அசாஞ்ச் மற்றும் மானிங்கை விடுதலை செய்! SEP மற்றும் IYSSE கொழும்பில் நடத்தும் ஆர்ப்பாட்டம்

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் இணைந்து, ஜூலியன் அசாஞ்ச் மற்றும் செல்சியா மானிங் ஆகியோரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் மார்ச் 3ம் திகதி, மத்திய கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு உலகளவிலான பிரச்சாரத்தின் பாகமாகவே இந்த ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவுள்ளது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் வெளியீட்டாளர் மீது, பெப்ரவரி 24ல் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையானது, அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் நோக்கம் கொண்டதையே காட்டுகின்றது. அசாஞ்ச், எந்தவிதமான குற்றங்களும் செய்யாமலேயே பெல்மார்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இது ஒரு பிரிட்டனின் “குவாண்டனோமா” ஆகும். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் அவரது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறும் வகையிலும் கொடூரமான சூழ்நிலைமைகளின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. விசேட அறிக்கையாளரான நில்ஸ் மெல்ஸர் மற்றும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்கள் ஆகியோர், அசாஞ்ஜ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர், விடுதலை செய்யப்பட்டு பொருத்தமான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றப்படவில்லையானால், இறந்துவிடுவார் என கூறியுள்ளார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நாடுகள் இந்த எச்சரிக்கையை நிராகரித்துவிட்டன. அவுஸ்திரேலியப் பிரஜையான விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவாரேயானால், அவர், உளவுபார்த்தல் என்ற போலிக்குற்றச்சாட்டின் அடிப்படையில், 175 வருடங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவின் கூட்டாட்சி சிறையில் உள்ள ஒரு இருண்ட மூலைக்குள் தள்ளப்படுவார்.

அமெரிக்காவின் முன்னாள் சிப்பாயும் மற்றும் இரகசியத்தை வெளிப்படுத்தியவருமான, செல்சியா மானிங் வழங்கிய, அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட, யுத்தக் குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை, வெளியிட்டதற்காக அசாஞ்ஜ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மானிங், கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, 35 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு ஏழு வருடங்கள் கழிந்த நிலையில், 2017ல் அவரது தண்டனை குறைக்கப்பட்டது. ஆனாலும், அவர் விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்தமையினால் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். இந்த தைரியமான தனிநபர்கள், வாஷிங்டனின் போர் குற்றங்களை துணிந்து அம்பலப்படுத்தியதால் துன்புறுத்தப்படுகின்றார்கள்.

கடந்த மாதங்களில், உலகம் பூராவும் உள்ள எண்ணற்ற அமைப்புக்கள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களும் அசாஞ்ச்சை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளார்கள். இந்த அரசியல் போராட்டத்துக்கு தொழிலாள வர்க்கம் தலமையேற்க வேண்டும். இந்த சமூக சக்தியால்தான் அசாஞ்ச் மற்று மானிங் ஆகியோரின் விடுதலை, பேச்சு சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் மற்றும் சர்வதேச பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்குமாறும், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் SEP மற்றும் IYSSE அழைப்புவிடுக்கின்றன.

ஆர்ப்பாட்ட விபரம்

செவ்வாய்கிழமை மார்ச் 3, பி.ப. 4.00

கோட்டை புகையிரத நிலைய முன்பாக

கொழும்பு

Loading