முனீச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க "பொய்களை" சீனா கண்டிக்கிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரயிறுதியின் முனீச் பாதுகாப்பு மாநாட்டின் போது, சீன தொழில்நுட்ப பெருநிறுவனம் ஹூவாய் விவகாரம் மற்றும் கொரொனாவைரஸ் க்கு சீனாவின் விடையிறுப்பு உட்பட பல பிரச்சினைகளில் பெய்ஜிங்கை நோக்கிய வாஷிங்டனின் மோதல்தன்மையிலான நிலைப்பாட்டைக் குறித்து, உயர்மட்ட சீன அதிகாரிகள், அசாதாரண அதிரடியான அறிக்கைகளில், பதிலடி கொடுத்துள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரில் முன்னிலையில் உள்ளவர்களினது ஆதரவுடன், அம்மாநாட்டில் குறிப்பிடத்தக்களவில் ஆக்ரோஷமான நிலைப்பாடு எடுத்தனர். 5G தொலைதொடர்பு வலையமைப்புகளைக் கட்டமைக்க ஹூவாய் சாதனங்களைப் பயன்படுத்தினால் உளவுத்துறை தகவல் பரிமாற்றங்கள் நிறுத்தப்படும் என்று ஐரோப்பிய சக்திகளை எச்சரித்திருந்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ "ஹூவாய் மற்றும் ஏனைய சீன அரசு ஆதரவிலான தொழில்நுட்ப நிறுவனங்களை" “சீன உளவுவேலைகளுக்கான மறைமுகமான கருவிகள் (Trojan horses)” என்று முத்திரை குத்தினார். அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர், அவர் உரையில், ஹூவாய் மூலமாக பெய்ஜிங் ஒரு "தீய மூலோபாயத்தை" மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்கா அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மீது அதன் அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சியில், வர்த்தக இரகசியங்களைத் திருடியது என்றும் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஹூவாய் க்கு எதிராக கடந்த வாரம் புதிய குற்றச்சாட்டுக்களை அறிவித்தது. இது, கடந்தாண்டு கனடாவில் அந்நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரி மென்ங் வான்சொவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருகிறது. அப்பெண்மணி மீது அமெரிக்கா மோசடி மற்றும் தடையாணைகள் மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதுடன் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற கோரிக்கைவைத்தது.

அனைத்து துறைகளிலும் சீனா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது என்பதை எஸ்பர் தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆட்சியின் கீழ், “சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதிக உள்நாட்டு ஒடுக்குமுறை, அதிக சூறையாடும் பொருளாதார நடைமுறைகள், அதிக பலமான-கையாளுகை, மேலும் என்னை அதிகமாக கவலைப்படுத்துவது, அதிக ஆக்ரோஷமான இராணுவத் தோரணை என முன்பினும் வேகமாக மற்றும் இன்னும் கூடுதலாக தவறான திசையில் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்றவர் அறிவித்தார்.

பொம்பியோ மற்றும் எஸ்பெர் வழங்கிய உரைகள் குறித்து வினவிய போது, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் யி, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை "பொய்கள்" என்று முத்திரை குத்தி, சுருக்கமான வார்த்தைகளில் பேசினார். அவர்களின் கருத்துக்கள் அவர்கள் சென்ற இடமெல்லாம் நிலவும் "ஒரு பொதுவான சூழலின்" பாகமாக இருப்பதாக தெரிவித்தார். “அவர்கள் கூறிய ஒவ்வொன்றும் மற்றும் அனைத்திற்கும் விடையிறுத்து நம் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. சீனாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்கள், உண்மைகளின் அடிப்படையில் இல்லை என்ற விடயத்தை நான் கூற விரும்புகிறேன்,” என்றார்.

இந்த மோதலுக்குப் பின்னால் இருக்கும் உந்து சக்தியை, அதாவது கையிலிருக்கும் ஒவ்வொரு வழிவகைகளைக் கொண்டும் அமெரிக்கா தொடர்ச்சியாக அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைக்க முனைகிறது என்பதை வாங் சுட்டிக்காட்டினார். “இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் விவகாரங்களுக்கும் மூல காரணம், அமெரிக்கா சீனாவின் வேகமான அபிவிருத்தியை மற்றும் முன்னேற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை, ஒரு சோசலிச நாட்டின் வெற்றியை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அது நியாயமில்லை, வளர்ச்சி அடைய சீனாவுக்கு உரிமை உண்டு,” என்றார்.

