ட்ரம்ப் மோடியை கட்டித்தழுவுகையில், இந்தியாவின் தலைநகரத்தில் வகுப்புவாத வன்முறை கொந்தளித்து கொண்டிருக்கிறது

Keith Jones
27 February 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மோடி மற்றும் அவரது பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்தின் பாசிசவாத, வகுப்புவாத கொள்கைகள் ஏற்படுத்திய மோசமான விளைவுகளால் இந்தியாவின் தலைநகரான தில்லியின் தெருக்கள் இரத்தத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில், இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து கொண்டிருந்தார்.

திங்களன்று, வடகிழக்கு தில்லியில் உள்ளூர் பிஜேபி தலைவர்கள் தூண்டிவிட்ட முஸ்லீம் விரோத வன்முறை இன்றும் தொடர்கின்ற நிலையில், இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் (உள்ளூர் தில்லி நேரம் இரவு 8 மணி) குறைந்தது 10 பேர் அதில் பலியாகினர், இச்சம்பவம் இந்தியாவின் தலைநகரத்திற்கு ட்ரம்ப் வந்து சேருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே நிகழ்ந்தது.

பெப்ரவரி 25, 2020, செவ்வாய்க்கிழமை, இந்தியாவின் தலைநகரம் புது தில்லியில் இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின் போது ஒரு கலகக் கும்பல் வைத்த நெருப்பால் பற்றியெரியும் கடை (AP Photo)

பிஜேபி அரசாங்கத்தின் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் (CAA), மற்றும் “சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர்” என்றழைக்கப்படுவோரை ஒடுக்குவதன் பெயரில் முஸ்லீம்களை கொடுமைப்படுத்துவதற்கும், நாட்டைவிட்டு அவர்களை வெளியேற்றுவதற்குமான அதன் திட்டங்களுக்கும் எதிரான தேசியளவிலான பாரிய போராட்டங்களின் மையமாக தில்லி இருந்து வருகிறது. கடந்த டிசம்பரில், பாராளுமன்றத்தின் மூலமாக விரைந்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல், தெற்கு தில்லியின் அருகாமை பகுதியான ஷாஹீன் பாக் (Shaheen Bagh) பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்கள் 24 மணிநேரமும் அமர்ந்த நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அவசரகால போக்குவரத்து தவிர ஏனைய போக்குவரத்துக்கள் தடுக்கப்படுகின்றன.

மோடி அரசாங்கம் மேற்கொண்ட எப்போதும் தீவிரமடைந்து வரும் ஜனநாயக எதிர்ப்பு, வகுப்புவாத நடவடிக்கைகளில் சமீபத்தியதாக இந்த CAA உள்ளது. ஆகஸ்டில், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அதன் பகுதியளவிலான தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்தை இது நீக்கியதுடன், அப்போதிருந்து இந்த பிராந்தியத்தை பெரியளவிலான பாதுகாப்பு ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

தில்லி தேசிய தலைநகர பிராந்திய (Delhi National Capital Territory) சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்து அதே சமயத்தில், உத்திரபிரதேசத்தில் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு அடக்குவதை பிஜேபி தலைவர்கள் கொண்டாடியதுடன், பிஜேபி தலைமையிலான ஏனைய மாநிலங்களும் கூட்டங்களும் “துரோகிகளையும்” “தேசவிரோதிகளையும்” சுட்டுக் கொல்வதற்கு அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கின்றன. (பார்க்கவும்: “Shoot them down”—India’s government incites violence against opponents of its anti-Muslim citizenship law)

அனைத்து அறிக்கைகளின் படி, தில்லி பிஜேபி தலைவர் கபில் மிஸ்ரா தான் இந்தியாவின் தலைநகரை தற்போது கொந்தளிப்பில் மூழ்கடித்திருக்கும் இந்த வன்முறையை தொடங்கினார். ஞாயிறன்று, CAA இற்கு சார்பான ஒரு எதிர்ப்பு போராட்டத்தை அவர் தொடங்கி வைத்தார், இதில் வடகிழக்கு தில்லியின் ஒரு தெரு அவரது நூற்றுக்கணக்கான இந்து வகுப்புவாத ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்பிற்குள்ளானது என்பதுடன், தில்லி பொலிசாருக்கு “இறுதிக் காலக்கேடு” வழங்கப்பட்டது. இந்நிலையில், தில்லி தெருக்களில் இருந்து CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை மூன்று நாட்களுக்குள் பொலிசார் அகற்றவில்லை என்றால், அதை அவரது ஆதரவாளர்களே செய்து முடிப்பார்கள் என்று மிஸ்ரா சபதம் செய்தார்.

CAA சார்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையேயான கடுமையான எதிர் தாக்குதல் சம்பவங்கள் உடனடியாகத் தொடர்ந்தன. என்றாலும், திங்களன்று அதிரடியாக பெரும் வன்முறையாக அது வெடித்தது, அப்போது, கலகக் கும்பல் “நடந்து சென்ற அல்லது வாகனங்களில் சென்ற” முஸ்லீம்களை தனிமைப்படுத்தி, அவர்களை தாக்கத் தொடங்கினர் என்று சென்னையை தளமாகக் கொண்ட Hindu நாளிதழ் தெரிவிக்கிறது.

தில்லி பிராந்தியத்தில் பொலிஸை கட்டுப்படுத்தும் மோடி அரசாங்கம், அங்கு பாரிய பொலிஸ் அணிதிரட்டலுக்கு ஏற்பாடுகள் நடந்திருப்பதாகக் கூறினாலும், திங்களன்றும் இன்றும் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

“ஜெய் ஸ்ரீ ராம்” அல்லது “ராம் (இந்து கடவுள்) நீடூழி வாழ்க” என்று முழக்கமிட்ட வகுப்புவாத கும்பல்களால் முஸ்லீம் கடைகள் அழிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன என்று The Wire செய்தி வலைத் தளம் தெரிவிக்கின்றது.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களது இந்து மேலாதிக்கவாத கூட்டாளிகளால் கொடூரமான வகுப்புவாத வன்முறை தூண்டப்படக்கூடிய மற்றும் ஒழுங்கமைக்கப்படக்கூடிய ஒரு நீண்ட மற்றும் இரத்தக்களரியான வரலாறு உள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக பதவியில் இருக்கையில், 2,000 பேரை பலியிடுவதில் சென்று முடிந்த 2002 ஆம் ஆண்டு முஸ்லீம் விரோத குஜராத் படுகொலைக்கு அவர் தலைமை வகித்த காரணத்தினாலேயே தேசியளவில் பிரபலமடையக்கூடியதானது.

குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் 100,000 மோடி ஆதரவாளர்கள் திரண்ட பெரும் கூட்டத்தின் முன்பாக முதலில் உரையாற்றி இந்தியாவிற்கான தனது விஜயத்தை ட்ரம்ப் தொடங்கினார். “இந்திய-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டு” குறித்து அப்போது அவர் பாராட்டியதுடன், மோடி “ஒரு தனித்துவமான தலைவர், இந்தியாவின் சிறந்த வெற்றியாளர், தனது நாட்டிற்காக இரவு பகலாக உழைக்கும் ஒரு மனிதர் என்பதால் அவரை எனது உண்மையான நண்பர் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என்றெல்லாம் கூறி ஏராளமாக அவரை புகழ்ந்து தள்ளினார்.

பென்டகனும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்ந்த) ஒரே மாதிரியாக, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு இந்தியா முக்கியமானது என்று கருதுகின்றன. மோடியின் கீழ், பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலில் இந்தியாவும் தன்னை ஒரு உண்மையான முன்னணி நாடாக மாற்றிக்கொள்ளும் வகையில், இந்த தாக்குதலில் எப்போதும் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது.

மோடி பற்றிய ட்ரம்பின் உணர்ச்சி பொங்கும் பாராட்டுக்கள், பாசிசவாத கோடீஸ்வரரும், புலம்பெயர்வாளர்களின் எதிர்ப்பாளருமான அமெரிக்க ஜனாதிபதிக்கும் மற்றும் இந்து மேலாதிக்கவாத மோடிக்கும் இடையிலான ஆழமான அரசியல் ரீதியான இணக்கத்தில் ஆழ்ந்து வேரூன்றியவை.

செவ்வாய்க்கிழமை அவர்களது கூட்டு தில்லி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவின் தலைநகரம் தில்லியின் தெருக்களில் பெரும் வகுப்புவாத வன்முறை வெடித்தது பற்றி மோடியுடன் நான் விவாதிக்கவில்லை எனக்கூறி விரைவாக தனது விருந்தோம்பியை பாதுகாக்க விரைந்தார். முஸ்லீம் பெரும்பான்மை மிக்க அரை டசினுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாரபட்சமான பயண தடைகளை விதித்துள்ள ட்ரம்ப், “நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம்,” என்று கூறினார். அப்போது, “மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தானும் விரும்புவதாகவும், அதற்காக அவர்கள் மிகவும் கடினமாக பாடுப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.”

கடந்த இரண்டு நாட்களாக தில்லியை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த கொடிய வகுப்புவாத வன்முறை, மேற்கின் ஊடகங்களினால் மீண்டும் மீண்டும் கூறப்படும் மற்றும் சீன எதிர்ப்பு இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டணியானது ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை என்ற “இருதரப்பினதும் பொதுவான மதிப்புக்களை” அடிப்படையாகக் கொண்டது என்று வாஷிங்டனும் புது தில்லியும் ஊக்குவிக்கும் கூற்றுக்களின் மோசடியான மற்றும் இழிவான தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

உண்மையில், ட்ரம்பும் மோடியும் உருவகப்படுத்தியது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான கூட்டணி என்பது, பிற்போக்குத்தனம், சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டணியாகவே உள்ளது.

ஆசிரியர்பின்வரும்கட்டுரைகளையும்பரிந்துரைக்கிறார்:

இந்திய பொது வேலைநிறுத்தமும், வகுப்புவாதம் மற்றும் போருக்கு எதிரான உலகளாவிய போராட்டமும்

[11 January 2020]

காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் இணைய தடை விதிப்புக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

[28 January 2020]

தெற்காசிய வகுப்புவாத பிரிவினையில் இருந்து எழுபது ஆண்டுகள்

[16 August 2017]

US moves to harness India to anti-China “pivot”
[8 March 2016]