இலங்கை பட்டல்கல தோட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுரண்டல் மற்றும் ஊதிய வெட்டுக்களை தீவிரப்படுத்துவதை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், அதிகப்படியான சுரண்டல் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் குறித்து களனிவலி மற்றும் ஹொரன தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. புதிய முறமையின் கீழ் தேயிலை கொழுந்தை நிறுப்பதற்கு டிஜிட்டல் தராசும் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை உன்னிப்பாக கண்காணிக்க டிஜிட்டல் அடையாள அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலாபத்தை உயர்த்துவதற்காக வேலை நிலமைகளை விரைவுபடுத்துவதற்காக தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த ஒரு பரந்த திட்டத்தின் பகுதியே இது. சில மாதங்களுக்கு முன்பு களனிவலி தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் டிக்கோயா பட்டல்கல தோட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் தராசு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பட்டல்கல தோட்டத்திலுள்ள தொழிலாளர்களின் சம்பளம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் வேலை செய்தாலும் 18 கிலோ கொழுந்து என்ற அன்றாட வேலை இலக்கை அடைய முடியாது என்றும் தொழிலாளர் கூறினர். இதனை அடைய முடியாத தொழிலாளர்களுக்கு அரை நாள் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு 14 கிலோவுக்கு குறைவாக எடுக்கும் ஒரு தொழிலாளி தினசரி ஊதியத்தில் பாதி அதாவது 350 ரூபாய் மட்டுமே பெறுகிறார்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள போராட்டம் வெட்கக்கேடான முறையில் காட்டிக் கொடுக்கப்பட்டதை அடுத்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) ஆகியவை ஊதிய கூட்டு ஒப்பந்தத்தில் இந்த முறையை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.மு.ம.) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) உள்ளிட்ட அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் ஒப்பந்தத்தை அமைதியாக ஏற்றுக்கொண்டன.

ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓல்டன், ஸ்டாக்ஹொம், கவுரவில, மானலி ஆகிய தோட்டங்களில் சுமார் 5,000 தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி நான்கு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம் இ.தொ.கா. மற்றும் NUW தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் புதிய நடைமுறை அவர்களின் பணி நிலைமைகள் மற்றும் ஊதியத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்கினர். “டிஜிட்டல் தராசு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், எனது சம்பளத்திலிருந்து சுமார் 12,000 ரூபாயை இழந்தேன். ஒவ்வொரு மாதமும் மூன்று அல்லது நான்கு நாட்கள் அரை நாள் சம்பளம்தான் கிடைக்கின்றது. நாங்கள் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேலை செய்கிறோம். மதிய உணவுக்கு ஒரு மணி நேர ஓய்வு கிடைக்கும். வேலையில் இருந்து வீட்டிற்கு வர சுமார் ஒரு மணி நேரம் ஆகும். அத்தகைய நிலமையில் இலக்கு குறைவடையும் போது, அரை நாள் ஊதியக் குறைப்பு செய்வது சட்டவிரோதமானது. நிர்வாகத்திற்கு அவ்வாறு செய்ய உரிமை இல்லை. இருப்பினும், இத்தகைய திட்டங்களை செயல்படுத்த தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கின்றன. நான் ஒரு திறமையான தொழிலாளி. வழக்கமாக, நான் எனது அன்றாட இலக்குகளை நிறைவு செய்வேன். டிஜிட்டல் தராசு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எனது தினசரி அளவு முன்பை விட பல கிலோ குறைவாகவே உள்ளது. இந்த முறையின் மூலம் அளவை குறைப்பதற்கு முடியும்,” என ஒரு தொழிலாளி கூறினார்.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்: “நான் ஒரு இ.தொ.கா. உறுப்பினர். ஆனால் அந்த சங்க கிளையின் தலைவர் ஒரு குட்டி முதலாளியை போல செயல்படுகிறார். வருமான பங்கீட்டு முறையின் கீழ், அவருக்கு ஏராளமான தேயிலை செடிகளைக் கொண்ட காணி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் ஆதரவுடன், அவர் தினமும் வேலையை சொற்ப நேரம் செய்துவிட்டு காணியில் வேலைக்குச் செல்கிறார். தொழிலாளர்கள் குறைந்த வருமானத்தால் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர் ஒரு பெரிய வருமானத்தை ஈட்டுகிறார்."

“எனது கணவரும் ஒரு தோட்டத் தொழிலாளி, எங்களுக்கு ஐந்து பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ளனர். எனது மகன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது செலவுகளை ஈடுகட்ட ஒரு மாதத்திற்கு ரூ. 6,000 அனுப்ப வேண்டும். மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி 100 ரூபா, ஒரு கிலோ காய்கறிக்கு 400 ரூபாய். அற்ப வருமானத்தில் நாம் எவ்வாறு வாழமுடியும்? எந்த அரசாங்கம் வந்தாலும் நாங்கள் கஷ்டப்படுகிறோம்.”

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமானப் பகிர்வு முறை எமது தோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற சமூக நலன்களை இழந்துவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எஸ். தமிழ்செல்வி 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய். உடல்நிலை சரியில்லாததால், அவர் ஏலவே ஓய்வு பெற்று, இப்போது தோட்டத்தில் ஒரு தற்காலிக தொழிலாளியாக பணிபுரிகிறார். “தற்காலிகமாக வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 40 ரூபா வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு பத்து கிலோ எடுத்தால் 400 ரூபா கிடைக்கும். புதிய தராசு பாவிப்பதால் கொழுந்தின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் நான் எப்போதும் எனது சம்பளத்தின் ஒரு பகுதியை இழக்கின்றேன். எனது சேவைக்கால அனுபவத்தின்படி, ஒரு நாளில் நான் எவ்வளவு தேயிலை கொழுந்து பறிக்க முடியும் என்பதை மதிப்பிட முடியும். புதிய தராசு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஒவ்வொரு தடைவையும் நிறுக்கும்போது மூன்று கிலோகிராம் கழிவு என்ற பெயரில் வெட்டப்படுகின்றது. நாளொன்றுக்கு மூன்று தடவை நிறுக்கப்படுகின்றது. இதனால் 9 கிலோ வெட்டபெபடுகின்றது. மதிய ஓய்வு நேரத்தில் தொழிலாளர்கள் இதைப் பற்றி பேசுவார்கள். தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் கலந்துரையாடி வருவதாகக் கூறுகின்றன. ஆனால் எதுவும் நடக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.

இராஜபக்க்ஷ அரசாங்கத்தின் தோட்ட உள்கட்டமைப்பு மற்றும் புதிய கிராமங்கள் அமைச்சரான இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், புதிய முறைக்கு எதிராக நவம்பரில் தொடங்கிய வேலைநிறுத்தத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தியதாகவும் தொழிலாளர்கள் கூறினர். ஏனெனில் தொழிற்சங்கங்கள் இந்த முறையை ஏற்றுக் கொண்டிருந்தன.