அதன் வளர்ந்து வரும் சந்தைகள், பங்குச் சந்தைகள், பில்லியனர்கள் மற்றும் ஆழ்ந்த சமூக பிளவுகளைக் கொண்டுள்ள சீனா, ஒரு சோசலிச நாடு இல்லை. உண்மையில், அமெரிக்க விமர்சனத்திற்கு எதிர்கருத்தாக வாங் கூறிய ஹூவாய் தனியாருக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும்: அண்மித்து 200,000 பணியாளர்களுடன் உலகின் மிகப் பெரிய தொலைதொடர்பு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமாக உள்ளது.

வாங், ஹூவாய் மீதான அமெரிக்க தாக்குதலை "முறைகேடானது" என்று விவரித்ததுடன், மற்ற நாட்டு நிறுவனங்களும் பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தில் அவற்றின் திறமையைக் காட்டுவதை ஏன் அமெரிக்காவால் ஏன் ஏற்க முடியாது? அனேகமாக இன்னும் ஆழமாக தன்னுள்ளே அது மற்ற நாடுகளின் வளர்ச்சியைப் பார்க்க விரும்பவில்லை போலும்.” ஹூவாய்யைப் பழிப்பதற்காக அமெரிக்கா வதந்திகளில் தங்கி உள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், அந்நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பைப் பாதிக்கும் பின்புல கதவு எனப்படுவதைக் கொண்டுள்ளது என்பதற்கு அங்கே எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை என்று அறிவித்தார்.

சீனா மற்றும் ஹூவாய் க்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் போலியாக உள்ளன. கூட்டாளிகள் மற்றும் போட்டியாளர் மீது ஒருபோல, அரசுகள் மற்றும் அரசு தலைவர்கள் உள்ளடங்கலாக, அத்துடன் அதன் சொந்த பிரஜைகள் மீதும் கூட, அமெரிக்கா தான் மின்னணுவியலைக் கொண்டு வழமையாக உலக மக்களை உளவு பார்க்கிறது என்பதை இரகசிய இராஜாங்க ஆவண வெளியீட்டாளர் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் எடுத்துக்காட்டின.

உளவுத்தகவல்களைத் திரட்டுவதற்கு அமெரிக்க உளவுவேலை ஸ்தாபகம் நீண்ட காலமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கிய மின்னணு "பின்புல கதவுகளை" சார்ந்துள்ளது. ஹூவாய் சாதனங்களின் பயன்பாடு அமெரிக்க நிறுவனங்களின் பொருளாதார நிலைமைகளை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக அமெரிக்க உளவுபார்ப்பு நடவடிக்கைகளுக்கே குழிபறித்து விடக்கூடும்.

முனீச்சில் பலமான அமெரிக்க விமர்சனத்திற்கு எதிராக சீனாவின் ஒளிவுமறைவற்ற பதிலடியானது, முதலாவதாக, வாஷிங்டனின் இடைவிடாத பிரச்சாரத்தை மட்டுமல்ல, மாறாக வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக ஆசியாவில் மிகப் பெரும் இராணுவக் கட்டமைப்பு மூலமாக அதன் இடைவிடாத நடவடிக்கைகளையும் எதிர்க்கிறது. இரண்டாவதாக, சீன ஆட்சி ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து ஆதரவைப் பெற முயன்று வருகிறது. முனீச்சில் வாங்கின் கருத்துக்கள், அமெரிக்கா மற்றும் அதன் இதுவரையிலான ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு இடையே ஆழமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், பலமான ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது.

பிரிட்டன் அதன் 5G மாறுதல்களில் அடித்தள கட்டுமான சாதனங்களின் அம்சத்தில் ஹூவாய் சாதனங்களை உள்ளடக்க பச்சைக் கொடி காட்டியுள்ளது, அதேவேளையில் பிரான்சும் ஜேர்மனியும் அவையும் அதேயே செய்ய சமிக்ஞை செய்துள்ளன. ஐரோப்பிய முடிவுகள் பெரிதும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார காரணிகளால் உந்தப்பட்டுள்ளன, ஏனெனில் ஹூவாய் நிறுவனம் 5G தொழில்நுட்பத்தில் தலைமையில் இருப்பதுடன், மிகக் குறைந்த விலையில் சாதனங்களை உற்பத்தி செய்கிறது.

ஐரோப்பிய சக்திகளுடன் உளவுதகவல்கள் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடுகள் நிறுத்தப்படுமென வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள், அதன் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு ஏற்படுவதைப் போலவே அதேயளவுக்கு அமெரிக்க உளவுபார்ப்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதில் போய் முடியலாம். நியூயோர்க்டைம்ஸ்குறிப்பிட்டது: “ஜேர்மனியும் பிரிட்டனும் அமெரிக்காவின் நெருக்கமான உளவுதகவல் பரிவர்த்தனை பங்காளிகள், அவ்விரு நாடுகளும் ரஷ்யாவில் இருந்து மத்திய கிழக்கு வரையிலான தகவல்களைக் குறுக்கீடு செய்வதற்கு முக்கியமான கண்ணாடியிழை வடத்தின் முக்கியமான இடத்தின் உச்சத்தில் இருக்கின்றன.”

