இலங்கை மாவோவாத கட்சி ஜாதிவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கின்றது

இலங்கையில் வடக்கையும் பெருந்தோட்ட பிரதேசங்களையும் தளமாகக் கொண்டு இயங்கும் மாவோவாத கட்சியான புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிசக் கட்சி (பு.ஜ.மா.லெ.க.), இம்மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதிக் குழுக்களை ஒன்றுசேர்த்து ஒரு தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது.

இது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மறு எழுச்சிபெற்றுள்ள தொழிலாள வர்க்கப் போராட்டத்தை பிளவுபடுத்தி ஈவிரக்கமின்றி ஒடுக்குவதற்காக இன மற்றும் மத பிளவுகளை தூண்டிவிடும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைக்கு இன்னொரு விதத்தில் பங்களிப்பு செய்வதாகும்.

மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி (ம.மே.ஐ.மு.) என்ற பெயரிலான இந்தக் கூட்டணியை ஸ்தாபிப்பதில் பு.ஜ.மா.லெ.க. இன் துணை அமைப்பான சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முன்நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் ஜாதி அடிப்படையிலான காரைநகர் சமூக மேம்பாட்டுக் கழகமும் சில பெண்ணிய அமைப்புகளும் கிராம அமைப்புகளும் பங்காளிகளாக உள்ளன.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசன், பு.ஜ.மா.லெ.க. இன் கார்த்திகேசு கதிர்காமநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாணிக்கம் லோகசிங்கம், சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர் மதனகோபாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேர் இந்தக் கூட்டணியின் இணைத்தலைமையாக உள்ளனர். மேலும் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், பத்திரிகை ஆசிரியர்கள், மதவாதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இணைந்திருக்கின்றனர்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயேட்சைக் குழுவில் தேர்தலில் போட்டியிட்டு ஆசணத்தை வென்ற மதன கோபால கிருஷ்ணன், ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர ஒத்துழைத்தார்.

முப்பது ஆண்டுகால போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கில் வாழும் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளுக்கும், ம.மே.ஐ.மு. இன் அரசியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவ்வாறான இன, மத, பால் அல்லது ஜாதி அடிப்படையிலான அரசியல் இயக்கங்களின் நோக்கம், குறித்த சமூத்தினர் மீதான அடக்குமுறையை தங்களுடைய அடையாள அரசியலுக்காக சுரண்டிக்கொள்வதன் மூலம், அந்த சமூகத்தின் வசதிபடைத்த உயர் மத்தியதரவர்க்க தட்டின் நலன்களை மேம்படுத்துவதே ஆகும்.

திறந்த பொருளாதாரத்தின் வருகையுடன் வடக்கில் பணக்காரர்களான வியாபாரிகள் மற்றும் இலங்கையின் இனவாத யுத்தகாலத்தில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் பணக்காரர்களாகி இலங்கையிலும் தமது சுரண்டலை விஸ்தரிக்க முனையும் பகுதியினரில், ஜாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

ஜாதிப் பிரிவினையை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில ஆசணங்களை வென்றமையினால், அதே அரசியலைக் கொண்டு பாராளுமன்ற தேர்தலிலும் சில ஆசணங்களை வெல்வதன் மூலம் இன்னும் சலுகைகளைத் தக்கவைக்க முடியும் என ம.மே.ஐ.மு. ஸ்தாபகர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இலங்கையின் பாரம்பரிய தமிழ் தேசியவாத முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும், பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவை செய்தும், மற்றும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் அதற்கு எதிரான போராட்டங்களை நசுக்குவதற்கும் ஒத்துழைத்தும், வெகுஜனங்கள் மத்தியில் பரந்தளவில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளன. பு.ஜ.மா.லெ.க. மற்றும் ம.மே.ஐ.மு. இந்த அதிருப்தியை சுரண்டிக்கொள்ள வெளிப்படையாக முயற்சிக்கின்றன.

