினர் அல்லது பொலிசாரால் கைது செய்யப்பட்ட அல்லது இராணுவத்துடன் தொடர்புடைய கொலைப் படைகளால் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின்படி, போரின் போது 20,000 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களில் பிராதான ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு முன்னால் இடம்பெற்றது.

இதில் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த காணாமல் போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்றனர். போராட்டக்காரர்களை கண்காணிக்க எண்ணுக்கணக்கற்ற பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கல்லடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், மற்றொரு போராட்டம் முந்தைய நாள் திருகோணமலையில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கானோரின் நெஞ்சங்களை உறையவைக்கும் வகையில், ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கரின் முன்னிலையில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அறிவித்தது, போராட்டங்களை பலமடங்காக்கியுள்ளது. அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்து போருக்கு தலைமை தாங்கிய கோடாபய இராஜபக்ஷ மீது இத்தகைய பல போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தில் தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு.) அரசியல்வாதிகளும் தலையை நுழைத்துக்கொண்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசியாவை நோக்கிய போர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுத்து, அதற்கு சார்பான ஒரு அரசாங்கத்தை கொழும்பில் வைத்திருப்பதற்கு முண்டுகொடுக்கும் தமிழ் தேசியவாத கட்சிகளுக்கும் ஏற்கெனவே நடந்த போரால் காணமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியோரை நாளாந்தம் தேடி ஏங்கி அலையும் சாதாரண மக்களுக்கும் இடையே பொதுவானது என்று எதுவும் கிடையாது. இவர்களில் பலர் தமது அன்புக்குரியோருக்கு என்ன நடந்தது என அறியும் முன்னரே இறந்தும் விட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கத்தைய முதலாளித்துவ சக்திகள் தாமே ஏற்றுக்கொண்ட அடிப்படை மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு நசுக்கி குண்டர்படை போல செயற்படுகின்ற பெரும் வல்லரசுகளை, மனித உரிமையின் சாதனையாளர்களாக மீண்டும் மீண்டும் தூக்கிப் பிடித்து, அவற்றுக்கு முறையிடுவதற்கூடாக காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிப்பதோடு யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக்கொடுத்த விடலாம் என்ற தமிழ் தேசியவாதிகளின் பிரச்சாரங்கள் பரந்துபட்ட மக்கள் மீதான அவமதிப்பாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வயது முதிர்ந்த நிலையிலும் நிஜமான கவலையுடனும் கண்ணீருடனும் நீண்ட எதிர்பார்ப்புடனும் கறுப்புக் கொடிகளையும், தங்களின் அன்புக்குரியவர்களின் தசாப்தகால பழைய புகைப்படங்களையும் ஏந்தியிருந்தனர்.

மாறாக தமிழ் தேசியவாதிகள் பெரும் வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் “இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு ஒரு கரிநாள் நாள்!” "நாட்டின் சுதந்திரம் சிங்கள மக்களுக்கு மட்டுமா?" என்பது போன்ற சுலோக அட்டைகளையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். கோடாபய இராஜபக்ஷ காணாமல் போனோர் தொடர்பாக அறிவித்ததற்கு அமைவாக தமிழ் தேசியவாதிகளும் பிரதிபலித்தனர்.

கொழும்பு உயரடுக்கைப் போலவே, தமிழ் தேசியவாதிகளும் தமிழ், சிங்கள, முஸ்லீம் உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டங்களால் பீதியடைந்துள்ளதுடன் அவர்களைப் பிளவுபடுத்த பிற்போக்கு இனவாத, மதவாத வழிமுறைகளை நாடுகின்றன.

தமிழ் தேசியவாதத்திற்கான தத்துவார்த்த நியாயப்படுத்தல்களை அபிவிருத்தி செய்யும் ஏகாதிபத்திய-சார்பு பல்கலைக்கழக பேராசிரியர்களால் ஊக்குவிக்கப்படுகின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கலைப் பீடத்தின் மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை, “ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப் போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதனை நாம் விரும்பவில்லை”, "தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதில் கொழும்பு அரசாங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை" என்பதால் "இலங்கை பிரச்சினைகள் ஒரு சர்வதேச பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்" என அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் தனது வர்க்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

சிங்கள மக்கள் அனைவரும் அடிப்படை பிரச்சினைகள் எதுவுமின்றி சுதந்திரமாக வாழ்கிறார்கள் தமிழ் மக்கள் மட்டுமே வஞ்சிக்கப்படுகிறார்கள் என தமிழ் தேசியவாதிகளாலும் அவர்களின் ஊடகங்களாலும் பரப்பப்படும் நச்சுப் பிரச்சாரம் முற்றிலும் இழிவுகரமானதாகும்.

மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சித்த பல சிங்கள ஊடகவியலாளர்கள் உட்பட அரசியல் எதிர்ப்பாளர்கள் போரின் போது கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றுக்கு மேலாக, சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான 1987-89 கிராமப்புற இளைஞர்களின் கிளர்ச்சியின் போது 60,000 க்கு மேற்பட்ட சிங்கள கிராமப்புற இளைஞர்கள், தமிழ் தேசியவாதிகளுக்கு மிகவும் விருப்பமான ஐக்கிய தேசிய கட்சியால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ஆட்சியாளர்களால் இன, மத, மொழி பேதமற்று நடத்தப்பட்ட முழு இரத்தக்களரி வரலாறும் சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை துன்பியலான விதத்தில் ஊர்ஜிதம் செய்திருக்கிறது: முன்னாள் காலனித்துவ நாடுகளில், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் வரலாற்றுரீதியாக ஒரு ஜனநாயக ஆட்சியை உருவாக்கவோ அல்லது தேசிய, மத எல்லைகளைக் கடந்து வெகுஜனங்களை ஐக்கியப்படுத்தவோ திறனற்றவை ஆகும். இந்தக் கடமைகள், சோசலிசத்துக்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் சர்வதேச அளவில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தோள்களிலேயே விழுகின்றன.

இந்த கடமைகளை நிறைவு செய்ய இலங்கை தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் தேசியவாத கட்சிகளிலும் அதன் முன்னோக்குகளிலும் இருந்து உடைத்துக்கொண்டு இந்திய உபகண்ட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பவேண்டும்.

கிளிநொச்சியில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் பேசிய காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளையும் அரசாங்கத்தையும் கண்டித்தனர்.

தனது மகனை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சியை சேர்ந்த குணரத்னம், 60, கூறுகிறார். "காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகள் வரும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதைத் தவிர தமிழ் கட்சிகள் வேறு எதுவும் செய்யவில்லை,” என அவர் கூறினார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த ரஞ்சனா, 52, வவுனியாவில் உள்ள அகதி முகாமில் இருந்து இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட தனது 18 வயது மகனைத் தேடி வருகிறார். இராணுவம் தனது மகனைக் கைது செய்வதை நேரில் கண்ட சாட்சிகள் உள்ளனர் என்றும் ரஞ்சனா கூறினார். அவர் மேலும் விளக்கியதாவது: “பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒருவர் எனது மகன் தன்னுடன் இருப்பதாகவும் விரைவில் அவரை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால் இன்னும் வரவில்லை. 2010 முதல் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம், இப்போது அரசாங்க அதிகாரிகள் அரசு வேலைகள், வாழ்வாதார உதவி மற்றும் ஒரு மாதத்திற்கு 6,000 ரூபாயும் தருவதாக கூறுகிறார்கள். அவர்கள் எங்கள் பிள்ளைகளை விடுவித்தாலே போதும்.”

கிளிநொச்சியைச் சேர்ந்த வீரசாமி வவோதியம்மா, 56, தனது 18 வயது மகள் பொக்கணையில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கூறியுள்ளார். "என் மகள் உயிருடன் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் இராணுவம் என் மகளை பம்பைமடு அகதிகள் தடுப்பு மையத்திலிருந்து அழைத்துச் சென்றது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இராணுவத்தால் வழங்கப்பட்ட ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரமும் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: “ஜனவரி 5, 2015 அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எனது மகள் பள்ளிச் சீருடையில் இருந்தாள். இதை நேத்ரா டி.வி ஒளிபரப்பியது. இதுபோன்ற ஆதாரங்கள் பெற்றோரிடம் நிறைய உள்ளன. ஐ.நா அல்லது பிற அமைப்புகள் ஒரு தீர்வை வழங்குவதெனில் அதை அவை எப்போதோ செய்திருக்க முடியும். திரைக்குப் பின்னால் தமிழ் கட்சிகள் என்ன செய்கின்றன என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் யாரையும் நம்பவில்லை. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்."