அமெரிக்கா, சீனாவில் கொரொனாவைரஸ் நோய்தொற்றை பெய்ஜிங்கிற்கு எதிரான சரமாரியான விமர்சனங்களுடன் சேர்த்து சாதகமாக்கிக் கொள்ள முனைந்துள்ளது. கடந்தவாரம் ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் லேரி குட்லொவ், அந்த நோய் சம்பந்தமாக சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறை கூறினார். அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள் சீனாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதில் வாஷிங்டன் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அறிவித்த அவர், சீன புள்ளிவிபரங்கள் மீது கேள்வி எழுப்பினார்.

முனீச் பாதுகாப்பு மாநாட்டில் வாங் உரையின் கணிசமாக பகுதிகள், அந்த நோய்தொற்றைச் சீனா கையாளும் முறையைப் பாதுகாப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. கொரொனாவைரஸ் பெரிதும் வூஹான் மற்றும் ஹூபே மாகாண நகரங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சீனாவுக்கு வெளியே நோயாளிகளின் எண்ணிக்கையானது மொத்த சதவீதத்தில் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்தார். இது, அந்த தொற்றுக்கிருமி குறித்த பரிசோதனையில் நடந்திருக்கும் வேகமான முன்னேற்றம், அப்பகுதிக்கு 20,000 மருத்துவத் தொழிலாளர்களை அனுப்பி இருப்பது மற்றும் புதிய மருத்துவ வசதிகளைக் கட்டமைத்திருப்பதன் விளைவாகும் என்று வாங் தெரிவித்தார்.

வாங் தெரிவித்தார்: “வெளிப்படைத்தன்மை மற்றும் தடையற்றதன்மையின் உத்வேகத்தில், நாங்கள் சரியான நேரத்தில் உலகிற்கு அந்த தொற்றுநோய் குறித்து அறிவித்து, அந்த கிருமியின் உயிரி மாற்றங்களைப் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் உலக சுகாதார அமைப்புடன் (WHO) நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம், எங்கள் பணியாளர்களுடன் இணைய சர்வதேச வல்லுனர்களை அழைத்துள்ளோம், சீனாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு உதவிகளும் ஒத்துழைப்பும் வழங்கி உள்ளோம்,” என்றார்.

ராய்டர்ஸிற்கு கூறிய கருத்துக்களில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சீனாவில் இருந்து வரும் எந்தவொரு வெளிநாட்டவர் மீதும் அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பயணக் கட்டுப்பாடுகளைச் சூசகமாக விமர்சித்தார். “சில நாடுகள், தனிமைப்படுத்தும் நடைமுறைகள் உட்பட பல நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன, அதற்கு காரணம் உள்ளது, புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் சில நாடுகள் மிதமிஞ்சி எதிர்செயலாற்றி உள்ளன இது தேவையின்றி பீதியைத் தூண்டிவிட்டுள்ளது,” என்றார்.

இந்த பிரச்சினையில் வாஷிங்டன் ஐரோப்பாவின் ஆதரவை எதிர்பார்த்தது ஆனால் அதன் நம்பிக்கைகள் தகர்ந்து போயின. அம்மாநாட்டு தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கர் அந்த தொற்றுநோய்க்கான சீனாவின் விடையிறுப்பைப் பாராட்டியதுடன், அதற்கு "மிகவும் நியாயமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை... இன்னும் சற்று இரக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கும், வெறும் விமர்சனம் மட்டுமின்றி ஊக்கப்படுத்தலுக்கும் சீனா தகுதி உடையதே என்று நினைக்கிறேன்,” என்றார்.

முனீச்சில் அமெரிக்க விமர்சனங்களுக்கு சீனாவின் விடையிறுப்பு, மோசமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளால் எரியூட்டப்பட்டு வருகின்ற நீண்டகால கூட்டணிகளின் முறிவையும் மற்றும் புவிசார் அரசியல் போட்டிகள் மீண்டும் கூர்மையடைந்து வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன. சீனாவுக்கு எதிரான ஐரோப்பாவின் ஆதரவு இன்மைக்கு அதனுடனான மோதலை மிதமாக்கிக் கொள்ளாமல், மாறாக, அமெரிக்கா பெய்ஜிங்கிற்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட அதன் உலகளாவிய அந்தஸ்துக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.