இந்த தேர்தல் கூட்டணியை அறிவிப்பதற்காக நடத்திய பத்தரிகையாளர் மநாட்டில் பேசிய பு.ஜ.மா.லெ.க. மத்திய குழு உறுப்பினரும் ம.மே.ஐ.மு. சட்ட ஆலோசகருமான சோ. தேவராஜா, “ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்று நாடாளுமன்ற ஆசனங்களையும் எமது கூட்டுக் கைப்பற்றுமென்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறது” என தெரிவித்தார்.

அதே தினம் டான்தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பைச் சேர்ந்த எஸ். தனுசன்,பு.ஜ.மா.லெ.க. அதனது தொழிலாள வர்க்கச் சார்பு, புரட்சிகர, மார்க்சிஸ மற்றும் லெனினிச வாய்ச்சவடால்களை கைவிட்டு நேரடியாக முதலாளித்துவத்துக்கு சேவகம் செய்வதற்கு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தினார். “இடதுசாரிகள், மாக்ஸிஸ்ட்டுக்கள், லெனினிஸ்ட்டுக்கள், மாவோயிஸ்ட்டுக்கள் என்ற சொற்களை விடுவோம். ஏனெனில் இவை எமது மக்களுக்கு பரிச்சயமில்லாத சொற்கள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பில் எல்லோருமே இடதுசாரிகள் இல்லை. நாங்கள் இப்போது மக்கள் புரட்சியை இலங்கையில் செய்வதற்காக வெளிக்கிடவில்லை,” என அவர் தெளிவாக அறிவித்தார்.

இது, உலகிலேயே ஒரே சோசலிச மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சிக்கு தமிழ் உழைக்கும் மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை அடையாள அரசியலின் பக்கம் தடம்புறளச் செய்யும் வஞ்சத்தனமான முயற்சியாகும்.

உலகம் பூராகவும் மறு எழுச்சியடைந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் ஒரு சர்வதேச பண்பை உறுதிப்படுத்தியுள்ள, உலகம் பூராகவும் சோசலிசத்துக்கான ஆதரவு பெருகி வருகின்ற, குறிப்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலகசோசலிசவலைத்தளத்திற்கு வாசகர்களின் ஆதரவு பெருமளவில் அதிகரித்து வருகின்ற ஒரு சூழ்நிலையிலேயே, தனுசன் தனது சொந்தக் கட்சியின் பெயரில் அடங்கியுள்ள மார்க்சிஸம் மற்றும் லெனினிசம் என்ற சொற்கள் தொழிலாள வர்க்கத்துக்கு பரீட்சியம் இல்லாத சொற்கள் என அறிவிக்கின்றார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பாதுகாப்புச் செயலாளராக இருந்து, போர் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, வரவருக்கும் தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பில், தனது நிர்வாகத்தை இராணுவமயப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். வடக்கில் போர்க்கால சோதனை நடவடிக்கைகளும் திடீர் சோதனைச் சாவடிகளும் மீண்டும் தலை தூக்கியுள்ளன. ஜனநாயக உரிமைகளை இராணுவச் சப்பாத்தில் மிதிப்பதற்குத் தயாரிக்கப்படுகின்ற இத்தகைய நிலைமையிலேயே, தனுசன், இப்போது இருக்கின்ற பிரதிநிதித்துவ “ஜனநாயகசூழலிலே” மக்கள் சார்பான பிரிதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும், என வஞ்சத்தனமான முறையில் பிரகடனம் செய்தார்.

தங்களது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க உலகம் முழுதும் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராகப் போரடி வருகின்ற ஒரு சூழ்நிலையில், இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒரு கேலிக்கூத்தான கேள்வியை கேட்டார். “பொதுவுடமையை மக்களே மறந்து முதலாளித்துவத்துக்குள் விரும்பிவாழும் நிலைக்கு வந்துவிட்டார்கள். பூகோளமயமாக்கல் சூழ்நிலையில், உங்கள் கொள்கையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, பல பிரச்சினைகளுடன் வாழும் தமிழ் மக்கள் எவ்வாறு மேலே வரமுடியும்?”

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் போது தனுசனுடன் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ம.மே.ஐ.மு. பிரதிநிதி சட்டத்தரணி ப. குகனேஸ்வரன், தனது அமைப்பின் சோசலிச விரோத மற்றும் வர்க்க குணாம்சத்தை வெளிப்படையாக அறிவித்தார். “நாம் மக்களை பழமைவாதத்துடன் (கம்யூனிச போராட்டம்) அழைத்துக்கொண்டு போகவேண்டிய தீர்மானத்தில் இல்லை” என அவர் கூறினார். “உலகமயமான சூழ்நிலையில் எங்களது மக்களின் அபிலாசைகளில் தலையிடும் அந்நிய சக்திகளின் போக்கினை இல்லாமல் செய்யவேண்டும் அல்லது அதில் விழிப்பாக இருக்கவேண்டும்,” என அறிவித்து, தேசிய முதலாளித்துவத்தையும் தான் பிரதிதித்துவம் செய்கின்ற தட்டுக்களின் நலன்களையும் பாதுகாப்பதற்கு ம.மே.ஐ.மு. முன்நிற்கும் என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

இந்திய உபகண்டத்தின் தொழிலாள வர்க்கத்தை உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கில் ஐக்கியப்படுத்தி முதலாளித்துவ முறைமையை தூக்கியெறியும் முன்னோக்குக்காகப் போராடி வந்த லங்கா சம சமாஜக் கட்சி, 1964ல் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை கைவிட்டு சிறிமா பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்தில் நுழைந்து காட்டிக் கொடுத்தது. அதனால் உண்டான அரசியல் வெற்றிடத்தை வடக்கில் முதலாளித்துவக் கட்சிகள் தமிழ் தேசியவாதத்துக்கு முண்டுகொடுக்கவும் சாதிய ஒடுக்குமுறைகளைப் பேணுவதற்கும் சுரண்டிக்கொண்டன.

சன்முகதாசன் தலைமையிலான அப்போதைய மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின் வர்க்க ஐக்கியத்திற்கு எதிராக, 1966இல் இடம்பெற்ற மேல் ஜாதியினருக்கு எதிரான கீழ் ஜாதியினரின் போராட்டங்களுக்கு முண்டுகொடுத்தது. இந்த வரலாற்றை அடிக்கடி தூக்கிப் பிடிக்கின்ற பு.ஜ.மா.லெ.க., இலங்கை தொழிலாள வர்க்கம் நாடு பூராகவும் ஐக்கியப்பட்டு போராட்டத்துக்கு வரும் சூழ்நிலையில், ஜாதி பிளவுகளை தூண்டிவிடுவதன் மூலம் தமிழ் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் செல்வந்த பகுதியினருக்கு சேவையாற்ற முன் வந்துள்ளது. இது பு.ஜ.மா.லெ.க. இனதும் அது பின்பற்றுகின்ற மாவோவாத அரசியலதும் முழு அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடாகும்.

இனவாதம் மற்றும் மதவாதத்தைப் போலவே நிலபிரபுத்துவ சமுதாயத்தில் தோன்றிய பிற்போக்கு ஜாதியப் பிரிவினைகள் முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேர்தலில் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் மூலம் நன்மை பெறலாம் என்பது அப்பட்டமான பொய் என்பது வடக்கில் தமிழ் மக்கள் உட்பட உழைக்கும் மக்களது அனுபவமாகும்.

அத்தகைய கட்சிகள், பிராந்தியத்தில் ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வதன் மூலமும், தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை சீரழிக்கும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதன் மூலமே தங்கள் சொந்த நலன்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்துள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியானது தீவிலும் இந்திய உபகண்டத்திலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, சோசலிசப் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ முறைமையை கட்டிக் காக்கும் சகலவிதமான இன, மத மற்றும் தேசியவாத பிரிவினைகளையும் அகற்றி தீர்க்கப்டாத ஜனநாயகக் கடமைகளை தீர்க்க முடியும் என பரிந்துரைக்கின்றது. இந்த வேலைத் திட்டத்தை படிக்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading